சனி, 23 அக்டோபர், 2010

பலா பயன்கள்


முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. கேரளாவில் இதை சக்கைப்பழம் என்று அழைப்பார்கள்.

மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மருத்துவ பயன்கள் :

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

ஒரு எச்சரிக்கை :
பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை :

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

Share:

வெள்ளி, 22 அக்டோபர், 2010

எலுமிச்சை ப்ளாக் காபி


லுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. நம்மவர்கள் எலுமிச்சையில் செய்யப்பட்ட ஊறுகாய் என்றால் எந்த சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்பார்கள்.

இத்தகைய எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச் சத்துகள் காணப்படுகின்றன.


மருத்துவ பயன்கள் :

1. தேள் கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

2. தலைவலிக்கு கடுங்காபியில் (ப்ளாக் காபி) எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் சட்டென்று குணமாகும்.

3. நீர் சுருக்கு, பித்த நோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

4. மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

5. கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

6. எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்துவர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

7. அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

8. நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.


9. எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

10. சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து, அதை எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

11. சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

12. எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பீனிசம் தீரும்.

13. சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பூசி வர படர்தாமரை குணமாகும்.

14. சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான அளவு எடுத்து, அதை ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீர்ணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

Share:

வியாழன், 21 அக்டோபர், 2010

பழைய புளியே நல்லது


புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.


மருத்துவ பயன்கள் :

* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.

* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.

* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.

* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.

* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.

* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.

* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.

* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம், வாந்தி, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.

* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கத்தில் தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.

* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள் நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.

* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.

* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.

* மது அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.

* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.


* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து சீதக்கழிச்சலுக்கு உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.

* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர புண்கள், நீர்க்கடுப்பு, வெள்ளை, வெட்டை, கழிச்சல் ஆகியவை குணமாகும்.

* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.

* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.

* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.

* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் நரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும்.

Share:

திங்கள், 18 அக்டோபர், 2010

தென்னைய வெச்சா இளநீரு


பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை - இந்த மூன்றும் நீங்கினால் இறைவனை அடையலாம் என்கிறது ஆன்மிகம். இந்த தத்துவத்தை தேங்காயும் உணர்த்துகிறது.

அதாவது, தேங்காயின் மேலே உள்ள பச்சை மட்டை மாயை ஆகும். நார் பகுதி கன்மம். தேங்காய் ஓடு ஆணவம். தேங்காயை உடைக்கும்போது ஆணவம் என்னும் ஓடு உடைந்து வெண்மையான பருப்பு வெளிப்படுகிறது.

அதுபோல், இறைவன் திருவடியை அடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அகற்ற வேண்டும். இதனால்தான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறோம்.


மருத்துவ பயன்கள் :

* இளநீரில் அரை மூடி அளவுக்கு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

* இளநீரில் தேன் கலந்து குடிக்க சரும நோய்கள் தீரும். வயிற்றுப்புண் குணமாகும். மலச்சிக்கல், மூல நோய்கள் இருந்தாலும் குணம் பெறலாம்.

* இளநீரை முந்தைய இரவே சீவி, அதனுள் சப்ஜா விதை (திருநீற்று பச்சிலை விதை) 10 கிராம் சேர்த்து, சீவப்பட்ட பகுதியின் மட்டையை மீண்டும் மூடி வைத்து, காலையில் குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.

* இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், கட்டிகள் வராது. அவை இருந்தால் உடனே குணமாகும். மேலும், மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மையும் இளநீருக்கு உண்டு.

* இளநீரை உணவிற்கு பின் அருந்துவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது தவறு. அவ்வாறு செய்தால் சிறிது நாட்களில் பசி குறைந்து அல்சர் எனப்படும் குன்ம நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

* தென்னம்பாளைக்குள் உள்ள இளம் தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி, காலை, மாலை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.

* தென்னம்பாளை மொக்கை இடித்து, நீராவியில் வைத்து பிட்டாக்கி பிழிந்து, அதனுடன் தேன், அதிவிடயத்தூள், இலவம் பிசின் சேர்த்து குடித்தால் சுரத்துடன் கூடிய கழிச்சல் குணமாகும்.

* தென்னங்குருத்தை உட்கொண்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* இளம் தென்னம்பாளையை வெட்டி, மடல் நீக்கி இடித்து சாறு பிழிந்து 100 மில்லி அளவு எடுத்து, அதனுடன் தயிர் 100 மில்லி சேர்த்து, எலுமிச்சை பழ ரசம் 50 மில்லியும் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு, நீர்சுருக்கு, ரத்தம் அல்லது சீழ் கலந்து வரும் கழிச்சல் குணமாகும்.

* நட்டுவக்காளி கடித்துவிட்டால் உடனே தேங்காயை மென்று தின்னலாம். தேங்காய் பாலையும் குடிக்கலாம். உடனே, அந்த விஷம் இறங்கிவிடும்.

* வயிற்றில் அல்லது வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்க, அது ஓரிரு நாளில் குணமாகும்.

* முற்றிய தேங்காய் துருவலை துணியில் கட்டி, அதை சூடாக்கப்பட்ட பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி, பொறுக்கும் சூட்டில் பாதிப்பு இடத்தில் ஒற்றமிட்டு வர ஆண்களுக்கு விரை வீக்கம் குணமாகும்.

* தேங்காய் பாலை காய்ச்சி, அதில் வரும் எண்ணெயை புண்கள், நெருப்பு சுட்ட புண்கள் மீது தடவி வர அவை விரைவில் உலர்ந்து குணமாகும். இதை, தலையில் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும்.

* தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

* தேங்காய்பால் விட்டு சீரகத்தை அரைத்து பாதிப்பு இடத்தில் பூசிவர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஆகியவை குணமாகும்.

* புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை அழகாக பிறக்கும்.


* வெட்பாலை இலைகளை துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் 10 நாட்கள் வைக்க, அந்த எண்ணெய் கருநீல நிறமாக மாறும். இதனை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் சொரியாஸிஸ் எனப்படும் செதில் உதிர்படை குணமாகும். இந்த எண்ணெயை 5 மில்லி அளவு பாலில் கலந்து உள்ளுக்கும் குடிக்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை பொடித்து போட்டு காய்ச்சி பூசி வர சளி இளகி வெளிப்படும்.

* தென்னம் வேரை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

ஒரு எச்சரிக்கை :
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளது. அதனால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து இருப்பவர்கள் உணவில் தேங்காய் எண்ணெயை தவிர்ப்பது நல்லது.

Share:

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு




3.  மத மாற்ற நிகழ்வு
-நெல்லை விவேகநந்தா-
 கி.பி.1800-களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜாதிய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த நாஞ்சில் நாட்டிலும் அதே நிலைதான்! தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மட்டுமின்றி, உடமைகளும், நிலங்களும் பறிக்கப்பட்டு, அவர்கள் அநாதைகள் ஆக்கப்பட்டனர். சொந்த நிலத்திலேயே சொற்பக் கூலிக்கு வேலை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். பலநேரங்களில் கூலி கொடுக்காமலேயே வேலை வாங்கப்பட்டனர்.

அடிமைகள் விற்கப்பட்ட - வாங்கப்பட்ட வரலாறு மேல்நாடுகளில் மட்டுமின்றி, நாஞ்சில் நாட்டிலும் இருந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் அறிவிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்ற 18 சாதியினர் அடிமைகளாக விற்கப்பட்டு வாங்கப்பட்டார்கள். அடிமைகளை வாங்குவதற்கு விற்பதற்கு என்றே தனி சந்தைகளும் நடத்தப்பட்டன. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அடிமைகளாக இருந்தனர். சாட்டையால் அடித்து வேலை வாங்கப்பட்டதால், அடிமைகள் ஆக்கப்பட்டவர்களின் முதுகுகள் ஆதிக்க சாதியினரால் வளைக்கப்பட்டன.

மனிதன் வாழ வேண்டும் என்றால் உணவு மட்டுமின்றி உறைவிட வசதியும் வேண்டும். அந்த வசிப்பிட வசதியோ தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவர்களது வசிப்பிடம் மரத்தடிகள், அதுவும் ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களாகவே இருந்தன. முதலாளியின் கீழ் வேலை செய்தவர்கள், அந்த முதலாளி எங்கே அவர்களை வசிக்கச் சொன்னாரோ அங்கே வாழ்ந்தனர். மாட்டுக் கொட்டகையை ஒட்டிய இடம் மற்றும் ஊரின் ஒதுக்குப்புறங்களாகவே அந்த இடங்கள் அமைந்திருந்தன.

அடிப்படை உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள்... என்று எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த கூலியும் ‘வரி’ என்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி பிடுங்கப்பட்டது. ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கும் வரி வசூலித்தார்கள் என்றால், எப்படிப்பட்ட கொடூரங்கள் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”

- என்று, திருவிதாங்கூர் சமஸ்தான கைகூலிகளான ஆதிக்க சாதியினர். அப்போது வசூலித்த வரிகள் குறித்து குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.
அதேநேரம், சமஸ்தானத்திற்கு வரி செலுத்தாவிட்டால் கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஒருவரிடம் வரி செலுத்தப் பணம் இல்லை என்றால், அவரது முதுகில் பெரிய கல்லை ஏற்றி வைத்து மதிய வெயிலில் நிறுத்தினர். அவர் அனுபவிக்கும் சித்ரவதைகளை பார்த்து மகிழ்ந்தனர், அரசாங்க கைகூலிகள்.

ஒரு தடவை வரி செலுத்தாததற்கே இந்த தண்டனை என்றால், தொடர்ந்து பல நாட்கள் வரி செலுத்தாதவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். இரும்புக் கம்பியை நன்கு பழுக்கக் காய்ச்சி, அதை அவரது காதில் சொருகி ஆனந்தக் கூத்தாடினர். அதோடு நின்று விடாமல், அந்த நபரை மரத்தில் கட்டி தொங்கவிட்டும் ரசித்தனர்.

தாழ்த்தப்பட்ட இன பட்டியலில் இருந்ததற்காக இப்படியெல்லாம் கொடுமைகளை ஆண்கள் ஒருபுறம் அனுபவிக்க... மறுபுறம் பெண்களின் நிலைமையும் படுமோசமாக இருந்தது.

அடிமைகளாக விற்கப்பட்ட அழகான பெண்களை, நினைத்த போதெல்லாம் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி சீரழித்தனர், ஆதிக்க சாதியினர். பல நேரங்களில், அளவுக்கு மீறிய பாலியல் கொடுமையால் அந்த பெண்கள் இறந்தே போனார்கள். 

தனிநபர் உரிமை மீறலின் உச்சக்கட்டமாக, அடிமைகளாக வாங்கப்பட்ட ஆண்களும், பெண்களும் மாடுகளுடன் கட்டி வயலை உழுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். சில நேரங்களில் வயலை உழும் காளைகளுக்கு கிடைக்கும் உணவு கூட கிடைக்காமல், அந்த வயலிலேயே உயிர் துறந்தனர் பல அடிமைகள்.

“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”

-இப்படி, நாஞ்சில் நாட்டு பாமரர்களும், சாற்றோரும் அனுபவித்த கொடுமைகளை அகிலத்திரட்டு அப்பட்டமாக குறிப்பிடுகிறது.

தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து விடுபட விரும்பிய மக்கள், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடையாள முத்திரையை உடைத்தெறிய எண்ணினர். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் அமைந்தது அப்போதைய கிறிஸ்தவ மத மாற்றம். 

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் அடிப்படை வசதிகள் அதிகம் கிடைக்கும்... பொருளாதார வசதி மேம்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும்... என்று அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 சாதியினருக்கும் உற்சாக டானிக் ஆக அமைந்தது. எனவே மனம் மாறினர். ஆமாம், 'உணர்வே இல்லாமல் அடிமையாக வாழ்வதைவிட மதம் மாறுவது எவ்வளவோ மேல்' என்று தீர்மானித்த அவர்களில் பலர், உடனடியாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர் என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்



ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில் அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.  அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன் அந்த அழுகுரல் வந்த திசை நோக்கிச் சென்றார்.

அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்த அவர், அந்தக் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதி ஆனந்தக் கூத்தாடினார். அந்தக் குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டு தன் குழந்தையாகப் பாசத்தை கொட்டி வளர்த்தார். 

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள்தான்!

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள்தான் ஆடிப்பூரம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.

சிறு குழந்தையான ஆண்டாளுக்குத் தினமும் கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதைக் கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். 

பெருமாளுக்குத் தனது தந்தை தினமும் அணிவிக்கத் தொடுத்து வைத்திருக்கும் மாலையைத் தந்தைக்குத் தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். 

அருகே உள்ள கிணற்றைக் கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகைப் பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையைக் கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். இந்த விபரம் எதுவும் தெரியாமல், அந்த மாலையைத் தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.


ஒருநாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டுக் கழற்றி வைக்கும் போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கிக் கொண்டது. ஆண்டாள் இதை கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் இதைக் கவனித்து விட்டார்.

அவர், அந்த மாலையைப் பெருமாளுக்குச் சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி, "முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை. அவள் சூடிக் களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு அணிவிக்க வேண்டும்." என்று அருளினார். 

இதனால் ஆண்டாளுக்குச் "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" என சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 

அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு "பூமாலை" என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என வேறு பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்துத் தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதி கொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். இதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்ற போதிலும், "108 எம்பெருமான்களில் யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டார். ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.

கடைசியில், ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்குப் பிடித்து இருப்பதாகவும் அவரையேத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள். 

ஆண்டாள் விருப்பப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். 

அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார். 

பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய்ப் போனதைக் கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்துக் கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக் கொண்டார். 

அதன்படி பங்குனி உத்தரம் அன்று ஆண்டாளை ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இன்றும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. 

 -நெல்லை விவேகநந்தா.

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

சனி, 16 அக்டோபர், 2010

வாழைப்பழம் பயன்கள்


வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது.

பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த சுபவிழாக்களாக இருந்தாலும் சரி, அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

வாழை இலை பயன்கள் :

* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

* தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

* புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.


வாழைப்பூ பயன்கள் :

* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

* இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.

* வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.

* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.


 வாழைத்தண்டு பயன்கள் :

* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.

* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

* இதன் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

* வாழைப்பட்டையை தீயில் வாட்டி சாறு பிழிந்து, அதில் ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்.


வாழை பிஞ்சு-காயின் பயன்கள் :

* வாழை பிஞ்சினால் ரத்த மூலம், ரத்த கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.

* வாழைக்காயினால் கழிச்சல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் ஆகியவை தணியும். உடலில் ரத்தப் பெருக்கையும், வன்மையையும் இது உண்டாக்கும்.

வாழைப்பழம் பயன்கள் :

* வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.

* தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.

* அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும்.
* வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.

* வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.

* வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.

* செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.
Share:

சன்னியாசிக்குத் திருமணமா?



வேடர் தலைவனான நம்பிராஜனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற இடத்தில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தான்.

அந்தப் பெண் குழந்தைதான் வள்ளி!

மகாவிஷ்ணுவுக்குப் பெண்களாக வள்ளி, தெய்வானை இருவரும் பிறந்தார்கள். இருவரும் தங்கள் திருமண வயதில் கோபமே அடையாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். அதற்காக இருவரும் தவம் இருந்தனர். அந்த தவத்தின் பலனாக முருகப் பெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவரை, அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

அதன்படி அவர்கள் இருவரும் மறுபிறவி எடுத்தனர். தெய்வானை இந்திரனுக்கு மகளாகப் பிறந்தாள். ஒரு முறை அசுரர்களின் பிடியில் சிக்கிக் கொண்ட இந்திரலோகத்தை மீட்கிறார் முருகப் பெருமான். அதனால் மனம் மகிழ்ந்த இந்திரன், தனது மகள் தெய்வானையை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறான்.

இதே போல், வேடர் தலைவன் நம்பி ராஜனின் மகளாக வளர்கிறாள் வள்ளி. உண்மையில், அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான், வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக, தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது. 

அந்தச் சூழ்நிலையில் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழந்தையை கண்டெடுத்தான். கடவுள் அருளால் தனக்கு அந்த குழந்தை கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான். அந்த குழந்தைக்கு ‘வள்ளி‘ என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தான்.

வள்ளி, தினை நிலத்தில் பயிர் செய்யப்பட்ட பயிர்களை பறவைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுகிறாள். அவளைக் கண்ட நாரத முனிவர், நேராக தணிகைமலை சென்று முருகப் பெருமானிடம் செல்கிறார். வள்ளியின் அழகைப் பற்றி அவரிடம் கூறி, அவளை மணக்கச் சொல்கிறார். 

முருகப்பெருமானும் வேடன் போல் முதலில் வருகிறார். வள்ளியிடம் தன் காதலை அவர் தெரிவிக்கும் போது அங்கே நம்பிராஜன் வந்து விடுகிறான். உடனே வேங்கை மரமாக மாறி விடுகிறார். நம்பிராஜன் சென்ற பிறகு திரும்பவும் வேடனாக மாறி வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வள்ளியை வற்புறுத்துகிறார். வள்ளி மறுக்கிறாள்.
அப்போது நம்பிராஜன் தன் படைகள் சூழ அங்கு வர, முருகப் பெருமான் அங்கிருந்து மாயமாகி, ஒரு சன்னியாசி கோலத்தில் அங்கு வருகிறார். வள்ளி, நம்பிராஜன் உள்ளிட்டவர்களுக்கு ஆசி வழங்குகிறார். தொடர்ந்து, நம்பிராஜன் திரும்பிச் சென்று விடுகிறான். வள்ளி மட்டும் தனியாக இருக்கிறாள்.

அப்போது, தனக்கு பசிப்பதாக கூறி தினைமாவு கேட்கிறார். வள்ளியும் ஆசையுடன் அதைத் தர அவருக்கு விக்கல் எடுக்கிறது. அவள் தண்ணீர் தர, அந்த சன்னியாசி, “இது வேண்டாம். சூரியனைக் காணாத சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து தரவேண்டும்“ என்கிறார். அதையும் தேடி எடுத்து வந்து கொடுக்கிறாள் வள்ளி. 

அப்போது, “ஒரு கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எனக்கு நீ செய்து விட்டாய். அதனால், நீயே எனக்கு மனைவியாக வந்து விடு“ என்கிறார் சன்னியாசி கோலத்தில் இருந்த முருகப் பெருமான்.

வள்ளிக்கு கோபம் வருகிறது. “வயதான, சன்னியாசியான உமக்குத் திருமணமா? என்று ஆவேசமாக கேட்கிறாள்.


அப்போது, முருகப்பெருமான் தன் அண்ணன் கணபதியை நினைத்து வேண்ட, அவர் யானையாக அங்கு வருகிறார். யானையைக் கண்டு பயந்து வள்ளி அந்த சன்யாசி கிழவரை அப்படியே அணைத்துக் கொள்கிறாள். யானையை விரட்டுமாறு கேட்கிறாள். 

அவரோ “நீ திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால்தான் யானையை விரட்டுவேன்“ என்கிறார். வேறு வழியில்லாத வள்ளி அதற்கு சம்மதிக்கிறாள்.

அதன் பிறகு, சுய உருவத்திற்கு வரும் முருகப் பெருமான், முன்ஜென்ம நினைவைக் கூறி வள்ளியை மணந்து கொள்கிறார்.

இப்படி, வள்ளி பிறந்து வளர்ந்த இடம் இன்றும் ‘வள்ளிமலை‘ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை அருகில் மேற்பட்டு என்ற கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது. 

 -நெல்லை விவேகநந்தா.

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)


Share:

அய்யா வைகுண்டர் வரலாறு


2. முத்துக்குட்டி பிறப்பு
 -நெல்லை விவேகநந்தா-
கி.பி.18 ஆம் நூற்றாண்டு. 

ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இந்தியாவின் இயற்கை செல்வங்களை அவர்கள் தங்களது நாடுகளுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள். அவர்களை, ஏன் என்று தட்டிக்கேட்க யாருக்கும் துணிவில்லை. அப்படியே தட்டிக் கேட்ட மிகச் சிலரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

நாட்டைக் கொள்ளையடிக்க வந்த அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத  இந்தியக் குறுநில மன்னர்கள் அவர்களுக்குக் கப்பம் செலுத்தித் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ளத் தொடங்கினர். இந்த சுயநல அரசர்களால் ஆங்கிலேயர்களை எதிர்க்க இயலாவிட்டாலும், அவர்கள் ஆட்சிப் பகுதியில் மக்களை சாதி எனும் பெயரில் பிரித்து, உயர்வு தாழ்வுகளை உருவாக்கி வேறுபாடுகளை வளர்த்து வந்தனர். இந்த வேறுபாடுகளால், குறிப்பிட்ட சில சமூக மக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர். பல சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இக்கொடுமைகளில் தென் தமிழகமும், அன்றைய தென்கேரளாவும் இணைந்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த நாஞ்சில் நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமானது. இங்கு, உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் பிற சாதியினர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தி பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர். இந்த இன்னல்களை நினைத்து தங்கள் வாழ்க்கையை நொந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு விடிவு காலம் வருமா? என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். 

இதுபற்றி; 
“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...” 
- என்கிறது அகிலத்திரட்டு.

இந்த 18 ஜாதியினரும் உயர் ஜாதியினரான நம்பூதிரிகள், நாயர் (மேனன்), பட்டன், தம்புரான், தம்பி, பிள்ளைமார் மற்றும் பிராமணர்களுடன் பேசும் போதும், அவர்கள் வசிக்கும் பகுதி அருகில் செல்ல நேரும் போதும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனி வரைமுறையே உருவாக்கப்பட்டது. அத்தனையும், கொடூரமானவை! இதனால்தான், அன்றைய கேரளாவை "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னார் போலிருக்கிறது.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சில இடங்களுக்குச் செல்லும் போது, உயர் சாதிப் பெண்கள் வசித்த அம்ம வீடு மற்றும் உள்ளிருப்பு வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வு என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல; இரண்டு அல்லது மூன்று நாளில் தொடங்கி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும். அப்போது, அந்த வீட்டுப் பெண்கள் மன்னரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்தத் தொடர்பில் ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள், நாயர் உள்ளிட்டவர்கள் மன்னருடன் நெருக்கமாய் இருந்தனர்.

மன்னருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான ஓய்விற்கு பிரதிபலனாக பல சலுகைகளை உயர் சாதியினருக்கு வழங்கினார். அந்த ஆதிக்க ஜாதியினர் வசித்த பகுதியில் இருந்த விளைநிலங்கள், வருவாய்த்துறை மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரத்தால், உயர் சாதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக அறிவிக்கப்பட்டவர்ளைக் குற்றவாளியாக்கி குறுநில மன்னர்கள் போல் தீர்ப்பு வழங்கவும், தண்டனை கொடுக்கவும் தொடங்கி விட்டனர்.
  • உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) நடமாடக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் செருப்பு அணிந்து நடந்து செல்லக் கூடாது.

  •  வெயில், மழைக்கு குடை பிடிக்கக் கூடாது.

  • முழங்காலுக்கு மேலேதான் வேஷ்டி கட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்தபடிதான் நடக்க வேண்டும்.

  • உயர் சாதியினரின் குழந்தைகளையும் சாமி, அய்யா என்றுதான் அழைக்க வேண்டும்.

  • அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், ஆயுள் முழுக்க உயர் சாதியினருக்காக உழைக்க வேண்டும். அதற்கு கூலி கிடையாது. அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடும் நாய்க்கு வழங்குவதைப் போல்தான் வழங்கப்படும்.

  • ஒரு பிராமணனிடம் பேசும் போது 36 அடி தூரத்திலும், நாயரிடம் பேசும் போது 60 அடி தூரத்திலும் நின்று கொண்டு, தலையைக் கீழே குனிந்து கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் பேச வேண்டும். புலையர் இனத்தினருக்கு இந்த வரைமுறை இரட்டிப்பாக இருந்தது.

  • தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றால், தங்களை உயர் சாதியினர் பார்க்க நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குச்சியைக் கொண்டு தட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

  • வயல்களில் வேலை செய்யும் போது உயர் சாதியினர் அந்த வழியாக சென்றால், அவர்கள் தங்களைப் பார்க்கக்கூடாது என்பதற்கான அறிவிப்பை குறிக்கும் வகையில் இலைகளையும், மரத்துண்டுகளையும் வைத்துச் செல்ல வேண்டும்.

  • ஆதிக்க சாதியினரின் கோவில்கள் உள்ள இடங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது. இக்கோவில் திருவிழாக்களின் போது, சில கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே தடுப்புகளை ஏற்படுத்தி, ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தடுக்கப்பட்டது.

  • ஊரிலுள்ள பொதுக்குளம், கிணறு, சாலைகள், வணிகம் நடைபெறும் இடங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகள் பற்றி உயர் சாதியினரிடம் குறிப்பிடும் போது, அவர்களைக் குரங்கு, கன்றுக்குட்டி என்று வேறு மிருகங்களின் பெயரில்தான் சொல்ல வேண்டும்.

  • தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கு உயர் சாதியினர் பயன்படுத்தும் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது
    .
  • மாடி வீடு கட்டக் கூடாது. பசுமாடு வளர்க்கக் கூடாது.
- இப்படி பல அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பாக ஒடுக்கப்பட்ட 18 சாதியினர் மேல் திணிக்கப்பட்டன. அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சில சமயம் கொலையும் செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறைகளுடன் வரிகளும் அதிகமாக விதிக்கப்பட்டன. பனை ஏறுபவர்கள், அவர்கள் பயன்படுத்தும் 5 அடி உயர ஒற்றைக் கம்பு ஏணி, பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் தளைநார்களுக்கு கூட வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் தாடி, மீசை வளர்த்தால் அதற்கும் தனி வரி செலுத்த வேண்டும். இதுபோல், வீட்டுக் கூரையை மாற்றினாலும் கூட, கூரை வரி என்ற ஒன்றை கட்ட வேண்டும். "பிராயசித்த வரி" என்ற அதிகாரிகளே நிர்ணயித்த வரி விருப்பம்போல் வசூலிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட ஆண்களைவிட பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

 அடக்குமுறைக்கு பயந்து மார்பகத்தை திறந்துபோட்டு செல்லும் பெண்கள்...

மேலும்,
  • திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

  • இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

  • இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

  • 16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது. 
-இப்படிப்பட்ட கொடூரங்கள் நிறைந்த சூழ்நிலையில்தான், நாஞ்சில் நாட்டுக்கு உட்பட்ட சாஸ்தான் கோவில்விளை (இன்றைய சாமித்தோப்பு) என்ற ஊரில் வாழ்ந்து வந்த, தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியில் ஒன்றான சாணார் (நாடார்) இனத்தைச் சேர்ந்த பொன்னுமாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் கி.பி.1809 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பெருமாளின் அருளால் அக்குழந்தை பிறந்ததாக கருதிய பொன்னுமாடன் தம்பதியர், "முடிசூடும் பெருமாள்" என்று குழந்தைக்கு நாகரீகமான பெயரைச் சூட்டினர். 

"முடிசூடும் பெருமாள்" என்றால் "திருமுடியுடன் விஷ்ணு" என்று பொருள். அக்காலத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரில் உள்ள ஒருவர் குழந்தை பெற்றால், அது பற்றிய தகவலை அரசு நிர்வாகப் பதிவேட்டில் பதிவு செய்து, குழந்தைக்குரிய தலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அதனால், பொன்னுமாடனும் தனது மகனின் பெயரை பதிவு செய்யச் சென்றார். குழந்தையின் பெயர் நாகரீகமாக இருப்பதாக கருதிய அரசாங்கத்தினர், அந்த பெயரை பதிவேட்டில் பதிய மறுத்தனர். மாறாக, அவ்வாறு பெயர் வைத்ததற்காக தண்டனைதான் கிடைக்கும் என்றனர். பயந்து போன பொன்னுமாடன் நாடார், தனது குழந்தையின் பெயரை "முத்துக்குட்டி" என்று மாற்றினார். அதன் பின்னரே அவர் குழந்தைக்குரிய தலை வரி செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார். அவர் வேறு யாருமில்லை. நிகழ்காலத்தை மட்டுமின்றி எதிர்காலத்தையும் அப்படியே ஆழமாய்ச் சொன்ன அய்யா வைகுண்டர்தான் அவர்.
(தொடரும்...)

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

ரோஜா மருத்துவ பயன்கள்


ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது.

ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு.

மருத்துவ பயன்கள் :

1. இன்று, சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் - இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.

2. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

3. ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.

4. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

5. உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

6. ரோஜா மொக்கு 3 பங்கு, நிலவாகை இலை ஒன்றரை பங்கு, சுக்கு ஒரு பங்கு, கிராம்பு 1/4 பங்கு எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக சிதைத்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல் களைப்பு ஆகியவையும் நிவர்த்தியாகும்.

7. ரோஜா இதழ்கள் தேவையான அளவு எடுத்து, அதனுடன் சமஅளவு பாசிப்பயிறும், பூலாங்கிழங்கு நான்கைந்தும் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும். இதனை, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் இளவெந்நீரில் குளித்துவர சரும நோய்கள் அனைத்து அகன்றுவிடும். இதனை சோப்பிற்கு பதில் தினமும் பயன்படுத்திவர சருமம் பட்டுபோல் மிருதுவாவதுடன் கவர்ச்சிக்கரமான நிறமும் பெறலாம்.

8. ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் தீரும்.

9. ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.


ரோஜாப்பூ சர்பத் செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். அதில், 1/2 கிலோ அளவு ரோஜா இதழ்களை போட்டு கிளறி மூடி வைத்து விடுங்கள். 12 மணி நேரம் கழித்து இதனை நன்றாக பிசைந்தால் குழம்புபோல் வரும். அதை வடிகட்டிக் கொள்ளவும்.

இதேபோல், வேறொரு பாத்திரத்தில் 700 கிராம் சர்க்கரையை போட்டு, அதில் 300 மில்லி சுத்தமான தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சுங்கள். பாகு பதத்திற்கு வந்ததும் அதில், ஏற்கனவே குழம்பு போல் வடிகட்டி வைத்த நீரை சேர்த்து மீண்டும் காய்ச்சுங்கள். அதனுடன், 90 மில்லி லிட்டர் பன்னீரை கலந்து இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்துங்கள்.

இதில் 2-3 தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் தண்ணீர் அல்லது பசும்பால் கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் தணியும்; ரத்தம் விருத்தியடையும்; களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்; வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

- இதுதான் ரோஜாப்பூ சர்பத். இதற்கு ரோஜாப்பூ மணப்பாகு என்ற பெயரும் உண்டு.


ரோஜாப்பூ குல்கந்து செய்முறை :

ரோஜாப்பூவில் இருந்து குல்கந்தும் செய்யலாம். இது உடலுக்கு போஷாக்கு தரும் சிறந்த ‘டானிக்’ போன்றதும்கூட. அதன் செய்முறை :

நல்ல தரமான நிறமுள்ள பெரிய ரோஜாப்பூக்களை வாங்கி வந்து, அவற்றின் இதழ்களை மட்டும் தனியாக சேகரியுங்கள். பூவில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அந்த மலரை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு சேகரித்த ரோஜா இதழ்களின் எடைக்கு 3 மடங்கு கற்கண்டு சேர்த்து, இரண்டையும் உரலில் இட்டு மெழுகு பதம் வரும் வரை இடித்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் இட்டு, இதன் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு தேனை விட்டு நன்கு கிளறி, காற்று புகாமல் மூடி வைக்கவும். இதுவே நல்ல தரமான குல்கந்து.

இதனை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டி, பெரியவர்கள் ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டுவர ரத்தம் விருத்தியடையும்; ரத்தம் சுத்தமாகும்; மலச்சிக்கல் அடியோடு ஒழியும்; உடல் உள் உறுப்புகள் பலமாகும்; ரத்தபேதி, உடல் வெப்பம், வெட்டை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

Share: