ஞாயிறு, 15 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 17


 மேரேஜ் நைட்டி!

மாலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டத் துவங்கியிருந்தது . இயற்கை தீட்டிய பச்சை வண்ணங்களுக்கு மத்தியில் எழுந்திருந்த கட்டிடங்கள் மீது மோதிக் கொண்டு நின்றிருந்த மேகக்கூட்டங்கள்... யூகலிப்டஸ் இலைகளை இறுக்கித் தழுவி, அதன் வாசனையை அள்ளிக் கொண்டு வந்த குளிர்ந்த காற்று... மேற்கு சிவக்காத வானம்... என்று ஊட்டியின் அன்றைய க்ளைமேட் ஆனந்தையும் ஷ்ரவ்யாவையும் உற்சாகம் கொள்ளச் செய்தது. பயணம் தந்த களைப்பை மறந்து அந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர் அவர்கள். அப்போதுதான் ஆனந்துக்கு அந்த ஞாபகம் வந்தது.

"ஷ்ரவ்யா... நம்ம டிரெஸ் எல்லாமே வண்டியோட போய்விட்டதே... இன்னிக்கு நைட்டுக்கு மட்டுமல்ல, இன்னும் ஒரு வாரத்துக்குப் போட்டுக்க டிரெஸ் வேணும் இல்லீயா-?"

"டிரெஸ் இல்லாட்டாலும் நான் அட்ஜெஸ் பண்ணிப்பேன்."

"ம்ம்ம்... மெட்ராஸ் குசும்பு?"

"குசும்பும் கிடையாது, குழம்பும் கிடையாது. உண்மையாத்தான் சொல்றேன்..." என்ற ஷ்ரவ்யா, சற்றே முகத்தை திருப்பிக் கொண்டு ஆனந்துக்குத் தெரியாமல் மெல்லியதாகச் சிரித்து வைத்தாள்.

”சரி, நக்கலா சிரிச்சது எல்லாம் போதும். வா... நல்ல டிரெஸ்ஸா ஆளுக்கு ரெண்டு வாங்கிட்டு வருவோம்.”

“எனக்கு ரெண்டே ரெண்டு டிரெஸ்தானா?”

”ரெண்டு இல்லம்மா... இருபது கூட எடுத்துக்கலாம். முதல்ல எந்திருச்சி வெளியே வா.”

அடுத்த நிமிடமே, ரூமை பூட்டிவிட்டு வெளியேறியிருந்தனர் இருவரும்.

பொட்டானிக்கல் கார்டன் செல்லும் சாலை வழியே ஆனந்தும் ஷ்ரவ்யாவும் ”வாக்கிங்” சென்றபடியே நல்ல துணிக்கடை தென்படுகிறதா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான கடைகள் இல்லை. வேறு வழியில்லாததால் இரண்டு தளங்களில் இயங்கி வந்த ஒரு துணிக் கடைக்குள் புகுந்தனர். மற்ற ஆடைகளைக் காட்டிலும் ஸ்வெட்டர்களையே அதிகமாக வாங்கிக் குவித்து வைத்திருந்தனர். ஜீன்ஸ் பேண்ட், டீ- சர்ட்டைத் தேடினான் ஆனந்த். அவன் எதிர்பார்த்த வெரைட்டிகள் கிடைக்கா விட்டாலும், வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தலா நான்கு ஜீன்ஸ், டீ - சர்ட்களை தனக்கு தேர்வு செய்தான்.

ஷ்ரவ்யாதான் ஆடையை தேர்வு செய்யாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள்.

”என்னாச்சு ஷ்ரவ்யா-? உனக்கு டிரெஸ் செலெக்ட் பண்ணலீயா?”

“எந்த டிரெஸ்ஸுமே குவாலிட்டியா இல்ல. ஆனால், விலை மட்டும் ரெண்டு, மூணு மடங்கு அதிகமா வெச்சியிருக்காங்க.”

“இங்க மட்டுமில்ல, ஊட்டியில எந்த கடையில போயி டிரெஸ் வாங்கினாலும் இப்படித்தான் விலை இருக்கும். சென்னை சில்க்ஸ், போத்தீஸ் ரேஞ்சுக்கு இங்கே எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதால் சுடிதார் செக்சன் பக்கம் போனாள் ஷ்ரவ்யா.

“ஷ்ரவ்யா..” திடீரென்று அழைத்தான் ஆனந்த்.

“மெரூன் கலர் சேலை, எல்லோ கலர் ஜாக்கெட், தலைநிறைய மல்லிகைப்பூ வெச்சிட்டு வந்தா நீ தேவதை மாதிரி இருப்ப. அந்த அழகான கோலத்துல உன்னப் பாக்கணும்னு ஆசைப்படுறேன். நீ விருப்பப்பட்டா, அந்தக் கலர் சேலையை செலெக்ட் பண்ணேன்.”

“செலெக்ட் பண்ணுறதுல பிரச்னை இல்ல ஆனந்த். ஆனா, ஜாக்கெட்டை எங்கேப் போய் தைக்கக் குடுக்குறது?”

“ஆமால்ல... நான் மறந்துட்டேன். பரவாயில்லை... உனக்குப் பிடிச்ச டிரெஸ்ஸையே செலெக்ட் பண்ணிக்கோ...” என்ற ஆனந்த், தான் தேர்வு செய்த ஆடைகளை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றான். சற்றுநேரத்தில் ரெடிமேட் சுடிதார் இரண்டும், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் ஆகியவை தலா இரண்டும், சில உள்ளாடைகளும் வாங்கிக் கொண்டாள். கூடவே, வெட்டிங் நைட்டி இரண்டும் வாங்கி இருந்தாள். அதுவும் சிவப்பு நிறத்தில்!

பில் போடும்போதுதான் அந்த நைட்டிகளைப் பார்த்தான் ஆனந்த். மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தன.

“இவ, இதை எதுக்கு வாங்கியிருக்கா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், அதுபற்றிக் கேட்க முடியாமல் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்தான். பில் தொகை 10 ஆயிரம் ரூபாயை நெருங்கியிருந்தது.

ஆடைகளை வாங்கிக் கொண்டு கடையைவிட்டு வெளியேறிய பிறகுதான் ஷ்ரவ்யாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் ஆனந்த்.

“ஷ்ரவ்யா... நீ ரெண்டு நைட்டி வாங்கி இருந்தீயே... அது ரொம்பவும் அழகா இருந்துச்சு.”

“ஆமாங்க... அதனாலத்தான் நானும் அதை வாங்கினேன். அதோட பேரு, மேரேஜ் நைட்டி.”

“சாதாரணமா எல்லோரும் அணியக்கூடிய நைட்டி கூட அழகா இருக்குமே.வேற எதுக்கு இந்த மேரேஜ் நைட்டி?”

“என்ன ஆனந்த்... ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்குறீங்க. இன்னிக்கு காலையிலதானே நமக்கு கோயில்ல கல்யாணம் நடந்துச்சு. அதனாலதான் இந்த நைட்டி!”

ஷ்ரவ்யா இப்படியொரு பதிலை சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனந்த். மவுனமாகவே அவளுடன் நடந்தான்.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 16

 காதல்
பரிமாற்றம்!

ன்று குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. தனது குடும்பத்தினருடன் அமுதாவையும் அங்கே அழைத்து வந்திருந்த அசோக், அவளிடம் எப்படியாவது தனது காதலை நேரடியாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான். ஏற்கனவே தொலைபேசி வழியாக அமுதாவிடம் காதலை மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும், மணிக்கணக்கில் அவளிடம் அரட்டையடித்து இருந்தாலும், ஐ லவ் யூன்னு சொல்வதற்கு மட்டும் அவனது நாக்கு ஏனோ தடுமாறியது.

ஐந்தருவிக்கு எல்லோரும் குளிக்கச் சென்ற இடத்தில், அமுதா மட்டும் குளிக்கச் செல்லாமல் திரும்பிவர, தனி ஆளாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்ற அசோக் அவளைப் பார்த்து விட்டான்.

அசோக்கிடம் நிறைய பேச வேண்டும் என்பது அமுதாவின் எதிர்பார்ப்பும்தான் என்பதால்தான், அவள் உல்லாசக் குளியலைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அசோக்கைத் தேடி வந்தாள்.

இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.

"அசோக்... நீ, இங்கே என்ன செஞ்சுட்டு இருக்க?"

"மெயின் அருவியில் குளிச்சது போதும், குற்றால அழகை ரசிக்கலாமேன்னு வந்தேன்."

"அட, நான்கூட அதுக்காகாகத்தான் வந்தேன். நமக்குள்ள என்ன ஒற்றுமை பாத்தாயா-?"

அமுதாவின் பதில் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறது? என்பது அசோக்குக்குப் புரிந்து விட்டது.

இதுதான் ஐ லவ் யூ சொல்ல சரியான நேரம். அவளும் இதைத்தான் எதிர்பார்க்குறாங்குறது கன்பார்மா தெரியுது. கோட்டை விட்டுடாதடா அசோக்கு... என்று தனக்குள்ளேயே சொல்லி உசுப்பேற்றிக் கொண்டான் அசோக்.

"அசோக்... ரொம்பவும் டீப்பா எதையோ நீ யோசிக்கற மாதிரி தெரியுதே..."

"கொஞ்ச தூரம் காலாற நடந்து போயிட்டு வரலாம்னு தோணுது. அத, உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல."

"இதுல என்னடா இருக்கு. நான் உன்னோட அத்தைப் பொண்ணு மட்டுமல்ல, முறைப் பொண்ணும்கூடத்தானே?"

அமுதாவின் இந்தப் பதில் அசோக்கிற்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கண்ணா... ரெண்டு லட்டு திங்க ஆசையான்னு கேட்கற மாதிரி இருக்குதே... என்று, காதல் பரவசத்தில் தத்தளித்தான் அசோக்.

தொடர்ந்து, இருவரும் குற்றால அழகை ரசித்தபடி குற்றால வீதியில் நடந்து சென்றனர்.

சிகப்பு நிறச் சுடிதாரில் வந்திருந்த அமுதா, துப்பட்டாவை எப்படி அணிய வேண்டுமோ... அதைச் சரியாக அணிந்திருந்தாள். துளியும் விரசம் இல்லாத அவர்களுக்கு இடையேயான பேச்சுக்கள், அவர்களது காதல் புனிதமானதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.

இவர்களது ஆத்மார்த்த காதல் குற்றால மலை அருவிகளை முத்தமிட்டு வந்த தென்றல் காற்றுக்குதான் பிடிக்கவில்லை. திடீரென்று வேகமாக வந்த அந்தக் காற்று, அமுதாவின் துப்பட்டாவை பறந்தோடச் செய்தது.

அமுதா மட்டுமல்ல, அசோக்கும் இதை எதிர்பார்க்கவில்லை. காற்று அடித்த வேகத்தில் வேகமாக பறந்து சென்ற துப்பட்டாவை நோக்கி வேகமாக ஓடினர், இருவரும்!

ஒருவழியாக அதைப் பிடித்துவிட்ட அசோக், எதையோ சாதித்து விட்டதைப் போல உணர்ந்தான்.

துப்பட்டாவை அவன் எடுத்துக் கொண்டு திரும்ப... அவனைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடிவந்த அமுதா, மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி வந்து நின்றாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அசோக். இந்தக் காத்து இப்படிப் பண்ணும்னு நான் எதிர்பார்க்கல..." என்றாள் அமுதா.

"நானும் எதிர்பார்க்கல, ஆனா... நல்லாத்தான் இருக்குது... என்று சொன்ன அசோக், துப்பட்டா இல்லாத அவளது தேகத்தை திடீரென்று பார்த்தான்.

அமுதா என்ன நினைத்தாளோ, சட்டென்று அசோக்கிடம் இருந்து வாங்கிய துப்பட்டாவை தனது மாராப்பில் வேகமாகப் போட்டுக் கொண்டாள்.

"அமுதா... நான் நல்லாத்தான் இருக்குதுன்னு சொல்ல வந்தது உன்னப் பத்தி இல்ல... காத்துல பறந்துபோன ஹீரோயினோட துப்பட்டாவை தேடி ஓடும் ஹீரோக்களை படத்தில்தான் பார்த்திருக்கேன். நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமான்னு அப்போ தோணும். அதே சம்பவம் இப்போ நிஜமாகவே நடக்குறது ஆச்சரியமாகத்தான் இருக்கு..." என்று பேச்சை மாற்றினான்.

அவன் பொய் சொல்வது அமுதாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும், அவனது பொய்யை ரசித்தாள்.

அப்போதுதான் திடீரென்று குனிந்து எதையோ எடுத்தாள் அமுதா. துப்பட்டா ரேஸில் ஜெயித்துவிட்டு திரும்பிய அசோக், தனது மொபைலைத் தவறவிட்டிருந்தான். அதைத்தான் அவள் எடுத்தாள்.

சட்டென்று அமுதா குனிந்துவிட்டு திரும்பியபோதுதான் அந்தக் காட்சியை பட்டென்று பார்த்துவிட்டான் அசோக். அமுதாவின் துப்பட்டா திடீரென்று சரிந்து விலகியதில், அவளது மார்பிற்கு சற்று மேலே தனியாய் தவித்திருந்த அந்த அழகான மச்சத்தை பார்த்து விட்டான்.

அமுதாவும் அதைக் கவனித்து விட்டாள். உடனடியாகத் தனது மாராப்பை சரிசெய்தாள். ஆனால், மச்சத்தைப் பற்றி அப்போதைக்கு அவன் எதுவும் கேட்கவில்லை.

சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு அசோக்கே வாய் திறந்தான்.

"அமுதா... நீ ரொம்ப அழகுன்னா, உன்னோட மச்சம் இன்னும் அழகா இருக்கு."

"என்னது... மச்சமா? அப்படி எதுவும் என்கிட்ட இல்லீயே..."

"மச்சம் இல்லன்னு உன் வாய்தான் சொல்லுது. ஆனா, இருக்குன்னு உன்னோட ரெண்டு கண்ணும் சொல்லுதே..."

"வாயாலத்தான் உண்மையைச் சொல்ல முடியும். கண்ணால சொல்ல முடியாது."

"யார் சொன்னது? காதல்ல கண்களுக்குத்தான் முதலிடம். முதல்ல கண்கள் பேசிக்கொண்டால்தான் பிறகு வாயால் பேசிக்கொள்ள முடியும்."

"காதலா? யாரோட காதல சொல்ற?"

"நம்ம காதலைத்தான்!"

இப்படிச் சொன்ன பிறகுதான், எதையும் அறியாமல் காதலை வெளிப்படுத்தி விட்டதை உணர்ந்தான் அசோக். அமுதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தாலும், காதலுக்கான சம்மதத்தைச் சொல்லவில்லை. அதேநேரம், அசோக் தன்னை உறுதியாகக் காதலிக்கிறான் என்கிற பரவசத்தில் தன்னை மறந்தாள். ஒருகணம் கண்கள் மூடி அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தாள்.

திடீரென்று யாரோ தன்னைப் பிடித்து உலுக்க, கண் விழித்தாள் அமுதா. குணசீலன்தான் அவளை உலுக்கினான்.

"ரொம்ப நேரமாகக் கண்ண மூடிட்டு இருந்த. சரி, உறங்கறேன்னு நினைச்சேன். ஆனா, நீயாவே சிரிக்குற. அதனாலதான், உனக்கு என்ன ஆச்சுன்னு எழுப்பினேன்."

குணசீலன் விளக்கம் தந்த பிறகுதான், அசோக் தனது கனவு கலந்த நினைவில் வந்துவிட்டு போனதை உணர்ந்தாள் அமுதா.

அதேநேரம், அமுதாவும் குணசீலனும் பயணித்த பேருந்து திருப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 15


ஊட்டியில் அறை எண் 107!

கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்த வழியில், கார் டிரைவர் ஏமாற்றிவிட்டு உடமைகளோடு ஓடிவிட... ஆபத்பாந்தவனாக வந்து உதவிய அரசு பேருந்தில் ஏறி, ஒருவழியாக ஊட்டிக்கு வந்து இறங்கினார்கள்... ஆனந்தும், ஷ்ரவ்யாவும்.

ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தால் வேகமாக முகத்தில் வந்து மோதுமே... அப்படியொரு குளிர்ச்சி ஊட்டியில்! ஊரே ஏ.சி. குளுமையில் ஜில்லென்றிருந்தது. கடுகடுக்க வைக்கும் மதிய வெயிலில் சென்னை தி.நகர் வீதிகளில் அலைந்து விட்டு, சரவணா ஸ்டோர் கடை முன்பு வந்தால்... அங்கிருந்து வந்து மோதும் ஏ.சி. காற்றின் குளுமையை அனுபவிப்பதே தனி சுகம். இந்த சுகம், இங்கே ஊட்டி முழுக்க நிரம்பியிருந்தது.

"ஆனந்த்... ஊட்டியில இதே க்ளைமேட் எப்போதும் இருக்குமா?"

"இப்போ சீஸன் நேரம். அதனால, இப்படி ஜில்லுன்னு இருக்கு. மற்ற நேரங்கள்ல இதைவிட அதிகமாக் குளிரும். முதன் தடவையா இங்கே வந்திருக்கல்ல, அதான் உனக்கு ஊட்டி ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனா, இங்கே உள்ளவங்க கிட்ட கேளு; இங்கே வாழ்றதே வேஸ்ட்டுன்னு சொல்வாங்க."

"அவங்க ஏன் அப்படிச் சொல்லணும்? வாழ்ந்தால், ஊட்டி மாதிரியான இடத்துல வாழணும்னு நாமெல்லாம் சொல்றோம். ஆனா, ஊட்டியில உள்ளவங்களுக்கு, அங்குள்ள வாழ்க்கை பிடிக்கலன்னு எப்படி சொல்றீங்க?"

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், ஆனந்துக்கு லேசா எரிச்சலாக இருந்தது.

"இப்போ நாம இங்கே வந்தது ஊட்டியில மக்கள் வாழ முடியுமா, இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணுறதுக்கு இல்ல. அத முதல்ல புரிஞ்சுக்க."

"ஏன், நீங்க டென்ஷன் ஆகுறீங்க? நீங்கதானே இங்குள்ளவங்களுக்கு இங்கே வாழ்றது பிடிக்கலன்னு சொன்னீங்க. அது ஏன்னு தெரிஞ்சுக்கற ஆசையிலதான் அப்படிக் கேட்டேன். மத்தபடி, அதுபத்தி உங்கக்கிட்ட கேட்டு எக்ஸாமா எழுத போறேன்...?" ஷ்ரவ்யாவிடம் இருந்து ஊட்டிக் குளிரையும் தாண்டி சூடாகவே வந்தது பதில்.

ஆனந்துக்கும் அது புரிந்துவிட்டது.

ஆனாலும், ஷ்ரவ்யாவுக்கு பதில் சொல்ல விரும்பாமல், சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டான். தனக்கு அருகில் வேகமாக வந்த ஆட்டோவை மறித்தான்.

"லாட்ஜ்க்குப் போகணும். வர முடியுமா?"

"எந்த லாட்ஜ் ஸார்?"

"ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ்."

"சரி, ஆட்டோவுல வந்து ஏறுங்க."

ஸ்ரவ்யாவைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. சட்டென்று பதற்றமாகிவிட்டது, ஆனந்துக்கு.

'நாம கோபமா பேசப்போய், இவ வேற எங்கேயும் போய்விட்டாளா?' என்று, அவசரம் அவசரமாகத் தேடினான்.

"ஸார்... யாரைத் தேடுறீங்க?" ஆட்டோ டிரைவர் கேட்டான்.

"என்கூட ஒரு யங் லேடி வந்தாங்க. என் பக்கத்துலதான் நின்னாங்க. திடீர்னு காணும்."

"பதற்றப்படாதீங்க ஸார். இங்கேதான் எங்கேயாவது நிப்பாங்க. டென்ஷன் இல்லாம தேடிப் பாருங்க. நான் வேணும்னாலும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்."

ஆட்டோ டிரைவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, ஆனந்துக்கு. அதனால், ஆட்டோ டிரைவரே இறங்கி வந்து, தன் பங்குக்கு அவளைத் தேட ஆரம்பித்தான். சில அடிகள் எடுத்து வைத்தவன், ஆனந்த் அருகில் வேகமாக ஓடி வந்தான்.

"ஸார்... உங்க ஒய்ப் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே இல்லீயே..."

"என்னது... ஒய்ப்பா?"

ஆனந்த் இப்படிக் கேட்டதும், 'ஓ... அப்படீன்னா நீ அந்தப் பொண்ணை தள்ளிட்டுதான் வந்திருக்கீயா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான், ஆட்டோ டிரைவர்.

அப்போதுதான், ஆனந்த் புத்தியில் பலமாக உறைத்தது.

"பதற்றத்துல நீ என்ன சொன்னன்னு புரியல. அவ என்னோட மனைவிதான். ரெட் கலர் சாரி கட்டியிருப்பா."

"சரி, நானும் தேடிப் பார்க்கிறேன்..."

ஆனந்திடம் சொல்லிவிட்டு, ஷ்ரவ்யாவை தேட ஆரம்பித்தான் ஆட்டோ டிரைவர். 5 நிமிடம் ஆகிவிட்டது. ஆனால், அவள் வரவேயில்லை. அங்கே இங்கே என்று தேடி... ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் நின்றான் ஆனந்த்.

"ஆனந்த்... திடீர்னு எங்கேப் போனீங்க?"

யாரே தன்னை அழைக்க... சட்டென்று திரும்பிப் பார்த்தான். அங்கே ஷ்ரவ்யா நின்று கொண்டிருந்தாள்.

சத்தம் போட்டு அவளை திட்ட வேண்டும் என்பது போல் இருந்தது, ஆனந்துக்கு. வார்த்தையை பலமாக வரவழைக்க வாயைத் திறந்தான். அதற்குள் ஷ்ரவ்யா முந்திக்கொண்டாள்.

"நீங்க எங்கேப் போனீங்க? இந்த கேரட் செடியைப் பாக்குறதுக்கு அழகா இருந்துச்சு. வாங்கிட்டு வந்திடலாம்னு, உடனே வாங்கிட்டு திரும்பினா, உங்கள ஆளையேக் காணோம்."

கையில் நான்கைந்து கேரட் செடிகளை வைத்துக் கொண்டு அப்படிக் கேட்டாள்.

ஷ்ரவ்யா சொன்ன பிறகுதான், அவளைக் காணவில்லை என்று தானும், தன்னைக் காணவில்லை என்று அவளும் அலைந்து திரிந்து தேடியது ஆனந்துக்கு தெரிய வந்தது.

அந்தநேரத்தில் ஆட்டோ டிரைவரும் அங்கு வந்து சேர்ந்தான்.

"ஸார்... அவங்க கிடைச்சிட்டாங்களா?"

"ஆமா, அவங்க வந்துட்டாங்க. முதல்ல ஆட்டோவை எடுங்க."

ஆனந்தும், ஷ்ரவ்யாவும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் லேக் ரோட்டில் உள்ள பெரிய லாட்ஜ் ஒன்று முன்பு போய் நின்றது ஆட்டோ.

"ஸார்... நீங்க கேட்டது மாதிரியே இது பெரிய லாட்ஜ். சிங்கிள் பெட் உள்ள ரூமின் வாடகையே ஒருநாளைக்கு குறைஞ்சது 3 ஆயிரம் இருக்கும். புடிச்சியிருந்தா இங்கே தங்குங்க. இல்லாட்டி, எதிரே இருக்குது பாருங்க, ஒரு லாட்ஜ். சிம்பிளா இருந்தாலும் நீட்டா இருக்கும். அங்கே ஒருநாள் வாடகை ஆயிரம் ரூபாய்தான்."

"சரி, எந்த லாட்ஜ்ல தங்கனும்னு நான் பாத்துக்கறேன். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆச்சு?"

"200 ரூபா ஸார்."

"என்னங்க சொல்றீங்க, நாலு கிலோமீட்டர் தூரம் வர்றதுக்கு 200 ரூபாயா? எங்க மெட்ராஸ்ல கூட இப்படிக் கேட்க மாட்டாங்க..."

"ஸார், ஆட்டோவுக்கு 100 ரூபா. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுனதுக்கு 100 ரூபா."

அதுக்கு மேல் ஆட்டோ டிரைவர் பேசாமல் இருக்க, அவன் கேட்ட 200 ரூபாயைக் கொடுத்து விட்டு, ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்த அந்த ஹோட்டலுடன் இணைந்த லாட்ஜ்க்குள் ஸ்ரவ்யாவுடன் நுழைந்தான் ஆனந்த்.

அழகான வரவேற்பு அறை. மஞ்சள் நிற பல்புகளின் ஒளியில் ரம்மியமாய் இருந்தது, இந்த இடம்.

டெலிபோன் ரிசீவரை காதில் வைத்துக் கொண்டு, பேச்சு யாருக்கும் அதிகம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், ஆனந்தையும், ஷ்ரவ்யாவையும் பார்த்ததும் அழகான ஸ்மைலை சின்னதாக உதிர்த்துவிட்டு, போன் இணைப்பைத் துண்டித்தாள்.

"வெல்கம் அவர் ஹோட்டல் ஸார். உங்களுக்கு எந்த மாதிரியான ரூம் வேணும் ஸார். முதல்ல நீங்க செலெக்ட் பண்ணுன ரூம் பிடிக்கலன்னா, உடனே வேற ரூமுக்கு மாறிக்கலாம் ஸார். இந்த டேரிப்பைப் பார்த்து உங்களுக்கு புடிச்ச ரூமை செலெக்ட் பண்ணலாம் ஸார்."

ஸார்... ஸார்... என்ற, அந்த அழகான ரிசப்ஸனிஸ்ட் இளம்பெண்ணின் பேச்சு, வாழைப்பழத்தை தேனில் குலைத்துத் தருவது போல் இருந்தது.

கண்களால் ஷ்ரவ்யாவைப் பார்த்த ஆனந்த், சிங்கிள் பெட் ரூமையே செலெக்ட் செய்தான்.

"ஸார்... நீங்க எங்க லாட்ஜ்ல தங்கணும்னா சில கன்டிஷன்ஸ் இருக்குது ஸார். கண்டிப்பா நீங்க உங்களோட ஐடென்டி கார்டின் ஜெராக்ஸ் தரணும். உங்களோட ஒரிஜினல் முகவரியையும் தரணும். அட்வான்ஸா 5 ஆயிரம் ரூபாய் கட்டணும்."

"ஓ யஸ்..." என்ற ஆனந்த், பணத்தோடு, தான் பணிபுரியும் நாளிதழின் ஐடென்டி கார்டையும் கொடுத்தான்.

"ஒரு ஜெராக்ஸ் மட்டும் எடுத்துட்டு ஐடென்டி கார்டை தந்திடுறேன் ஸார். நீங்க இங்கிருந்து கிளம்புற வரைக்கும் இதை நாங்க வெச்சிருப்போம். நீங்க ரூமை வெக்கேட் பண்ணும்போது திரும்பித் தந்திடுவோம்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தின் ஐடென்டி கார்டை அவனிடம் திருப்பித் தந்தாள்.

107 என்ற அறையின் சாவியை ஆனந்திடம் தந்த அந்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... இந்த நோட்டில் உங்களோட ஒரிஜினல் அட்ரஸை எழுதிடுங்க" என்றாள்.

உண்மையை மறைக்க விரும்பாத ஆனந்த், தான் தங்கியிருந்த மேன்ஸன் முகவரியை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

முகவரியைப் பார்த்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... நீங்க தங்கியிருக்கிற மேன்ஸன் அட்ரஸை தந்திருக்கீங்க. அப்படீன்னா, உங்ககூட வந்திருக்கிற இவங்க யாரு-?"

ரிசப்ஸனிஸ்ட் இப்படியெல்லாம் கேட்பாள் என்று யோசிக்கவில்லை ஆனந்த். அப்படி யோசித்திருந்தால், கண்டிப்பாக தவறான முகவரியைத்தான் எழுதியிருப்பான். தான், பேச்சுலராக தங்கி பணிபுரியும் மேன்ஸன் முகவரியை எழுதியிருக்க மாட்டான். வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை ஆனந்த்.

"மேடம். இவங்க என்னோட ஒய்ப்தான். போன வாரம்தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சு. எங்களோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் இருக்கு. இன்னும் இவங்கள நான் மெட்ராஸ்க்கு கூட்டிட்டுப் போகல. இனிதான், நாங்க மெட்ராஸ்ல புதுவீட்டுல குடியேறனும். இன்னும் நீங்க நம்பலன்னா, அவங்க கழுத்துல பாருங்க. நான் கட்டின மஞ்சள் கயிறோட ஈரம்கூட இன்னும் சரியாக் காயல. அப்படீன்னா, நாங்க இங்க எதுக்கு வந்திருக்கோம்னு..."

ஆனந்தை அதற்கு மேல் பேசவிடவில்லை அந்த ரிசப்ஸனிஸ்ட்.

"புரியுது ஸார்" என்றவள், ஷ்ரவ்யா கழுத்தைப் பார்த்தாள். சில மணி நேரத்திற்கு முன்பு கட்டிய அந்த மஞ்சள் திருமாங்கல்யம் ஈரமாகவே இருந்தது.

"ஸாரி ஸார். அப்படியொரு கேள்வி கேட்டதுக்கு தப்பா நினைக்காதீங்க. 'தவறானவங்க' எங்க லாட்ஜ்ல தங்கக்கூடாதுங்றது எங்க லாட்ஜோட ரூல்ஸ். அதானாலதான், அப்படிக் கேட்டேன்."

"பரவாயில்லை மேடம். நீங்க உங்களோட டியூட்டியைத்தான் செஞ்சிருக்கீங்க..." என்ற ஆனந்த், மூன்றாவது மாடியில் இருந்த அறை எண் 107க்கான சாவியை வாங்கிக்கொண்டு, லாட்ஜ் படிக்கட்டுகளில் வேகமாக ஏற ஆரம்பித்தான். பயத்தோடு அவனைப் பின்தொடர்ந்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


14. மச்சத்தால் வந்த பிரச்னை!

ஸ் பயணம் அமுதாவுக்கு வெறுப்பாக இருந்தது. ஊட்டி எப்போ வரும்? எப்போது பஸ்ஸில் இருந்து கீழே இறங்குவோம் என்றிருந்தது, அவளுக்கு! சலித்துக் கொண்டு குணசீலனைப் பார்த்தாள். அவன் லேப் - டாப்பில் மும்முரமாக மூழ்கியிருந்தான்.

"என்னங்க... என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

குணசீலனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அமுதாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.

"என்னங்க... நான் கேட்டுட்டே இருக்கேன்ல. பதில் சொல்லாமலயே இருருந்தா என்ன அர்த்தம்?"

"நீ மறுபடியும் கூப்பிடனும்னு அர்த்தம்."

"ஏன், நான் மறுபடியும் கூப்பிடணும்?"

"நீ, என்னங்கன்னு சொல்றீயே... அதுல அப்படியொரு கிக் இருக்குது தெரியுமா? அந்த கிக்குக்கு நான் உன்கிட்ட அடிமைன்னுகூட சொல்லலாம்."

"என்னங்கன்னு சொல்றதுல அப்படியென்ன கிக் இருக்கு? நீங்க சொன்னா, நானும் தெரிஞ்சுக்குவேன்ல?"

"சரி, மறுபடியும் என்னங்கன்னு என்ன கூப்பிடேன்."

"எத்தனை தடவைதான் கூப்பிடுறது..."

"இன்னும் ஒரேயொரு தடவை மட்டும்..."

"சரி..." என்று தலையாட்டிய அமுதாவை சட்டென்று மிக அருகில் வந்து பார்த்தான் குணசீலன். திடீரென வெட்கப்பட்டு சிலிர்த்தாள் அவள். பேச்சு வராமல் திணறினாள்.

"என்ன ஆச்சு அமுதா?"

"நீங்க கிட்ட வந்தீங்கள்ல... அதான் ஒருமாதிரி ஆயிடுச்சு..."

"என்னங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கிக் இருக்குன்னு கேட்டல்ல, அதுவும் இப்படித்தான் இருக்கும்" என்ற குணசீலன், தான் திறந்து வைத்திருந்த லேப் டாப்பை அவள் பக்கம் திருப்பிக் காட்டினான்.

அந்த லேப் டாப்பில், ஏதோ ஒரு வெப்சைட்டில் இடுகையிடப்பட்டு இருந்த ஒரு அழகான இளம்பெண்ணின் படம் பளிச்சென்று தெரிந்தது. சிவப்பு நிற சேலையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.

"இப்போ, இந்த படத்தை ஏன் எங்கிட்ட காட்டுறீங்க?"

அமுதா அப்பாவியாய்க் கேட்டாள்.

"இந்தப் படத்தை கொஞ்சம் கூர்ந்துதான் பாரேன்..."

குணசீலன், தன்னை வைத்து எதையோ பரிசோதிக்க முயற்சிக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் சொன்னபடி அந்தப் பெண்ணின் புகைப்படத்தை இன்னும் சற்றுக் கூர்மையாகப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதி சேலை கொஞ்சம் விலகி, அவளது தொப்புள் பகுதி வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவளுக்குப் பின்னால், ஒருவன் இருந்து கொண்டு அவளை அணைத்துக் கொண்டிருப்பதும் பளிச்சிட்டது.

அதைப் பார்த்த மாத்திரத்தில் வெடுக்கென்று திரும்பிவிட்டாள் அமுதா.

"ஏன் அமுதா... இந்தப் படத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுட்டியாக்கும்?"

அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. பதிலுக்கு, அவளது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத்துடிப்பும் கூடுதலாக எகிறியிருந்தது.

"அப்போ, இந்த தகவல் உண்மைதானா?"

தனக்குத்தானே கேட்டுக்கொண்ட குணசீலன், லேப் டாப்பை ஆப் செய்து, அதைப் பத்திரமாகப் பேக்கிற்குள் நுழைத்து வைத்தான்.

சிறிதுநேரம் வரை அமுதா பேசாமலேயே இருந்தாள். குணசீலன்தான், அவளது திடீர் மாற்றங்களை புரிந்து கொண்டு பேசினான்.

"கிக் எப்படி இருக்கும்ன கேட்டல்ல? இப்போ நீ சந்திச்சதும் ஒரு கிக்தான். கிக், எல்லா மனுஷங்களுக்கும் பிடிக்கும். சாப்ட்வேர் என்ஜினீயரான என்னை எந்தப் பெண்ணும், இதுவரைக்கும் என்னங்கன்னு கூப்பிட்டது கிடையாது. ஹாய், டியர், மச்சின்னு பலபலப் பெயர்கள்ல கூப்பிடுவாங்க. ஆனா, நீ முதல் முறையாக என்னங்கன்னு சொன்னதுல எனக்கு கெடைச்ச கிக், வேற எதுலேயும் கிடைக்கல. அதனாலதான், நீ என்னங்கன்னு சொல்றத திரும்பத் திரும்பக் கேட்டு ரசிச்சேன்."

"அது ஓ.கே., லேப் டாப்ல உள்ள ஒரு பொண்ணு படத்தை என்கிட்ட ஏன் காட்டுனீங்க?"

"இப்போதான் நெட்ல ஒரு தகவல் படிச்சேன். சிகப்பு கலர்ல டிரெஸ் பண்ணுன பொண்ணுங்களைப் பாத்தா, ஆண்களுக்கு உடனே காதல் உணர்வு, அதாவது கிக் வரும்னு அதுல சொல்லியிருந்தாங்க. அது உண்மையா, இல்லையான்னு உன்ன வெச்சு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணினேன். அவ்வளவுதான்."

"டெஸ்ட் எல்லாம் இருக்கட்டும். சிகப்பு கலர் டிரஸ்ஸை ஒரு பெண் போட்டுக்கொண்டு வந்தால், அவளைப் பார்க்குற ஆணுக்கு கிக் வரும்ன்னு எப்படி உறுதியாச் சொல்ல முடியும்?"

அமுதா இப்படிக் கேட்டதும் வெட்கம் கலந்த சிரிப்பை வெளிப்படுத்தினான் குணசீலன்.

"ஏன்... நான் கேட்குற கேள்வி, அடுத்தவங்க சிரிக்கிற அளவுக்கா இருக்குது?"

திடீர்ப் பொய்க் கோபம் கொண்ட அமுதாவைச் சமாதானப்படுத்தினான் குணசீலன்.

" இப்போ நான் ஏன் சிரிச்சேன்னு கொஞ்சநேரம் கழிச்சுச் சொல்றேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு, ஆமா, இல்லன்னு மட்டும் பதில் சொன்னப் போதும்."

"கேள்வி கேட்பது யாரா இருந்தாலும் அவர்களுக்கு டாண்... டாண்னு பதில் சொல்றதுதான் என்னோட வழக்கம். நீங்க தாராளமா கேட்கலாம்."

"லேப் டாப் படத்தைப் பார்த்ததும் உனக்குள்ள என்னமோ பண்ணிச்சுல்ல."

"ஆமாம். ஆனா, அது என்னன்னு தெரியல."

"அதுக்குப் பேருதான் கிக்..."

குணசீலன் இப்படிச் சொன்னதும், அவன் மீது பொய்க் கோபம் கொண்டு செல்லமாக கை ஓங்கி அதட்டினாள் அமுதா. தன்னை அவள் செல்லமாக அடிக்கத்தான் போகிறாள் என்று கணக்குப்போட்ட குணசீலன், அவள் கைகளைத் தடுக்கும் முயற்சியில், எதிர்பாராதவிதமாக அவளது சேலையின் முந்தானையை வேகமாகப் பற்றி இழுத்து விட்டான். அவன் இழுத்த வேகத்தில் சட்டென்று அவளது மேலாடை விலகியது.

அமுதாவின் மார்பகத்தை ஒட்டி, யாருக்கும் வெளியில் தெரியாத வகையில் பாதுகாப்பாக பதுங்கியிருந்த கறுப்பு மச்சம் முதன் முதலாக மீசை முளைத்த ஒரு ஆண் மகனுக்கு தெரிந்தது.

குணசீலன், தனது அந்த மச்சத்தைப் பார்த்து விட்டான் என்றதும் அதிர்ச்சியானாள் அமுதா. விலகிய முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, தலை குனிந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"நான் அவளது கணவன்தானே... நான் அதைப் பார்த்தது எப்படி தவறாகும்?" என்று தனக்குத்தானே அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டான் குணசீலன். அந்த மச்சத்தைப் பார்க்கும் தகுதி அசோக்கிற்கு மட்டும்தான் இருக்கிறது என்று அமுதா செய்த சத்தியம் இவனுக்கு எப்படித் தெரியும்?

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


13. மலையேற்றத்தில் ஏமாற்றம்

குன்னூருக்கு முன்னதாக அமைந்திருந்தது அந்த அழகான இடம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கிவிட்டாலே எல்லாமே அழகுதான் என்றாலும், போகப்போக அழகு இன்னும் மெருகேறிக்கொண்டே போகும். அப்படி அழகு மெருகேறி இருந்த இடம்தான் அது.

"ஆனந்த் இது எந்த இடம்? நாம மட்டும்தான் இங்கே இருக்கோம். இப்படி தனியா இருக்குறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லையே..."

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மெயின் ரோட்டில், வாடகைக்கு அமர்த்தி வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் காட்டுக்குள் சிறிது தூரத்திற்குத் தன்னை தனியாக அழைத்து வந்ததால் அப்படிக் கேட்டாள் ஷ்ரவ்யா.

"தனியா கூட்டிட்டு வந்து ஏதாவது செய்திடுவேன்னு பயப்படுறீயா?"

"ச்ச்சீ... அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நம்ம காமெடி நடிகர் வடிவேலுக்கு எப்படி பிஞ்சி மூஞ்சோ, அது மாதிரி உங்களுக்கு அம்மாஞ்சி மூஞ்சி. நிச்சயமாக நீங்க அப்படியொரு காரியத்துல இறங்க மாட்டீங்க."

"எப்படி உறுதியா சொல்லுற?"

"எல்லாம் ஒரு கெஸ்ஸிங்தான்!"

"அப்படீன்னா... உன் கணக்கு தவறாப் போகலாம் இல்லீயா?"

"ஏன் நெகட்டீவா திங் பண்ணச் சொல்றீங்க? எல்லாம் நல்லதா நடக்கும்னு நினைச்சா, நல்லதாவே நடக்கப் போகுது. அதை விட்டுட்டு, ஏன் தப்பு தப்பா நாமளே கற்பனை பண்ணிக்கனும்?" என்ற ஷ்ரவ்யா, தான் கொண்டு வந்த பேக்கைத் திறந்தாள்.

அவள் பேக்கின் ஜிப்பை திறந்த மாத்திரத்தில் அப்படியொரு சுவையான மணம் கமகமவென்று பரவியது.

"ஷ்ரவ்யா... அது என்ன பழம்? இவ்ளோ வாசனையா இருக்கு? எங்கே வாங்கின?"

"நாம கார் நிறுத்துன இடத்துக்குப் பக்கத்துல ரோட்டோரமா ஒரு அம்மா பலாப்பழத்தை விற்றுட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட வாங்கினதுதான். இது மலை உச்சியில் விளைந்த பலாப் பழமாம். அதனால்தான் இப்படியொரு வாசனை..." என்றவள், பலாப் பழத்தின் விதைகளை மட்டும் கீழேப் போட்டுவிட்டு பழத்தை மட்டும் ருசித்துக் கொண்டிருந்தாள்.

"ஷ்ரவ்யா... நீ மட்டும் பழத்தை சாப்பிட்டுட்டு இருக்கீயே... எனக்கும் தரக்கூடாதா?"

"கண்டிப்பா தர மாட்டேன்."

"ஏன்... ஏதாவது கோபமா?"

"இப்போ டைம் என்ன ஆச்சு?"

ஷ்ரவ்யா அப்படிக் கேட்ட பிறகுதான் தனது வலது கையில் கிடந்த வாட்சை திருப்பிப் பார்த்தான். மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

"ஆஹா... மணி மூணு ஆகப் போகுதா? நாம மதியம் சாப்பிடவே இல்லையே..." என்ற ஆனந்த், அவசரம் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான். வந்த வழியில் சிறிது தூரம் வந்த பிறகுதான், விதைகள் நீக்கிய 5 பலாச்சுளைகளை ஆனந்திடம் நீட்டினாள் ஷ்ரவ்யா.

"நீதான் எனக்கு தர மாட்டேன்னு சொன்னீயே... வேறு எதற்கு அதை என்கிட்ட தர்ற?"

