ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 18


அம்மாவின் மிரட்டல்!

முதாவும் குணசீலனும் இன்டிகா காரில் மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கியபோது நன்றாக இருட்டியிருந்தது.

அமுதாவின் முகத்தில் ஓடிக் கொண்டிருந்த குழப்ப ரேகைகள் குணசீலன் முகத்தில் லேசான அதிர்ச்சியை வரவழைத்திருந்தது.

"அமுதா... உன் மவுனமும் கோபமும் எனக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல ஒரு பொண்ணுக்கு தன்னோட கணவனை முழுசாப் புரிஞ்சிக்கறதுங்றது முடியாத ஒண்ணுதான். ஆனா... உன்னோட நடவடிக்கையப் பார்த்தா, நான்தான் இன்னும் உன்னை நல்லாப் புரிஞ்சிக்கலையோன்னு தோணுது.”

குணசீலன் கேள்விக்கு அமுதாவிடம் உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. மவுனமாக வெளி இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். காரில்தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்கிற நினைவே அவளுக்கு இல்லை. ஏதோ மயக்கமாகிச் சரிவதுபோன்று காரின் சீட்டில் தலை சாய்ந்தாள். அவளது மனதுக்குள் அந்தக் காட்சி வேகமாக வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று அமுதாவின் வீட்டில் பெரிய பிரச்னை. அமுதா, அசோக் காதல்தான் காரணம்!

"நான் சொல்ற மாப்பிள்ளையைத்தான் நீ கட்டிக்கணும். அவனைத்தான் கட்டிப்பேன், இவனைத்தான் கட்டிப்பேன்னு சொன்னா, நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.”

வீட்டில் பிரச்னை ஆரம்பிக்கும் முன்பு, அமுதாவின் அம்மா பாக்கியம் இப்படித்தான் ஒரு வார்த்தை சொன்னாள்.

தனது காதல் விவகாரம் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்பதை உறுதி செய்த அமுதா, அசோக்கைத் தான் காதலிக்கும் விசயத்தைச் சொல்லி விட்டாள். அதன்பிறகு ருத்ரதாண்டவமே ஆடிவிட்டாள் பாக்கியம்.

"உன்னைக் கட்டிக்கறதுக்கு அவனுக்கு என்னடீ தகுதி இருக்கு-?"

"அத்தைப் பையன்ங்ற ஒரு தகுதி போதாதா?"

"என்னடீ அத்தைப் பையன், நொத்தைப் பையன்னு சொல்ற? அவன் என்னடீ சம்பாதிக்கறான்? அவன் வாங்குற எட்டாயிரத்த வெச்சு சாப்பிடத்தான் முடியும். குடும்பம் நடத்த முடியாது."

"இன்னிக்கு வேணும்னா அவன் எட்டாயிரம் சம்பாதிக்கறவனா இருக்கலாம். ஆனா, நாளைக்கு என்பதாயிரம் சாம்பாதிப்பான்."

"நாளைங்றது வெறும் கற்பனைதான். இன்னிக்குதான் நிஜம்!"

"நீ பாக்குற மாப்ள, இன்னிக்குப் பணக்காரனா இருக்கலாம், நாளைக்கு அவன் கோபுரத்துல இருந்து குப்பைக்கு வந்துட்டா என்ன செய்வ? வாழ்க்கையில எதுவும் நிரந்தரம் இல்ல. எனக்கு அசோக்கைத்தான் பிடிச்சிருக்கு. அவனைத்தான் கட்டிப்பேன்."

"என்னடீ... நான் கிளிப் பிளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க... இப்பவே அவன மறந்துட்டா எல்லாமே நல்லா நடக்கும். அடம்புடிச்சா... உன்னோட வழிக்கு வந்துடுவேன்னு நினைக்காத. அடிச்சுப் பணிய வெச்சாவது, வேற எவனுக்காவது, பணக்காரப் பையனாப் பாத்துதான் கட்டிக் கொடுப்பேன்."

"உனக்கு இப்போ என்ன ஆச்சும்மா? பணம்... பணம்னு பேசிட்டு இருக்கே... எனக்கு அசோக்தான்னு என்னிக்கோ முடிவு பண்ணினதா நீகூட என்கிட்ட சொல்லி இருக்கீயே... அன்னிக்கு மட்டும் சிரிச்சுட்டு இருந்த நீ, இன்னிக்கு மட்டும் ஏன் எரிஞ்சு விழுற?"

"எல்லாம் உன்னோட நன்மைக்குதாண்டீ. அன்னிக்கு உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால அப்படிச் சொன்னேன். இன்னிக்கு எல்லாமே பணம்தான். பணம் இல்லாட்டி வாழவே முடியாது."

"நீ சொல்றபடி பணம் இல்லாட்டி இந்த உலகத்துல வாழ முடியாதுதான். ஆனா, அந்தப் பணத்தை வெச்சு உண்மையானப் பாசத்தை வாங்கிட முடியாது."

"இதுக்கு மேலேயும் நீ அவனப் பத்திப் பேசுனா, பேசுற நாக்குல சூடு வெச்சிடுவேன். பெத்தப் பொண்ணுன்னுகூட பார்க்க மாட்டேன்."

பாக்கியத்திடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. அவளோ விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மகள் அழகாக இருப்பதால், அந்த அழகைப் பிரதான மூலதனமாக வெச்சுப் பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து விடலாம். இந்த சமுதாயத்தில் தனது மதிப்பும் சட்டென்று உயர்ந்துவிடும் என்று கணக்குப் போட்டாள் பாக்கியம்.

அவள் போட்டக் கணக்கு தப்பவில்லை. பல பெரிய வீட்டு மாப்பிள்ளை ஜாதகங்களை அலசிய வேளையில், அவளது கைக்கு குணசீலனின் ஜாதகமும் வந்து சேர்ந்தது. அதுவும், அசோக் ஊரைச் சேர்ந்தவன்தான் என்பதால் அந்த மாப்பிள்ளைக்கு டபுள் ஓ.கே. சொன்னாள்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது. நகரத்து நாகரீக மங்கைகளுடன் நெருங்கிப் பழகி விட்டதால் பக்காக் கிராமத்துப் பெண்ணை எதிர்பார்த்திருந்த குணசீலன், அழகான, அம்சமான அமுதாவைப் பார்த்த மாத்திரத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டான்.

அதுவும், “எனக்கு வரதட்சணை என்று எதுவும் நீங்க தர வேண்டாம். நீங்க விருப்பப்பட்டத பொண்ணுக்கு போட்டாப் போதும்” என்று அவன் சொல்ல... “இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க நாங்கதான் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சி இருக்கணும்” என்று சந்தோஷத்தின் உச்சத்தில் நின்று பேசினாள் பாக்கியம்.

அதே நேரம், எனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை என்று எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. நீ திருமணத்துக்கு சம்மதிக்கலன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு பாக்கியம் மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், நிஜமாகவே மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டி சகிதமாக நிற்க... வேறு வழியின்றி காதலை உதறிவிட்டு, குணசீலன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்தவனுக்கு அவளது உடல்தான் சொந்தமாகி இருந்ததே தவிர, அவளது உள்ளம் என்னவோ அசோக்கைத்தான் நிரந்தரமாய் சிறை வைத்திருந்தது. அதன் விளைவுதான்... குணசீலனுடன் தேனிலவுக்கு வந்த இடத்தில் பெரும் மனக் குழப்பத்துக்கு ஆளாகியிருந்தாள்.

“அமுதா... கண்ணைத் திறந்து பாரு...”

குணசீலன் வேகமாகத் தட்டியெழுப்பிய பிறகுதான் கண் விழித்தாள் அமுதா. ஊட்டி மலைப் பயணத்தை தூக்கத்தில் தொலைத்திருந்த அவளின் கண்கள் முதன் முதலாக நடுநீசி ஊட்டி நகரத்தைப் பார்த்தபோது சற்றே மிரண்டு போயின.

(தேனிலவு தொடரும்...)
Share:

0 கருத்துகள்: