சனி, 6 நவம்பர், 2010

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதியலாம்

 பூமியில் இருந்து பல கோடி மைல் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். சந்திரனுக்கு அடுத்தப்படியாக மனிதன் அதிக ஆர்வம் காட்டும் கிரகம் இதுதான்.

பூமியை விட்டால், அடுத்து மனிதன் குடியேற தகுதியான இடம் இந்த செவ்வாயாகத்தான் இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. இதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்போதைய நிலவரப்படி செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை என்று தெரிய வந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றே கணிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
செவ்வாய் கிரகத்தை சென்றடைய சில வருடங்கள் பயணிக்க வேண்டும் என்பதால், அந்த கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் முழுமையான முன்னேற்றங்கள் இதுவரை ஏற்படவில்லை.

என்றாலும், இந்த கிரகம் தொடர்பாக நாசா விண்வெளிக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா? நாங்க ரெடி... நீங்க ரெடியா? என்பதுதான் அந்த அறிவிப்பு.

நாசா விண்வெளிக்கழகம் சார்பில் அடுத்த 2011-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை ஒரு மைக்ரோசிப்பில் பதிவு செய்து அனுப்பவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

உங்கள் பெயரையும் நாசா அனுப்பும் மைக்ரோ சிப்பில் பதிய வேண்டுமா?
இதற்கு நீங்க செய்ய வேண்டியது, ஆன் லைனில் சிறிதுநேரம் இருக்க வேண்டியது மட்டும்தான். வேறு எந்த செலவும் இல்லை.

http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/    - இந்த இணைய தள பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் பெயர் மற்றும் உங்களது நாட்டின் பெயர், உங்கள் ஏரியாவின் 6 இலக்க கோடு நம்பர் ஆகியவற்றை டைப் செய்து, சப்மிட் செய்துவிட்டால் போதும்.

அடுத்த நொடியே இன்னொரு பைல் திறக்கும். நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்ததற்கான நன்றி கடிதம்தான் அது. உங்கள் பங்களிப்பை உறுதி செய்ததற்கான நம்பரும் இதில் இடம்பெற்று இருக்கும்.

அந்த பக்கத்தில் உள்ள பிரின்ட் ஆப்சனில் கிளிக் செய்தால், உங்கள் பங்களிப்புக்கான சான்றிதழ் திறக்கும். அதை நீங்கள் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

இனி நீங்கள், என் பெயர் செவ்வாய் கிரகத்துலேயும் இருக்கு என்று தைரியமாக மார்தட்டிக் கொள்ளலாம். பொய் சொல்வதற்கு அளவே இல்லையா என்று யாரேனும் கேட்டால் அவர்களிடம் அந்த சான்றிதழை காண்பித்து, அவர்களது வாயை அடைத்து விடுங்கள்.

-      நெல்லை விவேகநந்தா
Share: