ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 23

23. இளம் இணைகளின் படம்!

"ஆனந்த்... எனக்கு இந்த பொட்டானிகல் கார்டன் போர் அடிக்குது. வேற எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போங்க..." மதியம் 12 மணி தாண்டி கடிகாரம் ஓடியதுகூட தெரியாமல் ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகில் லயித்துக் கிடந்த ஆனந்த்தை உசுப்பி விட்டாள் ஷ்ரவ்யா.

"என்ன ஷ்ரவ்யா... அப்படியொரு வார்த்தை சொல்லிட்ட? நாள் முழுக்க இந்த பூங்காவோட அழகுல மூழ்கிக் கிடக்குற ஜோடிகள் எத்தனையோ பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, அங்கே தோளோடு தோள் உரசி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுகூட அடுத்தவர்கள் பார்வைக்குத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் ஜோடியைப் பார்... நாம இங்கே நுழையும் போதே அவர்கள் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த பூங்கா போர் அடிக்கவில்லை. உனக்கு மட்டும் எப்படி போர் அடித்தது?" பதிலுக்கு ஷ்ரவ்யாவை சீண்டிவிட்டான் ஆனந்த்.

"அவங்கள பார்த்தாலே தெரியல; புதுமணத் தம்பதிகள்னு! அதான் கொஞ்சிக் கொஞ்சி பேசிட்டு இருக்காங்க..." என்றாள் ஷ்ரவ்யா.

"அவங்களுக்கு மேரேஜ் ஆகி, குறைந்த பட்சம் எப்படியும் ஒரு வாரம் இருக்கலாம். அவங்களே இப்படிக் கொஞ்சிட்டு இருக்கும்போது... நேற்று காலையிலதான் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாம எப்படி இருக்கணும்?"

"ஓ... உங்களுக்கு இந்த ஆசையெல்லாம் இருக்குதா--? அவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி மொபைல்ல மணிக்கணக்கா பேசி இருப்பாங்க. ஏன்... அவங்களுக்கு பஸ்ட் நைட்கூட நடந்து இருக்கும். அந்தப் புரிதல்ல இப்படி பேசிட்டு இருக்கலாம் இல்லீயா--?"

"சரி சரி... நீ சொல்ல வர்ற விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். இன்னிக்கு நைட்டே, ஏன்... பகல்லயே அதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்."

"ஏதோ... ஏற்பாடு பண்ணிடுறேன்னு சொன்னீங்களே... என்ன ஏற்பாடு பண்ணப் போறீங்க--?" ஆனந்த் எதற்காக அப்படிச் சொன்னான் என்பது தெரிந்தும், தெரியாதது போல் கேட்டாள் ஷ்ரவ்யா.

"அது சஸ்பென்ஸ். அதுக்கு முன்னாடி, இன்னொரு அழகான விஷயத்தை உனக்காகச் சொல்லப் போறேன்."

"என்ன விஷயம்?" ஆனந்துக்கு மிக அருகில் வந்து ஆர்வமாகக் கேட்டாள்.

"இந்தப் பூங்கா போர் அடிக்குதுன்னு சொன்னல்ல... உண்மையிலேயே போர் அடிக்காம இருக்கத்தான் இந்த பூங்காவையே ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினாங்க..." என்று சொல்லி நிறுத்தினான் ஆனந்த்.

"இவ்ளோ புள்ளிவிவரமா சொல்றீங்களே... ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே, ஊட்டி பத்தின கைடு வாங்கி படிச்சி, கரைச்சிக் குடிச்சிட்டீங்களாக்கும்--?"

"ஆமா... நான் ஒரு இடத்துக்கு போறேன்னா, அந்த இடத்தப் பத்தின விவரங்களை முதல்ல சேகரிச்சு தெரிஞ்சுக்கறது என்னோட வழக்கம். அது, பல வழிகள்ல உதவியா இருக்கும். இப்போ, உனக்கு கூட என் மூலமாக ஊட்டி பத்தின பல விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும் இல்லீயா---? அந்த வகையில, இதை ஒரு சமூகசேவைன்னு கூட நெனைச்சிக்குவேன்."
"நான் செய்யறது சமூகசேவைன்னு நாமலே சொல்லிக்கக்கூடாது. அடுத்தவங்கதான் அதை பெருமையாச் சொல்லணும். ஏதோ, இந்தப் பூங்கா பத்தி சொல்ல வந்தீங்க... அதை முதல்ல சொல்லுங்க. அதுக்கு அப்புறம், நீங்க செய்யறது சமூகசேவையா, இல்லையான்னு நான் சொல்றேன்..." என்ற ஷ்ரவ்யா, ஆனந்தின் இடது கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.

வழக்கம்போல் ஊட்டி தாவரவியல் பூங்கா பற்றிய புள்ளிவிவரத்தைச் சொன்னான் ஆனந்த்.

"1847-ஆம் ஆண்டு இந்தப் பூங்காவை நிறுவினாங்க. இதை வடிவமைச்சவர் வில்லியம் கிரஹாம் மெஹ்வார் என்கிற ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர். ஆரம்பத்துல இந்தப் பூங்கா காய்கறித் தோட்டமாகத்தான் இருந்துச்சு. கோடை காலத்துல சென்னையோட வெயிலை தாங்கிக்க முடியாம இங்கே வந்து குடியேறின ஆங்கிலேய அதிகாரிகள், பிரபுக்கள், ராணுவ அதிகாரிகளுக்கு தேவையான உணவுகள் இங்கே விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்தே தயாரானது. இப்போ 22 ஹெக்டேர் பரப்பளவுள பரந்து விரிஞ்சி அமைஞ்சிருக்கு இந்தப் பூங்கா. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்துல இந்தப் பூங்கா அமைஞ்சிருக்கறதுனால எப்போதுமே இங்கே குளுகுளுன்னு இருக்கும். கோடை காலங்கள்லதான் இந்த குளுமையை நம்மால அனுபவிக்க முடியும். மழை காலங்கள்ல குளுமைக்கு பதிலா கடும் குளிர் இருக்கும். அந்த நேரங்கள்ல இங்கே மணிக்கணக்குல உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது. மீறி பேசிட்டு இருந்தா... சென்னையில வாழக்கூட நம்மள மாதிரியானவங்களுக்கு ஜன்னியே வந்துவிடும்...” என்றான் ஆனந்த்.

“பரவாயில்ல... ஊட்டி பற்றி நல்லாவே தகவல் சொல்றீங்க. இதைச் சமூகசேவைன்னே நான் ஒத்துக்கறேன். மத்தவங்க ஒத்துக்கறாங்களா, இல்லையான்னு எனக்குத் தெரியாது...” என்று கைவிரித்தாள் ஷ்ரவ்யா.

அப்போது ஆனந்த் அருகில், 28 வயது மதிக்கத்தக்க ஆணும், 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் வந்து நின்றார்கள், வெகுநேரம் மறைமுகமாக அமர்ந்தபடி பேசிக்கொண்டு ஆனந்த்- ஷ்ரவ்யாவின் கவனத்தை ஈர்த்த ஜோடிதான் அவர்கள். 28 வயது மதிக்கத்தக்க ஆணே பேசினான்.

“ஸார்... எங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது. ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம். எங்களை ஒரு போட்டோ எடுக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு, தனது டிஜிட்டல் கேமராவை ஆனந்திடம் தந்தான்.

“ஓ... யெஸ்...” என்ற ஆனந்த், கேமராவை வாங்கிக் கொண்டு, அந்த ஹனிமூன் ஜோடியைப் படம் எடுக்கத் தயாரானான். தனது மனைவியின் இடுப்பில் கை கோர்த்தபடி, மிகமிக நெருக்கமாக நின்று போஸ் கொடுத்தான் கேமரா தந்தவன். வெட்கத்தில் ஷ்ரவ்யா திரும்பிக் கொள்ள... ஆனந்த் வைத்திருந்த கேமராவில் இருந்து வேகமாக ப்ளாஷ் வெளியே வந்து, புதுமண ஜோடியைப் புகைப்படமாக்கிக் கொண்டது.
“தேங்கஸ் ஸார்...” என்று, ஆனந்த்துக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, கேமராவை வாங்கிக் கொண்டவன், “ஸார்... உங்க கேமரா இருந்தா குடுங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுத்துத் தர்றேன்” என்றான்.

ஆனந்த்தும் தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அவனிடம் நீட்ட... அவன் வாங்கிக் கொண்டான். தனக்கு அருகில், இன்னொரு ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து வெட்கத்தில் பூத்திருந்த ஷ்ரவ்யாவை கரம் பற்றி இழுத்த ஆனந்த், அவளை தனக்கு முன்பாக கொண்டு வந்து அணைத்தபடி போஸ் கொடுத்தான். அவர்களைக் கேமராவில் பதிவு புதுமாப்பிள்ளை, “ஸார்... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா பொருத்தமான ஜோடியா இருக்கீங்க...” என்று வியந்து பாராட்டிவிட்டு போனான்.

எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாய் வெட்கப்பட்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா புல் தரையில் தனது கால் பெருவிரலால் கோலம் போட ஆரம்பித்துவிட்டாள் ஷ்ரவ்யா.


(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை

 22. மாடர்ன் டிரெஸ்

ஊட்டியில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்ப்பதும், வளைந்து நெளிந்து ஆடையைச் சரி செய்வதுமாக இருந்தாள். குணசீலன் கட்டாயப்படுத்தி அணியச் சொன்ன ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் அவளுக்குப் புதிது என்பதால், அந்த ஆடை அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றியது.

ஆனால், அமுதாவின் நடவடிக்கைகளால் மிகச் சிலரே அவளை பார்த்தார்களே தவிர, மற்றபடி அவளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் பார்க்கவில்லை. அமுதாவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்ட குணசீலனே பேசினான்.

“அமுதா... இது உன்னோட ஊரு கிடையாது. எங்கிருந்தெல்லாமோ வர்ற டூரிஸ்ட்கள்தான் இங்கே அதிகம். இங்கே வர்ற எல்லோருமே மாடர்னா டிரெஸ் போட்டுக்கத்தான் ஆசைப்படுவாங்க. ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டும், இன்னிக்கு உள்ள மாடர்ன் கல்ச்சர்ல தவிர்க்க முடியாத ஒண்ணு. அதைப் போட்டுக்கறதுலேயும் தப்பே இல்லை.”

“ஆனா... எல்லா ஆண்களும் ஒருமாதிரியா பார்ப்பாங்களே...”

“அப்படியெல்லாம் அவங்க பார்க்கறதா நீதான் கற்பனை பண்ணிக்கணும். சரி, அப்படியே பார்த்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு?” குணசீலனின் இந்தக் கேள்விக்கு அமுதாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“அமுதா... உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. ஆனாலும், என் ஒய்ப் எப்படியெல்லாம் மாடர்னா டிரெஸ் பண்ணிக்கணும், அவளோட எப்படியெல்லாம் ஜோடியா ஊர் சுத்தணும்னு நான் பெரிய கற்பனையே பண்ணி வெச்சிருக்கேன். அதை மட்டும், எக்காரணத்தைக் கொண்டும் வீணாக்கிடாதே...”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்தான்.

“மவுனமா இருந்தது போதும் அமுதா. இங்கே நீ மட்டும்தான் ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக்கல. நமக்கு எதிர்ல தன்னோட ஹஸ்பண்டோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கற பொண்ணைப் பாரு. அவள் போட்டு இருக்கற டீ-சர்ட்டையும் பாரு. ரொம்பவும் “லோ நெக்”காப் போட்டு இருக்கா. தான், அப்படி டிரெஸ் போட்டு இருக்கறதுல எந்தத் தப்பும் இல்லன்னு அவ நெனைக்கிறா. அப்படியொரு டிரெஸ் போட்டு இருக்கறதுனால, தான் இன்னும் இளமையா, ரொம்ப ரொம்ப அழகா இருக்கறதாவும் நெனைக்கறா. நீயும் அப்படி நினைச்சிக்கோயேன்...”

இப்போது குணசீலனை லேசாக முறைத்தாள் அமுதா.

“என்ன புரிஞ்சிக்க அமுதா. இந்த வயசுலதான் இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டு அழகு பார்க்க முடியும். நீ போட்டுத்தான் ஆகணும்னு நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ், உன்னை இன்னும் அழகா, கவர்ச்சியாத்தான் காட்டுதே தவிர, துளியும் செக்ஸியா காட்டல. அப்படி இருக்கும் போது, இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வெளியே வர்றதுல என்ன தப்பு இருக்கு?”

குணசீலனுக்குப் பதில் சொல்ல அமுதா வாய் திறந்த போது, அருகில் சர்வர் வந்து நின்றான்.

“ஸார்... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமாக பேசிக்கிட்டே இருக்கீங்க. என்ன சாப்பிடணும்னு சொன்னா, உடனே கொண்டு வந்திடுவேன். சாப்பிட்டுக்கிட்டே நீங்க பேசலாம்...” என்றான் அவன்.

“நீ என்ன சாப்பிடுற? ” அமுதாவை பார்த்துக் கேட்டான் குணசீலன்.

“எனக்கு ரெண்டு இட்லி போதும்.”

அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அமுதா.

“எங்க ரெண்டு பேருக்குமே முதல்ல ரெண்டு இட்லியும் வடையும் கொடுங்க. அதுக்கு அப்புறம், ரவா தோசை குடுங்க...”

“எனக்கு இட்லி மட்டும் போதும். தோசை எல்லாம் வேண்டாம்” அவசரமாக குறுக்கிட்டாள் அமுதா.

“சரி, அப்போ... எனக்கு ஒரேயொரு தோசை மட்டும் குடுங்க...” என்று குணசீலன் சொல்ல, அங்கிருந்து நகர்ந்தான் சர்வர்.

சற்று நேரத்தில் இட்லியும் வடையும் வந்து சேர, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். இருவரும் சாப்பிட்டு முடித்து ஓட்டலை விட்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான் குணசீலன். மணி, 10ஐத் தாண்டி இருந்தது.

குணசீலனும் அமுதாவும் வந்த டிராவல்ஸ் கார் முதன் முதலாக வந்து நின்ற இடம் ரோஸ் கார்டன் என்கிற ரோஜா தோட்டம். ஊட்டியில் விஜயநகரம் எனும் பகுதியில், எல்க் மலையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. ஊட்டியின் நூறாவது மலர்க் கண்காட்சியின் நினைவாக 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் தற்போது ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் உள்ளன. ஊட்டி சீஸன் காலங்களில் இந்தப் பூங்கா முழுக்க ரோஜா மலர்களால் நிரம்பி வழியும். மற்ற நாட்களில் குறைந்த அளவிலான ரோஜாப் பூக்களையே பார்க்க முடியும்.

இப்போது, குணசீலனும் அமுதாவும் வந்திருப்பது சீஸன் நேரம் என்பதால், அந்தப் பூங்காவில் எங்கு பார்த்தாலும் ரோஜாப் பூக்களாகவே காணப்பட்டன. அமுதாவுக்கு ரோஜாப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றைக் கைகளில் அள்ளியெடுத்துக் கொஞ்சிச் சிலிர்த்தாள். அதைத் தனது கேமராவால் படம் பிடித்தான் குணசீலன். ரோஜாப் பூக்களைப் பார்த்த மாத்திரத்தில் குழந்தையாய்க் குதூகலித்த அமுதா, தான் அணிந்திருக்கும் ஆடை டீ - சர்ட் என்பதை மறந்து ரோஜாச் செடிகளின் அருகில் சென்று குனிவதும் நிமிர்வதுமாக இருந்தாள். அதையும் படம் பிடித்தான் குணசீலன். அந்தப் படங்கள் அமுதாவை அழகாகக் காட்டுவதற்குப் பதிலாக ஆபாசமாகக் காட்டின.

(தேனிலவு தொடரும்...)
Share: