செவ்வாய், 26 ஜூலை, 2011

வேண்டும் இன்னொரு சுதந்திரம்!


 ழல்... ஊழல்... இந்தியாவில் எங்கும் எதிலும் ஊழல்! உலக மெகா ஊழல்களை எல்லாம் நம் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நிகழ்த்தும்போது நாம் சுதந்திர நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம்கூட சாதாரண பாமரனுக்கும் வந்து விடுகிறது. 50 ரூபாய் பிக்பாக்கெட் அடித்தவனை அடி அடியென அடித்து விசாரித்து தண்டனைக் கொடுக்கும் இந்திய தண்டனைச் சட்டங்கள், ஒன்றரை லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று கோடிகளில் கொள்ளையடிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கும் கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நிகழ வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 
நாட்டின் பிரதமராக இருந்தாலும் கூட ஊழல் செய்த எவரும் குற்றவாளிகள்தான் என்ற கருத்தில் லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சொல்வதை ஆட்சியாளர்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும், அரசியல்வாதிகள் ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டுவர எதிராக இருக்கிறார்கள்.

 
ஆக, அரசியல் என்றாலே ஊழல்... ஊழல் என்றாலே அரசியல் என்றாகிவிட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தையும், இப்போதைய காலக்கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழல் என்பது கடந்த இருபது ஆண்டுகளில்தான் ஏகபோகத்துக்கும் வளர்ந்துள்ளது.

 
எளிமையோடு தனக்கென, தன் குடும்பத்துக்கென வாழாமல் நாட்டுக்காகவே உழைத்த கர்மவீரர்&பெருந்தலைவர் காமராஜர், தன் இறப்பிற்கு பிறகு விட்டுச் சென்றது சில வேஷ்டியும், சட்டையும்தான்! அப்படிப்பட்டவரின் வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டாலும், அவர் செய்த நல்ல விஷயங்களில் நூற்றில் ஒன்றிரண்டையாவது இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 
ஆகஸ்ட் 15&ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இவ்வேளையில் நாட்டுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் காமராஜரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இங்கே நாம் புரட்டுவோம்...

 
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தனது தாயார் சிவகாமி அம்மையாரின் செலவுக்காக மாதம்தோறும் 120 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். முதல்-அமைச்சரின் தாயார் என்பதால், விருதுநகரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாரைப் பார்க்க தினமும் வெளியூர்களில் இருந்து கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், உறவினர்கள்... என்று பலரும் வந்து செல்வார்கள். காமராஜர் மாதம்தோறும் அனுப்பிய 120 ரூபாய் கட்டுப்படியாகவில்லை. தன்னை வீடு தேடி பார்க்க வந்தவர்களுக்கு சோடா, கலர் என்று அவர் வாங்கிக் கொடுப்பதிலேயே அந்த பணத்தின் பெரும் பகுதி செலவானது.

 
அதனால், தனக்கு மேலும் 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக மாதம்தோறும் அனுப்பி வைக்குமாறு காமராஜருக்கு தகவல் அனுப்பினார். நாம், நமது தாயார் இதுபோன்று பண உதவி கேட்டால், அவர் கேட்ட தொகைக்கு அதிகமாக கொடுக்க முடியாவிட்டாலும்கூட முடிந்த அளவாவது கொடுத்து விடுவோம்.

 
ஆனால், காமராஜர் அப்படிச் செய்யவில்லை.

 
"யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். வந்தவர்கள் எல்லாம் எனக்கு சோடா வேண்டும், கலர் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலேயே 120 ரூபாயை வைத்து செலவு செய்யலாமே... ஒருவேளை, அம்மா கேட்டபடி கூடுதலாக 30 ரூபாய் அனுப்பினால், அவரது கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிடும். கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார். அது அவரது உடல்நிலைக்கு ஆகாது. அதனால், இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்" என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார் காமராஜர்.

 
இன்றைய ஆட்சியாளர்கள் இப்படிச் செய்யாவிட்டாலும் கூட மக்கள் பணத்தை கொள்ளையடிக்காமலாவது இருக்கலாம் இல்லையா?

 
ஒருமுறை காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப் பேரனான கனகவேல் என்ற இளைஞர் அவரைப் பார்க்க வந்தார். பேரனிடம் நலம் விசாரித்த காமராஜர், "என்ன விஷயமாக வந்து இருக்கிறாய்" என்று கேட்டார்.

 
அதற்கு அவர், "தாத்தா... நான் எம்.பி.பி.எஸ். படிக்க விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். இன்டர்வியூவும் நடந்து முடிந்துவிட்டது. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இடம் கிடைத்துவிடும். எம்.பி.பி.எஸ். லிஸ்ட் தயாராவதற்குள் சொல்லிவிட்டால், நான் டாக்டர் ஆகிவிடுவேன்" என்றார்.

