சனி, 15 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 3


3. காதல் தந்த சோகம்

இதுவரை....

திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை - கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த்.


"ஷ்ரவ்யா... இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க."


"உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல... ஏதாவது பேசணுமேங்றதுக்காக இப்படிச் சொல்றீங்களா?"


"அப்படியெல்லாம் இல்லீங்க. என் மனசுல பட்டதத்தான் பேசுறேன்."


"மனசுல இருந்து பேசுறேன்னு சொல்றீங்க. அப்போ நான் உலக அழகியாகத்தான் இருக்க முடியும்."


"என்னங்க... நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறீங்க... இதுதான் சந்து கேப்புல சிந்து பாடுறதுன்னு சொல்றதோ..."


"நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. என்னைப் பொறுத்தவரை நான்தான் உலக அழகி. ஐஸ்வர்யாராய் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்."


"ஆமாம்... நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டீங்களே..."


"இல்லை... தாராளமா சொல்லுங்க."


"அழகு விஷயத்துல எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தானா?"


"ஏன்... இப்போ எல்லாப் பொம்பளைங்களையும் வம்புக்கு இழுக்குறீங்க?"


"வம்புக்கெல்லாம் இழுக்கல. நான் பார்த்து பழகின பொண்ணுங்கள்ல பெரும்பாலும் எல்லோருமே தான் மட்டும்தான் உலக அழகின்னு நினைச்சுக்கிட்டாங்க. இப்போ நீங்களும் அந்த லிஸ்ட்டுல வந்துட்டீங்க."


"இந்த அழகு விஷயத்தை இதோட நீங்க நிறுத்தலன்னா நானே உங்கள அடிப்பேன்..." என்று செல்லமாய் கோபத்தை வெளிப்படுத்திய ஷ்ரவ்யா, தனது அழகிய தோளால் ஆனந்தை அவன் பொறுக்கும் வேகத்தில் இடித்தாள்.


அவள் இடித்த வேகத்தில், பின் குத்தாத அவளது சேலை பட்டென்று விலகியது. இதை எதிர்பார்க்காத ஆனந்த், என்ன நினைத்தானோ சட்டென்று தன் கையால் விலகிய சேலையை இழுத்துப் போர்த்தி விட்டான். அவனை வியப்பாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"நான் சந்திச்ச ஆண்கள்ல நீங்க மட்டும் வித்தியாசமாகத் தெரியுறீங்க ஆனந்த். எல்லா ஆண்களும் என் உடம்பைப் பார்க்கத்தான் வருவாங்க. ஆனா... நீங்கதான் எனக்கும் மத்த பொண்ணுங்களப் போல மானம்னு ஒண்ணு இருக்குன்னு இப்போ நிரூபிச்சி இருக்கீங்க..."


இதற்கு மேல் ஷ்ரவ்யாவால் பேச முடியவில்லை. இமைகளின் ஓரங்களில் நீர் கோர்க்கத் துவங்கியிருந்தது.


"அய்யோ... என்னாச்சு ஸ்ரவ்யா? இதுக்கெல்லாம் போய் ஏன் ஃபீல் பண்ணுறீங்க? நீங்க ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. பெரியப் பொண்ணு. முதல்ல அழுகையை நிறுத்துங்க."


ஆனந்த் சொன்ன பிறகுதான் அழுகையை நிறுத்தினாள்.


பக்கத்தில் இத்தனையும் நடந்து கொண்டிருக்க... எதிரே இருந்த மாடர்ன் கேர்ள் ஸ்வேதாவோ, யாரோ ஒரு ஆணிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தாள். ரெயில், வில்லிவாக்கத்தை தாண்டிய பிறகுதான் அவள் ஹெட் போனை இரு காதுகளுக்குள்ளும் கொடுத்துப் பேச ஆரம்பித்து இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் கூட அவளது மொபைல் மட்டும் ஓய்வெடுக்கவில்லை. நிச்சயமாக அவள், தனது காதலனுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது ஆனந்த், ஷ்ரவ்யா இருவருக்கும் புரிந்தது.


சீட்டில் தலை சாய்த்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கு முதுகு வலித்ததோ என்னவோ திடீரென்று குனிந்தபடி மொபைல் பேச்சைத் தொடர்ந்தாள்.


அவள் அணிந்திருந்தது லோ நெக் டாப்ஸ் என்பதால், அவளது மார்பக அழகு பளீரென எலுமிச்சம் பழக் கலரில் பளிச்சிட்டது. அதை எதார்த்தமாக கவனித்து விட்டான் ஆனந்த். அடுத்த நொடியே இடது பக்கம் திரும்பிக் கொண்டான். ஷ்ரவ்யா அவனுக்கு மிக அருகில் இருந்தாள். அவளும், ஸ்வேதாவின் கவர்ச்சி தரிசனத்தைப் பார்த்த பிறகுதான், 'ஓ... இதற்கு வெட்கப்பட்டுதான் ஸார் இங்கே திரும்பி இருக்காரோ...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கொஞ்சம் அமைதியாய் சிரித்தும் வைத்தாள்.


"ஆனந்த்... நீங்க அந்தப் பொண்ணைப் பாத்தீங்களா?"


"எந்தப் பொண்ணை?"


"எதிரே கவர்ச்சிக்கன்னியாக இருக்கிறாளே... அவளைத்தான்!"


"அவளைப் பார்த்த பிறகுதான் சமீபத்தில் படித்த ஒரு தகவல் என் நினைவுக்கு வந்தது."


"என்ன தகவல்?"


ஷ்ரவ்யாவின் கேள்வியில் அவ்வளவு ஆர்வம் தெரிந்தது. நிச்சயம் அந்த தகவல் கிளுகிளுப்பான ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அதைக் கேட்க ஆவலாகத் தனது முகத்தை அவனுக்கு நேர் எதிராக வைத்துக் கொண்டாள்.


"ஷ்ரவ்யா... நான் சொல்லப் போகும் சம்பவத்தின்படி நீங்கள் ஒருவரை காதலிப்பதாக வைத்துக் கொள்வோம்."


"சரி..."


"அப்படி நீங்க ஒருவரை காதலிக்கும் போது அவருக்கு எத்தனை தடவை மொபைலில் பேசுவீங்க?"


"என்ன ஆனந்த், இதெல்லாம் ஒரு கேள்வியா? நீங்க வேறு எதையோ சொல்வீங்கன்னு ஆர்வமா நெனைச்சா..." அதற்கு மேல் ஷ்ரவ்யாவை அவன் பேச விடவில்லை.


"நீங்க எதிர்பார்க்குற விஷயம் இந்தக் கேள்வியிலேயும் இருக்கு. நான் கேக்குற கேள்விக்கு நீங்க சரியா பதில் சொல்லிட்டு வந்தா, நானும் சரியாச் சொல்லுவேன்."


"அப்படின்னா, பதில் சொல்றேன். என்ன... அதிகபட்சமாக ஒரு 20 அல்லது 30 தடவை பேசுவேன்" என்றாள் ஷ்ரவ்யா.


"அவ்வளவுதானா?" தான் எதிர்பார்த்த பதில் கிடைக்காதது போல் கேட்டான் ஆனந்த்.


"ஒருவேளை அந்தக் காதலன் நீங்களா இருந்தா 100 தடவை பேசியிருப்பேன்."


"எங்கேயோ சுத்தி, கடைசியில எங்கிட்டேயே வந்துட்டீங்களா? பரவாயில்ல... இப்போ நான் சொல்ற விஷயம் கொஞ்சம் ஷாக் தரக்கூடியதுதான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய காதலனுக்கு தினமும் 178 தடவை மொபைலில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறாள். இந்த கணக்குப்படி பார்த்தா, போன வருடம் மட்டும் 65 ஆயிரம் தடவை அந்த பெண் மட்டுமே பேசி இருக்கிறாள்."


"ஏன்... அவங்க காதல் அவ்வளவு ஸ்ட்ராங்கா?"


"ஆரம்பத்துல ஸ்ட்ராங்க் மாதிரி தெரிஞ்சாலும், இப்படி ஓவரா அந்தப் பெண் பேசினதுனால அந்தக் காதலன் போலீஸ் வரைக்கும் போய்விட்டான்."


"அப்புறம்..."


"அப்பும் என்ன... வழக்கம்போல் கைதுதான்!"


"கைதா? யாரைக் கைது பண்ணினாங்க?"


"அந்தப் பெண்ணைதான்!"


"போன் பண்ணினது தப்பா-?"


"போன் பண்ணுறது தப்பு கிடையாது. அடுத்தவங்களை அளவுக்கு மீறி இம்சை பண்ணுறதுதான் தப்பு. இதை நான் சொல்லல. இங்கிலாந்து போலீஸ் சொல்லியிருக்கு."


"அது இருக்கட்டும் ஆனந்த். இப்போது எதுக்காக இந்த புள்ளிவிவரம்?"


"எதிரே பேசிட்டு இருக்குற பொண்ணைப் பார்த்ததும் அந்த புள்ளிவிவரம் ஞாபகத்துக்கு வந்துச்சு. உங்களுக்கும் இந்தத் தகவல் யூஸ்புல்லா இருக்கும்னு நெனைச்சேன், சொல்லிட்டேன்."


ஸ்ரவ்யா தனது ஞாபக சக்தியைப் பாராட்டுவாள் என்று எண்ணினான் ஆனந்த். ஆனால், அவளிடம் இருந்து எந்த பாராட்டும் வரவில்லை. அதனால் மறுபடியும் அவனே அவளது வாயை கிளறினான்.


"ஸ்ரவ்யா... உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா?"


"நீங்க சொன்னதான் தெரியும்..."


"ஆமால்ல.. நான் புள்ளிவிவரத்துல காதலனுக்கு மொபைல்ல மணிக்கணக்குல பேசி இம்சை பண்ணின காதலிக்கு எவ்ளோ வயசு இருக்கும்னு நெனைக்குறீங்க?"


"ஒரு பதினெட்டுல இருந்து இருபத்தைந்து வரைக்கும்..."


"அதுதான் இல்ல; அந்த பொண்ணோட வயது 42."


"அப்படின்னா, காதலன் வயது...?"


"62 வயதாம்!"


"இந்த வயசுலேயுமா லவ் பண்ணுவாங்க. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவராத்தான் தெரியுது..." என்று கொஞ்சம் சலித்துக் கொண்டாள் ஸ்ரவ்யா.


"அப்படியெல்லாம் இல்ல ஸ்ரவ்யா... உண்மையான காதலுக்கு கெடைக்கிற சக்தி வேற எதுக்குமே இல்ல. உண்மையா காதலிச்சவங்க சூழ்நிலை காரணமாக பிரிஞ்சிட்டாலும் கூட அந்தக் காதல நெனைச்சு ஏங்கிக்கிட்டே இருப்பாங்க. தண்ணீர் மேல் எழுதுன எழுத்து இல்ல உண்மை காதல்."


ஆனந்தின் பேச்சு, அவனுக்குள் புதைந்து கிடந்த காதலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஷ்ரவ்யாவுக்கு அவனது காதலைத் தெரிந்து கொள்ள ஆசை. அதைச் சட்டென்று கேட்டும் விட்டாள்.


"ஆனந்த்... உங்ளோட பேச்சைப் பார்த்தா நிச்சயமாக் காதலிச்சு இருக்கீங்க, அதுவும் உண்மையா! யாரு அந்தக் காதலி? இப்போ அவங்க எங்க இருக்காங்க? நீங்க அவங்கள எப்போ மேரேஜ் பண்ணப் போறீங்க?" கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.


ஆனந்திடம் மவுனம்தான் நிலவியது. அதுவரை காதல் பற்றிய புள்ளி விவரங்களைக் கூட அடுக்கிய அவனால், இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியவில்லை. அவனது முகத்திலும் லேசான சோக ரேகை தெரிந்தது. திடீரென்று நெஞ்சு பாரமானதால் எச்சிலை அவசரமாக விழுங்கி, அதை ஆசுவாசப்படுத்த முயன்றான்.


தனது கேள்வி ஆனந்திடம் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஷ்ரவ்யா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


"தப்பா நெனைச்சுக்காதீங்க ஆனந்த். நான் கேட்டது தப்புன்னா என்ன மன்னிச்சிக்கோங்க."


ஷ்ரவ்யாவின் இந்த மன்னிப்புக் கோரிக்கை ஆனந்தை மறுபடியும் பேச வைத்தது.


"எல்லோரையும் போல நானும் காதலிச்சேன், உயிருக்கு உயிரா! ஆனா இன்னிக்கு அந்தக் காதல் உயிரோட இல்ல..."


இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. வேகமாக வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றான். எதிரே இருப்பவர்கள் அதைக் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக கர்ச்சிப்பால் அவசரமாக முகத்தை மூடிக்கொண்டு கண்ணீரை வடிகட்டினான்.


ஆனந்தின் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டோமே... என்று ஷ்ரவ்யா வருந்த... இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த அவன் வாஷ் பேஷின் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான். ரெயிலோடு சேர்ந்து அசைந்து கொண்டிருந்த கண்ணாடியில் கஷ்டப்பட்டு முகம் பார்த்து, அதில் வருத்தம் தெரிகிறதா என்று ஒருமுறைக்கு பலமுறை பார்த்து சோதித்துக் கொண்டான்.


அப்போதுதான் கண்ணாடியின் ஓரம் அந்தக் காட்சி அவனது பார்வையில் தெரிந்தது. ஒரு இளம் ஜோடி தங்களது இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த புத்தம் புதிய மஞ்சள் கயிறு அதை அப்பட்டமாகக் காட்டியது. அந்த ஜோடிகள் மட்டுமே சிரித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களுடன் வேறு யாரும் வரவில்லை. அவர்கள் ஹனிமூனுக்காக கோவை சென்று ஊட்டி செல்லலாம் என்று யூகித்துக் கொண்டான்.


திரும்பவும் கண்ணாடியில் முகத்தை பார்த்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் புதிதாய் திருமணம் ஆகியிருந்த ஜோடியைப் பார்த்தான். கணவன் பதவிக்கு வந்திருந்த இளைஞன் தனது புதுமனைவியை இருக்கமாக தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு சிரித்து சிரித்துப் பேசினான்.


அந்த இளம் ஜோடிகள் ஆனந்தின் கண்களுக்குள் ஆழமாக ஊடுருவி பதிந்து போனார்கள்.


'நானும் மனைவியோடு ஊட்டிக்கு இப்போது ஹனிமூன் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் விதி... ஒரு கால் கேர்ளை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்' என்று, மனதிற்குள் தன்னைத்தானே நொந்து கொண்டான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு இருக்கையில் வந்து அமர்ந்தவனை ஆதரவாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"ஆனந்த்... நான் உங்ககிட்ட அப்படியொரு கேள்வி கேட்டது தப்பா? என்னன்னு தெரியல. உங்களைப் பார்த்தது முதலே நானும் கொஞ்சம் மாறிப் போய் விட்டேன். எத்தனையோ பேருக்கு பணத்துக்காக முந்தானை விரிச்சவதான் நான். இப்பவும் அந்த வகையிலதான் நான் உங்களோட வர்றேன். ஆனாலும், நான் தப்பான தொழிலுக்காக உங்களோட வர்றேனுங்குற ஃபீலிங் எங்கிட்ட சுத்தமா இல்ல. அதனாலதான் உங்க கிட்ட இவ்ளோ உரிமை எடுத்துப் பேசிட்டு வர்றேன். என்னோட பெர்ஷனல் விஷயங்கள் பற்றி கேட்காதன்னு நீங்க சொன்னா அதுபற்றி பேசவே மாட்டேன்..." என்று தன்னிலை விளக்கம் கொடுத்த ஷ்ரவ்யாவை வியப்பாகப் பார்த்தான் ஆனந்த்.


ஷ்ரவ்யாவிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அப்போது, திடீரென்று அவனது மொபைல் சினுங்கியது.


'புரோக்கர்' என்கிற ஆங்கில வார்த்தை மொபைலின் திரையில் பளிச்சிட்டது.


பச்சைப் பட்டனை ஆன் செய்து வலது காதில் வைத்தான்.


"ஸார்... நான்தான் பிரகாஷ். அந்தப் பொண்ணு உங்க கூடதானே இருக்கு?"


"ஆமா..."


"நீங்க ரெயில்ல ஏறுன உடனேயே பேசனும்னு நினைச்சேன். அதுக்குள்ள இன்னொரு கஸ்டமர் வந்துட்டார். அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."


"பரவாயில்ல..."


"அப்போ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. நாங்க எப்படி உங்களுக்கு சேப்ட்டியோட பொண்ணை அனுப்பி வெச்சோமோ, அதே சேப்ட்டியோட எங்ககிட்ட திரும்பவும் ஒப்படைச்சிடுங்க. இன்னிக்கு மே 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. மே 8 ம் தேதி அவ எங்ககிட்ட இருக்கணும்..." என்று அக்ரிமென்ட் கன்டிஷனைச் சொன்ன பிரகாஷ், "சரி ஸார்... கொஞ்சம் சாந்தி கிட்ட மொபைலை கொடுங்க" என்றான்.


ஆனந்துக்கு ஒன்றும் புரியவில்லை.


"என்னது... சாந்தியா?" என்றான்.


அவன் சாந்தி என்று சொன்னதும் அருகில் இருந்த ஷ்ரவ்யா உஷார் ஆனாள்.


படைப்பு : நெல்லை விவேகநந்தா 



(தேனிலவு தொடரும்...)





Share: