சனி, 16 அக்டோபர், 2010

ஞாபக சக்தி அதிகரிக்கும் மாதுளை


மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள் :

* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.

* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.

* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.

* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.

* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.

* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.

* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.

* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.

* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.

* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.

* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.


* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

Share:

0 கருத்துகள்: