ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு தொடர் கதை - 19


காலை வெட்கம்!

மே 3ஆம் தேதி, காலை 8 மணி.

ஊட்டியின் கடும் குளிருக்குப் பயந்து உல்லன் பெட் ஷீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த ஷ்ரவ்யா கண் விழிக்க வெகு நேரமாகியிருந்தது.

தொடர் பயணம் தந்த களைப்பை வடிகட்டி, அவளை ஃப்ரெஸ் ஆக அனுப்பியிருந்தது முந்தையநாள் இரவுத் தூக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இரவுப் பொழுதை அணுஅணுவாய் ரசித்து அனுபவித்த பூரிப்பும் அவளது முகத்தில் தெரிந்தது.

தனக்கு அருகில் சற்று விலகிப் படுத்திருந்த ஆனந்த் எங்கே என்று தேடினாள். அவனைக் காணவில்லை. ஒருவேளை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்பானோ என்று தேடினாள். அங்கேயும் அவன் இல்லை. அவன் குளித்து முடித்து வெளியேறியிருந்ததை ஈரமாகியிருந்த டவலும் நனைந்துபோய் இருந்த மெடிமிக்ஸ் சோப்பும் உறுதி செய்தன.

உடனே, கதவு திறந்து இருக்கிறதா, மூடி இருக்கிறதா என்று பார்த்தாள். வெளியே பூட்டப்பட்டு இருந்தது. ஆனந்த்தான், கதவைப் பூட்டிவிட்டு எங்கோ சென்றிருந்தான்.

ஷ்ரவ்யாவுக்கு பதற்றமாகிவிட்டது. மொபைலை எடுத்து, ஆனந்தின் நம்பரை அவசரமாகத் தேடி டயல் செய்தாள். அவளை மேலும் பதற்றமாக்க விடவில்லை அவன். மூன்றாவது ரிங்கிலேயே மொபைலை ஆன் செய்தான்.

"ஹாய் ஷ்ரவ்யா. குட் மார்னிங்."

"குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும். இப்போ நீங்க எங்கே இருக்கீங்க-?"

"கூல் ஷ்ரவ்யா. நான் உன்னை விட்டுட்டு வேறு எங்கேயும் போய்விடலை. சூரியன் வர்றதுக்கு முன்னாடியே ஊட்டி குளிர்ல வாக்கிங் போகற சுகமான அனுபவம். அதான், காலையிலேயே குளிச்சிட்டு வெளியே கிளம்பி வந்துட்டேன்."

"என்னையும் வாக்கிங் போக கூட்டிட்டுப் போய் இருக்கலாமே..."

"எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. ஆனா..."

"என்ன ஆனா..."

"அதுபத்தி நேர்லயே சொல்றேனே..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்பவே அதுக்கான ரீஸன் சொல்லியாகணும்."

"அடம்பிடிக்காத ஷ்ரவ்யா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன் முன்னாடி நிப்பேன். அதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு, டிபன் சாப்பிட ரெடியா இரு."

"சமாதானப்படுத்துறது சரிதான். நீங்க இங்கே வந்த உடனேயே அந்த ரீஸனைத்தான் முதலில் கேட்பேன். பதில் சொல்ல ரெடியா வாங்க..."

ஆனந்திடம் அதற்கான பதிலை எதிர்பார்க்காமல் மொபைல் இணைப்பைத் துண்டித்தாள் ஷ்ரவ்யா.

சரியாக 5 நிமிடம் வேகமாகக் கரைந்திருந்தது. திடீரென்று ஷ்ரவ்யாவின் மொபைல் அழகாகச் சிணுங்கியது. மொபைல் திரையில் ”டார்லிங்” என்கிற பெயர் பளிச்சிட்டது. ஆனந்த் பெயரைத்தான் அப்படி தனது மொபைலில் பதிவு செய்திருந்தாள். அடுத்த நொடியே அறையின் ஹாலிங் பெல் ஒலித்தது. உடனே, கதவைத் திறந்தாள்.

”நான் வெளியே சென்று நீ மட்டும் லாட்ஜ் அறையில் தனியாக இருக்கும்போது முதலில் மொபைலில் மிஸ்டு கால் கொடுத்துவிட்டு ஹாலிங் பெல்லை அடிப்பேன். அதுக்குப் பிறகுதான் கதவைத் திறக்கணும்” என்று ஆனந்த் ஏற்கனவே சொல்லி இருந்ததால் கதவை ஆர்வமாகத் திறந்தாள் ஷ்ரவ்யா. எதிரே ஆனந்த்!

“ஹாய்... நைட் நல்லாத் தூங்கினீயா?”

"ஆமாம்" என்று பதில் சொல்வதற்கு வாயெடுத்தாள் ஷ்ரவ்யா. அதற்குள் அவனே முந்திக்கொண்டு பேசினான்.

"கண்டிப்பா நீ நல்லாத் தூங்கியிருப்ப. உன்னோட கோலத்தைப் பார்த்தாலே தெரிஞ்சிதே..." என்று ஆனந்த் சொல்லவும்... சட்டென்று அமைதியானாள். எதை மனதில் வைத்துக்கொண்டு ஆனந்த் இப்படிப் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.

"ரொம்பவும் யோசிக்காத ஷ்ரவ்யா. இப்போ உன்னோட முகத்தைப் பாக்கும்போது, ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்தால் எப்படியொரு பிரகாசம் இருக்குமோ... அப்படியொரு பிரகாசம் தெரியுது. அதனாலத்தான், நீ நைட் முழுக்க நல்லாத் தூங்கியிருப்பன்னு சொன்னேன்" என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் ஆனந்த்.

ஆனால், ஷ்ரவ்யாவுக்குதான் உண்மை சட்டென்று பிடிபடவில்லை. அதனால், பேச்சை மாற்றினாள்.

"அதுசரி... இன்னிக்கு காலையில ஏன் என்னையும் வாக்கிங் கூட்டிட்டு போகலன்னு கேட்டதுக்கு நேர்ல பதில் சொல்றேன்னு சொன்னீங்களே... அது என்ன பதில்?"

"இப்பவே அதை சொல்லித்தான் ஆகணுமா?"

"கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும்!"

"அது சாதாரண விஷயம்தான். சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்."

"இப்படி சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினா... நீங்க என்ன ரீஸன் சொல்லப் போறீங்கங்ற இன்ட்ரஸ்ட்தான் எனக்கு இன்னும் அதிகமாகும். அதனால, இப்பவே சொன்னா நல்லா இருக்கும்."

"நான் அதுபத்தி சொல்றதுல பிரச்னை ஒண்ணுமில்ல. நீதான் தப்பா எடுத்துப்பீயோன்னு கொஞ்சம் பயமா இருக்கு..."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், சட்டென்று அமைதியாகி தனக்குத்தானே அப்படியொரு கேள்விக் கேட்டுக் கொண்டாள் ஷ்ரவ்யா.

"ஏதாவது விவகாரமான விஷயமா இருக்குமோ? பேசாம அப்படியே விட்டுடுவோமோ..." என்று அவள் நினைத்தாலும், அவளது ஆழ்மனதின் இன்னொரு பக்கத்தில் அந்த சஸ்பென்ஸ் விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலும் இருந்தது. அதனால் அந்தப் பேச்சை அவள் ஒத்திப்போடவில்லை.

"இல்லை ஆனந்த். அது, என்ன விஷயமா இருந்தாலும் சரி, நீங்க அதை இப்பவே என்கிட்ட சொல்லித்தான் ஆகணும்."

"என்ன ஷ்ரவ்யா... இவ்ளோ அடம்பிடிக்குற?"

"என்னது அடம்பிடிக்கிறேனா? நான் என்ன உங்கக்கிட்ட 10 பவுன்ல தங்கநெக்லஸ் வாங்கிக் குடுங்கன்னா கேட்டேன்? என்னை வாக்கிங் போகுறதுக்கு ஏன் கூட்டிட்டு போகலன்னுதானே கேட்டேன்?"

"அம்மா தாயே... உண்மையைச் சொல்லிடுறேன். சாதாரண மேட்டருக்கு இவ்ளோ டயலாக் எல்லாம் அதிகம். இங்கே வா... என் பக்கத்துல வந்து உட்காரு. உன்னோட காதுல ரகசியமாவே அதைச் சொல்றேன்."

"என்னது... ரகசியமா?"

"ரகசியம்தான்! வேற யாருகிட்டேயும் சொல்லிடாத."

சரியென்று தலையாட்டிவிட்டு ஆனந்த் முகத்துக்கு அருகில் தனது காதைக் கொண்டு சென்றாள் ஷ்ரவ்யா. வெட்கப்பட்டுக் கொண்டே பதில் சொன்னான் அவன்.

"இன்னிக்கு அதிகாலையில உன்னை வாக்கிங் போவோமான்னு கூப்பிடுறதுக்காக எழுப்பினேன். நீ எழுந்திருக்கறதுக்கு பதிலா வேகமாக உருண்டு திரும்பின. அப்போ நீ போட்டு இருந்த மேரேஜ் நைட்டியோட முன்பக்க நாடா அவிழ்ந்திடுச்சு. உன்னோட அந்தக் கோலத்துல, நான் இதுவரைக்கு நேர்ல பாக்காதப் பாத்துட்டேன்..."

ஆனந்த் இப்படிச் சொல்லவும் அவனிடம் இருந்து வேகமாக அகன்று தள்ளி உட்கார்ந்த ஷ்ரவ்யா, கழுத்தை ஒட்டிப் போட்டிருந்த தனது துப்பட்டாவை வேகமாக கீழ் நோக்கி இழுத்துவிட்டு சரிசெய்தாள், அவளை அறியாமல்! அவளது முகம், வெட்கத்தில் வேகமாக சிவந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 18


அம்மாவின் மிரட்டல்!

முதாவும் குணசீலனும் இன்டிகா காரில் மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கியபோது நன்றாக இருட்டியிருந்தது.

அமுதாவின் முகத்தில் ஓடிக் கொண்டிருந்த குழப்ப ரேகைகள் குணசீலன் முகத்தில் லேசான அதிர்ச்சியை வரவழைத்திருந்தது.

"அமுதா... உன் மவுனமும் கோபமும் எனக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல ஒரு பொண்ணுக்கு தன்னோட கணவனை முழுசாப் புரிஞ்சிக்கறதுங்றது முடியாத ஒண்ணுதான். ஆனா... உன்னோட நடவடிக்கையப் பார்த்தா, நான்தான் இன்னும் உன்னை நல்லாப் புரிஞ்சிக்கலையோன்னு தோணுது.”

குணசீலன் கேள்விக்கு அமுதாவிடம் உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. மவுனமாக வெளி இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். காரில்தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்கிற நினைவே அவளுக்கு இல்லை. ஏதோ மயக்கமாகிச் சரிவதுபோன்று காரின் சீட்டில் தலை சாய்ந்தாள். அவளது மனதுக்குள் அந்தக் காட்சி வேகமாக வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று அமுதாவின் வீட்டில் பெரிய பிரச்னை. அமுதா, அசோக் காதல்தான் காரணம்!

"நான் சொல்ற மாப்பிள்ளையைத்தான் நீ கட்டிக்கணும். அவனைத்தான் கட்டிப்பேன், இவனைத்தான் கட்டிப்பேன்னு சொன்னா, நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.”

வீட்டில் பிரச்னை ஆரம்பிக்கும் முன்பு, அமுதாவின் அம்மா பாக்கியம் இப்படித்தான் ஒரு வார்த்தை சொன்னாள்.

தனது காதல் விவகாரம் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்பதை உறுதி செய்த அமுதா, அசோக்கைத் தான் காதலிக்கும் விசயத்தைச் சொல்லி விட்டாள். அதன்பிறகு ருத்ரதாண்டவமே ஆடிவிட்டாள் பாக்கியம்.

"உன்னைக் கட்டிக்கறதுக்கு அவனுக்கு என்னடீ தகுதி இருக்கு-?"

"அத்தைப் பையன்ங்ற ஒரு தகுதி போதாதா?"

"என்னடீ அத்தைப் பையன், நொத்தைப் பையன்னு சொல்ற? அவன் என்னடீ சம்பாதிக்கறான்? அவன் வாங்குற எட்டாயிரத்த வெச்சு சாப்பிடத்தான் முடியும். குடும்பம் நடத்த முடியாது."

"இன்னிக்கு வேணும்னா அவன் எட்டாயிரம் சம்பாதிக்கறவனா இருக்கலாம். ஆனா, நாளைக்கு என்பதாயிரம் சாம்பாதிப்பான்."

"நாளைங்றது வெறும் கற்பனைதான். இன்னிக்குதான் நிஜம்!"

"நீ பாக்குற மாப்ள, இன்னிக்குப் பணக்காரனா இருக்கலாம், நாளைக்கு அவன் கோபுரத்துல இருந்து குப்பைக்கு வந்துட்டா என்ன செய்வ? வாழ்க்கையில எதுவும் நிரந்தரம் இல்ல. எனக்கு அசோக்கைத்தான் பிடிச்சிருக்கு. அவனைத்தான் கட்டிப்பேன்."

"என்னடீ... நான் கிளிப் பிளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க... இப்பவே அவன மறந்துட்டா எல்லாமே நல்லா நடக்கும். அடம்புடிச்சா... உன்னோட வழிக்கு வந்துடுவேன்னு நினைக்காத. அடிச்சுப் பணிய வெச்சாவது, வேற எவனுக்காவது, பணக்காரப் பையனாப் பாத்துதான் கட்டிக் கொடுப்பேன்."

"உனக்கு இப்போ என்ன ஆச்சும்மா? பணம்... பணம்னு பேசிட்டு இருக்கே... எனக்கு அசோக்தான்னு என்னிக்கோ முடிவு பண்ணினதா நீகூட என்கிட்ட சொல்லி இருக்கீயே... அன்னிக்கு மட்டும் சிரிச்சுட்டு இருந்த நீ, இன்னிக்கு மட்டும் ஏன் எரிஞ்சு விழுற?"

"எல்லாம் உன்னோட நன்மைக்குதாண்டீ. அன்னிக்கு உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால அப்படிச் சொன்னேன். இன்னிக்கு எல்லாமே பணம்தான். பணம் இல்லாட்டி வாழவே முடியாது."

"நீ சொல்றபடி பணம் இல்லாட்டி இந்த உலகத்துல வாழ முடியாதுதான். ஆனா, அந்தப் பணத்தை வெச்சு உண்மையானப் பாசத்தை வாங்கிட முடியாது."

"இதுக்கு மேலேயும் நீ அவனப் பத்திப் பேசுனா, பேசுற நாக்குல சூடு வெச்சிடுவேன். பெத்தப் பொண்ணுன்னுகூட பார்க்க மாட்டேன்."

பாக்கியத்திடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. அவளோ விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மகள் அழகாக இருப்பதால், அந்த அழகைப் பிரதான மூலதனமாக வெச்சுப் பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து விடலாம். இந்த சமுதாயத்தில் தனது மதிப்பும் சட்டென்று உயர்ந்துவிடும் என்று கணக்குப் போட்டாள் பாக்கியம்.

அவள் போட்டக் கணக்கு தப்பவில்லை. பல பெரிய வீட்டு மாப்பிள்ளை ஜாதகங்களை அலசிய வேளையில், அவளது கைக்கு குணசீலனின் ஜாதகமும் வந்து சேர்ந்தது. அதுவும், அசோக் ஊரைச் சேர்ந்தவன்தான் என்பதால் அந்த மாப்பிள்ளைக்கு டபுள் ஓ.கே. சொன்னாள்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது. நகரத்து நாகரீக மங்கைகளுடன் நெருங்கிப் பழகி விட்டதால் பக்காக் கிராமத்துப் பெண்ணை எதிர்பார்த்திருந்த குணசீலன், அழகான, அம்சமான அமுதாவைப் பார்த்த மாத்திரத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டான்.

அதுவும், “எனக்கு வரதட்சணை என்று எதுவும் நீங்க தர வேண்டாம். நீங்க விருப்பப்பட்டத பொண்ணுக்கு போட்டாப் போதும்” என்று அவன் சொல்ல... “இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க நாங்கதான் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சி இருக்கணும்” என்று சந்தோஷத்தின் உச்சத்தில் நின்று பேசினாள் பாக்கியம்.

அதே நேரம், எனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை என்று எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. நீ திருமணத்துக்கு சம்மதிக்கலன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு பாக்கியம் மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், நிஜமாகவே மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டி சகிதமாக நிற்க... வேறு வழியின்றி காதலை உதறிவிட்டு, குணசீலன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்தவனுக்கு அவளது உடல்தான் சொந்தமாகி இருந்ததே தவிர, அவளது உள்ளம் என்னவோ அசோக்கைத்தான் நிரந்தரமாய் சிறை வைத்திருந்தது. அதன் விளைவுதான்... குணசீலனுடன் தேனிலவுக்கு வந்த இடத்தில் பெரும் மனக் குழப்பத்துக்கு ஆளாகியிருந்தாள்.

“அமுதா... கண்ணைத் திறந்து பாரு...”

குணசீலன் வேகமாகத் தட்டியெழுப்பிய பிறகுதான் கண் விழித்தாள் அமுதா. ஊட்டி மலைப் பயணத்தை தூக்கத்தில் தொலைத்திருந்த அவளின் கண்கள் முதன் முதலாக நடுநீசி ஊட்டி நகரத்தைப் பார்த்தபோது சற்றே மிரண்டு போயின.

(தேனிலவு தொடரும்...)
Share: