வியாழன், 8 செப்டம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு தினமலர் பாராட்டு!



நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் -வரலாறும் அற்புதங்களும்' (வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை) நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கிய மேலான மதிப்புரை இங்கே உங்கள் பார்வைக்கும்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருமாலின் அருள்பெற்று, வைகுண்டர் என்ற பெயருடன் 42 ஆண்டுகள் வாழ்ந்த இறைமகனாரின் மகிமைகளை மிகவும் இனிமையாக இந்த நூல் விவரிக்கிறது.

ஆன்மிகத்தின் முடிந்த நிலையாக எதிர்கால முக்தியை வேண்டுவோர் பலர். ஆனால், நிகழ்கால கொடுமையாக நம்பூதிரி, நாயர், தம்புரான், ஐயர், பிள்ளைமார் ஆகிய ஆதிக்க உயர் ஜாதியினரின் அடிமையாக வாழ்ந்த பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியினரையும் மீட்டு, அவர்கள் வாழ்வில் புது ஒளி பாய்ச்சியவர் அய்யா வைகுண்டர். தன் தெய்வ சக்தியால் பற்பல அதிசயங்கள் செய்தவர்.

தென்னை, பலா, வாழை, ரப்பர் மரங்களால் அழகுபெற்ற இன்றைய கேரளாதான் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். இதன் ஒரு பகுதியாக விளங்கியது நாஞ்சில் நாடு. இன்றைய நாகர்கோவில் அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிக்க ஜாதிகளில் அடிமைகளாக இருந்த 18 ஜாதியினர் உரிமை இழந்து வாடினர். பெண்களுக்கு கல்வி கூடாது, மார்பில் துணி கூடாது, குடங்களை இடுப்பில் தூக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்து அவமானப்படுத்தினர்.

இந்த கொடுமைகள் தாங்காத சிலரை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக்கொண்டனர்.

சாமித்தோப்பில், 1809-ல் முத்துக்குட்டி என்ற பெயரில் தோன்றி, 20 வயதில் நோய்வாய்ப்பட்டு, பிறகு திருச்செந்தூர் கடலில் மறைந்து, மூன்றாம் நாள் வைகுண்டராக அவதாரம் எடுத்து வந்து, தனது அதி அற்புதங்களால் உருவம் அற்ற வழிபாட்டு முறையை உருவாக்கி, ஜாதிகளை கடந்த தெய்வ நிலையை மக்களுக்கு காட்டியதை இந்நூல் அற்புதமாக பேசுகிறது.

- முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி : தினமலர் 28.8.2011

Share: