காதல் செய் மனமே காதல் செய்...
வயது - 18
பருவம் மேனியெங்கும்
படர்ந்துவிட்டதால்
பாசாங்கு செய்யும் வயது
தொட்டதெல்லாம் சொந்தமாக...
காண்பதெல்லாம் நமதாக
துடிக்கும் வயசு
அதுதான்
காதல் கற்கும் வயதும்கூட...
அவள் -
வானில் இருந்து வந்த தேவதையோ?
மறைந்து மறைந்து
பார்க்கும் கண்களும்...
சின்ன கால் கெண்டையின் அழகோவியமும்...
மனசுக்குள் நீர்வீழ்ச்சியாய் பாயும்;
இதயமும் எக்குதப்பாய் எகிறும்!
இரவு தொலைந்து போகும்
இருக்கும் இடமும் மறந்துபோகும்
பார்க்கும் இடமெல்லாம்
அவளாய் தெரிவாள்!
வயிறும் பசியை மறந்துவிடும்
வார்த்தைகள்
ஞானியாக்கும் உன்னை;
ஆனால் -
உனை தேடுவோர்
பைத்தியம் என வசை மொழிவர்!
கனவுகள் கோட்டைகளாகும்
கற்பனை ஊற்றெடுக்கும்
தேடுவாரற்ற கல்லும்
அழகாய் ஜொலிக்கும்
உந்தன் கண்களுக்கு....!
கல்வி சாலையிலோ
உன் கண்கள்
கரும்பலகையை நோக்கும்...
மனமோ
சொர்க்கத்தையே
உருவாக்கி கொண்டிருக்கும்!
அவளை தாங்கும்
ஒன்பது மணி பஸ்சுக்காக
காலை ஆறு மணிக்கே
காத்திருந்து..... காத்திருந்து.....
தவம் கிடக்கும் உனக்கு
அவளின்
சின்ன புன்னகையாலே
மோட்சம் கிடைக்கும்!
அவள் வீசியெறியும்
குப்பைத் தாளும்
உந்தன் அறையை அலங்கரிக்கும்!
அவள்
சின்ன பாதத்தை
ஆதவன் சுட்டால் - உன்
பாதங்கள் வெடிக்கும்!
கண்களில் கண்ணீர்
நீரூற்றாய் பெருக்கெடுக்கும்!
சிலநேரம் -
உன் மூச்சு காற்று
விழுந்து, விழுந்தே
முகம் காட்டும் கண்ணாடியும்
நிறம் மாறும்!
எல்லாம் காதல் செய்யும் மாயம்!
அது தான் காலத்தின் கோலம்!
காதல் செய் மனமே காதல் செய்
காமம் அதீதமாக கலக்காத வரையில்.....!
உங்கள் காதல்
ஜாதி, மத மோதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கட்டும்!
எங்கும் சமத்துவ ஒளி வீசட்டும்!!
உங்கள் காதல்
இந்த நாட்டை புனிதப்படுத்தட்டும்
ஒற்றுமையை ஓங்கச்செய்யட்டும்
ஆகவே
காதல் செய் மனமே காதல் செய் !!