நெல்லை விவேகநந்தா எழுதிய 'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' என்ற நூலுக்கு, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் திருக்கோவில் மாத ஆன்மீக இதழ் பாராட்டு தெரிவித்து, சிறப்பு நூல் மதிப்புரை வழங்கியுள்ளது. டாக்டர் என்.ஸ்ரீதரன் நூலை ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளார்.
அவர், தமிழக அரசின் திருக்கோவில் மாத இதழில் கூறியிருப்பதாவது:
'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்', நெல்லை விவேகநந்தா, வானதி பதிப்பகம், தீன தயாளு தெரு, சென்னை-600 017, பக்கங்கள் : 232, விலை : ரூ.100.
'அய்யா வைகுண்டர் - வரலாறும் அற்புதங்களும்' நூலின் ஆசிரியர் நெல்லை விவேகநந்தா எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளருமாவார்.
சுவாமி விவேகானந்தரைப் போலவே நாஞ்சில் நாட்டில் அய்யா வைகுண்டர் ஆன்மிகத்தையும், சமூக நீதியையும் இணைத்துப் பெரியதோர் இயக்கத்தை நிலை நாட்டியமை நூலாசிரியரைக் கவர்ந்த, அவரை இந்நூல் எழுதத் தூண்டியிருக்கிறது. எனவே, இந்நூலை சமூக வரலாற்றுப் பெட்டகம் என ஐயமின்றி கூறலாம்.
அய்யா வைகுண்டர் நாஞ்சில் நாட்டில் 1809-ல் உதித்த ஞான சூரியன். சம காலச் சமூக அவலங்களை பொசுக்க வந்த சீர்திருத்தப் பகலோன். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து, முதலில் முத்துக்குட்டி என்று பெயர் வைக்கப்பெற்று, பிறகு அய்யா வைகுண்டர் என்னும் திருப்பெயர் பெற்ற ஓர் இளைஞர், தலைமுறைகளாக வேரூன்றிவிட்ட சமூகக் கெடுமைகளை வேரறுத்த விதத்தையும், வலுவான ஓர் ஆன்மிக வழிமுறையை நிலை நாட்டியதையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இந்நூல் வர்ணிக்கிறது.
தமது அவதார நோக்கம் பூர்த்தியானதும் 2.6.1851 அன்று அவர் வைகுண்டம் ஏகினார். தம்முடைய வரலாற்றையும், கொள்கைகளையும் கனவின் மூலம் தமது சீடரான அரிகோபாலனுக்கு தெரிவித்தார். அவற்றின் தொகுப்பே அகிலத்திரட்டு என்னும் நூல். இதுவே அய்யா வழியைப் பின்பற்றுபவர்களின் வேத நூல்.
அய்யா வைகுண்டர் இந்நூலாசிரியரின் முதல் படைப்பு எனினம் தெளிவாகத் திட்டமிட்டுக் கட்டுக் கோப்பான முறையில் எழுதியுள்ளார். அய்யா வைகுண்டர் காலச் சமூகப் பின்னணி, அவரது வரலாறு, அவர் நடத்திய போராட்டங்கள், சாதனைகள், அவரது இயக்கத்தின் வளர்ச்சி, கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், மறைவிற்குப் பின் நிகழ்த்திய அதிசயங்கள் என்று ஓர் ஓழுங்குமுறையை அமைத்துக் கொண்டு எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டிற்குரியவர்.
நன்றி : திருக்கோவில், ஆகஸ்ட் 2011