 
உடனே, அந்த இளைஞர் கையில் வைத்திருந்த விண்ணப்பப் படிவத்தை வாங்கிப் படித்துப் பார்த்தார். அந்த படிவத்தில், மே-/பா.காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப்பிள்ளை வீதி, சென்னை என்று முகவரி எழுதப்பட்டு இருந்தது.

 
சட்டென்று கோபமானார் காமராஜர். அந்த கோபத்துடனயே கேட்டார்.

 
"என் பெயரை ஏன் எழுதினாய்?"

 
"இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க. எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியை கொடுத்தேன்."

 
"சரி... நீ முகவரி கொடுத்தது இருக்கட்டும். இந்த டாக்டர் படிப்பு, என்ஜினீயர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவர்கள் தேர்வு செய்கிறவர்களுக்குத்தான் சீட் கிடைக்கும். இப்படி எல்லோருக்கும் பொதுவா ஒரு கமிட்டி அமைத்துவிட்டு, இவனுக்கு எப்படியாவது சீட் கொடு என்று சொன்னா, கமிட்டி அமைக்க வேண்டிய அவசியமே இல்லையே..."

 
"தாத்தா... நீங்க என்ன சொல்ல வர்றீங்க?"

 
"அதாம்பா... இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொல்லி இருந்தா உனக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும். அப்படி கிடைக்கலேன்னா, கோவையில பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப்படி. அந்த படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு. மற்றபடி, உனக்காக நான் சிபாரிசு எல்லாம் செய்ய முடியாது..." என்று ஒரேயடியாக கூறிவிட்டார் காமராஜர். கடைசியில் அந்த இளைஞருக்கு டாக்டருக்கு படிக்க சீட் கிடைக்கவில்லை.

 
தன் ஒரே தங்கை வழிப்பேரனாக இருந்தும்கூட சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார் காமராஜர். தனக்காக மட்டுமின்றி தன் குடும்பத்துக்காகவும் கூட குறுக்கு வழியில் உதவ மறுத்துவிட்டார்.

 
இன்று அப்படியா நடக்கிறது? எதற்கெடுத்தாலும் சிபாரிசு செய்யும் அரசியல்வாதிகள் அதற்காக பல லட்சங்களை மறைமுகமாக வாங்கி விடுகிறார்கள்.


 
என் காதுக்கு வந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தி வரும் என்ஜினீயரிங் கல்லூரி அது. அங்கு படித்த ஒரு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. பட்டமளிப்பு நாளன்று பல பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இதில் உண்மை என்னவென்றால், அவர் கல்லூரிக்கு படிக்கவே வரவில்லை. தேர்வும் எழுதவில்லை. வே-று எப்படி பல்கலைக்கழக அளவில் முதலிடம் வந்தார்? காரணம், அவர் பெரிய இடத்துப் பிள்ளையாம்.

 
இப்போ, இப்படியெல்லாம் கூத்து நடக்குது. இந்த அநியாயங்களை எல்லாம் பார்க்கும்போது மறுபடியும் காமராஜர் பிறக்கக்கூடாதா, நல்லாட்சியைத் தரக்கூடாதா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 
மேலும், இன்றைய அரசியல்வாதிகள் விளம்பரப் பிரியர்களாக இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மேடை போட்டு தங்களது சுயபுராணத்தை தம்பட்டம் அடிக்கிறார்கள்.

 
இந்த விஷயத்திலும் காமராஜர், காமராஜர்தான்!

 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953&56&ம் ஆண்டில் இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். யாரிடம் உதவிக் கேட்கலாம் என்று அவர் எண்ணியபோது, அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் நினைவுக்கு வந்தார். உடனே அங்கே ஓடிச் சென்று நிலைமைக் கூறினார்.

 
தமிழக மக்களின் கல்விக் கண்ணை திறந்தவர் ஆயிற்றே காமராஜர். சட்டென்று அந்த மாணவருக்கு உதவினார். தன்னைப் பெற்றத் தாய் 30 ரூபாய் கூடுதலாக கேட்டதற்கு தர மறுத்த அதே காமராஜர், தனது உதவியாளர் வைரவன் மூலம் சொந்தப் பணத்தில் இருந்து 300 ரூபாயைக் கொடுத்தார்.

 
அந்த பணத்தை வாங்கிக் கொண்ட மாணவர், "ஸார்... தாங்கள் எனக்கு செய்த இந்த உதவியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தால், கல்லூரி மாணவருக்கு முதல்வர் உதவி சென்று செய்தி போடுவார்கள். நான் அதைச் செய்யட்டுமா?" என்று கேட்டார்.

 
சட்டென்று கோபமான காமராஜர், "இந்த மலிவுப் பிரச்சாரம் எல்லாம் வேண்டாம். நீ படிக்க வேண்டியவன். நன்றாக படித்து குடும்பத்தைக் காப்பாற்று..." என்று கூறி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். பின்னாளில், அதே மாணவர் அரசுத்துறையில் பெரிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இதுதான் காமராஜர்! அதனால்தான் அவரை பெருந்தலைவர் என்கிறோம்.

 
இன்றெல்லாம் அரசியல்வாதிகள் பதவியைத்தான் பெரிதாக நினைக்கிறார்கள். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். இந்த விஷயத்திலும் காமராஜர் மாறுபட்டே நிற்கிறார்.

 
1963&ல் காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகம் இருந்தது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் நேரு ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், காமராஜர் சொன்னதுதான் சட்டென்று எல்லோரையும் ஈர்த்தது. அவரது திட்டத்தை, 'கே பிளான்', அதாவது 'காமராஜர் திட்டம்' என்றே அழைத்தார்கள்.
 
அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். வயதில் மூத்தவர்கள் பதவிகளில் இருந்து விலகி இளையோருக்கு வழிவிட வேண்டும். அதேநேரம், பதவி விலகியவர்கள் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் - இதுதான் கே பிளான்.

 
திட்டத்தை கூறிய காமராஜர், தானே அதற்கு முன்மாதிரியாக நடந்து கொண்டார். காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர், முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட்டார்.

 
அப்போது திடீர் திருப்பமாக நேரு மரணமடைந்துவிட... அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது, காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்ததால் அவரையே பலரும் பிரதமராக முன்மொழிந்தனர். கட்சிக்காக முதல்வர் பதவியையே துறந்தவரிடம், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றால் எப்படி?

 
பிரதமர் பதவியே ஏற்க மறுத்த காமராஜர், அந்த பதவிக்கு லால்பகதூர் சாஸ்திரி பெயரை முன்மொழிந்தார். அவரே பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 
1966&ம் ஆண்டு, பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும் இறந்துவிட... மறுபடியும் யார் பிரதமர் என்கிற கேள்வி எழுந்தது. மீண்டும் காமராஜர் பெயரே பலரால் சிபாரிசு செய்யப்பட்டது. வழக்கம்போல் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் காமராஜர். நேருவின் மகளான இந்திராகாந்தியே பிரதமராக வரட்டும் என்று அறிவித்தார்.

 
இப்படி அரசியலிலும் பிறருக்கென வாழ்ந்த காமராஜர், மிக மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். இன்றுள்ள அரசியல் தலைவர்கள் 24 மணி நேரமும் ஏசியிலேயே வலம் வருகிறார்கள். ஏசி அறையிலேயே தூங்குகிறார்கள். ஆனால், காமராஜர் அப்படி கிடையாது. படுக்கை அறையில் படுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மரத்தடியில் படுக்கவும் தயங்க மாட்டார்.

 
இதற்கு உதாரணமாக அவர் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்...

 
ஒருமுறை, முதல்வராக இருந்த காமராஜர் மதுரைக்குச் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென்று கரன்ட் கட் ஆகிவிட மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், கரன்ட் கட் சரி செய்ய நேரம் ஆனது. ஆனால், காமராஜரோ களைப்பால் அவதிப்பட்டார்.

 
உடனே தனது உதவியாளரைப் பார்த்தவர், "இப்போதைக்கு கரன்ட் வர்ற மாதிரி தெரியவில்லை. கட்டிலை மரத்தடியில் போடுங்கள். நான் அங்கேயே படுத்துக் கொள்கிறேன்..." என்றார்.

 
அடுத்த நிமிடமே ஒரு கட்டில் அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் போடப்பட்டது. அதில் படுத்துக்கொண்டார் காமராஜர். அப்போது, அவருக்கு அருகில் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்காக வந்து நின்றார்.

 
அவரைப் பார்த்த காமராஜர், "நீ ஏன் இங்கு வந்து நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள். நீ போய் தூங்கு..." என்று கூறி அவனை அனுப்பிய பிறகுதான் படுத்து தூங்கினார்.

 
இப்படி அநியாயத்துக்கும் எளிமையாக வாழ்ந்ததால்தான் அவர் தனக்கென சொத்துக்கள் சேர்க்க மறந்துவிட்டார். மறந்துவிட்டார் என்பதை விட மறுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 
 

காமராஜரின் வாழ்க்கைப் பாடத்தை இன்றைய அரசியல்வாதிகள் கொஞ்சமாவது புரட்டிப் பார்த்தால், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டு கிடக்கும் லஞ்சம், ஊழல்களுக்கு தானே விடிவு பிறந்துவிடும். அதற்கு தேவை இன்னொரு அரசியல் சுதந்திரம்! அதற்கு வேண்டும் இன்னொரு பெருந்தலைவர் காமராஜர்!

 
- நெல்லை விவேகநந்தா
 
Share: