சனி, 19 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 11



11. ஆதிக்க சாதியினரின் அழைப்பு
 - நெல்லை விவேகநந்தா -
ய்யா வைகுண்டரின் போதைனைகள், வழிகாட்டல்கள்... தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினருக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அவர்கள் அய்யாவின் பின்னால் அணி திரண்டனர்.

மேலும், சித்த மருத்துவத்திலும் கைதேர்ந்தவராக இருந்த வைகுண்டர், தீராத நோயால் அவதியுற்றோரை குணமாக்கினார். புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி, அவர்களது நோய் நீங்கச் செய்தார். அற்புதங்கள் பலவும் அவர் வழியாக நிகழ்ந்தன.

எந்தவித ஊடக வசதியும் இல்லாவிட்டாலும் காட்டுத்தீ போல் பரவியது இந்தத் தகவல். அய்யாவை தேடி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு சாதாரண கிராமமாக இருந்த சாமித்தோப்பு பரபரப்புமிக்க ஊரானது.

அய்யாவின் ஆதரவால் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பது மேட்டுக்குடியினரின் கண்களை உறுத்தியது. தங்களைப் பார்த்த மாத்திரத்தில் தலை குனிந்து, துண்டை கை இடுக்குகளில் சொருகிக்கொண்டு ஒதுங்கி நின்றவர்கள், அதே துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு பூமியை முத்தமிடும் அளவுக்கு வேட்டி அணிந்து கொண்டு கம்பீரமாக நடந்து சென்றவர்களைப் பார்த்து பொறாமை கொண்டனர்.

இதை இப்படியே விட்டால் தங்களுக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தவர்கள், ஒரு கூட்டம் போட்டு, தாழ்த்தப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

‘அந்த வைகுண்டன் எங்கிருந்து வந்தானோ, அவன் வந்த பிறகு அவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாறிப் போய் விட்டார்கள். அந்த வைகுண்டனை நமது தெய்வமான திருமாலின் அவதாரம் என்கிறார்கள். அந்தத் தைரியத்தில் அவர்கள் நம்மை இப்போது மதிக்க மறுக்கிறார்கள். கூலி வேலை செய்ய யாரும் வர மறுக்கிறார்கள். நிலத்தில் விளையும் பயிரையும், பதனீரையும் இலவசமாக கொடுத்து வந்தவர்கள் இப்போது தரத் தயாராக இல்லை. இதை இப்படியே விட்டுவிட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால், இந்த பிரச்சினைக்கு இப்போதே ஒரு முடிவெடுக்க வேண்டும். உடனே நம் சமஸ்தான மன்னரின் தகவலுக்கு இதைக் கொண்டு செல்வதைவிட நாமே ஏதாவது செய்ய வேண்டும்...’ என்று ஒருமனதாக கூட்டத்தில் முடிவெடுத்த மேட்டுக்குடியினர், வைகுண்டரை சூழ்ச்சி செய்து கொல்லத் துணிந்தனர்.

ஒருநாள் வைகுண்டர் தங்கியிருந்த பூவண்டர் தோப்புக்கு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களைப் பார்த்த, அய்யா குடிலுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம். “இவர்கள் எப்படி இங்கே?” என்று மனதிற்குள் யோசித்தனர்.

நேராக குடிலுக்குள் புகுந்த ஆதிக்க ஜாதியினர், அய்யாவின் முன்பு அமர்ந்தனர். அவர்களது முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அய்யா.

வழக்கமாக, 18 ஜாதியினரைப் பார்த்தால் பொங்கியெழும் இவர்கள் சாந்த சொரூபமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் கோபப்பட்டதே இல்லை என்பது போல் தங்களது முகத்தை குழந்தைத்தனமாக வைத்திருந்தனர்.
அப்போது, அய்யாவே அவர்களிடம் பேசினார்.

“எல்லோரும் வாருங்கள்... திடீரென்ற உங்களது வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“தங்களை எல்லோரும் தெய்வமாக கருதுவதாக அறிந்தோம். நீங்கள் சொல்வதையும் அப்படியே கேட்கிறார்கள். அதனால்தான், நாங்களும் உங்களை ஒருமுறை பார்த்து பாராட்டிவிட்டுச் செல்வோம் என்று வந்தோம்...” என்றனர், அந்த மேட்டுக்குடியினர். 

அவர்களது பேச்சில் விஷம் தடவப்பட்டு இருக்கிறது என்பதை சட்டென்று கணித்துவிட்டார் அய்யா. ஆனாலும், அதை அவர் வெளிக்காட்டக் கொள்ளவில்லை.

“சரி... இப்போது என்னால் உங்களுக்கு காரியம் ஏதேனும் ஆக வேண்டுமா?” என அய்யாவே கேட்டார்.

“காரியம் எல்லாம் ஒன்றுமில்லை. எங்களைப் பகைவர்களாகப் பார்க்காமல், உங்களது சீடர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, எங்களது விருப்பம் ஒன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தர வேண்டும்...”

“என்ன விருப்பம்?”

“நாங்கள் வைக்கும் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் எல்லோரது விருப்பம்”.

“நிச்சயமாக உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன். விருந்து எங்கே என்பதை மட்டும் சொல்லுங்கள். நான் தவறாமல் வந்துவிடுகிறேன். ஆமாம்... விருந்து எங்கே?”

“நம்ம மருந்துவாழ் மலையில்தான். நாங்கள் உங்களை ஆவலோடு எதிர்பார்ப்போம்...” என்று கூறிய ஆதிக்க ஜாதியினர், விருந்துக்கான தேதியையும், நேரத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.
புலி பாயத்தான் பதுங்குகிறது என்று கணித்துவிட்டார் அய்யா.

விருந்து நடைபெறும் நாள் வந்தது. மருந்துவாழ்மலைக்குச் செல்லத் தயாரானார். ஆனால், தனி ஆளாக புறப்பட்டார்.

அவரது சீடர்கள், ‘சதி நடக்கிறது... திட்டமிட்டுத்தான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்கள்... அதனால், நாங்களும் உங்களுடன் பாதுகாப்புக்கு வருகிறோம்...’ என்று எவ்வளவோ சொல்லியும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனி ஆளாக அங்கே சென்றார் அய்யா வைகுண்டர். 

(தொடரும்...)
Share: