சனி, 15 ஜனவரி, 2011

ஆனந்த வாழ்வு அருளும் குட்டம் ஆனந்தவல்லி அம்மன்

 
குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில்
ந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது -

கம்பீரமாக காணப்பட்ட ஒரு குதிரையில் வேகமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்கள் அருகே வந்து நின்றான். “ஏன் இங்கே இந்த கூட்டம்?” என்று விசாரித்தான்.
அந்த கிராம மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தனர். 

“ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் எதுவும் கேட்டால், அந்த சாமி நேரில் அதை கொண்டு வந்து தரப்போகிறதா?” என்று கேலியாக கேட்டு சிரித்தான்.

அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசிய அந்த கிராமமக்கள், தங்கள் ஊர் தெய்வத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறினர். தங்கள் தெய்வம் தங்களுடன் பேசும் என்றும் தெரிவித்தனர். அதையெல்லாம் கேட்ட அந்த அதிகாரி வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஆனாலும், இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம். உடனே, “உங்கள் ஊர் அம்மனுக்கு பேசும் சக்தி உண்டு என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்றான்.

கிராமமக்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கண்கண்ட தெய்வத்தையே சோதிக்கிறானே... இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ... என்று மனதிற்குள் நினைத்தவர்கள், “நீங்களே அந்த சாமியிடம் கேளுங்கள்” என்றனர்.

சற்று கோபமான அந்த ஆங்கிலேயன், குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே... இவர்கள் கூறுவதுபோல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால், இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாக கத்தி சிரித்தான்.

அவனது ஏளனப் பேச்சுக்கு அந்த கணமே தண்டனை கிடைத்தது. கோவில் சன்னதிக்குள் இருந்து வேகமாக புறப்பட்டு வந்த ஒரு பேரொளி அவனது கண்களை குருடாக்கியது. குதிரையில் இருந்து கீழே விழுந்தான். குதிரையும் தனியாக வேகமெடுத்து ஓடியது.

அதிர்ந்து போனான் அந்த அதிகாரி. செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அந்த அம்மனிடமே முறையிட்டான். மனம் திருந்திய அவனுக்கு அந்த அன்னையும் மன்னிப்பு வழங்கினாள். அவனது பறிபோன கண் பார்வை திரும்பக் கிடைத்தது.

மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனான் அந்த ஆங்கிலேய அதிகாரி.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமம் வழியாகச் செல்லும் ஆங்கிலேயர்கள், தவறாமல் கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அந்த அன்னையையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம் கிராமம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்தான் மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை கொடுத்த அன்னை.

அன்று மட்டுமல்ல, இந்த அன்னையின் சக்தி இன்றும் பிரபலம்.

நோய் தீர்க்கும் சஞ்சீவி மரம்


இக்கோவிலுக்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த, பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று உள்ளது. இதை இந்த ஊர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். வழக்கமாக புளியமரங்களின் இலைகள் இரவு நேரத்தில் மடிந்துபோய் காணப்படும். ஆனால், இந்த புளிய மரத்தின் இலை காலையில் உள்ளது போலவே விரிந்திருக்கும். அதனால், இதற்கு உறங்காப்புளி என்றும் பெயர் உண்டு.

தீராத எந்தவொரு நோயையும் போக்கும் வல்லமை இந்த சஞ்சீவி மர இலைக்கு உண்டு. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளை தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.

இதேபோல், இந்த ஊரில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்களும், இந்த சஞ்சீவி மர இலைகளை சேகரித்து கொண்டு செல்கிறார்கள்.
எந்தவொரு நோய் வந்தாலும், முதலில் இந்த சஞ்சீவி இலையை அரைத்து குடித்து விடுகிறார்கள். இந்த இலைக்கு சக்தி உண்டு என்பதால், அவர்களது நோயும் சட்டென்று பறந்துபோய் விடுகிறது.

ஒருமுறை இந்த புளிய மரத்தில் பழுக்கும் பழங்களை சேகரிக்க ஒருவருக்கு ஏலம் கொடுத்தனர். ஆனால், அந்த ஆண்டு இந்த மரத்தில் துளிர்த்த புளியங்காய்கள் அத்தனையும் சரியாக பழுக்காமல் பயனற்று போய்விட்டன. தெய்வீக சக்தி கொண்ட இந்த மரத்தில் பழுக்கும் பழங்களை மக்களே பயன்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள இறைவியின் திருவுள்ளம் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அன்று முதல் இந்த புளியமரத்தின் பழங்களை ஏலம் விடுவதில்லை.

ஆடித் திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்திபெற்றது. இக்கோவிலுக்கும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலுக்கும் இணைத்து, பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்குச் செல்ல, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. திருச்செந்தூரில் இருந்து கடற்கரை மார்க்கமாக (மணப்பாடு, உவரி வழி) கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இந்த ஊரின் வழியாகவே செல்லும். திருச்செந்தூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் குட்டம் அமைந்துள்ளது.

கோவில் பூஜை நேரம் (தினமும்) : காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 8.

- நெல்லை விவேகநந்தா

Share: