சனி, 25 டிசம்பர், 2010

பிரசவம் பார்த்த இறைவன்

 
 தாயுமானவர்

பூம்புகாரில் தன வணிகனான ரத்னகுப்தனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்... அன்று அவரது மகள் ரத்னாவதிக்கு திருமணம்! ரத்னகுப்தன் பெரும் வணிகன் என்பதால் பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட வணிகர்கள் ஏராளமானபேர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

திருச்சி செவ்வந்திநாதரின் அருளால், திருமணம் ஆன 10 வருடங்களுக்குப் பிறகுதான் ரத்னகுப்தன் தம்பதியருக்கு ரத்னாவதி பிறந்தாள். ஒரே மகள் என்பதால் அவளது திருமணம் தடபுடலாக நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் வாய் நிறைய வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

திருமணம் முடிந்ததும் கணவன் ஊரான திருச்சிக்கு குடியேறினாள் ரத்னாவதி. திருச்சி செவ்வந்திநாதரின் அருளாலேயே இந்த சம்பந்தம் ஏற்பட்டதாக பரவசப்பட்டனர், ரத்னகுப்தன் தம்பதியர்.

ரத்னாவதி மீது பாச மழை பொழிந்தான், அவளது கணவன். தனக்கு கிடைத்த நல்ல வாழ்வுக்கும் செவ்வந்திநாதர் தான் காரணம் என்று ஆணித்தரமாக கருதிய ரத்னாவதி, திருச்சி மலைக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள அவரை அடிக்கடி சென்று தரிசித்தாள்.

திருமணத்தைத் தொடர்ந்து, அடுத்த எதிர்பார்ப்பான குழந்தைக்கான கர்ப்பமும் அடைந்தாள். தகவல் அறிந்த அவளது பெற்றோர் திருச்சி வந்து மகளைப் பார்த்து மகிழ்ந்தனர். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், மகப்பேறு காலத்தில் வருவதாக தெரிவித்தனர்.

நாட்கள் வேகமாக ஓடின. பத்தாவது மாதமும் வந்தது. ரத்னாவதியின் பெற்றோர், மகளைப் பார்க்க திருச்சிக்கு வண்டி பூட்டி ஏறினர். மகள் விரும்பி சாப்பிடும் பணியாரம், இலந்தை வடை மற்றும் பதார்த்தங்களை கையோடு எடுத்துக் கொண்டு வந்தனர்.

 திருச்சி மலைக்கோட்டை

அவர்கள் திருச்சியை நெருங்கிய நேரத்தில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், அவர்களால் திருச்சிக்கு வர முடியவில்லை. வெள்ளம் வடியும்வரை காத்திருக்க நேரிட்டது.

இதற்கிடையில், ரத்னாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாய் கையால் தனக்கு பிரசவம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தவளுக்கு, தாய் வந்து சேராதது வருத்தமாக இருந்தது. ஆனாலும், தனது தாய் வந்துவிட வேண்டும் என்று செவ்வந்திநாதரை வேண்டிக் கொண்டாள்.

ரத்னவதியின் வேண்டுதல் வீண் போகவில்லை. அவளது தாய் அவள் முன்பு வந்து நின்றாள். தாயைப் பார்த்த மாத்திரத்தில் அவளது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. கூடவே, பிரசவ வலியும் ஏற்பட்டதால், அவளது தாயே பிரசவம் பார்த்தாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஓரிரு நாட்கள் வேகமாக ஓடின. ரத்னாவதியை கூடவே இருந்து கவனித்தாள் அவளது தாய்.

ஒருநாள், வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்த ரத்னாவதிக்கு திடீர் அதிர்ச்சி. அவளது தாயும், தந்தையும் மகளைப் பார்க்கப் பதற்றத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

அப்படியானால், வீட்டிற்குள் இருப்பது யார்? என்று யோசித்தபடி திரும்பினாள். அங்கேயும் அவளது தாய் நின்று கொண்டிருந்தாள். ரத்னாவதிக்கு குழப்பமாகி விட்டது. 

அப்போது, வீட்டிற்குள் இருந்த,  அவளுக்கு பிரசவம் பார்த்த தாய் செவ்வந்திநாதராக மாறினாள். தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் மட்டுவார் குழலம்மையோடு ரத்னாவதிக்கு காட்சியளித்து மறைந்தார்.

அப்போதுதான் அவளுக்கு உண்மை புரிந்தது; தனக்குப் பிரசவம் பார்த்தது தனது தாய் அல்ல, தாய் வடிவில் வந்த செவ்வந்திநாதர் என்று! அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதையறிந்த அவளது உண்மையான பெற்றோரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
சரி... யார் இந்த செவ்வந்திநாதர்?

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவராக அருள்பாலிக்கும் இறைவன்தான்! ரத்னாவதிக்கு, ஒரு தாயாக மாறி பிரசவம் பார்த்த காரணத்தால், ‘தாயும் ஆனவர்’ என்ற பொருளில் ‘தாயுமானவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

பின்குறிப்பு: இறைவனின் இந்தத் திருவிளையாடலை விளக்கும் வைபவம், ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் பெருவிழாவில் இடம் பெறுகிறது. ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த வைபவத்தை, ரத்னாவதி வழி வந்தவர்களே இன்றும் நடத்தி வருகிறார்கள்.
- நெல்லை விவேகநந்தா
 
(திருவிளையாடல்கள் தொடரும்)
Share:

0 கருத்துகள்: