சனி, 25 டிசம்பர், 2010

பிரசவம் பார்த்த இறைவன்

 
 தாயுமானவர்

பூம்புகாரில் தன வணிகனான ரத்னகுப்தனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்... அன்று அவரது மகள் ரத்னாவதிக்கு திருமணம்! ரத்னகுப்தன் பெரும் வணிகன் என்பதால் பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வணிகர்கள் ஏராளமானபேர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

திருச்சி செவ்வந்திநாதரின் அருளால், திருமணம் ஆன 10 வருடங்களுக்குப் பிறகுதான் ரத்னகுப்தன் தம்பதியருக்கு ரத்னாவதி பிறந்தாள். ஒரே மகள் என்பதால் அவளது திருமணம் தடபுடலாக நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் வாய் நிறைய வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

திருமணம் முடிந்ததும் கணவன் ஊரான திருச்சிக்கு குடியேறினாள் ரத்னாவதி. திருச்சி செவ்வந்திநாதரின் அருளாலேயே இந்த சம்பந்தம் ஏற்பட்டதாக பரவசப்பட்டனர், ரத்னகுப்தன் தம்பதியர்.

ரத்னாவதி மீது பாச மழை பொழிந்தான், அவளது கணவன். தனக்கு கிடைத்த நல்ல வாழ்வுக்கும் செவ்வந்திநாதர் தான் காரணம் என்று ஆணித்தரமாக கருதிய ரத்னாவதி, திருச்சி மலைக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள அவரை அடிக்கடி சென்று தரிசித்தாள்.

திருமணத்தைத் தொடர்ந்து, அடுத்த எதிர்பார்ப்பான குழந்தைக்கான கர்ப்பமும் அடைந்தாள். தகவல் அறிந்த அவளது பெற்றோர் திருச்சி வந்து மகளைப் பார்த்து மகிழ்ந்தனர். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், மகப்பேறு காலத்தில் வருவதாக தெரிவித்தனர்.

நாட்கள் வேகமாக ஓடின. பத்தாவது மாதமும் வந்தது. ரத்னாவதியின் பெற்றோர், மகளைப் பார்க்க திருச்சிக்கு வண்டி பூட்டி ஏறினர். மகள் விரும்பி சாப்பிடும் பணியாரம், இலந்தை வடை மற்றும் பதார்த்தங்களை கையோடு எடுத்துக் கொண்டு வந்தனர்.

 திருச்சி மலைக்கோட்டை

அவர்கள் திருச்சியை நெருங்கிய நேரத்தில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், அவர்களால் திருச்சிக்கு வர முடியவில்லை. வெள்ளம் வடியும்வரை காத்திருக்க நேரிட்டது.

இதற்கிடையில், ரத்னாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாய் கையால் தனக்கு பிரசவம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவளுக்கு, தாய் வந்து சேராதது வருத்தமாக இருந்தது. ஆனாலும், தனது தாய் வந்துவிட வேண்டும் என்று செவ்வந்திநாதரை வேண்டிக் கொண்டாள்.

ரத்னவதியின் வேண்டுதல் வீண் போகவில்லை. அவளது தாய் அவள் முன்பு வந்து நின்றாள். தாயைப் பார்த்த மாத்திரத்தில் அவளது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. கூடவே, பிரசவ வலியும் ஏற்பட்டதால், அவளது தாயே பிரசவம் பார்த்தாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஓரிரு நாட்கள் வேகமாக ஓடின. ரத்னாவதியை கூடவே இருந்து கவனித்தாள் அவளது தாய்.

ஒருநாள், வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த ரத்னாவதிக்கு திடீர் அதிர்ச்சி. அவளது தாயும், தந்தையும் மகளைப் பார்க்கப் பதற்றத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

அப்படியானால், வீட்டிற்குள் இருப்பது யார்? என்று யோசித்தபடி திரும்பினாள். அங்கேயும் அவளது தாய் நின்று கொண்டிருந்தாள். ரத்னாவதிக்கு குழப்பமாகி விட்டது. 

அப்போது, வீட்டிற்குள் இருந்த,  அவளுக்கு பிரசவம் பார்த்த தாய் செவ்வந்திநாதராக மாறினாள். தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் மட்டுவார் குழலம்மையோடு ரத்னாவதிக்கு காட்சியளித்து மறைந்தார்.

அப்போதுதான் அவளுக்கு உண்மை புரிந்தது; தனக்குப் பிரசவம் பார்த்தது தனது தாய் அல்ல, தாய் வடிவில் வந்த செவ்வந்திநாதர் என்று! அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதையறிந்த அவளது உண்மையான பெற்றோரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
சரி... யார் இந்த செவ்வந்திநாதர்?

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவராக அருள்பாலிக்கும் இறைவன்தான்! ரத்னாவதிக்கு, ஒரு தாயாக மாறி பிரசவம் பார்த்த காரணத்தால், ‘தாயும் ஆனவர்’ என்ற பொருளில் ‘தாயுமானவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

பின்குறிப்பு: இறைவனின் இந்தத் திருவிளையாடலை விளக்கும் வைபவம், ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் பெருவிழாவில் இடம் பெறுகிறது. ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த வைபவத்தை, ரத்னாவதி வழி வந்தவர்களே இன்றும் நடத்தி வருகிறார்கள்.
- நெல்லை விவேகநந்தா
 
(திருவிளையாடல்கள் தொடரும்)
Share:

அய்யா வைகுண்டர் வரலாறு - 7


7. சம்பூர்ணதேவன் கதை
 - நெல்லை விவேகநந்தா -
‘நான் வைகுண்டன்; கலி என்னும் நீசனை வெல்லவே வந்திருக்கிறேன்...’ என்று கூறிய முத்துக்குட்டி, தான் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு நடந்தது என்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அப்போது, தனது முற்பிறவி பற்றியும் அவர் சொல்லத் தவறவில்லை. முத்துக்குட்டி, வைகுண்டர் ஆகிவிட்டதால், இனி நாம் அவரை அய்யா வைகுண்டர் என்றே அழைப்போம்.

அய்யா வைகுண்டரின் முற்பிறவி எப்படி அமைந்தது? அதன் தொடர்ச்சியாக, அய்யா வைகுண்டராக அவர் அவதாரம் எடுக்க என்ன காரணம்?

இதோ... சற்று விரிவாக...

உலகம் படைக்கப்பட்ட போது, தங்களை விட உயர்ந்தவர்கள் வேறு யாருமே கிடையாது என்ற ஆணவத்தில் மிதந்தனர் தேவர்கள். அவர்களது எண்ணத்தை மாற்ற விரும்பிய ஈசனான சிவபெருமான், குரோணி என்னும் அசுரனை உடனே படைத்தார் (உலகம் முழுவதும் எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் வெற்றித் தோல்வி இருக்காது... சுவாரஸ்யம் இருக்காது... பூமியும் மந்தகதியில் ஸ்தம்பித்துப் போய்விடும்... நல்லவர்கள், திறமைசாலிகளின் பெருமைகளும் முடங்கிப் போய்விடும், அதாவது... கெட்டவர்களை அழித்தால்தானே நல்லவர்கள் பற்றியும் தெரியும் என்பதால்... இப்படி அசுரர்களை படைக்கிறார் இறைவன் என்பது புராண தகவல்).

ஈசனால் படைக்கப்பட்ட குரோணி, திருமால் உள்ளிட்ட தேவர் குலத்தையே அழித்து மூன்று உலகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றான். இதனால் கோபம் கொண்ட திருமால், குரோணியைக் கொன்று அவனை 6 துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை எடுத்துரைக்க, குரோணியின் ஒவ்வொரு உடம்புத் துண்டைக் கொண்டு மிகக்கொடியவனை உருவாக்கினார்.

அதன்படி, சதிர்யுகம், நெடுயுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்... ஆகிய 5 யுகங்களிலும் கொடிய அரக்கர்கள் பிறக்க வைக்கப்பட்டனர். ஆறாவது உடல் பாகத்தை தர்ம யுகத்திற்கு முந்தைய யுகமான கலியுகத்தில் கலியனாக - உடலற்று பிறக்கச் செய்தார் (இப்போது நடப்பது கலியுகம்தான்). அந்த கலியன் என்னென்ன கொடூர செயல்களில் ஈடுபடுகிறான் என்பதை கண்காணிக்க தேவர் உலகத்தில் வாழ்ந்த சம்பூர்ணதேவன் என்பவரை பூலோகம் செல்ல உத்தரவிட்டார் திருமால்.
இந்த சம்பூர்ணதேவன் பூலோகம் சென்றாரா? இல்லையா? என்பதைப் பார்க்கும் முன், கலியன் பற்றி சிறிது பார்த்து விடுவோம்.

உடலற்றுப் பிறந்த கலியன்தான் மாயை. இவன், கலியுகத்தில் பிறந்த மனிதர்களது மனங்களில் புகுந்து எல்லோரையும் கலியர்களாக்கி விட்டான். இதன் காரணமாக, மனிதனின் பேராசை வளர்ந்து கொண்டே போனது. இரக்கம், மனிதாபிமானம், அன்பு... போன்ற பெருந்தன்மைகளுக்கு எல்லாம் அவனிடம் இடம் இல்லாமல் போனது. அடுத்தவன் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டவன், அவனது மனைவியையும் அனுபவிக்க ஆசைப்பட்டான். தான் மட்டும் நன்றாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டான். ஆசை ஆசையாய் வளர்த்த மகள், தனக்கு பிடித்த ஒருவனுடன் காதல் வயப்பட்டால் அவளைக் கவுரவத்திற்காக கொலை செய்யவும் ஆரம்பித்தான். 

இப்படி, மாயை ஆகிய கலியனின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மனிதன் ஒட்டு மொத்தமாக மாறிப் போய்விட்டான்.

சரி... இனி, சம்பூர்ணதேவன் கதைக்கு வருவோம்...

கலியனின் நடவடிக்கைகளை கண்காணிக் சம்பூர்ணதேவனை பூலோகம் செல்லத் திருமால் ஆணையிட்டார் இல்லையா? அவனுக்கும், எமலோகத்தில் வாழ்ந்த பரதேவதை ஒருத்திக்கும் காதல் இருந்து வந்தது. ஏற்கனவே அந்தப் பரதேவதை, அதே எமலோக வீரன் ஒருவனை மணந்து இரு குழந்தைக்குத் தாயும் ஆனவள். அப்படிப்பட்டவள், வீரமும், அழகும் கொண்ட சம்பூர்ணதேவன் மீது காதல் கொண்டாள். அவள் மீது சம்பூர்ணதேவனும் மோகம் கொண்டான். சம்பூர்ணதேவனின் இந்த செய்கை தேவர் குலத்தினருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளுடன் இணைந்தான்.

இப்படி, எமலோகப் பெண் ஒருத்தியுடன் உறவு கொண்டிருந்த சம்பூர்ணதேவனை பூலோகம் செல்லுமாறு திருமால் ஆணையிட்டதால் அவன் சற்று யோசித்தான்.

“என்ன யோசிக்கிறாய் சம்பூர்ணதேவா? உனக்குப் பூலோகம் செல்வதில் விருப்பம் இல்லையா?” என்று திருமால் கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தேவா. நான் ஆசைப்பட்ட பெண்ணும் என்னுடன் பூலோகம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...”

“யார் அந்த பெண்?”

“அவள் எமலோகத்தைச் சேர்ந்த பரதேவதை. அவளைத்தான் நான் விரும்புகிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள்...”

“ஏன் இப்படியெல்லாம் உன் மனம் அலைபாய்கிறது? தேவர்குலத்தில் சர்வலட்சணங்களோடு பிறந்த நீ எங்கே? எமலோகத்தில் பிறந்த அந்த பரதேவதை எங்கே? உங்களுக்கு அப்படியென்ன பொருத்தம் இருக்கிறது?”
“தேவா! நீங்கள் சொல்வதன் நியாயம் எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனாலும், நான் எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அவள்பால் இணைந்து விட்டேன். அவளைப் பிரிந்திருக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான், அவளும் என்னுடன் வரவேண்டும் என்று கேட்கிறேன். அவளை பூலோகத்தில் என் மனைவியாகவே பிறக்க தாங்கள் அருள் புரிய வேண்டும். எந்தவிதத்திலும் எங்களை சபித்து விடாதீர்கள்...” என்று சொன்ன சம்பூர்ணதேவன், சட்டென்று திருமாலின் காலில் விழுந்து விட்டான்.

திருமாலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சம்பூர்ணதேவன் பரதேவதைக்காக கண்ணீரும் விட்டுவிட்டதால் மனம் உருகினார்.

“சரி... உன் விருப்பப்படியே செய்கிறேன். ஆனால் ஒன்று... நீயும், அவளும் கடும் தவம் செய்ய வேண்டும். உங்கள் தவம் முடியும் போது நான் அங்கே தோன்றுவேன். உங்கள் தகுதிக்கு ஏற்ப வரங்களை அருளுவேன். இப்போதைக்கு அதை மட்டும்தான் நான் சொல்ல முடியும்...” என்று அருளிவிட்டு மறைந்தார் திருமால்.

மனம் தெளிந்த சம்பூர்ணதேவன், பரதேவதையுடன் கடும் தவம் புரிந்தான். அவர்களது தவக்காலம் முடியும்போது அங்கே சிவபெருமானும், திருமாலும் வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக, ஏற்கனவே அங்கே வந்திருந்தார் தேவேந்திரன்.

இதையறிந்த சம்பூர்ணதேவனின் மனம் மாறியது. பரதேவதை தன்னுடன் பூலோகத்தில் பிறக்க வேண்டும்... அவளுடன் வாழ வேண்டும்... என்று வரம் கேட்பதற்காக தவம் இருக்க ஆரம்பித்தவன், தேவேந்திரனின் பதவி மீது ஆசை கொண்டான். 

‘இந்திரனின் மணிமுடி தரித்து தேவலோகத்தை ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்...?’ என்ற கற்பனையிலும் மிதக்க ஆரம்பித்தான். தன்னுடன் தவம் இருந்த பரதேவதையிடம் அதுபற்றி கூறி, அதையே திருமாலிடம் வரமாக கேட்க உள்ளதாகக் கூறினான்.

அதைக்கேட்ட பரதேவதை அதிர்ந்தாள். அத்துடன், அவர்கள் இருவரும் பேசிய பேச்சு, அங்கே வந்த சிவபெருமான் மற்றும் திருமால் காதிலும் விழுந்து விட்டது. அதை சம்பூர்ணதேவனும், பரதேவதையும் கவனித்து விட்டனர்.

(தொடரும்...)
Share: