இந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது.
கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
தீராத விளையாட்டு பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதாவிடம், "ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?" என்று கேட்டார். அதற்கு யசோதா, "ராதையின் நிறம் மீது உனக்கு பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களைப் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்" என்று பதிலளித்தார். அதன்படி, கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களை அள்ளிப்பூசினார்.
இப்போதைய ஹோலிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போதும், வண்ணப் பொடிகளை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள்.
இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு காரணமாக இரணியன் கதையையும் சொல்கிறார்கள்.
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரணியன், மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
இதற்கு தீர்வு காண நினைத்த இரணியன், தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தனது மகனை அழிக்கும் பணியை ஒப்படைத்தான்.
அதன்படி, பிரகலாதனை தூக்கிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்து விடுவான் என்று கணக்கு போட்டான் இரணியன். ஆனால் நடந்ததோ வேறு.
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் இருந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் நுழைந்த ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.
இதை நினைவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகை அன்று திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வதும் உண்டு. இவ்வாறு ஹோலிகா அழிந்த தினமே ஹோலி பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது அந்த புராணக்கதை.
காமன் விழா :
மன்மதன்
தமிழ்நாட்டில் காமதேவனது உன்னதத் தியாகத்தை வியந்து போற்றும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.
ஒருசமயம் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள். பின்னர் தவம் செய்து ஈசனை அடைந்தாள்.
இந்நிலையில், தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவபெருமானை அவமரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து உயிர்விட்டாள்.
அதற்குப்பின் பல நிகழ்வுகள் நடந்தன. சிவபெருமானின் அருளால் மலை அரசனான பர்வதராஜனின் மகளாகப் பார்வதி என்ற பெயரில் மீண்டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.
காலம் கடந்தது. தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார். அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல் போனது. இதனால் தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், சிவபெருமானின் தியானத்தை கலைக்கத் தகுந்தவன் காமன் எனப்படும் மன்மதனே என்று உணர்ந்து, அவனை அழைத்தார். சிவபெருமானின் தியானத்தைக் கலைக்கும்படி கூறினார்.
திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம் செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண்ணிப் புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் முறையே தாமரை, அசோகு, முல்லை, மா, நீலம் எனும் ஐந்து மலர்களையும் அம்பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன்.
மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. தன் தியானத்தைக் கலைத்தது யார்? என்று கோபத்துடன் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறக்க... அடுத்த நிமிடமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.
அருகில் இருந்த ரதி, அதனைக் கண்டு துடிதுடித்தாள். சிவபெருமானிடம் சென்று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்மாறு மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமான், "நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் உன் கணவன் உயிர்பெற்று எழுவான். ஆனால், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர்களுக்குத் தெரிய மாட்டான்' என்று வரம் அருளினார்.
இந்த சம்பவத்தின்படி சிவபெருமான், காமனை எரித்த இடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்குறுங்கை ஆகும். இங்கு காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.
திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப்படையில் பெயர்களைக் கொண்டுள்ளன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம் செய்துகொண்ட இடம் "கங்கணநல்லூர்" என்றும், அவர் தன் கால்களை வளைத்து குறி பார்த்த இடம் "கால்விளை" என்றும், வில் ஏந்திய இடம் "வில்லியநல்லூர்" என்றும் அழைக்கப்படுகின்றன.
ஹோலி கொண்டாட்டம் ...