கம்பீரமான உடல்வாகு கொண்ட வேடன் அவன். மரம் வெட்டுவதுதான் அவன் குலதொழில். மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் அந்த காட்டுப் பகுதியில் வசித்து வந்தான் அவன்.
ஒருநாள் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டியபோது கருநாகம் ஒன்று வெளிப்பட்டது. வேடனை பயமுறுத்த அது படமெடுத்து ஆடியது. கையில் இருந்த கோடாரியால் அதை வெட்டினான் வேடன். லேசாக காயம் ஏற்பட்டு தப்பித்து ஓடியது கருநாகம்.
அடிபட்ட பாம்பு தேடி வந்து பழி தீர்க்கும் என்று சொல்வார்களே... என அஞ்சிய வேடன், அந்த பாம்பை விடாமல் துரத்தினான். வேகமாக பாய்ந்து ஓடிய கருநாகம், ஒரு புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. ஆனாலும் விடவில்லை வேடன். அந்த புற்றை கோடாரியால் வெட்டினான். புற்றை வெட்டி முடித்தாயிற்றேத் தவிர, பாம்பை மட்டும் காணவில்லை.
அப்போது, கோபத்தின் உச்சிக்கு சென்றவனாக தனது கோடாரியை புற்றின் மீது மிக வேகமாக & ஆழமாக வீசினான் வேடன். கோடரி பலமாக வந்து விழுந்த வேகத்தில் புற்றுக்குள் இருந்து குபுகுபுவென்று தண்ணீர் கொப்பளித்து வந்தது.
வேடனுக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே எப்படி இவ்வளவு தண்ணீர்? என்று அவன் யோசிக்கும்போதே, அவன் முன்பு தோன்றினார் ஒரு முனிவர்.
“பயப்படாதே மகனே! உன்னால் இங்கே ஒரு நன்மை நிகழ்ந்து இருக்கிறது. இந்த புற்றுக்கு அடியில் அன்னை பராசக்தி குடிகொண்டிருக்கிறாள். சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்களை வதம் செய்த அன்னை, இங்கு ஜல சயனத்தில் இருக்கிறாள். அந்த தண்ணீர்தான் நீ இப்போது பார்த்தது.
இப்போது - இங்கே வெளிவந்து கொண்டிருக்கும் தண்ணீர் வற்றி முடித்ததும், புற்றுக்குள் பார்த்தால் தேவி வனதுர்க்கா இருப்பாள். அவளை எடுத்து வழிபாடு செய். அவளை வழிபடுவோருக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்...” என்று ஆசி கூறிய அந்த முனிவரே, புற்றுக்குள் இருந்த தேவியின் விக்கிரகத்தை எடுத்து அங்கே ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த முனிவர் தான், கலகத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் அதை நன்மையில் முடிக்கும் நாரதர்.
இதற்கிடையில், புற்றில் இருந்து வெளிவந்த தண்ணீர் அந்த பகுதியில் ஒரு குளமாக தேங்கி நின்றது. அந்த தண்ணீர் சர்க்கரையின் சுவையில் இருந்ததால் பின்னாளில் சர்க்கரைக் குளம் என்றே பெயர் ஏற்பட்டது. அந்த சர்க்கரைக்குளம் நாளடைவில் சக்குளம் என்றும், அங்கே அருள்பாலிக்கும் அம்மன் சக்குளத்தம்மா என்றும் பெயர் பெற்றனர்.
இந்த கோவில் உருவாக காரணமான வேடன், தன் குடும்பத்துடன் சக்குளத்தம்மாவை வழிபட்டு வந்தான். வனத்தில் கிடைக்கும் பூக்கள், பழங்களை தேவிக்கு படைத்து வழிபாடு செய்வது வேடன் குடும்பத்தின் வழக்கமாக இருந்தது.
ஒருநாள் தேவிக்கு படைக்க பழங்கள் பறிக்கச் சென்ற வேடனுக்கு எந்த பழமும் கிடைக்கவில்லை. கால் கடுக்க நடந்ததுதான் மிச்சம்.
பழம் கிடைக்காமல் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளான வேடன், வேறு வழியின்றி கோவிலுக்கு வந்து சேர்ந்தான். அங்கே சர்க்கரைப் பொங்கல் அம்மனுக்கு படைக்க ஆவி பறக்க தயாராக இருந்தது.
நடுகாட்டிற்குள் இது எப்படி, எங்கிருந்து வந்தது...? என்று வேடன் தவித்தபடி நின்றிருந்தபோது, அந்த தேவியே அசரீரியாக பேசினாள்.
“சர்க்கரைப் பொங்கலைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் மகனே... அது நானே செய்ததுதான். இன்றும் நாம் எல்லோரும் அதை சாப்பிடுவோம்...” என்றாள் தேவி.
தேவி தன்னிடம் பேசியதைக் கண்ட வேடன் மெய்சிலிர்த்துப் போனான். இன்ப வெள்ளத்தில் தத்தளித்தான்.
தன் பக்தனுக்காக அன்னை பராசக்தி பொங்கல் செய்து வைத்த நாள், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினம். இந்த அற்புதத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அதே தினத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.
மேற்படி அற்புதத்தில் வேடனாக வந்தவர் சிவபெருமான் என்றும், அவரது மனைவி பார்வதிதேவி, மகன்கள் விநாயகர், முருகன் என்பதும் நம்பிக்கை.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் இந்த சக்குளத்தம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி இப்போது சக்குளத்துக்காவு என்று அழைக்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருவல்லாவில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கனாச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நீரேற்றுபுரம் என்ற இடத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது.
எங்கெல்லாம் பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் தேவதைகள் திருப்தி அடைகிறார்கள்... எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஐஸ்வரியம் பெருகும்... என்ற கூற்றுக்கு இனங்க, இங்கு நடைபெறும் நாரி பூஜை உலக புகழ்பெற்றது. பெண்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி, மலர் தூவி பூஜை செய்வதுதான் நாரி பூஜை.
சக்குளத்துக்காவு கோவிலின் மேலும் சில சிறப்புகள் :
* ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மருந்து எனப்படும் 48 மூலிகைகளைக் கொண்டு தேவிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அபிஷேகத்திற்கு பிறகு அந்த மருந்து பக்தர்களுக்கு இலவசமாகவே தரப்படுகிறது. அதை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள்.
* மது போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் திருத்தலமாகவும் இது திகழ்கிறது. ஒவ்வொரு வெள்ளி அன்றும் இங்குள்ள தேவியின் வாள் மீது, இனி குடிக்க மாட்டேன்... என்று மது குடிப்பவர்களை சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். அவ்வாறு சத்தியம் செய்த ‘குடி’மகன்கள் அதன்பிறகு, தேவிக்கு பயந்து குடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். இதற்காகவே இக்கோவிலுக்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.
* சபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டி எடுத்துச் செல்வதுபோல், இக்கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.
* சக்குளத்தம்மா சக்திவாய்ந்த வனதேவதை என்பதால், இங்குள்ள மண்ணை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளில் வைக்கும் பக்தர்களையும் காண முடிகிறது. இப்படிச் செய்வதால் துர்தேவதைகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்.