ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.

அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.

அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.

முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார்.
ஒரு வருடம் கழிந்தது.

மிருகண்டு மகரிஷி தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். 


சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர் மீது மிகுந்து பற்று கொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்துத் தேறினான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டனர் மிருகண்டு தம்பதியர்.

மார்க்கண்டேயன் தினமும் திருக்கடையூர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான்.

நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான்.
அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப் போகிறதே... என்று வருந்தினர்.

உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்காமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ தலமாக சென்று 108 சிவ தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடையூர் வந்தான்.

“அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.

அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். 

எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.

தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார். 

“காலனே எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?“ கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். 

தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, “என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்“ என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.

எமன் இறந்தால் பூலோகம் என்ன ஆகும்...? பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. “இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்” என்று வேண்டினாள்.

சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார். 

“யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!” என்பதுதான் அந்த நிபந்தனை.

பின்குறிப்பு : இந்த சம்பவத்தின்படி, திருக்கடையூர் சிவலிங்கத்தின் மேல் பாசக்கயிறு விழுந்து அமுக்கிய தடத்தையும், நீண்ட ஆயுள் வேண்டி இந்த கோவிலுக்கு வருவோரையும் இன்றும் நாம் காணலாம்.

 
 
 
(திருவிளையாடல்கள் தொடரும்)
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 6

6. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா?
 -நெல்லை விவேகநந்தா-
திருச்செந்தூரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் அன்று கடல் அலை இழுத்துச் சென்ற முத்துக்குட்டி திரும்ப வரவேயில்லை. ஏற்கனவே படுத்த படுக்கையான நோயாளி அவர் என்பதால், நிச்சயம் இறந்திருக்கக் கூடும் என்று கருதினர், அவரது உறவினர்கள். அதனால், பொன்னுமாடனும், வெயிலாளும், திருமாலையும் அலறி துடித்தனர்.

கடல் அலைகளில் சிக்கித் தவிக்கிறானா? என்று முத்துக்குட்டியின் பெற்றோர், அந்த நீல வண்ணக் கடலையே கண்ணீரும் கம்பலையுமாக மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், முத்துக்குட்டி அவர்களது கண்ணில் தென்படவே இல்லை.

மணித்துளிகள் வேகமாக கரைந்தன. அழுது அழுது ஓய்ந்துபோன வெயிலாள், அதற்குமேல் அழத் தெம்பின்றி அங்கேயே சுடும் வெயிலில் அமர்ந்து விட்டார். பொன்னுமாடன் நாடாரும் விக்கித்துப் போய்தான் நின்றார். ஒரே மகன் என்று செல்லமாக வளர்த்தேனே... நோய் குணமாகும் என்று வந்த இடத்தில், அவனை இப்படி பறிகொடுத்து நிற்க வேண்டியதாகி விட்டதே... என்று, மனதிற்குள் விம்மி விம்மி அழுததால் அவரது கண்களும், கன்னங்களும் வீங்கிப் போயின. திருமாலையின் நிலையும் அப்படியே! தலைவிரி கோலத்தில் அழுது அழுது அவளும் ஓய்ந்து போய்விட்டாள்.

சுடும் கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் மாலைப் பொழுதும் வந்தது. முத்துக்குட்டியின் உடல் கூட கரை ஒதுங்கவில்லை. கடல் அலைகளின் ஆக்ரோஷமும் குறைந்தபாடில்லை.

நோய்வாய்ப்பட்டவனைக் கடல் அலை இழுத்துச் சென்று விட்டது என்பதை அறிந்த, செந்தூர் மாசித் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் கூட்டமும் சற்று மிரண்டுதான் போனது. அலை அடித்துக் கொண்டுப் போனவர் யாரோ... எவரோ... என்று அனுதாபத்துடன் பேசியபடி அங்கிருந்து அகன்று கொண்டிருந்தனர்.

அன்று இரவு முழுவதும் பரபரப்புடன் நகர... மறுநாளும் வந்தது. முத்துக்குட்டியின் உடல் எங்கேயாவது கரை ஒதுங்கி இருக்கிறதா? என்று அவரது உறவினர்கள் அலைந்து திரிந்து தேடினார்கள். அன்று மாலைநேரம் வரை தேடியும் எந்த பயனும் இல்லை.

நம்பிக்கை இழந்து போனார்கள் முத்துக்குட்டியின் உறவினர்கள். “இதற்கு மேல் இங்கே நாங்கள் எல்லாம் இருக்க முடியாது. பிள்ளை குட்டிகளை விட்டுவிட்டுதான் இங்கே வந்தோம். கிட்டதட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் நான்கைந்து நாட்களில் ஊருக்கு வராவிட்டால் எங்களது சொந்தங்களும் இப்படித்தான் எங்களைத் தேடி அலைய வேண்டியது இருக்கும்...” என்று கூறிய அவர்கள், சாமித்தோப்பு நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

"போனவன் போனவன்தான்; திரும்ப வரமாட்டான்... அதனால், நாம் ஊருக்கு திரும்பி விடுவோம்..." என்று, முத்துக்குட்டியின் உறவினர்கள் முடிவெடுத்த போது, அவரது அன்னை வெயிலாள் மட்டும், மகன் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கையில் வீடு திரும்ப மறுத்தார்.

அவரது மனஉறுதியைப் பார்த்த உறவினர்கள் சிலர் மட்டும் அவருடன் திருச்செந்தூரில் தங்க... மற்றவர்கள் சாமித்தோப்பு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பொன்னுமாடன் கூட மகன் இறந்து இருப்பான் என்று நம்பிய அதே வேளையில், வெயிலாள் மட்டும், முத்துக்குட்டி நிச்சயம் உயிரோடு வருவார்... என்ற அதீத நம்பிக்கையில் இருந்தார். மகனைப் பறிகொடுத்த வேதனையில் அவர் இப்படியெல்லாம் புலம்புவதாக நினைத்தார்கள். இருந்தாலும், அந்த அன்னையின் வாய்ச்சொல் பலித்துவிடாதா? என்ற நப்பாசையில் ஓரிரு உறவினர்கள் மட்டும் தங்கிக் கொண்டனர்.

மூன்றாவது நாளும் வந்தது. அன்று, ஆதவன் உறக்கம் கலைந்து எழுவதற்கு முன்பாகவே, செந்தூர் கடற்கரையில் மகன் வருவான்... மகன் வருவான்... என்று கடல் அலைமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார் வெயிலாள் அம்மையார். அன்னம், தண்ணீர் காணாத அவரது உடல் நோயாளி போல் சோர்ந்து போய் காணப்பட்டது. நேரம் செல்லச் செல்ல கதிரவன் வழக்கம்போல் சுட ஆரம்பித்தானே தவிர, முத்துக்குட்டி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. 

அந்த நேரத்தில் வெயிலாளே எதிர்பார்க்காத அதிசயம் நிகழ்ந்தது.
ஆம்... கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன முத்துக்குட்டி, மஞ்சள் குளித்து புதுப்பொலிவுடன் தவழ்ந்து வந்த கதிரவனின் பளிச்சிடும் பின்னணியில் வந்து கொண்டிருந்தார். கடல் அலைகளை கிழித்துக் கொண்டு அவற்றுக்கு நடுவே நடந்து வந்தார் அவர்.

“கடலை மிகத்தாண்டிக் கரையதிலே செல்லும் முன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறையம் இட்டனரே
ஆவலாதியாக அபயமிட்டர் தேவரெல்லாம்
வைகுண்டருக்கே அபயம் முறையம் இட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
தேவாதி தேவரெல்லாம் பூச்சொறிய
கடலன்னை கைதாங்கி கரையில் விட்டது முத்துக்குட்டியை...
இல்லையில்லை... வைகுண்டரை!” 

- என்று, அய்யா வைகுண்டர் கடல் மீது நடந்து வந்த காட்சி பற்றி அகிலத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்திருப்பான் என்று கருதிய மகன் உயிரோடு, அதுவும் கடல் அலைகள் மீது நடந்து வரக்கண்ட வெயிலாளுக்கு அவரது கண்களையே நம்ப முடியவில்லை. காண்பது நிஜமா? அல்லது கனவா? என்றுகூட எண்ணினார்.

உண்மையிலேயே முத்துக்குட்டிதான் வருகிறார் என்பதை உணர்ந்த அவர், ஓடோடிச் சென்று மகனை ஆரத் தழுவினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

"மகனே முத்துக்குட்டி... இரண்டு நாளா எங்கே போய் இருந்தாய்? உன்னைப் பார்க்காமல் உயிர் துறக்கும் முடிவுக்கே வந்து விட்டேனே..." என்று வெயிலாள் புலம்பியபோது, முத்துக்குட்டி முகத்தில் எந்தவித சலனமும் தெரியவில்லை.

"அம்மா! இப்போது நான் முத்துக்குட்டி இல்லை. இன்று முதல் நான் வைகுண்டன் ஆகிவிட்டேன். இனி, நான் உனக்கு மட்டும் மகனில்லை. இந்த உலகில் உள்ள அத்தனை தாய்களுக்குமே நான் மகன். திருமாலின் அவதாரமாக வந்துள்ள நான், கலி என்னும் நீசனை அழிக்கவே வந்திருக்கிறேன்..." என்று முத்துக்குட்டி சொல்லச் சொல்ல வெயிலாளும், அவருடன் இருந்த உறவினர்களும் வியப்பின் உச்சத்திற்கேச் சென்று விட்டனர்.

(தொடரும்...)
Share: