ஒரு அரசன், தன் நாட்டுக்கு வரும் துறவிகளிடம் எல்லாம், உலகில் சிறந்தது துறவறமா? இல்லறமா? என்று கேட்பது வழக்கம். யாருடைய பதிலும் அவனுக்கு திருப்தி தரவில்லை.
ஒருநாள் அரசனைத் தேடி வயது முதிர்ந்த அனுபவத் துறவி ஒருவர் வந்தார். அவரிடமும் அரசன் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டான்.
அதற்கு அந்த துறவி, "அரசே! நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ்ந்தால் அதற்கு சரியான பதில் கிடைக்கும்" என்றார். அரசனும் அதை ஏற்று, அந்த துறவியுடன் புறப்பட்டான். இருவரும் பல நாட்கள் நடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள்.
அப்போது, அந்த நாட்டில் காணும் இடம் எங்கும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர் மக்கள். அந்த நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம் நிகழ்ந்து கொண்டிருந்ததுதான் அந்த உற்சாகத்திற்கு காரணம். சுயம்வர மண்டபத்திற்கு அரசனும், அந்த அனுபவத் துறவியும் சென்றனர்.
சுயம்வரத்திற்கு காத்திருந்த இளவரசி உலகப் பேரழகியாக இருந்தாள். அவளை மணந்து கொள்பவன், அவளது தந்தைக்குப் பின் அந்த நாட்டின் அரசனாவான் என்பதால், தங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் பல நாட்டு இளவரசர்களும் அங்கே வந்திருந்தனர்.
தனக்கு ஏற்றத் துணையாக பேரழகன் ஒருவனை தேடினாள் இளவரசி. அங்கு வந்திருந்த யாரையுமே அவளுக்கு பிடிக்கவில்லை.
அப்போது, சுயம்வர மண்டபத்தினுள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும், அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது, சூரியனே வானத்தைவிட்டு பூமிக்கு இறங்கி வந்ததுபோல் இருந்தது. அவர் அருகே வந்த இளவரசி, கையில் வைத்திருந்த மாலையை அவரது கழுத்தில் போட்டுவிட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்துறவி அதிர்ச்சி அடைந்தார்.
"என்ன முட்டாள்தனம் இது? நான் ஒரு துறவி. எனக்கென்ன திருமணம்?" என்று கூறி, இளவரசி அணிவித்த மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதற்குள், அந்த இளவரசி அந்த இளம் துறவி மீது அளவற்ற காதல் கொண்டுவிட்டாள்.
"அவரையே மணப்பேன். இல்லையேல் உயிர்த் துறப்பேன்" என்று உறுதியாக கூறிவிட்டாள். அந்த இளம் துறவியை அழைத்துவர அவர் பின்னாலேயே சென்றாள். அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசனும் இளவரசி தங்களை பார்த்துவிடாதபடி பின்தொடர்ந்தனர்.
இளவரசியை மணக்க விரும்பாத இளம்துறவி ஒரு காட்டுக்குள் புகுந்தார். இளவரசியும் அங்கே சென்றாள். அனுபவத் துறவியும், அரசனுடன் அங்கே சென்றனர்.
காட்டுக்குள் புகுந்த இளம்துறவிக்கு ஏதோ ஒரு வழியில் நுழைந்து மறைந்துவிட்டார். இளவரசியால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
அப்போது, அவளை பின்தொடர்ந்து சென்ற அனுபவத்துறவியும், அரசனும் அவள் அருகில் சென்றனர். "அழாதே ராஜகுமாரி! நீ வெளியே செல்ல நாங்கள் வழிகாட்டுகிறோம். இப்போது இருட்டிவிட்டதால் நாளை காலை வழிகாட்டுகிறோம்" என்று கூறி, அவள் அழுகையை நிறுத்தினர்.
ஒரு பெரிய மரத்தின் அடியில் மூன்று பேரும் தங்கினர். அந்த மரத்தில் ஒரு ஆண் குருவி, தன் இணையான பெண் குருவியுடனும், 3 குஞ்சுகளுடனும் வசித்து வந்தது.
மரத்துக்கு கீழே வந்து தங்கிய 3 பேரை பார்த்ததும், ஆண் குருவி பெண் குருவியிடம், "அன்பே... நம் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்வது? இது குளிர்காலம் வேறு. நாம் நெருப்புக்கு என்ன செய்வது?" என்று கேட்டுவிட்டு எங்கேயோ பறந்து சென்றது.
சிறிதுநேரத்தில் ஒரு மரக்குச்சியை எடுத்து வந்து, மரத்தின் அடியில் இருந்த 3 பேருக்கும் முன்னால் போட்டு தீ வளர்த்தது.
"என் உடலை அவர்களைக்கு உணவாக தரப்போகிறேன்" என்று பெண் குறுவியிடம் கூறிவிட்டு, ஆண் குருவி அந்த தீக்குள் குதித்து உயிர்விட்டது.
¨வந்திருப்பது 3 பேர். அவர்களுக்கு எப்படி பசி அடங்கும்? யோசித்த பெண் குருவி, தானும் அதில் விழுந்து உயிர்விட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, 3 குஞ்சுகளும், "பெற்றோர் பணியை தொடர்வதுதான் நம் கடமை" என்று முடிவெடுத்து, அவையும் தீக்குள் குதித்து மாண்டு போயின.
நடந்ததை கண்டு திகைத்த அனுபவத் துறவி, அரசன், இளவரசி மூன்று பேருக்கும் தீக்குள் விழுந்து இறந்த குருவிகளின் உடலை தீண்டக்கூட மனம் வரவில்லை. பொழுது விடிந்ததும் அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குள் வந்தனர். இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் நாட்டுக்கு திரும்பினர் அனுபவத் துறவியும், அவருடன் வந்த அரசரும்.
பின்னர், அனுபவத் துறவி மன்னரிடம், "மன்னா! நீ சிறந்த இல்லற வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த பறவைகளைப்போல் எந்த நொடியும் பிறருக்காக உன்னை தியாகம் செய்ய தயாராக வாழ வேண்டும். நல்ல துறவற வாழ்க்கை வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும், பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப்போல் இருக்க வேண்டும். இல்லறமும் சரி, துறவறமும் சரி. அவற்றுக்கான தர்மத்தில் இருந்து நழுவாமல் இருந்தால், அவை இரண்டுமே உயர்ந்தவைதான்" என்றார், அனுபவத் துறவி.
உயர்ந்தது இல்லறமா? துறவறமா? என்பதை புரிந்து கொண்டான் அரசன்.
- சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை இது.