"பொய்க் கோபம் எல்லாம் வேண்டாம். பேசாமச் சாப்பிடுங்க..."என்றவள், அந்த பலாச்சுளைகளை அவனது கையில் திணித்தாள். அதை வாங்கிச் சாப்பிட்டவன் ஆச்சரியமாகப் பேசத் தொடங்கினான்.

"ஷ்ரவ்யா... இந்த பலாச்சுளையின் சுவை வித்தியாசமாக இருக்குதே... எப்படி?"

"மலை உச்சியில் விளைவதால் இந்த சுவையாக இருக்கலாம்."

"உண்மையான காரணம் அதுவல்ல; அதற்கான உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்து விட்டேன்."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள அவனை ஆவலாகப் பார்த்தாள்.

"நான் அதற்கான பதிலை கவிதையாகத்தான் சொல்வேன்."

"எப்படிச் சொன்னாலும் சரிதான், எனக்குப் பசிக்கிறது. சீக்கிரமாக ஏதாவது ஓட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். நீங்க பதிலை சொல்லிட்டே போங்க. நான் அதை கேட்டுட்டே வர்றேன்."

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், தனது பதிலை கவிதையாகவே சொன்னான் ஆனந்த்.

"பலாச்சுளை
இவ்ளோ இனிக்கிறதே...
அது
தேனீ முத்தமிட்டதாலா?
இல்லவே இல்லை
உன்
வெள்ளை விரல்களின்
இன்பத் தீட்டுப் பட்டதால்!"

ஆனந்த் சொன்ன கவிதையில் ஏதோ உள் அர்த்தம் இருப்பது போல் உணர்ந்தவள், "கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, பசி மயக்கத்துல என்னால அதை ரசிச்சுக் கேட்க முடியல. நாம ரூமுக்குப் போனதும், இன்னிக்கு நைட் அதுபத்தி சொல்லுங்க. ரசிச்சுக் கேக்குறேன். ஓ.கே.வா?" என்றாள்.

"கவிதையைப் பாராட்டுவாள் என்று பார்த்தால், ஜகா வாங்கிவிட்டாளே..." என்று உள்ளுக்குள் நினைத்த ஆனந்த், அடுத்த இரண்டு நிமிடத்தில் சாலையோரம் வந்துவிட்டான். ஆனால், அவர்கள் வந்த காரைக் காணவில்லை.

அங்கே இங்கே என்று ஓடிச் சென்று பார்த்தான். கார், இல்லவே இல்லை. ஷ்ரவ்யாவுக்கும் காரைக் காணாததால் அதிர்ச்சி.

இரண்டு பேரது லக்கேஜ்களும் காரில்தான் இருந்தன. காரை ஓரமாக நிறுத்தச் சொன்னதால் டிரைவர் கோபித்துக் கொண்டு வண்டியை எடுத்துச் சென்று விட்டாரா? இல்லை, இதுபோன்று ஏமாற்றுப் பேர்வழிகளும் இங்கே இருக்கிறார்களா?

ஆனந்த்துக்கு பெரிய குழப்பமாக இருந்தது. ஷ்ரவ்யாவும் பரபரப்பாக காணப்பட்டாள்.

அந்த நேரத்தில் அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு எதையோ தேடினான் ஆனந்த். அவனது மணிப் பர்ஸ் அங்கே பத்திரமாக இருந்தது. அவனது பிரஸ் அடையாள அட்டை, டெபிட் கார்டுகள் அதில் இருந்தன.

டிரைவர் சென்று விட்டதால் பணத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால், டிரெஸ்க்கு என்ன செய்வது? சரி... ஊட்டிக்குப் போய் புதுசா வாங்கிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்த ஆனந்த், ஷ்ரவ்யா பக்கம் திரும்பினான்.

”ஷ்ரவ்யா... நீ முக்கியமா எந்தப் பொருளையும் மிஸ் பண்ணலீயே...”

”நான் கொண்டு வந்தது இந்த ஒரு ஹேண்ட் பேக் மட்டும்தான். நல்லவேளை... பலாப் பழம் வாங்கிட்டு வந்ததுனால என் பேக் என்னோட வந்திடுச்சு.”

ஷ்ரவ்யா மேற்கொண்டு பேசுவதை எதிர்பார்க்காத ஆனந்த், சற்று தூரத்தில் பலாப்பழம் விற்றுக்கொண்டிருந்த வயதான பெண்மணியை நோக்கி ஓடினான்.

"அம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஒரு கார் நின்னுச்சே. அது எங்கே போச்சுன்னு தெரியுமா?"

"வண்டி வந்தது தெரியும். ஆனா, வந்த கொஞ்ச நேரத்துல அது மறுபடியும் திரும்பிப் போயிடுச்சு."

"இந்த வழியாக ஊட்டிக்கு போச்சா? இல்ல... வந்த வழியே மேட்டுப்பாளையம் நோக்கிப் போயிடுச்சா?"

"மேட்டுப்பாளையம் நோக்கித்தான் போச்சுப்பா..."

பலாப்பழம் விற்கும் பெண்மணி இப்படிச் சொன்னதும், தன்னை அழைத்து வந்த கார் டிரைவர் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான் ஆனந்த்.

தனது முதல் ஊட்டிப் பயணத்தின் ஆரம்பமே ஏமாற்றத்தில் முடிந்ததால் ஷ்ரவ்யாவும் அதிர்ச்சி ஆனாள்.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


12. மோட்டலில் நடந்த கலாட்டா!

துரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ்.

"கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல."

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் கொண்டார் கண்டக்டர்.

"அமுதா... ஓட்டல் முன்னாடி வண்டி நிக்குது. போய் சாப்பிட்டுட்டு வருவோம்."

தூக்கக் கலக்கத்தில் இருந்த அமுதாவை தட்டியெழுப்பினான் குணசீலன்.

"அம்மாதான், விடியகாலமே எழுந்திருச்சி கஷ்டப்பட்டு புளியோதரை செஞ்சு குடுத்துருக்காங்கல்ல; வேற ஏன் ஓட்டலுக்கு போய் சாப்பிடனும்னு சொல்றீங்க?"

"பஸ்சுக்குள்ள சாப்பாட்டை ப்ரீயா வெச்சு சாப்பிட முடியாது. ஓட்டலுக்குப் போயிட்டு, அங்கே ஏதாவது சைடு டிஸ் வாங்கி, இதை சாப்பிடுவோம். ஓ.கே.யா?"

"அப்படீன்னா ஓ.கே.?"

புளியோதரை கட்டியிருந்த சிறிய பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கினார்கள். விசாலமான ஒரே ஹாலாக குட்டித் திருமண மண்டபம் போன்று இருந்தது அந்த மோட்டல். எல்லா டேபிள்களிலும் பயணிகள் ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார்கள்.

எந்த டேபிள் காலியாக இருக்கிறது என்று கண்களால் தேடினான் குணசீலன். ஓரிடத்தில் இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, அங்கே இருவரும் போய் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் புளியோதரை பார்சலை பிரித்ததும்தான் தாமதம், மோட்டல் சர்வர் அவசரமாக வந்து அப்படியொரு வார்த்தை சொன்னான்.

"ஸார்... இங்கே பார்சல் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடக்கூடாது. இங்கேதான் வாங்கி சாப்பிடணும். நீங்க எழுந்திருச்சி வெளியே போங்க."

சர்வரின் இந்தப் பேச்சு குணசீலனை ஆத்திரப்படுத்தனாலும், அமைதியாகப் பேசினான்.

"நாங்க ஓசிக்கு இங்கே உட்கார்ந்து சாப்பிட வரல. சைடு டிஸ் என்ன இருக்கோ அதைச் சொல்லுங்க. ஆர்டர் பண்ணி, அதையும் சேர்த்து சாப்பிடுறோம்."

"மட்டன், சிக்கன், மீன் எல்லாமே இருக்கு. உங்களுக்கு அதுல என்ன வேணும்?"

சர்வர் இப்படிக் கேட்டதும், குணசீலனின் காதுக்கு அருகில் மெதுவாகப் பேசினாள் அமுதா.

"அதெல்லாம் ஆர்டர் பண்ணாதீங்க. நூறு ரூபா, இருநூறு ரூபான்னு பில்லைப் போட்டு தீட்டிடுவானுவ."

"அப்போ, என்னதான் ஆர்டர் பண்ணணும்?"

"பேசாம இரண்டு வடை மட்டும் ஆர்டர் பண்ணுங்க. அது போதும்..." என்றாள் அமுதா.

"ஹலோ சர்வர். இரண்டு வடை மட்டும் போதும்."

"இரண்டு வடை மட்டும் தானா? பில் கம்மியாதான் வரும். வேறு ஏதாவது வேணும்னாலும் ஆர்டர் பண்ணுங்க. கொண்டு வர்றேன்."

"அப்படீன்னா... ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க."

"சரி, இதோ கொண்டு வந்துடுறேன்..." என்று சொல்லிவிட்டுப் போன சர்வர், அடுத்த சில நிமிடங்களில் இரண்டு சிறிய கின்னங்களில் சாம்பாரில் மிதந்த வடைகளோடும், மினரல் வாட்டர் பாட்டிலோடும் வந்து நின்றான்.

"என்னங்க... வடை கேட்டா, சாம்பார் வடை கொண்டு வர்றீங்க?"

"எங்க ஓட்டல்ல இப்படித்தாங்க குடுப்போம்."

"சரி, வெச்சிட்டுப் போங்க. பில்லை கொண்டு வாங்க."

இரண்டு பேரும் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பாகவே பில்லை கொண்டு வைத்தான் சர்வர். பில்லைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டான் குணசீலன்.

"என்ன பில்லுங்க போட்டு இருக்கீங்க? இரண்டு வடைக்கும், மினரல் வாட்டர் பாட்டிலுக்கும் சேர்த்து 70 ரூபாயா? சென்னையில சரவணபவன் ஓட்டல்ல ஒரு சாப்பாடே 60 ரூபாய்தான். மினரல் வாட்டர் ஃப்ரீயாவே குடுப்பாங்க. நீங்க என்னன்னா பகல்லையே கொள்ளையடிக்குறீங்க?"

"ஸார்... வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதீங்க. சாம்பார் வடை எங்க ஓட்டல்ல 25 ரூபா. நீங்க இரண்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க. அதுக்கு 50 ரூபா ஆச்சு. மினரல் வாட்டர் 20 ரூபா. மொத்தம் 70 ரூபா. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, நீங்க வந்த பஸ் உங்கள விட்டுட்டு போயிடும். பேசாம பணத்தை குடுத்துட்டு ஊருக்குப் போய் சேர்ற வழியப் பாருங்க..."

சர்வர் இப்படிச் சொன்னதும் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டான் குணசீலன்.

"என்னங்க... அவசரப்படாதீங்க. இங்கே இப்படித்தான் ஏமாத்துவாங்க. அது தெரிஞ்சுதான் நான் முதல்லயே, பஸ்ல உட்கார்ந்தே சாப்பிடுவோம்னு சொன்னேன். நீங்கதான் கேட்கல. முதல்ல காச அவனுவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டு வாங்க."

அமுதா இப்படிச் சொன்னதும், பில்லுக்கான பணத்தைக் கொடுக்க பர்ஸை வேகமாக திறந்தான் குணசீலன். பத்து ரூபாய் தாள்கள் இல்லாததால் 100 ரூபாய் நோட்டை நீட்டினான்.

சில்லரை கொண்டு வராமல் ஏமாற்றி விடலாம் என்று சந்தேகப்பட்ட குணசீலன் சர்வரைப் பின்தொடர்ந்து சென்றான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்த சர்வர், 5 ரூபாயை எடுத்துக்கொண்டு 25 ரூபாய் மட்டும் குணசீலனிடம் கொடுத்தான்.

"25 ரூபாய்தான் இருக்கு. இன்னும் 5 ரூபாய் எங்கே?"

சர்வரிடம் கேட்டான் குணசீலன்.

"என்ன ஸார்... உங்களோட பெரிய ரோதனையா போயிடுச்சு? 5 ரூபா டிப்ஸ் ஸார்."

"டேய்... அத நான்தானே உனக்கு தரணும்?"

"அதைத்தான் நானே எடுத்துக்கிட்டேன்."

இதற்கு மேல் பேச்சுக்கொடுத்தால், அந்த சர்வரை ஓங்கி அறைய வேண்டியது இருக்கும் என்று எண்ணிய குணசீலன் அமுதாவுடன் அங்கிருந்து அவசரமாக வெளியேறி பஸ்சுக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். மோட்டல் என்கிற பெயரில் அங்கே நடந்த பகல் கொள்ளையை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

"என்னங்க... இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? நல்லவேளை நீங்க மட்டன், சிக்கன், மீனுன்னு ஆர்டர் பண்ணாம விட்டீங்க. அதை மட்டும் ஆர்டர் பண்ணியிருந்தா, 300, 400 ரூபாய பிடுங்கிட்டு விட்டுருப்பானுவ."

அமுதா இப்படிச் சொன்னதும் அவள் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான் குணசீலன்.

"உனக்கு எப்படி இங்கே இப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியும்?"

எதையோ சொல்ல வந்தவள், சட்டென்று அந்த வார்த்தையை தொண்டைக் குழியிலேயே அடக்கிக் கொண்டு வேறு பதிலைச் சொன்னாள்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க மதுரைக்கு போனப்போ, இந்த மாதிரிதான் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டோம். அங்கே எங்களை நல்லா ஏமாத்திட்டாங்க. அந்த அனுபவத்துலதான் சொன்னேன்."

முகத்தைத் தற்காலிக சோகமாக்கிக்கொண்டு சொன்ன அமுதாவை திடீரென்று ரசித்தான் குணசீலன்.

அந்த நேரத்தில் பஸ்சை டிரைவர் இயக்க... அமுதா மீது லேசாக முட்டிக் கொண்டு, அந்தக் கோபத்துக்கு மத்தியிலும் சிலிர்த்துக் கொண்டான். ஆனால், அமுதாவின் நெஞ்சுக்குள்தான் மறுபடியும் முடிந்துபோன காதல் ஞாபகம்.

இதுபோன்ற மோட்டல்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் பற்றி தன்னிடம் சொன்னது, தனது முன்னாள் காதலன் அசோக்தான் என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்

(தேனிலவு தொடரும்...)
Share: