செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!


நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது.


இந்த நூலுக்கு நடிகர் கம் டைரக்டர் ரா.பார்த்திபன் வழங்கியுள்ள பாராட்டுரை...


அகப்படாததெல்லாம் அற்புதங்களே! அப்படியே அகப்பட்டா லும் அதை அதுவாய் பார்ப்பதில்லை நாம்! அதில் கொஞ்சம் மசாலா தூவி, உப்பிட்டு வேறொன்றுடன் ஒப்பிட்டே மகிழ்கிறோம்.


பெண்ணை பெண்ணாக மதிப்பதில் ஏதோ உள்குத்து நம் அனைவரிடமும் உள்ளது. ‘கிளி மாதிரி இருக்கா... கிளியோபாட்ரா மாதிரி இருக்கா’ன்னு உவமை/உதாரணம் சொல்வோம்.


எந்தக் கிளியையாவது ஒரு பொண்ணு மாதிரி அழகாயிருக்கு அதுன்னு ‘சைட்’ அடிச்சிருக்கோமா? அலகால இல்லாம, தன் அழகால நம்மை கொத்திகிட்டு போறப் பொண்ணை கிளின்னு விளிக்கலாம். சரி, அது யாரு கிளியோபாட்ரா?


கருப்பா? சிவப்பா? தொடும்வரை அழகா? உயிர் விடும்வரை அழகா? விட்டுப் பிரிந்து இத்துனை 365-களுக்குப் பிறகும் அழகுக்கு கிளியோபாட்ரா மட்டும் ஏன் உதாரணப் புருஷியாக விளங்குகிறாள்? என்ற என்னுடைய ஈர்ப்புடைய சந்தேகம் அனைத்திற்கும் ஏற்புடைய விளக்கமாகவும், விரும்பும்படியாகவும், எளிமையாகவும் இருக்கிறது நண்பர் நெல்லை விவேகநந்தா செதுக்கியுள்ள ‘கிளியோபாட்ரா’.


கல்லை செதுக்குபவரை சிற்பி என்போம்.    நெல்லை விவேகநந்தா ஒரு சிலையையே இன்னும் நேர்/சீர்/கூர் படுத்தி கலைநயத்தோடு செதுக்கியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

+ ப்ரியமுடன்

ரா.பார்த்திபன்

இதேபோல், இதே நூலுக்கு நடிகை பூர்ணா தந்துள்ள வாழ்த்துரை...


வணக்கம். கிளியோபாட்ராவின் வரலாறு கூறும் இந்த நூலைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


உலகின் நிரந்தர அழகியான கிளியோபாட்ராவைப் பற்றிய இந்தப் புத்தகம் பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றுவரை கிளியோபாட்ராதான் பேரழகி என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் எவ்வளவு திறமையானவளாக, அறிவு நிறைந்தவளாக இருந்தாள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.


அழகு மட்டுமல்ல, அவளது மற்ற திறமைகளும் சேர்ந்துதான் உலகம் அவளைப் போற்ற காரணமாக இருந்தது என்று தெரிகிறது. மேலும், பண்டைய ரோமானிய, எகிப்திய அரசுகள் பற்றியும், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகியோர் பற்றியும் மிகவும் விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் ஆசிரியர் திரு.நெல்லை விவேகநந்தா அவர்கள், இதற்காக பெரும் முயற்சி எடுத்து, ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்!


தமிழின் சிறந்த நூல்களுள் ஒன்றாக சாதனை படைக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!


நடிகை பூர்ணா
Share: