1.நாஞ்சில் நாட்டின் கதை
- நெல்லை விவேகநந்தா -
கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த தோட்டங்கள், மிகப் பெரிய கனிகளைத் தரும் முக்கனிகளுள் இரண்டாவதான பலா மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்.
இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.
இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.
இந்த நாஞ்சில் நாடு 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. அதன்பின், சேரர்கள் வசம் வந்தது. அவர்களுக்குப் பின் ஹோய்சாளர்கள் கை ஓங்கவே... சேரர்கள் வலுவிழந்து போனார்கள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரளாவின் வேனாடு மன்னர்கள், நாஞ்சில் நாட்டை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ஏறக்குறைய 4 நூற்றாண்டுகாலம் அவர்கள் நாஞ்சில் நாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர். இவர்களுக்கும், பக்கத்து அரசான பாண்டிய மன்னர்களுக்கும் இடையில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை இருந்து வந்தது.
கி.பி.1609ல் வடக்கே இருந்து வந்த விஜயநகர மன்னர்கள் பாண்டியர்களை வென்று, மதுரையைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதே நேரத்தில், வேனாடு அரசியலில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, ஆற்காடு சந்தா சாகிபுவின் படையெடுப்புக்கு உள்ளானது. அப்போது வேனாட்டை ஆண்டை மார்த்தாண்ட வர்மாவின் வீரர்கள் போர்க்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினர். மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த வேனாட்டு மன்னர்கள் வலுவிழந்தவர்களாக இருந்ததால், அப்போது இந்தியா முழுவதுமே நாடு பிடிக்கும் கொள்ளை(க)யில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி வேனாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
அப்போது, அவர்களது ஆசியுடன் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக இருந்த அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டு வழி வழியாக நாட்டை ஆண்டு வந்தனர். கி.பி.1729 முதல் 1956 வரை இவர்களே ஆட்சி புரிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் 'சித்திரை திருநாள்' (திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள், நட்சத்திரங்களின் பெயரையே தங்களுக்கு சூட்டிக்கொள்வார்கள்). 1798 முதல் 1810 வரை அவிட்டம் திருநாள் என்ற பாலராம வர்மா என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் அய்யா வைகுண்டர் முத்துக்குட்டியாக 1809-ஆம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமித்தோப்பில் நாடார் சமூகத்தில் பொன்னுமாடன் - வெயிலாள் என்ற தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.
1947 ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் 1956 வரை தொடர்ந்து இயங்கி வந்தது. அதன் பிறகு, அன்றைய தமிழகத்துடன் (சென்னை மாகாணம்) இணைந்தது. 1956 நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலமாக கேரளா உருவாக்கப்பட்டபோது, அதனுடன் சேர்க்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 'கன்னியாகுமரி' என்ற புதிய மாவட்டம் உதயமானது.
ஆன்மிக ரீதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அணுகினால், அதனை ஆண்டவர்கள், விஷ்ணுவின் ஒரு அம்சமான திருவனந்தபுரத்து பத்மநாபசுவாமியின் அடியவர்கள் என்னும் பொருள்பட தங்களை “பத்மநாததாசர்” என்று அழைத்துக் கொண்டனர். பரசுராமர், தனது கோடாரியைக் கடலுக்குள் எறிந்த போது உருவானதுதான் கேரளா என்று தனது ரகுவம்ச காவியத்தில் குறிப்பிடுகிறார் காளிதாசர்.
கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மருந்துவாழ் மலையும் புகழ் பெற்றது. ராமர் மற்றும் ராவணன் யுத்தத்தின் போது, ஆஞ்சநேயர் கயிலாயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரும் போது, அதில் இருந்து உடைந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மருந்து வாழ் மலை என்கிறார்கள். இந்த மலையில் அரிய வகை மூலிகைகள் இன்றும் விளைகின்றன. அவற்றை உருவம் இல்லாமல் என்றும் சிரஞ்சீவியான சித்தர்கள் பயிரிடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.
மேலும், கணவனையே கண்கண்ட தெய்வமாக நினைத்து, கடவுளைக் குழந்தையாக்கிய கற்புக்கரசியான அனுசுயாதேவி இங்கேதான் வாழ்ந்தாள். அவளது கற்பின் மகிமையை நாரதமுனி மூலம் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அறிந்து வியப்புற்றனர். அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணிய அவர்கள் முறையே தங்களது கணவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும், தேவியர் சொன்னபடியே வயோதிகர் வேடத்தில் அங்கு சென்றனர்.
தன் இல்லத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் அமுது படைத்து ஆதரிக்கும் நற்குணங்களைப் பெற்ற அனுசுயா, வயோதிகர் வேடத்தில் வந்த மும்மூர்த்திகளையும் வரவேற்று ஆசிரமத்தில் அமர வைத்தாள். பின்னர் அவர்களுக்கு அமுது படைக்கத் தயாரானாள். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். மாறாக, "நீ பிறந்த மேனியாக (நிர்வாண கோலம்) உணவு பரிமாறினால்தான் அவற்றை சாப்பிடுவோம்" என்று கூறி அவளை அதிர்ச்சியடையச் செய்தனர்.
உடனே அனுசுயா தனது கணவர் அத்திரி முனிவரை கண்மூடி தியானித்தாள். அப்போது அங்கு வயோதிகர்கள் வேடத்தில் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அவள் உணர்ந்தாள். தன் கற்பின் நிலையை அவர்களுக்கு உணர்த்த விரும்பிய அவள், தன் கணவரின் பாதநீரை எடுத்து மும்மூர்த்திகளின் தலையிலும் தெளித்தாள். அந்த நிமிடமே மூவரும் தவழும் குழந்தைகளாக உருமாறினார்கள்.
குழந்தைப் பருவம் என்பது ஒன்றும் அறியாத பருவம் அல்லவா? எனவே, அந்த மூன்று குழந்தைகளையும் வாரி எடுத்து மார்போடு அணைத்த அனுசுயா, நிர்வாண கோலத்தில் அவர்களுக்குப் பாலூட்டி அவர்களின் பசியினை போக்கினாள். பின்னர், அங்கு வந்த தனது கணவர் அத்திரி முனிவரிடம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள். மனைவியின் செயலைக் கண்டு பெருமிதப்பட்டார் அவர்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. பூலோகம் சென்ற தங்களது கணவன்மார்களைக் காணாமல் முப்பெரும் தேவியரும் தவித்தனர். அவர்களிடம் நாரதர், நடந்த சம்பவத்தைக் கூறினார்.
உடனே, தேவியர் மூவரும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு சென்று மாங்கல்யப் பிச்சை கேட்டனர். அங்கு குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் எடுத்துச் செல்ல அனுசுயா அனுமதித்தாள். மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் தங்களது கணவர் யார் என்று தெரியாமல் தேவியர் மூவரும் குழம்பி நின்றனர்.
பின்பு அவர்கள் அனுசுயாதேவியின் ஆலோசனைப்படி, மூன்று நீர்ச்சுனைகளை அங்கே உருவாக்கி, அதில் நீராடி, ஆதிபராசக்தியை நோக்கித் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஆதிபராசக்தி மும்மூர்த்திகளையும் மீண்டும் உருப்பெற செய்தார்.
இதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலின் தலவரலாறு. இங்குதான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவத்தில் மூலவராக - தாணுமாலயனாக ஒருவித லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இதில் தாணு என்பது சிவனையும், மால் என்பது விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது. இந்தக் கோவில் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில், நாகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அனுசுயா போல், மற்றொரு ரிஷி பத்தினியான அகல்யாவும் இந்த நாஞ்சில் நாட்டோடு தொடர்புடையவள்தான். ஒருமுறை பூலோகத்தை வலம் வந்த தேவேந்திரன் பேரழகியான அகல்யாவைப் பார்த்து, அவளது அழகில் மயங்கிப் போனான். போதை தலைக்கேறிய அவன், அவளை நெருங்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
ஒரு நாள் நள்ளிரவில் அகல்யாவை அடைந்து விட வேண்டும் என்ற ஆவலில் அவன், சேவல் உருவத்திற்கு மாறிக் கூவினான். ஆசிரமத்தில் உறங்கிக் கொண்டிருந்த அகல்யாவின் கணவரான கவுதம முனிவர், பொழுது விடிந்து விட்டது என்று கருதி ஆற்றில் நீராடி வர வெளியேறிச் சென்றார். இதைப் பயன்படுத்தி ஆசிரமத்திற்குள் சேவலாகப் புகுந்த தேவேந்திரன், கவுதம ரிஷி உருவம் எடுத்து அகல்யாவை நெருங்கினான். அவளை தனது விருப்பத்திற்கு உட்படுத்தினான்.
அதேநேரம், நீராடச் சென்ற கவுதமர், சலனமற்று கிடந்த ஆற்றைப் பார்த்து, இன்னும் விடியவில்லை என்பதை அறிந்தார். உடனே, ஆசிரமத்திற்கு திரும்பினார். இந்திரன் அங்கிருந்து பூனை உருவம் எடுத்து வெளியேறினான். அங்கே, நடந்தவைகளை தன் ஞான திருஷ்டியில் அறிந்தார். தனது மனைவியை இந்திரன் அடைந்து விட்டுச் சென்றதை அறிந்தார். அவர் கோபத்துடன் இந்திரனை "எதற்கு நீ ஆசைப்பட்டாயோ, உன் உடல் முழுவதும் அதுவாகவே ஆகட்டும்..." என்று சாபமிட்டார்.
அடுத்த நிமிடமே தேவேந்திரன் உடல் முழுவதும் யோனி (பெண் உறுப்பு) உருவம் தோன்றியது. கலங்கிப் போன அவன் முனிவரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தினான். அதனால், முனிவர் அவனுக்குப் பாவ விமோசனமும் அளித்தார்.
"சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக இருக்கும் தருணத்தில் அவர்களைப் பூஜித்தால் நீ உண்மையான நிலையை அடையலாம்’ என்பதுதான் அது. உடனே, தேவேந்திரன் சுசீந்திரம் வந்தான். அங்கே, அத்திரி மகரிஷிக்கும், அவரது தர்மபத்தினியான அகல்யாவுக்கும் (முந்தைய சம்பவ கற்புக்கரசி) மும்மூர்த்திகளும் தரிசனம் தந்த நேரத்தில், தானும் அந்த தரிசனத்தை பெறுவதற்காக முயன்றான். அதையொட்டி, தனது வெள்ளை யானையான ஐராவதத்திடம் தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அது, தேவேந்திரன் உத்தரவுபடி ஒரு பெரிய மலையைப் பிளந்து தண்ணீர் எடுத்து வந்தது. அப்போது அங்கே தோன்றிய ஊற்று நீர் அந்த பகுதிகளில் வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் செழிப்பாக்கியது. அவ்வாறு ஐராவதத்தால் உருவானதுதான், கோட்டாறு என்கிற பழையாறு. சாமித்தோப்பை ஓட்டி இந்த ஆறு ஓடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்.
(தொடரும்...)