புதன், 5 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 1


1. உல்லாசப் பயணம்
  
- நெல்லை விவேகநந்தா -


தியம் 1.30 மணி -சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள்.


ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது.


பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என்று ஆரம்பிக்கும் ரெக்கார்டு செய்யப்பட்ட பெண்ணின் அழகான குரல், பயணிகளின் பலத்த ஓசைகளுக்கு மத்தியில் தேனிசையாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.


"மே ஐ ஹெல்ப் யூ" என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்த ரெயில்வே தகவல்களைப் பெறும் அறையில் ஒருசில பயணிகள் எதையோ விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.


உலகம் முழுக்க தமிழர்களின் கைமணத்தை பரப்பிய சரவணபவனின் ரெயில்வே கிளை ஹோட்டலில் இருந்து வந்த கமகம வாசனை பெரும்பாலான பயணிகளை அந்த ஹோட்டலை நோக்கி ஒருகணம் திரும்ப வைத்தது. அந்த ஹோட்டலுக்குள் ஒரு டேபிளில் பரபரப்பாக அமர்ந்திருந்தான் ஆனந்த். அடிக்கடி ஹேண்ட் வாட்சை பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு முன்பாக டேபிள் மீது வைத்திருந்த விலை உயர்ந்த நோக்யா மொபைலையும் அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


சிறிதுநேரத்தில் ஹோட்டல் சப்ளையர் அவன் ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தார்.


"ஸார்... உங்களுக்கு காபி மட்டும் போதுமா? வேறு ஏதாவது வேணுமா?"


"இப்போது சாப்பிட எதுவும் வேண்டாம். 2 செட் வடை மட்டும் பேக் செய்யுங்கள். இரண்டுக்கும் சேர்த்து பில் கொண்டு கொண்டு வாருங்கள்."


ஆனந்த் சொன்னதும் அங்கிருந்து அகன்றார் சப்ளையர்.


ஆவி பறந்து கொண்டிருந்த காபியை உதட்டுக்கு கொடுத்து சப்பத் துவங்கினான் ஆனந்த். அவன் காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் பளிச்சிட்டு சினுங்கியது. ஆர்வமாய் மொபைலை ஆன் செய்து பேசினான்.


"ஸார்... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்துவிட்டோம்."


எதிர் முனையில் பேசிய ஆசாமி கூறினான்.


"நான் சரவணபவன் ஹோட்டலில் இருக்கிறேன். இதோ வெளியே வந்து விடுகிறேன். நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் வாருங்கள்."


"நான் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாது ஸார்."


"ஏன்?"


"நீங்கள் கோவைக்கு இரண்டு டிக்கெட்தானே ரிசர்வ் செய்து வைத்திருக்கிறீர்கள்?"


"ஆமாம்!"


"நான் உள்ளே வர வேண்டுமானால் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு வாருங்கள்."


"சரி... நீங்கள் அங்கே நில்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ஆமாம்..." இதற்கு மேல் சொல்லும் போதுதான் பேச்சில் சற்று தடுமாறினான் ஆனந்த்.


"பயப்படாதீங்க ஸார். அந்த பொண்ணும் என்கூடத்தான் இருக்கு. நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம்!"


"சரி... இதோ வந்துவிட்டேன்."


அவசரமாக மொபைல் இணைப்பை துண்டித்தவன், தான் குடித்துக் கொண்டிருந்த காபியைப் பார்த்தான். அது நன்றாக ஆறிப்போய் இருந்தது. அதனால் அதை அப்படியே வைத்துவிட்டான்.


அவன் ஆர்டர் செய்த இரண்டு செட் வடையும் பில்லோடு வந்துவிட்டதால், அதற்கான பணத்தை வேகமாக கொடுத்துவிட்டு, வடையை தனது பேக்கிற்குள் திணித்துக் கொண்டு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதிக்கு ஓடினான்.


ஓடி வந்த வேகத்தில் எதிரே சற்று உயரத்தில் பளிச்சிட்ட மானிட்டரில் நேரத்தைப் பார்த்தான். மதியம் 2 மணி 10 நிமிடம் 7 நொடி என்பது பளிச்சிட்டது.


ரெயில் புறப்பட இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது என்கிற வேகத்தில் ஓடி வந்தவன், தன்னைத் தேடி வந்தவர்கள் எங்கே என்று பதற்றமாய் தேடினான்.


அப்போதுதான், நாம் தேடி வந்தவர்களை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கிடையாதே... வேறு எப்படி அவர்களை அடையாளம் காண்பது? என்று யோசித்து நின்றான்.


மொபைலில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவன் அருகில் ஒருவன் வந்து நின்றான்.


"ஸார்... நீங்கள்தானே ஆனந்த்?"


"ஆமாம். நீங்கள்...?"


"நான்தான் பிரகாஷ்."


"ஸாரி... நான் உங்கள் பெயரையே மறந்து போய்விட்டேன்."


"ரெயில் புறப்பட நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நம்ம அக்ரிமென்ட்டை எந்த சூழ்நிலையிலும் மீறிவிட வேண்டாம். மீறி நடந்தால், நடக்கும் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும்."


"இன்னும் எந்த காரியமும் நடக்கவில்லையே... அதற்குள் ஏன் நடக்காததைப் பற்றி பேசுகிறீர்கள்?"


"இல்லை... ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் சொன்னேன்."


"சரி..." என்ற ஆனந்த், மறுபடியும் கண்களால் அந்தப் பெண்ணைத் தேடினான்.


"ஸார்... நீங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்குறீங்க. அந்தப் பெண் உங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாள். நீங்கள்தான் அவளை இன்னும் பார்க்கவில்லை."


"அப்படியானால் அவள் எங்கே?"


மறுபடியும் ஆனந்திடம் அதீத ஆர்வம் பளிச்சிட்டது.


"உங்களை மேலும் சோதிக்க விரும்பவில்லை. உங்களுக்கான அந்த இளம்பெண் உங்கள் ரிசர்வ் செய்த ரெயில் பெட்டியில் இந்நேரம் ஏறி உட்கார்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்."


"டிக்கெட் என்னிடம் அல்லவா இருக்கிறது? அவளுக்கு எப்படி பயணிக்க வேண்டிய கோச் தெரியும்?"


"என்ன ஸார் மறுபடியும் மறந்துட்டீங்களா? நீங்கள் தானே இன்னிக்கு காலையில் கோவை எக்ஸ்பிரஸில் பயணிக்க உள்ள கோச் மற்றும் சீட் நம்பர் பற்றி மெஸ்ஸேஜ் செய்தீர்கள்?"


"ஆமாம், மறந்துவிட்டேன்..." என்ற ஆனந்த் சற்று வழிந்து தொலைத்தான்.


"ஆனந்த் ஸார்... இதுக்கு மேலேயும் உங்களது பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கள் பாஸின் Ôஇன்டியன் பேங்க்Õ அக்கவுண்ட்டிற்கு அனுப்பிய பணம் 70 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. ஸோ... என்ஜாய் யுவர் ஊட்டி ஜார்னி" என்று கை கொடுத்து வாழ்த்தி விட்டு திரும்பினான் பிரகாஷ்.


பதற்றத்தோடு கோவை செல்ல தயாராக நின்றிருந்த சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் நிற்கும் ஆறாவது பிளாட்பார்ம் நோக்கி வேகமாக ஓடினான் ஆனந்த்.


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்" என்கிற தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலான அறிவிப்புகளால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் தனக்குரிய சீட் ஒதுக்கப்பட்டு இருந்த கோச்சான டி5-ஐ சென்றடைந்தான்.


அது சிட்டிங் ரெயில். அதாவது, அமர்ந்து மட்டுமே செல்லும் பயணிக்கும் பகல் நேர ரெயில் என்பதால் ஒவ்வொரு பயணிகளும் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். 42, 43 ஆகிய எண்கள் கொண்ட சீட்கள் ஆனந்த்துக்கும், அவனுடன் பயணிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தன.


தன்னுடன், தன்னுடைய எல்லா சேவையையும் பூர்த்தி செய்ய வரப்போகும் அந்த அழகி யார் என்பதை அறிய ஆவலாய் தன் இருக்கையைப் பார்த்தான். அங்கே அந்தப் பெண் இல்லை. பக்கத்தில் எங்கேயாவது நிற்கிறாளா என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே பல இளம்பெண்கள் நின்றிருந்ததால், ஒரு வாரத்திற்கு மட்டும் தனக்குரியவளாக உடன் வாழப் போகும் அந்த பெண்ணை தேடினான்.


அடுத்த நிமிடமே, அந்த ரெயில் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனந்தின் பதற்றம் இன்னும் அதிகமாகியது.


'அந்த பெண்ணை இன்னும் காணவில்லை. 70 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்களா? நானும், அவர்களை நம்பி இப்படியொரு ஜென்டிமென் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டது முட்டாள்த்தனமானதா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அப்செட் ஆனான்.


தனது இருக்கையில் சோகத்தோடு அமர்ந்த அவன் எதார்த்தமாக நிமிர்ந்தான். அவனுக்கு எதிரில் 22 வயது மதிக்கத்தக்க அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.


டைட்டாக ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். அவளது ஒட்டுமொத்த அழகையும் அந்த ஆடை பளிச்சென்று காட்டியது. அவளது லிப்ஸ்டிக் உதட்டில் திருநெல்வேலி அல்வாவின் இனிப்பு தெறித்தது.


நிச்சயம் அவள்தான் தனக்காக அனுப்பப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆனந்த், அவளுக்கு புன்னகையோடு ஒரு ஹாய் சொன்னான்.


நிமிர்ந்து பார்த்த அந்த பெண், லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.


தன்னை அவளிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் திணறினான் ஆனந்த்.


"மேடம்..."


"யெஸ். வாட் யூ வான்ட்?"


"ஐ ஆம் ஆனந்த். ஆர் யூ...?"


"ஐ ஆம் ஸ்வேதா."


தன் பெயரை மட்டும் சொன்ன அவள், அதற்கு மேல் பேச ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.


'இவளது பேச்சைப் பார்த்தால் நமக்காக அனுப்பப்பட்டவள் போன்று தெரியவில்லையே...' என்று திடீரென பதற்றமான ஆனந்த், சீட்டில் இருந்து அவசரமாக எழுந்தான். தனக்குரிய பெண்ணை அனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டு போன பிரகாஷ் மொபைலை அவசரமாக தொடர்பு கொண்டான்.


தனது கைக்குழந்தை மொபைலை வெகுநேரம் சினுங்க விடவில்லை பிரகாஷ். உடனே ஆன் செய்தான்.


"என்ன பிரகாஷ் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா? ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு அந்த பெண்ணை கூட்டிட்டு வந்ததாக முதலில் சொன்னீர்கள். நான் அங்கே வந்தபோது ரெயிலில் ஏறி இருப்பாள் என்றீர்கள். இப்போது அந்த பெண் இங்கே வரவேயில்லை. என்னை சாதாரண ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற நினைக்காதீங்க. என்னுடைய க்ளோஸ் ப்ரெண்ட் இந்த சென்னையில்தான் ஜாயின்ட் கமிஷனரா இருக்கான். அவனுக்கு நான் ஒரு போன் பண்ணுனாலே போதும். நீங்க எல்லாம் கூண்டோடு உள்ளே இருப்பீங்க..."


"ஸார்... அவசரப்பட்டு கத்தாதீங்க. நீங்க யாரு, உங்க பேக்ரவுண்ட் என்ன என்று எல்லாவற்றையும் விசாரித்துதான் அந்த பெண்ணை உங்களோடு அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கும் தொழில் தருமம்னு ஒண்ணு இருக்கு. வாங்கின பணத்துக்கு நாங்க ஏமாத்த மாட்டோம். ரெயில் புறப்படும்போது அவள் உங்களோடு இருப்பாள். அதுக்குப் பிறகும் அவள் வரவில்லை என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க. இப்போது மொபைலை கட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டான் பிரகாஷ்.


"ச்சே..."


ஆனந்துக்கு மொபைலை வீசியெறிய வேண்டும் என்பது போல் இருந்தது. கோபத்துடனேயே தனது சீட்டில் உட்கார்ந்தான். அப்போதுதான் யாரோ ஒரு இளம்பெண் தன்னை உரசி இருப்பது போல் உணர... திரும்பிப் பார்த்தான்.-


அங்கே, நடிகை அனுஷ்கா சாயலில் அழகான இளம்பெண், அவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.


ஆனந்த் பேசுவதற்கு முன்பாக அவளே தனது அழகான வாயைத் திறந்தாள்.


"நீங்கள் தானே ஆனந்த்?"


"ஆமாம்!"


"நான் ஷ்ரவ்யா. ஒரு வாரத்திற்கான உங்களது பார்ட்னர்."


புடவையில் ஹோம்லியாக வந்திருந்த ஷ்ரவ்யாவை பார்ப்பதற்கே ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு அழகியா தனக்கு 'கம்பெனி' கொடுக்கப் போகிறாள் என்பதை அந்த நிமிடம் வரை அவனால் நம்ப முடியவில்லை.






(இன்னும் வருவாள்...)
Share: