திக்... திக்... - சிறுகதை
சுற்றிலும் இருந்த கும் இருட்டுக்கு மத்தியில் ஒற்றை மின்விளக்கு ஒளியில் திகில் நாவலில் மூழ்கி இருந்தான் அருண். நாவலின் சஸ்பென்ஸ் உச்சத்தால் அக்கம், பக்கம் என்ன நடக்கிறது என்பதையே அவன் மறந்திருந்தான்.
திடீரென ஆப் ஆன கரண்ட் அருணை அப்போது திசை திருப்பியது. திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, கருப்பு வர்ணம் பூசியதுபோன்று காணப்பட்டது வீதியெங்கும்.
"என்னங்க... கரண்ட் போனதுனால பேன் ஆப் ஆயிடுச்சு. கொஞ்சம் ஜன்னலை திறந்து வையுங்களேன்" - தாய் மரகதம், கணவன் நடராஜனிடம் பேசியது வீட்டின் மெயின் ஹாலையும் ஊடுருவி வந்து அருணின் காதுகளை தொட்டது.
"அருண்... படிச்சது போதும்; முதல்ல படு" - அப்போது அம்மாவின் குரல் சற்று கனத்துடன் வந்து, அருணுக்கு உத்தரவிட்டு மறைந்து போனது.
"சரிம்மா.." என்று, அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தபடி தலைக்கு மேலே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான். சரியாக நள்ளிரவு 12 மணியை காட்டிக்கொண்டிருந்த கடிகாரம், அந்த நிசப்தத்திலும் தன்னால் முடிந்த ஓசையை பலமாக எழுப்பிக் கொண்டு அருணை மிரட்டியது.
அடுத்த ஒரு மணி நேரம் வேகமாய் கரைந்திருந்த நிலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அருண். ஆனால், அவனது ஆழ்மனதோ குரங்காய் மரம் விட்டு மரம் தாவிக்கொண்டிருந்தது.
அப்போது -
இரவின் நிசப்தம் மீது கோபம் கொண்டு, அதன் மீது மோதி வேகமாக வந்தது காற்று. காற்று வந்த வேகத்தில் அருண் பூட்டியிருந்த ஜன்னல் தானாக திறந்து டமார் என்ற சத்தத்துடன் அடித்துக்கொண்டு நின்றது.
சத்தம் கேட்டு திடுக்கென எழுந்தான் அருண். படுக்கும் முன் அமைதியாய் காணப்பட்ட இருள் சூழ்ந்த பகுதி, ஒருவித லேசான அலறலுடன் கொக்கரித்துக் கொண்டிருந்தது அப்போது.
திடீரென பின்புறத்தில் நனைந்திருந்த சட்டை அருண் நன்றாக வியர்த்திருந்ததை நினைவுப்படுத்தியது. அப்போது பொங்கி வந்த குளிருக்கு பயந்து சட்டையை கழற்றாமல், கையால் இருகப்பிடித்தபடி தானாக திறந்த ஜன்னலை நோக்கி சென்றான்.
ஜன்னலை மூட கை வைத்தபோது திடீரென ஒரு சத்தம், ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்ததை ஞாபகப்படுத்தியது. என்னதோ, ஏதோ என்று மனம் திடுக்கிட்டு போனதால் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொம்மை கீழே விழுந்து உடைந்து நொறுங்கிக் கிடந்தது.
கல்லூரி டூருக்கு சென்ற இடத்தில் ஆசைப்பட்டு வாங்கிய அந்த பொம்மை திடீரென கீழே விழுந்து உடைந்ததற்கான காரணத்தை அவனால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. உடைந்து போன பொம்மையை கையில் எடுத்துப் பார்த்தான். மீண்டும் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்பதை தனது தோற்றத்தால் உணர்த்தியது அந்த கண்ணாடி பொம்மை.
"டர்ர்ர்ர்...." - திடீரென வந்த சத்தம் கேட்டு பயந்து திரும்பப் போய், கையில் இருந்த கண்ணாடி பொம்மையின் உடைந்த ஒரு பகுதி கீழே விழுந்து அருணின் காலை பதம் பார்த்தது. அடிப்பட்ட பகுதியில் லேசாக எட்டிப் பார்த்த ரத்தம் அருணை இன்னும் அதிகமாக பயமுறுத்தியது.
இப்படி ஆயிடுச்சே என்று அவன் குனிந்தபோது, காற்றால் தானே திறந்துகொண்டு நின்ற ஜன்னல் கதவு மீண்டும் இயங்க ஆரம்பித்தது. டமார், டமார் என்று அது இடைவிடாது சிலமுறை அடித்து நின்றபோது நடுங்கியே விட்டான் அருண்.
ஜன்னலை திரும்பிப் பார்த்தபோது வெளியில் திடீரென இடி-மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. ஜன்னல் அருகே செல்ல மெல்ல காலடி எடுத்து வைத்தான்.
ஜன்னல் வழியே வெளிப்பகுதியை கூர்ந்து நோக்கியபோது, ஒரு பெண் வீதியில் உதவி கேட்பதுபோல் போராடிக் கொண்டிருக்கும் காட்சி அவனது விழித்திரையில் லேசான அலசலோடு பதிவானது.
"யார் இவள்? இந்த நேரத்தில்... இங்கே எப்படி வந்தாள்?" - சில குழப்பங்களுக்கு விடை கொடுக்க கதவை திறந்து பார்க்க முற்பட்டான்.
கதவை திறக்க கை வைத்தபோது உதவி கேட்கும் சத்தம் கொஞ்சம் வேகமாகவே கேட்டது.
"யாராவது வந்து காப்பாத்துங்களேன்..." என்ற அந்த குரல் வெளியில் இருந்து வேகமாக வந்து அருணின் காதுகளை தொட்டது.
இந்த வேகத்தை போலவே தன்னை அறியாமல் கதவின் மீது வேகமாக கைகளால் பற்றினான் அருண். கதவு மீது கை வைத்த அடுத்த சில நொடிகளில், அருண் திறக்க முற்படாமலேயே கதவு தானாக திறக்க ஆரம்பித்தது.
அதிர்ச்சியில் உறைந்து போனான் அருண். வெளியில் வெள்ளை நிற ஆடையில் ஒரு அழகான பெண் வீதியில் கிடப்பதை வீட்டுக்குள் இருந்தபடியே கண்டான். வெளியில் சென்று உதவுவோமா, வேண்டாமா என்று திடீர் கணக்கு போட்ட அருண், அதற்கு விடையாக உதவலாம் என்று வர, மேற்கொண்டு வெளியில் செல்ல காலடி எடுத்து வைத்தான் மெதுவாக.
போர்ட்டிக்கோவை கடந்து வீட்டு முற்றத்தை அடைந்த போதிலும் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. குனிந்த நிலையில், சந்திரமுகி ஜோதிகா போல் கிடந்தாள்.
அந்த பெண்ணை சில அடி தூரத்தில் எட்டியபோது அவனை அறியாமல் கால்கள் ஆட ஆரம்பித்து இருந்தன. யார் அது என்று கேட்க வாயெடுத்தபோது பேச்சும் வராமல் சிக்கித் திணறியது.
உளறலோடு யார் அது என்று கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை நெருங்கினான் அருண். அப்போது தான் அந்த பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது.
கல்லூரி மாணவியான பக்கத்து வீட்டு மாலதி என்பதை அவள் அருகில் சென்றபோது தான் அவனால் உறுதி செய்ய முடிந்தது.
தன்னால் நடக்க முடியவில்லை என்று மாலதி கூறவும், அவளுக்கு உதவுவதற்காக வேகமாக வீட்டுக்குள் புறப்பட்டு சென்றான் அருண்.
வேகமாக சென்றவன் திடீரென நின்றான். அவனது கண்களில் பேயை நேரில் கண்டது போன்ற மிரட்சி. இதயத்தின் லப்-டப் வேகமும் தாறுமாறாக எகிறி இருந்தது.
"பக்கத்து வீட்டு மாலதி விபத்தில் இறந்துபோய் ஒரு வாரம் கூட ஆகவில்லையே; வேறு எப்படி இங்கே வர முடியும்?"
மாலதி பலியான அந்த சம்பவம் அருணுக்குள் மின்னல் வெட்டாய் வந்து போனது.
சாலையில் அடிபட்டு கிடந்த மாலதியை தனது மடியில் கிடத்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தான் அவள் இறந்து போனாள்.
மாலதி மறைந்துபோன சம்பவம் அருண் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.
அப்படி இருக்கும்போது இங்கே எப்படி மாலதி... என்று யோசித்தவன், மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
மீண்டும் அவனுக்குள் அதிர்ச்சி. வீதியில் கிடந்த மாலதியையே காணவில்லை. ஒருவேளை பேயாக வந்து பயமுறுத்துகிறாளா என்று மனதிற்குள் வேகமாக ஓட விட்டவன், மாலதி பேயாகத் தான் வந்திருக்கிறாள் என்பதை உறுதி செய்து, வீட்டுக்குள் போக எத்தனித்தான்.
அப்போது -
மீண்டும் வீட்டு முன்கதவு அருகில் மாலதி.
"ஓ"வென அலறிய அருண் மயக்கமாகி கீழே விழுந்தான்.
"என்ன ஆச்சுன்னு தெரியலியே; அருண் பெட் ரூமில் இருந்து சத்தம் வருகிறதே" என்று அவனது தாய் மரகதமும், தந்தை நடராஜனும் அங்கு வேகமாக வந்து பார்த்தனர்.
படுத்திருந்த பெட்டில் இருந்து கீழே விழுந்து கிடந்தான் அருண்.
மரகதம் அருண் மீது கை வைத்தபோது கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான்.
"என்னடா ஆச்சு; கத்திக்கிட்டே கீழே விழுந்துட்ட. கெட்ட கனவு எதுவும் கண்டியா" என்று மரகதம் கேட்டதற்கு, ஆமா என்று மட்டும் தலையை ஆட்டிய அருணால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
"ஒரு டம்ளர் தண்ணீரை குடிச்சிட்டு படுடா" என்று கூறிய மரகதத்திற்கு தலையை அசைத்தே பதில் சொன்னான்.
பெற்றோர் அறையைவிட்டு வெளியேறியபோது தனது காலை திடீரென எட்டிப்பார்த்தான். கண்ணாடி பொம்மை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜன்னலும் மூடப்பட்டே இருந்தது. வெளியே மழையும் பெய்யவில்லை.
அப்போது தான் அருணுக்கு தெரிந்தது. மாலதி வந்த சம்பவம் வெறும் கனவு என்று!
ஆக்கம் : நெல்லை விவேகநந்தா.