வியாழன், 1 ஏப்ரல், 2010

சுற்றுலா பிறந்த கதை


சுற்றுலா செல்லும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புதான் பலருக்கு கிடைக்காது.

ஆனால், சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் அப்படியே ப்ரெஸ் ஆகிவிடும். புதிதாய் பிறந்த உணர்வுகூட சிலருக்கு ஏற்படும். அதனால் இந்த சம்மரிலாவது அருகே உள்ள கூலான இடங்களுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள்.

ஆமாம்... சுற்றுலா எப்படி பிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

இப்போது நினைத்த மாத்திரத்தில் விமானத்தில் உலகத்தை சுற்றி வரலாம். ஆனால், அந்த காலத்தில் இதெல்லாம் வெறும் கனவாகத்தான் இருந்தது.

உலக வரலாற்றில் முதன் முதலில் சுற்றுலாவை ஆரம்பித்து வைத்தவர்கள் ஐரோப்பியர்தான். கி.பி.15-ம் நூற்றாண்டில் புதிய நாடுகளை கண்டுபிடிக்கும் பணியில் முதன் முதலாக ஈடுபட்ட அவர்களே, தாங்கள் சார்ந்த மதத்தை பரப்பும் பொருட்டும், வாணிபத்திற்காகவும் கப்பல்களில் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அதுவே சுற்றுலா வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.


இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழியை முதன் முதலில் கண்டறிந்தவர் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா. இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்த இவர், 1498-ல் இந்தியாவில் கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.

வாஸ்கோடகோமாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுக்கு வேறு திசையில் வழி காணப்போகிறேன் என்று புறப்பட்டார், உலகம் உருண்டையானதுதான் என்று நம்பிக்கை கொண்ட கொலம்பஸ். ஆனால், அவர் கண்டுபிடித்ததாக அறிவித்தது இந்தியா அல்ல. பின்னாளில், இத்தாலியைச் சேர்ந்த அமெரிக்கோ வெஸ்புகியால் மீண்டும் அந்த பகுதி கண்டறியப்பட்டு, அவரது பெயராலேயே அமெரிக்கா என்று அழைக்கப்பட்டது.

இப்படி பலரும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து உலக நாடுகளை கண்டுபிடிக்க புறப்பட்டாலும், போர்ச்சுக்கீசிய மாலுமியான மெகல்லன் என்பவரே உலகை முதன் முதலில் சுற்றி வந்த பயணி என்ற பெயரைப் பெறுகிறார்.

அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்து, தென் அமெரிக்காவை சுற்றிக்கொண்டு பசிபிக் கடல் வழியாக சென்ற அவர் ஒரு தீவைக் கண்டதும் இறங்கினார். அந்த தீவுக் கூட்டத்திற்கு ‘பிலிப்பைன்ஸ்’ என்று பெயரிட்டார். ஆனால், அந்த தீவில் வாழ்ந்த மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவரது கப்பல்களில் ஒன்றான விக்டோரியா மட்டும் இந்தியப் பெருங்கடலை அடைந்து, ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு மீண்டும் போர்ச்சுக்கலை அடைந்தது. உலகம் உருண்டையானதுதான் என்பதை மெகல்லனின் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தியது. உலகத்தை சுற்றிவரும் வழியிலேயே மெகல்லன் கொல்லப்பட்டாலும், அவர் தலைமையில் சென்ற கப்பல் சுற்றி வந்த காரணத்தால், உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் இவர்.

இதன்பிறகு உலக நாடுகள் இடையே வாணிபத் தொடர்பு அதிகரித்தது. புதிய நாடுகளை காணும் ஆவலில் ஒவ்வொரு நாட்டினரும் சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர். சுற்றுலாத் தொழிலும் பிரபலமாக ஆரம்பித்தது.


இருந்தாலும், உலகில் முதலாவது சுற்றுலா பயண முகவர் என்கிற பெயரை பெறுகிறவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் குக். இவரே உலக சுற்றுலாவின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர்தான், முதலின் முதலில் பொதுமக்களை திரட்டி இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

கி.பி.1841ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பொருட்காட்சியைக் காண ஒன்றரை லட்சம் மக்களை அழைத்துச் சென்று அசத்தினார் இவர். இதன்மூலம் அவருக்கு கணிசமான லாபமும் கிடைத்தது. அதன்பிறகு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையே ஒரு தொழிலாக செய்தார்.

சுற்றுலாவின் மூலம் தாமஸ் குக் பிரபலமானதை அடுத்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும் பலர் தாமஸ் குக்கின் சுற்றுலாத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சுற்றுலாவின் வளர்ச்சியும் வேகமெடுத்தது.

மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி தொழில்துறையில் மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. முதன் முதலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பின்னர் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பரவியது.

தொழிற்புரட்சியின் விளைவால் அளவுக்கு மீறி உழைத்து வந்த தொழிலாளர்கள் ஓய்வை விரும்பினர். மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்ள இயற்கை எழில் சூழ்ந்த வெளியூர்களுக்கு சுற்றுலா சென்றுவர ஆசைப்பட்டனர்.

தொழிற்புரட்சியின் குறிப்பிடத்தக்க விளைவுகளுள் ஒன்றான தொழிற்சங்கங்களின் தோற்றத்தால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றார்கள். கோரிக்கைக்காக போராடினார்கள். இதன்காரணமாக, அவர்களை கசக்கி பிழிந்து வாங்கப்பட்ட வேலையின் நேரம் குறைந்தது. ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்தது. இந்த சலுகையை அனுபவிக்க அவர்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல ஆரம்பித்தனர்.

உல்லாச சுற்றுலாவுக்கு மட்டுமின்றி உலக மதங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் சிலர் நாடு நாடாக சுற்றுலா செல்ல தொடங்கினார்கள். இன்னும் சிலர் பிற நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள சுற்றுலா புறப்பட்டனர்.

நாளடைவில் நவீன கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட... சுற்றுலா வளர்ச்சியானது ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இன்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலும், சுற்றுலா பற்றிய சில குறிப்புகள்...

* உலகில் முதன் முதலாக கி.பி.1830ல் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்கும் இடையேதான் ரெயில்பாதை ஆரம்பிக்கப்பட்டது. இது, சுற்றுலா வளர்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
* தூங்கும் வசதியுடன் கூடிய ரெயில் வண்டியை அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள். ரெயிலில் தூங்கிக்கொண்டே பயணம் செய்வதற்கு ஒரு நாள் ஒரு இரவுக்கு அவர்கள் வசூலித்தது 2 டாலர்.

* விளம்பரப்படுத்தப்பட்ட உலகின் முதல் சுற்றுலாவைத் தொடங்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்வியசர். மத போதகரான இவர், லீசெஸ்டா என்னும் ஊரில் நடந்த சமயக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 570 பயணிகளை ரெயிலில் அழைத்துச் சென்றார்.

* ஒருவர் தான் வாழ்ந்து வரும் அல்லது பணிபுரிந்து வரும் இடத்தில் இருந்து வெளியிடத்திற்குச் சென்று குறுகிய காலம் தங்கி, அங்கு பல இடங்களுக்கு இன்பப் பயணம் சென்று பார்த்து வருவதுதான் சுற்றுலா என்று, சுற்றுலாவுக்கு விளக்கம் தருகிறது இங்கிலாந்து சுற்றுலாக்கழகம்.
Share: