வியாழன், 4 மார்ச், 2010

தாய் என்றொரு தெய்வம்...


ந்த தாய்க்கு அவன் ஒரே மகன். அவன் ஒரு தாசியிடம் மனதை பறிகொடுத்துவிட்டான். அவளை தேடிச் சென்று, தேடிச்சென்று கையில் இருந்த பணத்தை எல்லாம் இழந்தான்.

அவனிடம் இனி பணம் எதுவும் இல்லை என்கிற நிலை வந்தபோது, அந்த தாசி அவனை எட்டிப்பார்க்கவே மறுத்துவிட்டாள்.

ஒருநாள், "உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று அவள் காலிலேயே விழுந்துவிட்டான். "உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்! ஆனால், என்னை வரவேண்டாம் என்று மட்டும் சொல்லிவிடாதே" என்றும் கெஞ்சினான்.

அந்த தாசிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் கேலியாக சிரித்துக் கொண்டே, "உன் தாயின் இதயம் எனக்கு வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

காமத்தின் மயக்கத்தில் சிக்கியிருந்த அவன், "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றான்.

"அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும் என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.

எந்த தாய்தான் மகன் கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால் அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்" என்றான்.

அந்த தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான்.

வலது கையில் அதை ஏந்தியபடி, தனது அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே விழுந்தது.

அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா? நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?" என்றது.

"இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக்கொன்றேன்?" என்று அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர்விட்டான்.

- தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.


அன்புக்கு உதாரணம்தான் தாய். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்முன் எவ்வளவு போராட்டங்களையோ ஒரு பெண் சந்திக்கிறாள். ஒருவேளை அந்த குழந்தையை பெற்றெடுக்க காலதாமதம் ஆகிவிட்டாள் மலடி என்றெல்லாம்கூட பட்டப்பெயர் வாங்கிக்கொள்கிறாள்.

அந்த குழந்தை பிறந்து, அவள் தாயானதும் அக்குழந்தையை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படுகிறாள்.

தூக்கத்தை துறக்கிறாள். உணவை மறக்கிறாள். பெற்ற குழந்தையே எல்லாம் என்று வாழ்கிறாள். அந்த குழந்தை ஒரு நோய் என்றால் பதறிப்போகிறாள். தன் உயிரைக் கொடுத்தாவது குழந்தையை காப்பாற்றிவிட முயற்சிக்கிறாள்.

அதே குழந்தை வளர்ந்து ஆளானதும், அந்த குழந்தையின் கல்விக்காக ஒரு பெரிய போராட்டமே நடத்துகிறாள். அணிந்திருக்கும் ஒன்றிரண்டு நகைகளை விற்றுகூட குழந்தையை படிக்க வைக்கிறாள்.

குழந்தை படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்ததும் திருமணமும் செய்து வைக்கிறாள். திருமணத்திற்கு பிறகு அவளுக்கு பெற்ற குழந்தையின் ஆதரவு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்படி வாழ்க்கையை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்பவள் ஒரு பெண்தான். அவள்தான் தாயாக பரிணமிக்கிறாள்.

ஒரு குழந்தை நல்ல குழந்தையா? தீய வழியில் செல்லும் குழந்தையா? என்பது அதன் அன்னையாகிய தாய் வளர்ப்பதில்தான் இருக்கிறது.

இன்று நீங்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் தாயை மனதார வாழ்த்துங்கள். உங்களை இந்த அளவுக்கு ஆளாக்கிய அந்த தாய்க்கு நன்றி செலுத்துங்கள்.

அந்த உன்னத தாய் இன்று உயிரோடு இருந்தால், ஒரு தெய்வத்திற்கு இணையாக போற்றுங்கள். நடமாடும் தெய்வம் அவள் ஒருத்திதான்.
எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள். இதற்கு விதிவிலக்கான தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச தேவையில்லை.

தனது பிள்ளைக்கு நல்லது நடக்கும் என்றால், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிபவள்தான் உண்மையானத் தாய்.

நீங்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும்போது Ôபாக்கெட் மணிÕக்கு பணம் இல்லையென்றால், அதற்காக அங்கு இங்கு என்று அலைந்து, அதை வாங்கிக்கொண்டு வந்து மகிழ்ச்சியோடு உங்களிடம் கொடுத்தவள் யார்? உங்கள் தாய்தானே?

நோயால் பாதிக்கப்பட்டு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் காலடியிலேயே, உங்களுக்காக கிடந்து வேண்டுபவளும் அந்த தாய்தானே?

திருவிழாவில் பெற்ற பிள்ளை மற்றவர்களுக்கு இணையாக புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக, பழைய ஆடையை அணிபவளும் அதே தாய்தானே?
இப்படிப்பட்ட தாயை நாம் எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும்? அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?

பெரும்பாலும் இல்லைதானே?

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற பிள்ளைக்காக வாழ்பவள்தான் தாய். அதனால்தான், இந்த பூமியைக்கூட பூமாதேவி என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரை வைத்துதான் போற்றுகிறோம்.

பூமிக்கு, நதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது பெற்ற தாய்க்கு கொடுப்போமே! அவளை நாம் போற்றாவிட்டால் வேறு யார்தான் போற்றுவார்கள்?
Share: