ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 23

23. இளம் இணைகளின் படம்!

"ஆனந்த்... எனக்கு இந்த பொட்டானிகல் கார்டன் போர் அடிக்குது. வேற எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போங்க..." மதியம் 12 மணி தாண்டி கடிகாரம் ஓடியதுகூட தெரியாமல் ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகில் லயித்துக் கிடந்த ஆனந்த்தை உசுப்பி விட்டாள் ஷ்ரவ்யா.

"என்ன ஷ்ரவ்யா... அப்படியொரு வார்த்தை சொல்லிட்ட? நாள் முழுக்க இந்த பூங்காவோட அழகுல மூழ்கிக் கிடக்குற ஜோடிகள் எத்தனையோ பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, அங்கே தோளோடு தோள் உரசி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுகூட அடுத்தவர்கள் பார்வைக்குத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் ஜோடியைப் பார்... நாம இங்கே நுழையும் போதே அவர்கள் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த பூங்கா போர் அடிக்கவில்லை. உனக்கு மட்டும் எப்படி போர் அடித்தது?" பதிலுக்கு ஷ்ரவ்யாவை சீண்டிவிட்டான் ஆனந்த்.

"அவங்கள பார்த்தாலே தெரியல; புதுமணத் தம்பதிகள்னு! அதான் கொஞ்சிக் கொஞ்சி பேசிட்டு இருக்காங்க..." என்றாள் ஷ்ரவ்யா.

"அவங்களுக்கு மேரேஜ் ஆகி, குறைந்த பட்சம் எப்படியும் ஒரு வாரம் இருக்கலாம். அவங்களே இப்படிக் கொஞ்சிட்டு இருக்கும்போது... நேற்று காலையிலதான் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாம எப்படி இருக்கணும்?"

"ஓ... உங்களுக்கு இந்த ஆசையெல்லாம் இருக்குதா--? அவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி மொபைல்ல மணிக்கணக்கா பேசி இருப்பாங்க. ஏன்... அவங்களுக்கு பஸ்ட் நைட்கூட நடந்து இருக்கும். அந்தப் புரிதல்ல இப்படி பேசிட்டு இருக்கலாம் இல்லீயா--?"

"சரி சரி... நீ சொல்ல வர்ற விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். இன்னிக்கு நைட்டே, ஏன்... பகல்லயே அதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்."

"ஏதோ... ஏற்பாடு பண்ணிடுறேன்னு சொன்னீங்களே... என்ன ஏற்பாடு பண்ணப் போறீங்க--?" ஆனந்த் எதற்காக அப்படிச் சொன்னான் என்பது தெரிந்தும், தெரியாதது போல் கேட்டாள் ஷ்ரவ்யா.

"அது சஸ்பென்ஸ். அதுக்கு முன்னாடி, இன்னொரு அழகான விஷயத்தை உனக்காகச் சொல்லப் போறேன்."

"என்ன விஷயம்?" ஆனந்துக்கு மிக அருகில் வந்து ஆர்வமாகக் கேட்டாள்.

"இந்தப் பூங்கா போர் அடிக்குதுன்னு சொன்னல்ல... உண்மையிலேயே போர் அடிக்காம இருக்கத்தான் இந்த பூங்காவையே ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினாங்க..." என்று சொல்லி நிறுத்தினான் ஆனந்த்.

"இவ்ளோ புள்ளிவிவரமா சொல்றீங்களே... ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே, ஊட்டி பத்தின கைடு வாங்கி படிச்சி, கரைச்சிக் குடிச்சிட்டீங்களாக்கும்--?"

"ஆமா... நான் ஒரு இடத்துக்கு போறேன்னா, அந்த இடத்தப் பத்தின விவரங்களை முதல்ல சேகரிச்சு தெரிஞ்சுக்கறது என்னோட வழக்கம். அது, பல வழிகள்ல உதவியா இருக்கும். இப்போ, உனக்கு கூட என் மூலமாக ஊட்டி பத்தின பல விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும் இல்லீயா---? அந்த வகையில, இதை ஒரு சமூகசேவைன்னு கூட நெனைச்சிக்குவேன்."
"நான் செய்யறது சமூகசேவைன்னு நாமலே சொல்லிக்கக்கூடாது. அடுத்தவங்கதான் அதை பெருமையாச் சொல்லணும். ஏதோ, இந்தப் பூங்கா பத்தி சொல்ல வந்தீங்க... அதை முதல்ல சொல்லுங்க. அதுக்கு அப்புறம், நீங்க செய்யறது சமூகசேவையா, இல்லையான்னு நான் சொல்றேன்..." என்ற ஷ்ரவ்யா, ஆனந்தின் இடது கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.

வழக்கம்போல் ஊட்டி தாவரவியல் பூங்கா பற்றிய புள்ளிவிவரத்தைச் சொன்னான் ஆனந்த்.

"1847-ஆம் ஆண்டு இந்தப் பூங்காவை நிறுவினாங்க. இதை வடிவமைச்சவர் வில்லியம் கிரஹாம் மெஹ்வார் என்கிற ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர். ஆரம்பத்துல இந்தப் பூங்கா காய்கறித் தோட்டமாகத்தான் இருந்துச்சு. கோடை காலத்துல சென்னையோட வெயிலை தாங்கிக்க முடியாம இங்கே வந்து குடியேறின ஆங்கிலேய அதிகாரிகள், பிரபுக்கள், ராணுவ அதிகாரிகளுக்கு தேவையான உணவுகள் இங்கே விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் இருந்தே தயாரானது. இப்போ 22 ஹெக்டேர் பரப்பளவுள பரந்து விரிஞ்சி அமைஞ்சிருக்கு இந்தப் பூங்கா. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்துல இந்தப் பூங்கா அமைஞ்சிருக்கறதுனால எப்போதுமே இங்கே குளுகுளுன்னு இருக்கும். கோடை காலங்கள்லதான் இந்த குளுமையை நம்மால அனுபவிக்க முடியும். மழை காலங்கள்ல குளுமைக்கு பதிலா கடும் குளிர் இருக்கும். அந்த நேரங்கள்ல இங்கே மணிக்கணக்குல உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது. மீறி பேசிட்டு இருந்தா... சென்னையில வாழக்கூட நம்மள மாதிரியானவங்களுக்கு ஜன்னியே வந்துவிடும்...” என்றான் ஆனந்த்.

“பரவாயில்ல... ஊட்டி பற்றி நல்லாவே தகவல் சொல்றீங்க. இதைச் சமூகசேவைன்னே நான் ஒத்துக்கறேன். மத்தவங்க ஒத்துக்கறாங்களா, இல்லையான்னு எனக்குத் தெரியாது...” என்று கைவிரித்தாள் ஷ்ரவ்யா.

அப்போது ஆனந்த் அருகில், 28 வயது மதிக்கத்தக்க ஆணும், 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் வந்து நின்றார்கள், வெகுநேரம் மறைமுகமாக அமர்ந்தபடி பேசிக்கொண்டு ஆனந்த்- ஷ்ரவ்யாவின் கவனத்தை ஈர்த்த ஜோடிதான் அவர்கள். 28 வயது மதிக்கத்தக்க ஆணே பேசினான்.

“ஸார்... எங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது. ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம். எங்களை ஒரு போட்டோ எடுக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு, தனது டிஜிட்டல் கேமராவை ஆனந்திடம் தந்தான்.

“ஓ... யெஸ்...” என்ற ஆனந்த், கேமராவை வாங்கிக் கொண்டு, அந்த ஹனிமூன் ஜோடியைப் படம் எடுக்கத் தயாரானான். தனது மனைவியின் இடுப்பில் கை கோர்த்தபடி, மிகமிக நெருக்கமாக நின்று போஸ் கொடுத்தான் கேமரா தந்தவன். வெட்கத்தில் ஷ்ரவ்யா திரும்பிக் கொள்ள... ஆனந்த் வைத்திருந்த கேமராவில் இருந்து வேகமாக ப்ளாஷ் வெளியே வந்து, புதுமண ஜோடியைப் புகைப்படமாக்கிக் கொண்டது.
“தேங்கஸ் ஸார்...” என்று, ஆனந்த்துக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, கேமராவை வாங்கிக் கொண்டவன், “ஸார்... உங்க கேமரா இருந்தா குடுங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுத்துத் தர்றேன்” என்றான்.

ஆனந்த்தும் தனது டிஜிட்டல் கேமராவை எடுத்து அவனிடம் நீட்ட... அவன் வாங்கிக் கொண்டான். தனக்கு அருகில், இன்னொரு ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து வெட்கத்தில் பூத்திருந்த ஷ்ரவ்யாவை கரம் பற்றி இழுத்த ஆனந்த், அவளை தனக்கு முன்பாக கொண்டு வந்து அணைத்தபடி போஸ் கொடுத்தான். அவர்களைக் கேமராவில் பதிவு புதுமாப்பிள்ளை, “ஸார்... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா பொருத்தமான ஜோடியா இருக்கீங்க...” என்று வியந்து பாராட்டிவிட்டு போனான்.

எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாய் வெட்கப்பட்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா புல் தரையில் தனது கால் பெருவிரலால் கோலம் போட ஆரம்பித்துவிட்டாள் ஷ்ரவ்யா.


(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை

 22. மாடர்ன் டிரெஸ்

ஊட்டியில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்ப்பதும், வளைந்து நெளிந்து ஆடையைச் சரி செய்வதுமாக இருந்தாள். குணசீலன் கட்டாயப்படுத்தி அணியச் சொன்ன ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் அவளுக்குப் புதிது என்பதால், அந்த ஆடை அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றியது.

ஆனால், அமுதாவின் நடவடிக்கைகளால் மிகச் சிலரே அவளை பார்த்தார்களே தவிர, மற்றபடி அவளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் பார்க்கவில்லை. அமுதாவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்ட குணசீலனே பேசினான்.

“அமுதா... இது உன்னோட ஊரு கிடையாது. எங்கிருந்தெல்லாமோ வர்ற டூரிஸ்ட்கள்தான் இங்கே அதிகம். இங்கே வர்ற எல்லோருமே மாடர்னா டிரெஸ் போட்டுக்கத்தான் ஆசைப்படுவாங்க. ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டும், இன்னிக்கு உள்ள மாடர்ன் கல்ச்சர்ல தவிர்க்க முடியாத ஒண்ணு. அதைப் போட்டுக்கறதுலேயும் தப்பே இல்லை.”

“ஆனா... எல்லா ஆண்களும் ஒருமாதிரியா பார்ப்பாங்களே...”

“அப்படியெல்லாம் அவங்க பார்க்கறதா நீதான் கற்பனை பண்ணிக்கணும். சரி, அப்படியே பார்த்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு?” குணசீலனின் இந்தக் கேள்விக்கு அமுதாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“அமுதா... உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. ஆனாலும், என் ஒய்ப் எப்படியெல்லாம் மாடர்னா டிரெஸ் பண்ணிக்கணும், அவளோட எப்படியெல்லாம் ஜோடியா ஊர் சுத்தணும்னு நான் பெரிய கற்பனையே பண்ணி வெச்சிருக்கேன். அதை மட்டும், எக்காரணத்தைக் கொண்டும் வீணாக்கிடாதே...”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்தான்.

“மவுனமா இருந்தது போதும் அமுதா. இங்கே நீ மட்டும்தான் ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக்கல. நமக்கு எதிர்ல தன்னோட ஹஸ்பண்டோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கற பொண்ணைப் பாரு. அவள் போட்டு இருக்கற டீ-சர்ட்டையும் பாரு. ரொம்பவும் “லோ நெக்”காப் போட்டு இருக்கா. தான், அப்படி டிரெஸ் போட்டு இருக்கறதுல எந்தத் தப்பும் இல்லன்னு அவ நெனைக்கிறா. அப்படியொரு டிரெஸ் போட்டு இருக்கறதுனால, தான் இன்னும் இளமையா, ரொம்ப ரொம்ப அழகா இருக்கறதாவும் நெனைக்கறா. நீயும் அப்படி நினைச்சிக்கோயேன்...”

இப்போது குணசீலனை லேசாக முறைத்தாள் அமுதா.

“என்ன புரிஞ்சிக்க அமுதா. இந்த வயசுலதான் இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டு அழகு பார்க்க முடியும். நீ போட்டுத்தான் ஆகணும்னு நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ், உன்னை இன்னும் அழகா, கவர்ச்சியாத்தான் காட்டுதே தவிர, துளியும் செக்ஸியா காட்டல. அப்படி இருக்கும் போது, இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வெளியே வர்றதுல என்ன தப்பு இருக்கு?”

குணசீலனுக்குப் பதில் சொல்ல அமுதா வாய் திறந்த போது, அருகில் சர்வர் வந்து நின்றான்.

“ஸார்... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமாக பேசிக்கிட்டே இருக்கீங்க. என்ன சாப்பிடணும்னு சொன்னா, உடனே கொண்டு வந்திடுவேன். சாப்பிட்டுக்கிட்டே நீங்க பேசலாம்...” என்றான் அவன்.

“நீ என்ன சாப்பிடுற? ” அமுதாவை பார்த்துக் கேட்டான் குணசீலன்.

“எனக்கு ரெண்டு இட்லி போதும்.”

அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அமுதா.

“எங்க ரெண்டு பேருக்குமே முதல்ல ரெண்டு இட்லியும் வடையும் கொடுங்க. அதுக்கு அப்புறம், ரவா தோசை குடுங்க...”

“எனக்கு இட்லி மட்டும் போதும். தோசை எல்லாம் வேண்டாம்” அவசரமாக குறுக்கிட்டாள் அமுதா.

“சரி, அப்போ... எனக்கு ஒரேயொரு தோசை மட்டும் குடுங்க...” என்று குணசீலன் சொல்ல, அங்கிருந்து நகர்ந்தான் சர்வர்.

சற்று நேரத்தில் இட்லியும் வடையும் வந்து சேர, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். இருவரும் சாப்பிட்டு முடித்து ஓட்டலை விட்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான் குணசீலன். மணி, 10ஐத் தாண்டி இருந்தது.

குணசீலனும் அமுதாவும் வந்த டிராவல்ஸ் கார் முதன் முதலாக வந்து நின்ற இடம் ரோஸ் கார்டன் என்கிற ரோஜா தோட்டம். ஊட்டியில் விஜயநகரம் எனும் பகுதியில், எல்க் மலையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. ஊட்டியின் நூறாவது மலர்க் கண்காட்சியின் நினைவாக 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் தற்போது ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் உள்ளன. ஊட்டி சீஸன் காலங்களில் இந்தப் பூங்கா முழுக்க ரோஜா மலர்களால் நிரம்பி வழியும். மற்ற நாட்களில் குறைந்த அளவிலான ரோஜாப் பூக்களையே பார்க்க முடியும்.

இப்போது, குணசீலனும் அமுதாவும் வந்திருப்பது சீஸன் நேரம் என்பதால், அந்தப் பூங்காவில் எங்கு பார்த்தாலும் ரோஜாப் பூக்களாகவே காணப்பட்டன. அமுதாவுக்கு ரோஜாப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றைக் கைகளில் அள்ளியெடுத்துக் கொஞ்சிச் சிலிர்த்தாள். அதைத் தனது கேமராவால் படம் பிடித்தான் குணசீலன். ரோஜாப் பூக்களைப் பார்த்த மாத்திரத்தில் குழந்தையாய்க் குதூகலித்த அமுதா, தான் அணிந்திருக்கும் ஆடை டீ - சர்ட் என்பதை மறந்து ரோஜாச் செடிகளின் அருகில் சென்று குனிவதும் நிமிர்வதுமாக இருந்தாள். அதையும் படம் பிடித்தான் குணசீலன். அந்தப் படங்கள் அமுதாவை அழகாகக் காட்டுவதற்குப் பதிலாக ஆபாசமாகக் காட்டின.

(தேனிலவு தொடரும்...)
Share:

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 21

ஊட்டி

சாக்லெட்டின்

கதை!
 
நெல்லை விவேகநந்தா

ட்டி தாவரவியல் பூங்காவின் அழகை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. விதவிதமான வண்ண மலர்கள்... நீண்டு வளர்ந்த மரங்கள்... பஞ்சு மெத்தைப் புல்வெளிகள், ஜில்லென்ற குளிர்ந்த காற்று... என்று, ரம்மியமாக அமைந்திருந்த அந்தப் பூங்கா அவளை இன்னும் உற்சாகமாக்கியது. ஆனந்தின் இடது கையைத் தனது வலது கைக்குகள் சிறைப்பிடித்துக் கொண்டு அந்தப் பூங்காவை வலம் வந்தாள்.

“ஆனந்த் இந்தப் பூங்கா ரொம்ப அழகா இருக்குல்ல?”

“ஊட்டின்னாலே அழகுதான். அங்குள்ள பூங்காவின் அழகு பத்திச் சொல்ல வேணுமா என்ன?”

“இப்படியொரு அழகான பூங்காவை வேறு எங்கேயும் நான் பார்த்ததே இல்லை.”

“அதுசரி, இந்தப் பூங்காவுக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டியும் இருக்கு தெரியுமா?”

“என்னது?”

“இந்தப் பூங்காவின் புல்வெளிகளில் கதாநாயகிகளோடு உருண்டு புரளாத கதாநாயகன்களே இல்லை, அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

“என்னது... இங்கே ஷூட்டிங் எல்லாம் எடுப்பாங்களா?”

“ஆமாம்... இடைக்கால சினிமாக்கள் பார்த்தாலே தெரியும். அழகழகான பூங்காவையும், மலைப்பிரதேசங்கள்ல மட்டுமே பார்க்கக் கூடிய மரங்களையும் காட்டுவாங்க. அந்த இடம் வேறு எதுவும் இல்லை. இதே இடம்தான். ஏன்... இப்போ நாம நின்னுட்டு இருக்கோமே... இந்த இடத்துல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் எல்லோரும் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா கூட டூயட் பாடியிருக்காங்க. நீ ஆசைப்பட்டா நாமளும் ஒரு டூயட் பாடிடுவோம்.”

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, பேக்ரவுண்ட்ல சாங்க் எதுவும் ஓடாதே...”

“பேக்ரவுண்ட்ல சாங்க் ஓடலன்னா என்ன, மனசுக்குள்ள ஓட்டிட வேண்டியதுதான்...” என்று சொன்ன ஆனந்த், ஷ்ரவ்யாவின் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டு மெய்மறந்து நடந்தான். அவன் எந்தக் கவலையை மறக்க வந்தானோ, அவை சட்டென்று காணாமல் போய் இருந்தன.

அப்போதுதான் அவனுக்கு அந்த நினைவு வந்தது. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சில சாக்லெட்டுகளை வெளியே எடுத்தான். ஷ்ரவ்யாவிடம் நீட்டினான்.

“என்னங்க... எனக்குத் தெரியாம சாக்லெட் எங்கே வாங்கினீங்க? அதுவும், சாப்பிட்டுட்டு கொடுக்குற மாதிரி இருக்குது.”

“உனக்குக் கொடுக்காம நான் மட்டும் எப்படி சாக்லெட் சாப்பிடுவேன். அதுவும், உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி இருக்கேன்.”

“எனக்கு சாக்லெட் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எல்லாப் பெண்களுக்கு பிடிச்ச விஷயம்தானே அது?”

“ஓ... நீங்க அந்த வழிக்கு வர்றீங்களா? அது சரி... இந்த சாக்லெட் ஏன், பைவ் ஸ்டார் சாக்லெட் மாதிரி பேக் செய்யப்படாம இப்படி ஓப்பனா இருக்கு...”

“நீ சொல்ற சாக்லெட் வேற. இது ஊட்டி சாக்லெட்!”

“என்னது... ஊட்டி சாக்லெட்டுக்குமா பேமஸ்?”

“ஆமா... அது உனக்குத் தெரியாதா?”

“தெரியாதுங்கறதுனாலதானே உங்கக்கிட்ட கேக்கறேன்...!”

“இந்த சாக்லெட்டுக்குப் பின்னாடி சுவாராசியமான ஹிஸ்ட்ரியே இருக்கு தெரியுமா?”

“அப்படீன்னா... சாக்லெட் பார்சலை அப்படியேக் குடுங்க...” என்று, அதை வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா, சாக்லெட் துண்டுகளில் ஒன்றை எடுத்துக் கடித்தாள்.

“உண்மையிலேயே இந்த சாக்லெட் சூப்பரா இருக்கு ஆனந்த். வீட்டுச் சாப்பாடுன்னு சொல்வாங்க இல்லையா..? அந்த மாதிரியான ஒரு ஃபீலிங் இருக்கு.”


“நீ சொன்னதுதான் உண்மை. இந்த சாக்லெட்டோட பெயர் ஹோம் மேட் சாக்லெட். பெயர் ஒண்ணுதான்னாலும், க்ரன்ச், கேரமில்க், அல்மாண்ட் ஃபட்ஜ், பிஸ்தா ஃபட்ஜ், வால்நட் ஃபட்ஜ், ஃப்ரூட் அண்ட் நட்ஸ், நட் மில்க், ஹோல் நட், ரோஸ்டட் அல்மாண்ட்... இப்படி இருநூறுக்கும் மேற்பட்ட வெரைட்டீஸ் இதுல இருக்கு.”

“நீங்க சொல்றதப் பார்த்தா... இந்தச் சாக்லெட் உருவான கதை கண்டிப்பா சுவாராசியமாத்தான் இருக்கும். நடந்து கிட்டே நீங்க அந்தக் கதையைச் சொன்னா நான் மறந்துடுவேன். அதோ... அந்த இடத்துல அழகான புல்வெளி தெரியுது. அங்கே உட்கார்ந்து, சாலெட் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே...” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தை அங்கே அழைத்துச் சென்றாள்.

“சரி, இப்போ நீங்க சொல்லக்கூடிய ஊட்டி சாக்லெட்டுக்கும் பிரிட்டிஷ்காரங்களுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?”

“எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்ச?”

“உங்ககூட பேசிப் பேசியே நானும் அறிவு ஜீவி ஆயிட்டேன்.”

“என்னை ரொம்பப் புகழ்றேன்னு நினைக்கிறேன் ஷ்ரவ்யா. ஆனா, எனக்கு இந்தப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது.”

“பில்டப் கொடுத்தது போதும்... இப்போ ஊட்டி சாக்லெட் கதையை சொல்லுங்க...”

“இதோ சொல்றேன்...” என்ற ஆனந்த், ஊட்டி சாக்லெட் வந்த கதையை தெளிவாகச் சொன்னான்.

“இந்தியாவைக் கைப்பற்றி ஆங்கிலேயே ஆட்சி முறையை அமல்படுத்திய பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பிடித்த இடம் என்றால் அது ஊட்டிதான். அங்கு நிலவிய குளுகுளு சூழ்நிலை அவர்களுக்குப் பிடித்து இருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் நிறையவே ஏங்கினர். அதற்குக் காரணம், சாக்லெட்! இங்கிலாந்தில் அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் விதவிதமான சாக்லெட்களை வாங்கி ருசிக்கலாம். ஆனால், ஊட்டிக்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு சாக்லெட் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவில்லை. அவர்களின் சாக்லெட் தாகத்தைப் புரிந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிலேயே அவர்களுக்குத் தேவையான சாக்லெட் தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தார். இப்படித்தான் ஊட்டி சாக்லெட் வந்தது...” என்று, ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டின் வரலாற்றை சொன்ன ஆனந்த், “இந்தச் சாக்லெட் சாப்பிட்டால் நிறைய நன்மை கிடைக்கும்னு சொல்றாங்க. அது என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, சஸ்பென்ஸ் ஆக நிறுத்தினான்.

“சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினது போதும். அப்படி என்ன நன்மைதான் இந்த சாக்லெட் சாப்பிடுறதுனால கிடைக்குது?” ஆர்வமாகக் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட், ப்யூர் சாக்லெட்ங்கறதுனால அதைத் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். இதயத்துக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடணும்ங்கறதுக்காக சுகர் ஃப்ரீ சாக்லெட்டும் இப்போ கிடைக்குது. இந்தச் சாக்லெட்டோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா... இந்தச் சாக்லெட்டை இங்கே தவிர, வேறு எங்கேயும் தயாரிக்க முடியாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதும், “ஏன் தயாரிக்க முடியாது” என்று அப்பாவியாய் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டியில தயாராகுற ஹோம் மேட் சாக்லெட்களை வெறும் கண்ணாடியில் வெச்சுதான் விற்கிறார்கள். ஊட்டியோட க்ளைமேட் காரணமா அது கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். ஆனா, மற்ற ஊர்கள்ல இதை செஞ்சா, ஃபிரிட்ஜ்ல வெச்சிருந்தா மட்டும்தான் அப்படியே இருக்கும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தா... ஐஸ்கிரீம் மாதிரி உருகிப் போயிடும்...”

ஊட்டி ஹோம் மேட் சாக்லெட் உருவான கதையை விலாவாரியாகச் சொன்ன ஆனந்த்தை, ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 20

திடுக்கிட வைத்த ஆடை!

நெல்லை விவேகநந்தா

ள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது.

தனக்கு அருகில் படுத்திருந்த குணசீலனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரு எங்கே போய் இருப்பாரு?” என்று அவள் கண்களால் வேகமாக தேடிய போது, குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஸ் ஆக வெளிப்பட்டான் குணசீலன்.

“முழிச்சிட்டீயா அமுதா? அடிச்சிப்போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. அதான்... கொஞ்ச நேரம் தூக்கட்டுமேன்னு விட்டுட்டேன். பைப்ல வெதுவெதுன்னு வெந்நீர் வந்துட்டு இருக்கு. வேகமாகப் போய் குளிச்சிட்டு வந்துடு. இப்பக் குளிக்கலன்னா... இன்னிக்கு முழுவதுமே நீ குளிக்க முடியாது.”

“ஏன்... தண்ணீர் வராதா?”

“தண்ணீர் வரும். ஆனா... ஐஸ் வாட்டர் ஆகியிருக்கும். நாமதான் குளிக்க முடியாது!”

“ஓ... அப்படியா? சரி... உடனே குளிச்சிட்டு வந்திடுறேன்...” என்ற அமுதா, வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் பாத்ரூமிற்குள் இருந்து அமுதா வெளியே வந்த போது, அவள் மீது வியப்பான பார்வையை வீசினான் குணசீலன்.

உடல் முழுக்க மஞ்சள் தேய்த்துக் குளித்து, சிகப்பு நிற நைட்டியில் வெளிப்பட்ட அமுதா, ஊட்டி ரோஸ் கார்டனில் பூத்த நடமாடும் ரோஜாவாகத் தெரிந்தாள்.

“வாவ்... வாட் எ பியூட்டி? அமுதா... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...”

குணசீலனின் பாராட்டு மழை அமுதாவை நனைக்கவே இல்லை. அவன் சொன்னதற்கு, எந்தப் பதிலும் சொல்லாமல் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏன் அமுதா? நீ ரொம்ப அழகா இருக்கேன்னு வாய் நிறைய சொல்றேன். பதிலுக்கு எதுவும் பேசாவிட்டாலும், கொஞ்சமாவது சிரிச்சு வைக்கலாம் இல்லீயா?”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்!

“நான் சொல்றது உன் காதுல விழுதா, இல்லையா?” சற்று குரல் உயர்த்திக் கேட்டான் குணசீலன்.

“என்னங்க ஆச்சு, உங்களுக்கு? திடீர்னு எங்கிட்ட கோபப்படுறீங்க?”

அமுதா இப்படிக் கேட்டதும் அமைதியாகிப் பேசினான் குணசீலன்.

“இல்லை அமுதா. நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். நீதான் மவுனமா இருக்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள்கூட ஆகல. இப்போ, நான் உங்ககூட ரொம்ப தொலைவுல தன்னந்தனியா இருக்கேன். அப்படி இருக்கும்போது, எங்கிட்ட பயம், பதற்றம் இல்லாம இருக்குமா?”

“அது ஓ.கே., வேற காரணம் ஏதும் இல்லையா?”

“இப்போதைக்கு இல்லதான்!”

“இப்போதைக்குன்னா...?”

‘ஏங்க... நான் என்ன சொன்னாலும் நீங்க கேள்விக் கேட்டுட்டே இருப்பீங்களா? சும்மா விளையாட்டுக்குக் கூட உங்ககிட்ட பதில் சொல்லக்கூடாதா?”

“ஓ... விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னாயா? நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.”

“வேற மாதிரின்னா?”

“ஏன்... நானும் உன்கிட்ட விளையாடக்கூடாதா?”

குணசீலனின் அந்தப் பேச்சு அமுதாவின் மவுனத்தை கலைத்தது. லேசாக சிரித்து வைத்தாள்.

அமுதா சிரித்த அதே கணம், அங்கிருந்த போன் மெதுவாக சிணுங்கியது. ரிசீவரை எடுத்த குணசீலன், அதை இடது காதுக்குள் கொடுத்தான்.

“குட்மார்னிங் ஸார்... ரிஸப்ஷனிஸ்ட் அனிதா பேசுறேன் ஸார். நீங்க இன்னிக்கு டிராவலுக்குக் கேட்ட கார் வந்திடுச்சு. உங்களுக்காக டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.”

“இன்னும் பத்து நிமிஷத்துல கீழே வந்துடுறேன்...” என்ற குணசீலன் போன் இணைப்பை அவசரமாகத் துண்டித்தான்.

“அமுதா... நான் ஏற்கனவே புக் பண்ணின டிராவல்ஸ் கார் கீழே ரெடியா நிக்குது. முதல்ல ஹோட்டலுக்கு போய் திருப்தியா சாப்பிட்டுட்டு, இன்னிக்கு முழுக்க ஊட்டியைச் சுற்றிப் பார்க்கப் போறோம். நாம இங்கே வந்திருக்கிறது ஹனிமூன்ங்றதுனால உனக்காகவே ஸ்பெஷலா டிரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், உனக்குத் தெரியாம! இது, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, பல ஆசைக் கனவுகளோட நானே எடுத்தது. இந்த டிரெஸ்ல என் மனைவி எப்படியெல்லாம் இருப்பான்னு கனவெல்லாம் கண்டிருக்கேன். அந்தக் கனவு இன்னிக்கு நனவாகப் போகுது...” என்றுச் சொல்லிப் பூரித்த குணசீலன், தனது சூட்கேசுக்குள் இருந்து அந்த டிரெஸ்ஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான்.

அதைப் பிரித்துப் பார்த்த அமுதாவின் முகத்தில் பலத்த அதிர்ச்சி!

அவள் கையில் இருந்தது, நவநாகரீகப் பெண்கள் விரும்பும் ஜீன்ஸ், டீ-சர்ட்!

(தேனிலவு தொடரும்...)
Share:

ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு தொடர் கதை - 19


காலை வெட்கம்!

மே 3ஆம் தேதி, காலை 8 மணி.

ஊட்டியின் கடும் குளிருக்குப் பயந்து உல்லன் பெட் ஷீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த ஷ்ரவ்யா கண் விழிக்க வெகு நேரமாகியிருந்தது.

தொடர் பயணம் தந்த களைப்பை வடிகட்டி, அவளை ஃப்ரெஸ் ஆக அனுப்பியிருந்தது முந்தையநாள் இரவுத் தூக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இரவுப் பொழுதை அணுஅணுவாய் ரசித்து அனுபவித்த பூரிப்பும் அவளது முகத்தில் தெரிந்தது.

தனக்கு அருகில் சற்று விலகிப் படுத்திருந்த ஆனந்த் எங்கே என்று தேடினாள். அவனைக் காணவில்லை. ஒருவேளை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்பானோ என்று தேடினாள். அங்கேயும் அவன் இல்லை. அவன் குளித்து முடித்து வெளியேறியிருந்ததை ஈரமாகியிருந்த டவலும் நனைந்துபோய் இருந்த மெடிமிக்ஸ் சோப்பும் உறுதி செய்தன.

உடனே, கதவு திறந்து இருக்கிறதா, மூடி இருக்கிறதா என்று பார்த்தாள். வெளியே பூட்டப்பட்டு இருந்தது. ஆனந்த்தான், கதவைப் பூட்டிவிட்டு எங்கோ சென்றிருந்தான்.

ஷ்ரவ்யாவுக்கு பதற்றமாகிவிட்டது. மொபைலை எடுத்து, ஆனந்தின் நம்பரை அவசரமாகத் தேடி டயல் செய்தாள். அவளை மேலும் பதற்றமாக்க விடவில்லை அவன். மூன்றாவது ரிங்கிலேயே மொபைலை ஆன் செய்தான்.

"ஹாய் ஷ்ரவ்யா. குட் மார்னிங்."

"குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும். இப்போ நீங்க எங்கே இருக்கீங்க-?"

"கூல் ஷ்ரவ்யா. நான் உன்னை விட்டுட்டு வேறு எங்கேயும் போய்விடலை. சூரியன் வர்றதுக்கு முன்னாடியே ஊட்டி குளிர்ல வாக்கிங் போகற சுகமான அனுபவம். அதான், காலையிலேயே குளிச்சிட்டு வெளியே கிளம்பி வந்துட்டேன்."

"என்னையும் வாக்கிங் போக கூட்டிட்டுப் போய் இருக்கலாமே..."

"எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. ஆனா..."

"என்ன ஆனா..."

"அதுபத்தி நேர்லயே சொல்றேனே..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்பவே அதுக்கான ரீஸன் சொல்லியாகணும்."

"அடம்பிடிக்காத ஷ்ரவ்யா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன் முன்னாடி நிப்பேன். அதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு, டிபன் சாப்பிட ரெடியா இரு."

"சமாதானப்படுத்துறது சரிதான். நீங்க இங்கே வந்த உடனேயே அந்த ரீஸனைத்தான் முதலில் கேட்பேன். பதில் சொல்ல ரெடியா வாங்க..."

ஆனந்திடம் அதற்கான பதிலை எதிர்பார்க்காமல் மொபைல் இணைப்பைத் துண்டித்தாள் ஷ்ரவ்யா.

சரியாக 5 நிமிடம் வேகமாகக் கரைந்திருந்தது. திடீரென்று ஷ்ரவ்யாவின் மொபைல் அழகாகச் சிணுங்கியது. மொபைல் திரையில் ”டார்லிங்” என்கிற பெயர் பளிச்சிட்டது. ஆனந்த் பெயரைத்தான் அப்படி தனது மொபைலில் பதிவு செய்திருந்தாள். அடுத்த நொடியே அறையின் ஹாலிங் பெல் ஒலித்தது. உடனே, கதவைத் திறந்தாள்.

”நான் வெளியே சென்று நீ மட்டும் லாட்ஜ் அறையில் தனியாக இருக்கும்போது முதலில் மொபைலில் மிஸ்டு கால் கொடுத்துவிட்டு ஹாலிங் பெல்லை அடிப்பேன். அதுக்குப் பிறகுதான் கதவைத் திறக்கணும்” என்று ஆனந்த் ஏற்கனவே சொல்லி இருந்ததால் கதவை ஆர்வமாகத் திறந்தாள் ஷ்ரவ்யா. எதிரே ஆனந்த்!

“ஹாய்... நைட் நல்லாத் தூங்கினீயா?”

"ஆமாம்" என்று பதில் சொல்வதற்கு வாயெடுத்தாள் ஷ்ரவ்யா. அதற்குள் அவனே முந்திக்கொண்டு பேசினான்.

"கண்டிப்பா நீ நல்லாத் தூங்கியிருப்ப. உன்னோட கோலத்தைப் பார்த்தாலே தெரிஞ்சிதே..." என்று ஆனந்த் சொல்லவும்... சட்டென்று அமைதியானாள். எதை மனதில் வைத்துக்கொண்டு ஆனந்த் இப்படிப் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை.

"ரொம்பவும் யோசிக்காத ஷ்ரவ்யா. இப்போ உன்னோட முகத்தைப் பாக்கும்போது, ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்தால் எப்படியொரு பிரகாசம் இருக்குமோ... அப்படியொரு பிரகாசம் தெரியுது. அதனாலத்தான், நீ நைட் முழுக்க நல்லாத் தூங்கியிருப்பன்னு சொன்னேன்" என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் ஆனந்த்.

ஆனால், ஷ்ரவ்யாவுக்குதான் உண்மை சட்டென்று பிடிபடவில்லை. அதனால், பேச்சை மாற்றினாள்.

"அதுசரி... இன்னிக்கு காலையில ஏன் என்னையும் வாக்கிங் கூட்டிட்டு போகலன்னு கேட்டதுக்கு நேர்ல பதில் சொல்றேன்னு சொன்னீங்களே... அது என்ன பதில்?"

"இப்பவே அதை சொல்லித்தான் ஆகணுமா?"

"கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும்!"

"அது சாதாரண விஷயம்தான். சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்."

"இப்படி சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினா... நீங்க என்ன ரீஸன் சொல்லப் போறீங்கங்ற இன்ட்ரஸ்ட்தான் எனக்கு இன்னும் அதிகமாகும். அதனால, இப்பவே சொன்னா நல்லா இருக்கும்."

"நான் அதுபத்தி சொல்றதுல பிரச்னை ஒண்ணுமில்ல. நீதான் தப்பா எடுத்துப்பீயோன்னு கொஞ்சம் பயமா இருக்கு..."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், சட்டென்று அமைதியாகி தனக்குத்தானே அப்படியொரு கேள்விக் கேட்டுக் கொண்டாள் ஷ்ரவ்யா.

"ஏதாவது விவகாரமான விஷயமா இருக்குமோ? பேசாம அப்படியே விட்டுடுவோமோ..." என்று அவள் நினைத்தாலும், அவளது ஆழ்மனதின் இன்னொரு பக்கத்தில் அந்த சஸ்பென்ஸ் விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலும் இருந்தது. அதனால் அந்தப் பேச்சை அவள் ஒத்திப்போடவில்லை.

"இல்லை ஆனந்த். அது, என்ன விஷயமா இருந்தாலும் சரி, நீங்க அதை இப்பவே என்கிட்ட சொல்லித்தான் ஆகணும்."

"என்ன ஷ்ரவ்யா... இவ்ளோ அடம்பிடிக்குற?"

"என்னது அடம்பிடிக்கிறேனா? நான் என்ன உங்கக்கிட்ட 10 பவுன்ல தங்கநெக்லஸ் வாங்கிக் குடுங்கன்னா கேட்டேன்? என்னை வாக்கிங் போகுறதுக்கு ஏன் கூட்டிட்டு போகலன்னுதானே கேட்டேன்?"

"அம்மா தாயே... உண்மையைச் சொல்லிடுறேன். சாதாரண மேட்டருக்கு இவ்ளோ டயலாக் எல்லாம் அதிகம். இங்கே வா... என் பக்கத்துல வந்து உட்காரு. உன்னோட காதுல ரகசியமாவே அதைச் சொல்றேன்."

"என்னது... ரகசியமா?"

"ரகசியம்தான்! வேற யாருகிட்டேயும் சொல்லிடாத."

சரியென்று தலையாட்டிவிட்டு ஆனந்த் முகத்துக்கு அருகில் தனது காதைக் கொண்டு சென்றாள் ஷ்ரவ்யா. வெட்கப்பட்டுக் கொண்டே பதில் சொன்னான் அவன்.

"இன்னிக்கு அதிகாலையில உன்னை வாக்கிங் போவோமான்னு கூப்பிடுறதுக்காக எழுப்பினேன். நீ எழுந்திருக்கறதுக்கு பதிலா வேகமாக உருண்டு திரும்பின. அப்போ நீ போட்டு இருந்த மேரேஜ் நைட்டியோட முன்பக்க நாடா அவிழ்ந்திடுச்சு. உன்னோட அந்தக் கோலத்துல, நான் இதுவரைக்கு நேர்ல பாக்காதப் பாத்துட்டேன்..."

ஆனந்த் இப்படிச் சொல்லவும் அவனிடம் இருந்து வேகமாக அகன்று தள்ளி உட்கார்ந்த ஷ்ரவ்யா, கழுத்தை ஒட்டிப் போட்டிருந்த தனது துப்பட்டாவை வேகமாக கீழ் நோக்கி இழுத்துவிட்டு சரிசெய்தாள், அவளை அறியாமல்! அவளது முகம், வெட்கத்தில் வேகமாக சிவந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 18


அம்மாவின் மிரட்டல்!

முதாவும் குணசீலனும் இன்டிகா காரில் மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கியபோது நன்றாக இருட்டியிருந்தது.

அமுதாவின் முகத்தில் ஓடிக் கொண்டிருந்த குழப்ப ரேகைகள் குணசீலன் முகத்தில் லேசான அதிர்ச்சியை வரவழைத்திருந்தது.

"அமுதா... உன் மவுனமும் கோபமும் எனக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல ஒரு பொண்ணுக்கு தன்னோட கணவனை முழுசாப் புரிஞ்சிக்கறதுங்றது முடியாத ஒண்ணுதான். ஆனா... உன்னோட நடவடிக்கையப் பார்த்தா, நான்தான் இன்னும் உன்னை நல்லாப் புரிஞ்சிக்கலையோன்னு தோணுது.”

குணசீலன் கேள்விக்கு அமுதாவிடம் உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. மவுனமாக வெளி இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். காரில்தான் போய்க் கொண்டு இருக்கிறோம் என்கிற நினைவே அவளுக்கு இல்லை. ஏதோ மயக்கமாகிச் சரிவதுபோன்று காரின் சீட்டில் தலை சாய்ந்தாள். அவளது மனதுக்குள் அந்தக் காட்சி வேகமாக வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று அமுதாவின் வீட்டில் பெரிய பிரச்னை. அமுதா, அசோக் காதல்தான் காரணம்!

"நான் சொல்ற மாப்பிள்ளையைத்தான் நீ கட்டிக்கணும். அவனைத்தான் கட்டிப்பேன், இவனைத்தான் கட்டிப்பேன்னு சொன்னா, நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.”

வீட்டில் பிரச்னை ஆரம்பிக்கும் முன்பு, அமுதாவின் அம்மா பாக்கியம் இப்படித்தான் ஒரு வார்த்தை சொன்னாள்.

தனது காதல் விவகாரம் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்பதை உறுதி செய்த அமுதா, அசோக்கைத் தான் காதலிக்கும் விசயத்தைச் சொல்லி விட்டாள். அதன்பிறகு ருத்ரதாண்டவமே ஆடிவிட்டாள் பாக்கியம்.

"உன்னைக் கட்டிக்கறதுக்கு அவனுக்கு என்னடீ தகுதி இருக்கு-?"

"அத்தைப் பையன்ங்ற ஒரு தகுதி போதாதா?"

"என்னடீ அத்தைப் பையன், நொத்தைப் பையன்னு சொல்ற? அவன் என்னடீ சம்பாதிக்கறான்? அவன் வாங்குற எட்டாயிரத்த வெச்சு சாப்பிடத்தான் முடியும். குடும்பம் நடத்த முடியாது."

"இன்னிக்கு வேணும்னா அவன் எட்டாயிரம் சம்பாதிக்கறவனா இருக்கலாம். ஆனா, நாளைக்கு என்பதாயிரம் சாம்பாதிப்பான்."

"நாளைங்றது வெறும் கற்பனைதான். இன்னிக்குதான் நிஜம்!"

"நீ பாக்குற மாப்ள, இன்னிக்குப் பணக்காரனா இருக்கலாம், நாளைக்கு அவன் கோபுரத்துல இருந்து குப்பைக்கு வந்துட்டா என்ன செய்வ? வாழ்க்கையில எதுவும் நிரந்தரம் இல்ல. எனக்கு அசோக்கைத்தான் பிடிச்சிருக்கு. அவனைத்தான் கட்டிப்பேன்."

"என்னடீ... நான் கிளிப் பிளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க... இப்பவே அவன மறந்துட்டா எல்லாமே நல்லா நடக்கும். அடம்புடிச்சா... உன்னோட வழிக்கு வந்துடுவேன்னு நினைக்காத. அடிச்சுப் பணிய வெச்சாவது, வேற எவனுக்காவது, பணக்காரப் பையனாப் பாத்துதான் கட்டிக் கொடுப்பேன்."

"உனக்கு இப்போ என்ன ஆச்சும்மா? பணம்... பணம்னு பேசிட்டு இருக்கே... எனக்கு அசோக்தான்னு என்னிக்கோ முடிவு பண்ணினதா நீகூட என்கிட்ட சொல்லி இருக்கீயே... அன்னிக்கு மட்டும் சிரிச்சுட்டு இருந்த நீ, இன்னிக்கு மட்டும் ஏன் எரிஞ்சு விழுற?"

"எல்லாம் உன்னோட நன்மைக்குதாண்டீ. அன்னிக்கு உறவு விட்டுப் போகக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால அப்படிச் சொன்னேன். இன்னிக்கு எல்லாமே பணம்தான். பணம் இல்லாட்டி வாழவே முடியாது."

"நீ சொல்றபடி பணம் இல்லாட்டி இந்த உலகத்துல வாழ முடியாதுதான். ஆனா, அந்தப் பணத்தை வெச்சு உண்மையானப் பாசத்தை வாங்கிட முடியாது."

"இதுக்கு மேலேயும் நீ அவனப் பத்திப் பேசுனா, பேசுற நாக்குல சூடு வெச்சிடுவேன். பெத்தப் பொண்ணுன்னுகூட பார்க்க மாட்டேன்."

பாக்கியத்திடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. அவளோ விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மகள் அழகாக இருப்பதால், அந்த அழகைப் பிரதான மூலதனமாக வெச்சுப் பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து விடலாம். இந்த சமுதாயத்தில் தனது மதிப்பும் சட்டென்று உயர்ந்துவிடும் என்று கணக்குப் போட்டாள் பாக்கியம்.

அவள் போட்டக் கணக்கு தப்பவில்லை. பல பெரிய வீட்டு மாப்பிள்ளை ஜாதகங்களை அலசிய வேளையில், அவளது கைக்கு குணசீலனின் ஜாதகமும் வந்து சேர்ந்தது. அதுவும், அசோக் ஊரைச் சேர்ந்தவன்தான் என்பதால் அந்த மாப்பிள்ளைக்கு டபுள் ஓ.கே. சொன்னாள்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது. நகரத்து நாகரீக மங்கைகளுடன் நெருங்கிப் பழகி விட்டதால் பக்காக் கிராமத்துப் பெண்ணை எதிர்பார்த்திருந்த குணசீலன், அழகான, அம்சமான அமுதாவைப் பார்த்த மாத்திரத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டான்.

அதுவும், “எனக்கு வரதட்சணை என்று எதுவும் நீங்க தர வேண்டாம். நீங்க விருப்பப்பட்டத பொண்ணுக்கு போட்டாப் போதும்” என்று அவன் சொல்ல... “இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க நாங்கதான் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சி இருக்கணும்” என்று சந்தோஷத்தின் உச்சத்தில் நின்று பேசினாள் பாக்கியம்.

அதே நேரம், எனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை என்று எவ்வளவோ போராடிப் பார்த்தாள் அமுதா. நீ திருமணத்துக்கு சம்மதிக்கலன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு பாக்கியம் மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், நிஜமாகவே மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டி சகிதமாக நிற்க... வேறு வழியின்றி காதலை உதறிவிட்டு, குணசீலன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்தவனுக்கு அவளது உடல்தான் சொந்தமாகி இருந்ததே தவிர, அவளது உள்ளம் என்னவோ அசோக்கைத்தான் நிரந்தரமாய் சிறை வைத்திருந்தது. அதன் விளைவுதான்... குணசீலனுடன் தேனிலவுக்கு வந்த இடத்தில் பெரும் மனக் குழப்பத்துக்கு ஆளாகியிருந்தாள்.

“அமுதா... கண்ணைத் திறந்து பாரு...”

குணசீலன் வேகமாகத் தட்டியெழுப்பிய பிறகுதான் கண் விழித்தாள் அமுதா. ஊட்டி மலைப் பயணத்தை தூக்கத்தில் தொலைத்திருந்த அவளின் கண்கள் முதன் முதலாக நடுநீசி ஊட்டி நகரத்தைப் பார்த்தபோது சற்றே மிரண்டு போயின.

(தேனிலவு தொடரும்...)
Share:

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 17


 மேரேஜ் நைட்டி!

மாலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டத் துவங்கியிருந்தது . இயற்கை தீட்டிய பச்சை வண்ணங்களுக்கு மத்தியில் எழுந்திருந்த கட்டிடங்கள் மீது மோதிக் கொண்டு நின்றிருந்த மேகக்கூட்டங்கள்... யூகலிப்டஸ் இலைகளை இறுக்கித் தழுவி, அதன் வாசனையை அள்ளிக் கொண்டு வந்த குளிர்ந்த காற்று... மேற்கு சிவக்காத வானம்... என்று ஊட்டியின் அன்றைய க்ளைமேட் ஆனந்தையும் ஷ்ரவ்யாவையும் உற்சாகம் கொள்ளச் செய்தது. பயணம் தந்த களைப்பை மறந்து அந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர் அவர்கள். அப்போதுதான் ஆனந்துக்கு அந்த ஞாபகம் வந்தது.

"ஷ்ரவ்யா... நம்ம டிரெஸ் எல்லாமே வண்டியோட போய்விட்டதே... இன்னிக்கு நைட்டுக்கு மட்டுமல்ல, இன்னும் ஒரு வாரத்துக்குப் போட்டுக்க டிரெஸ் வேணும் இல்லீயா-?"

"டிரெஸ் இல்லாட்டாலும் நான் அட்ஜெஸ் பண்ணிப்பேன்."

"ம்ம்ம்... மெட்ராஸ் குசும்பு?"

"குசும்பும் கிடையாது, குழம்பும் கிடையாது. உண்மையாத்தான் சொல்றேன்..." என்ற ஷ்ரவ்யா, சற்றே முகத்தை திருப்பிக் கொண்டு ஆனந்துக்குத் தெரியாமல் மெல்லியதாகச் சிரித்து வைத்தாள்.

”சரி, நக்கலா சிரிச்சது எல்லாம் போதும். வா... நல்ல டிரெஸ்ஸா ஆளுக்கு ரெண்டு வாங்கிட்டு வருவோம்.”

“எனக்கு ரெண்டே ரெண்டு டிரெஸ்தானா?”

”ரெண்டு இல்லம்மா... இருபது கூட எடுத்துக்கலாம். முதல்ல எந்திருச்சி வெளியே வா.”

அடுத்த நிமிடமே, ரூமை பூட்டிவிட்டு வெளியேறியிருந்தனர் இருவரும்.

பொட்டானிக்கல் கார்டன் செல்லும் சாலை வழியே ஆனந்தும் ஷ்ரவ்யாவும் ”வாக்கிங்” சென்றபடியே நல்ல துணிக்கடை தென்படுகிறதா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான கடைகள் இல்லை. வேறு வழியில்லாததால் இரண்டு தளங்களில் இயங்கி வந்த ஒரு துணிக் கடைக்குள் புகுந்தனர். மற்ற ஆடைகளைக் காட்டிலும் ஸ்வெட்டர்களையே அதிகமாக வாங்கிக் குவித்து வைத்திருந்தனர். ஜீன்ஸ் பேண்ட், டீ- சர்ட்டைத் தேடினான் ஆனந்த். அவன் எதிர்பார்த்த வெரைட்டிகள் கிடைக்கா விட்டாலும், வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தலா நான்கு ஜீன்ஸ், டீ - சர்ட்களை தனக்கு தேர்வு செய்தான்.

ஷ்ரவ்யாதான் ஆடையை தேர்வு செய்யாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள்.

”என்னாச்சு ஷ்ரவ்யா-? உனக்கு டிரெஸ் செலெக்ட் பண்ணலீயா?”

“எந்த டிரெஸ்ஸுமே குவாலிட்டியா இல்ல. ஆனால், விலை மட்டும் ரெண்டு, மூணு மடங்கு அதிகமா வெச்சியிருக்காங்க.”

“இங்க மட்டுமில்ல, ஊட்டியில எந்த கடையில போயி டிரெஸ் வாங்கினாலும் இப்படித்தான் விலை இருக்கும். சென்னை சில்க்ஸ், போத்தீஸ் ரேஞ்சுக்கு இங்கே எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதால் சுடிதார் செக்சன் பக்கம் போனாள் ஷ்ரவ்யா.

“ஷ்ரவ்யா..” திடீரென்று அழைத்தான் ஆனந்த்.

“மெரூன் கலர் சேலை, எல்லோ கலர் ஜாக்கெட், தலைநிறைய மல்லிகைப்பூ வெச்சிட்டு வந்தா நீ தேவதை மாதிரி இருப்ப. அந்த அழகான கோலத்துல உன்னப் பாக்கணும்னு ஆசைப்படுறேன். நீ விருப்பப்பட்டா, அந்தக் கலர் சேலையை செலெக்ட் பண்ணேன்.”

“செலெக்ட் பண்ணுறதுல பிரச்னை இல்ல ஆனந்த். ஆனா, ஜாக்கெட்டை எங்கேப் போய் தைக்கக் குடுக்குறது?”

“ஆமால்ல... நான் மறந்துட்டேன். பரவாயில்லை... உனக்குப் பிடிச்ச டிரெஸ்ஸையே செலெக்ட் பண்ணிக்கோ...” என்ற ஆனந்த், தான் தேர்வு செய்த ஆடைகளை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றான். சற்றுநேரத்தில் ரெடிமேட் சுடிதார் இரண்டும், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் ஆகியவை தலா இரண்டும், சில உள்ளாடைகளும் வாங்கிக் கொண்டாள். கூடவே, வெட்டிங் நைட்டி இரண்டும் வாங்கி இருந்தாள். அதுவும் சிவப்பு நிறத்தில்!

பில் போடும்போதுதான் அந்த நைட்டிகளைப் பார்த்தான் ஆனந்த். மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தன.

“இவ, இதை எதுக்கு வாங்கியிருக்கா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், அதுபற்றிக் கேட்க முடியாமல் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்தான். பில் தொகை 10 ஆயிரம் ரூபாயை நெருங்கியிருந்தது.

ஆடைகளை வாங்கிக் கொண்டு கடையைவிட்டு வெளியேறிய பிறகுதான் ஷ்ரவ்யாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் ஆனந்த்.

“ஷ்ரவ்யா... நீ ரெண்டு நைட்டி வாங்கி இருந்தீயே... அது ரொம்பவும் அழகா இருந்துச்சு.”

“ஆமாங்க... அதனாலத்தான் நானும் அதை வாங்கினேன். அதோட பேரு, மேரேஜ் நைட்டி.”

“சாதாரணமா எல்லோரும் அணியக்கூடிய நைட்டி கூட அழகா இருக்குமே.வேற எதுக்கு இந்த மேரேஜ் நைட்டி?”

“என்ன ஆனந்த்... ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்குறீங்க. இன்னிக்கு காலையிலதானே நமக்கு கோயில்ல கல்யாணம் நடந்துச்சு. அதனாலதான் இந்த நைட்டி!”

ஷ்ரவ்யா இப்படியொரு பதிலை சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனந்த். மவுனமாகவே அவளுடன் நடந்தான்.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 16

 காதல்
பரிமாற்றம்!

ன்று குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. தனது குடும்பத்தினருடன் அமுதாவையும் அங்கே அழைத்து வந்திருந்த அசோக், அவளிடம் எப்படியாவது தனது காதலை நேரடியாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான். ஏற்கனவே தொலைபேசி வழியாக அமுதாவிடம் காதலை மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும், மணிக்கணக்கில் அவளிடம் அரட்டையடித்து இருந்தாலும், ஐ லவ் யூன்னு சொல்வதற்கு மட்டும் அவனது நாக்கு ஏனோ தடுமாறியது.

ஐந்தருவிக்கு எல்லோரும் குளிக்கச் சென்ற இடத்தில், அமுதா மட்டும் குளிக்கச் செல்லாமல் திரும்பிவர, தனி ஆளாகக் கையைப் பிசைந்து கொண்டு நின்ற அசோக் அவளைப் பார்த்து விட்டான்.

அசோக்கிடம் நிறைய பேச வேண்டும் என்பது அமுதாவின் எதிர்பார்ப்பும்தான் என்பதால்தான், அவள் உல்லாசக் குளியலைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அசோக்கைத் தேடி வந்தாள்.

இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.

"அசோக்... நீ, இங்கே என்ன செஞ்சுட்டு இருக்க?"

"மெயின் அருவியில் குளிச்சது போதும், குற்றால அழகை ரசிக்கலாமேன்னு வந்தேன்."

"அட, நான்கூட அதுக்காகாகத்தான் வந்தேன். நமக்குள்ள என்ன ஒற்றுமை பாத்தாயா-?"

அமுதாவின் பதில் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறது? என்பது அசோக்குக்குப் புரிந்து விட்டது.

இதுதான் ஐ லவ் யூ சொல்ல சரியான நேரம். அவளும் இதைத்தான் எதிர்பார்க்குறாங்குறது கன்பார்மா தெரியுது. கோட்டை விட்டுடாதடா அசோக்கு... என்று தனக்குள்ளேயே சொல்லி உசுப்பேற்றிக் கொண்டான் அசோக்.

"அசோக்... ரொம்பவும் டீப்பா எதையோ நீ யோசிக்கற மாதிரி தெரியுதே..."

"கொஞ்ச தூரம் காலாற நடந்து போயிட்டு வரலாம்னு தோணுது. அத, உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல."

"இதுல என்னடா இருக்கு. நான் உன்னோட அத்தைப் பொண்ணு மட்டுமல்ல, முறைப் பொண்ணும்கூடத்தானே?"

அமுதாவின் இந்தப் பதில் அசோக்கிற்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கண்ணா... ரெண்டு லட்டு திங்க ஆசையான்னு கேட்கற மாதிரி இருக்குதே... என்று, காதல் பரவசத்தில் தத்தளித்தான் அசோக்.

தொடர்ந்து, இருவரும் குற்றால அழகை ரசித்தபடி குற்றால வீதியில் நடந்து சென்றனர்.

சிகப்பு நிறச் சுடிதாரில் வந்திருந்த அமுதா, துப்பட்டாவை எப்படி அணிய வேண்டுமோ... அதைச் சரியாக அணிந்திருந்தாள். துளியும் விரசம் இல்லாத அவர்களுக்கு இடையேயான பேச்சுக்கள், அவர்களது காதல் புனிதமானதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.

இவர்களது ஆத்மார்த்த காதல் குற்றால மலை அருவிகளை முத்தமிட்டு வந்த தென்றல் காற்றுக்குதான் பிடிக்கவில்லை. திடீரென்று வேகமாக வந்த அந்தக் காற்று, அமுதாவின் துப்பட்டாவை பறந்தோடச் செய்தது.

அமுதா மட்டுமல்ல, அசோக்கும் இதை எதிர்பார்க்கவில்லை. காற்று அடித்த வேகத்தில் வேகமாக பறந்து சென்ற துப்பட்டாவை நோக்கி வேகமாக ஓடினர், இருவரும்!

ஒருவழியாக அதைப் பிடித்துவிட்ட அசோக், எதையோ சாதித்து விட்டதைப் போல உணர்ந்தான்.

துப்பட்டாவை அவன் எடுத்துக் கொண்டு திரும்ப... அவனைப் பின்தொடர்ந்து வேகமாக ஓடிவந்த அமுதா, மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி வந்து நின்றாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அசோக். இந்தக் காத்து இப்படிப் பண்ணும்னு நான் எதிர்பார்க்கல..." என்றாள் அமுதா.

"நானும் எதிர்பார்க்கல, ஆனா... நல்லாத்தான் இருக்குது... என்று சொன்ன அசோக், துப்பட்டா இல்லாத அவளது தேகத்தை திடீரென்று பார்த்தான்.

அமுதா என்ன நினைத்தாளோ, சட்டென்று அசோக்கிடம் இருந்து வாங்கிய துப்பட்டாவை தனது மாராப்பில் வேகமாகப் போட்டுக் கொண்டாள்.

"அமுதா... நான் நல்லாத்தான் இருக்குதுன்னு சொல்ல வந்தது உன்னப் பத்தி இல்ல... காத்துல பறந்துபோன ஹீரோயினோட துப்பட்டாவை தேடி ஓடும் ஹீரோக்களை படத்தில்தான் பார்த்திருக்கேன். நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமான்னு அப்போ தோணும். அதே சம்பவம் இப்போ நிஜமாகவே நடக்குறது ஆச்சரியமாகத்தான் இருக்கு..." என்று பேச்சை மாற்றினான்.

அவன் பொய் சொல்வது அமுதாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும், அவனது பொய்யை ரசித்தாள்.

அப்போதுதான் திடீரென்று குனிந்து எதையோ எடுத்தாள் அமுதா. துப்பட்டா ரேஸில் ஜெயித்துவிட்டு திரும்பிய அசோக், தனது மொபைலைத் தவறவிட்டிருந்தான். அதைத்தான் அவள் எடுத்தாள்.

சட்டென்று அமுதா குனிந்துவிட்டு திரும்பியபோதுதான் அந்தக் காட்சியை பட்டென்று பார்த்துவிட்டான் அசோக். அமுதாவின் துப்பட்டா திடீரென்று சரிந்து விலகியதில், அவளது மார்பிற்கு சற்று மேலே தனியாய் தவித்திருந்த அந்த அழகான மச்சத்தை பார்த்து விட்டான்.

அமுதாவும் அதைக் கவனித்து விட்டாள். உடனடியாகத் தனது மாராப்பை சரிசெய்தாள். ஆனால், மச்சத்தைப் பற்றி அப்போதைக்கு அவன் எதுவும் கேட்கவில்லை.

சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு அசோக்கே வாய் திறந்தான்.

"அமுதா... நீ ரொம்ப அழகுன்னா, உன்னோட மச்சம் இன்னும் அழகா இருக்கு."

"என்னது... மச்சமா? அப்படி எதுவும் என்கிட்ட இல்லீயே..."

"மச்சம் இல்லன்னு உன் வாய்தான் சொல்லுது. ஆனா, இருக்குன்னு உன்னோட ரெண்டு கண்ணும் சொல்லுதே..."

"வாயாலத்தான் உண்மையைச் சொல்ல முடியும். கண்ணால சொல்ல முடியாது."

"யார் சொன்னது? காதல்ல கண்களுக்குத்தான் முதலிடம். முதல்ல கண்கள் பேசிக்கொண்டால்தான் பிறகு வாயால் பேசிக்கொள்ள முடியும்."

"காதலா? யாரோட காதல சொல்ற?"

"நம்ம காதலைத்தான்!"

இப்படிச் சொன்ன பிறகுதான், எதையும் அறியாமல் காதலை வெளிப்படுத்தி விட்டதை உணர்ந்தான் அசோக். அமுதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தாலும், காதலுக்கான சம்மதத்தைச் சொல்லவில்லை. அதேநேரம், அசோக் தன்னை உறுதியாகக் காதலிக்கிறான் என்கிற பரவசத்தில் தன்னை மறந்தாள். ஒருகணம் கண்கள் மூடி அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தாள்.

திடீரென்று யாரோ தன்னைப் பிடித்து உலுக்க, கண் விழித்தாள் அமுதா. குணசீலன்தான் அவளை உலுக்கினான்.

"ரொம்ப நேரமாகக் கண்ண மூடிட்டு இருந்த. சரி, உறங்கறேன்னு நினைச்சேன். ஆனா, நீயாவே சிரிக்குற. அதனாலதான், உனக்கு என்ன ஆச்சுன்னு எழுப்பினேன்."

குணசீலன் விளக்கம் தந்த பிறகுதான், அசோக் தனது கனவு கலந்த நினைவில் வந்துவிட்டு போனதை உணர்ந்தாள் அமுதா.

அதேநேரம், அமுதாவும் குணசீலனும் பயணித்த பேருந்து திருப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 15


ஊட்டியில் அறை எண் 107!

கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்த வழியில், கார் டிரைவர் ஏமாற்றிவிட்டு உடமைகளோடு ஓடிவிட... ஆபத்பாந்தவனாக வந்து உதவிய அரசு பேருந்தில் ஏறி, ஒருவழியாக ஊட்டிக்கு வந்து இறங்கினார்கள்... ஆனந்தும், ஷ்ரவ்யாவும்.

ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தால் வேகமாக முகத்தில் வந்து மோதுமே... அப்படியொரு குளிர்ச்சி ஊட்டியில்! ஊரே ஏ.சி. குளுமையில் ஜில்லென்றிருந்தது. கடுகடுக்க வைக்கும் மதிய வெயிலில் சென்னை தி.நகர் வீதிகளில் அலைந்து விட்டு, சரவணா ஸ்டோர் கடை முன்பு வந்தால்... அங்கிருந்து வந்து மோதும் ஏ.சி. காற்றின் குளுமையை அனுபவிப்பதே தனி சுகம். இந்த சுகம், இங்கே ஊட்டி முழுக்க நிரம்பியிருந்தது.

"ஆனந்த்... ஊட்டியில இதே க்ளைமேட் எப்போதும் இருக்குமா?"

"இப்போ சீஸன் நேரம். அதனால, இப்படி ஜில்லுன்னு இருக்கு. மற்ற நேரங்கள்ல இதைவிட அதிகமாக் குளிரும். முதன் தடவையா இங்கே வந்திருக்கல்ல, அதான் உனக்கு ஊட்டி ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனா, இங்கே உள்ளவங்க கிட்ட கேளு; இங்கே வாழ்றதே வேஸ்ட்டுன்னு சொல்வாங்க."

"அவங்க ஏன் அப்படிச் சொல்லணும்? வாழ்ந்தால், ஊட்டி மாதிரியான இடத்துல வாழணும்னு நாமெல்லாம் சொல்றோம். ஆனா, ஊட்டியில உள்ளவங்களுக்கு, அங்குள்ள வாழ்க்கை பிடிக்கலன்னு எப்படி சொல்றீங்க?"

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், ஆனந்துக்கு லேசா எரிச்சலாக இருந்தது.

"இப்போ நாம இங்கே வந்தது ஊட்டியில மக்கள் வாழ முடியுமா, இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணுறதுக்கு இல்ல. அத முதல்ல புரிஞ்சுக்க."

"ஏன், நீங்க டென்ஷன் ஆகுறீங்க? நீங்கதானே இங்குள்ளவங்களுக்கு இங்கே வாழ்றது பிடிக்கலன்னு சொன்னீங்க. அது ஏன்னு தெரிஞ்சுக்கற ஆசையிலதான் அப்படிக் கேட்டேன். மத்தபடி, அதுபத்தி உங்கக்கிட்ட கேட்டு எக்ஸாமா எழுத போறேன்...?" ஷ்ரவ்யாவிடம் இருந்து ஊட்டிக் குளிரையும் தாண்டி சூடாகவே வந்தது பதில்.

ஆனந்துக்கும் அது புரிந்துவிட்டது.

ஆனாலும், ஷ்ரவ்யாவுக்கு பதில் சொல்ல விரும்பாமல், சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டான். தனக்கு அருகில் வேகமாக வந்த ஆட்டோவை மறித்தான்.

"லாட்ஜ்க்குப் போகணும். வர முடியுமா?"

"எந்த லாட்ஜ் ஸார்?"

"ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ்."

"சரி, ஆட்டோவுல வந்து ஏறுங்க."

ஸ்ரவ்யாவைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. சட்டென்று பதற்றமாகிவிட்டது, ஆனந்துக்கு.

'நாம கோபமா பேசப்போய், இவ வேற எங்கேயும் போய்விட்டாளா?' என்று, அவசரம் அவசரமாகத் தேடினான்.

"ஸார்... யாரைத் தேடுறீங்க?" ஆட்டோ டிரைவர் கேட்டான்.

"என்கூட ஒரு யங் லேடி வந்தாங்க. என் பக்கத்துலதான் நின்னாங்க. திடீர்னு காணும்."

"பதற்றப்படாதீங்க ஸார். இங்கேதான் எங்கேயாவது நிப்பாங்க. டென்ஷன் இல்லாம தேடிப் பாருங்க. நான் வேணும்னாலும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்."

ஆட்டோ டிரைவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, ஆனந்துக்கு. அதனால், ஆட்டோ டிரைவரே இறங்கி வந்து, தன் பங்குக்கு அவளைத் தேட ஆரம்பித்தான். சில அடிகள் எடுத்து வைத்தவன், ஆனந்த் அருகில் வேகமாக ஓடி வந்தான்.

"ஸார்... உங்க ஒய்ப் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே இல்லீயே..."

"என்னது... ஒய்ப்பா?"

ஆனந்த் இப்படிக் கேட்டதும், 'ஓ... அப்படீன்னா நீ அந்தப் பொண்ணை தள்ளிட்டுதான் வந்திருக்கீயா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான், ஆட்டோ டிரைவர்.

அப்போதுதான், ஆனந்த் புத்தியில் பலமாக உறைத்தது.

"பதற்றத்துல நீ என்ன சொன்னன்னு புரியல. அவ என்னோட மனைவிதான். ரெட் கலர் சாரி கட்டியிருப்பா."

"சரி, நானும் தேடிப் பார்க்கிறேன்..."

ஆனந்திடம் சொல்லிவிட்டு, ஷ்ரவ்யாவை தேட ஆரம்பித்தான் ஆட்டோ டிரைவர். 5 நிமிடம் ஆகிவிட்டது. ஆனால், அவள் வரவேயில்லை. அங்கே இங்கே என்று தேடி... ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் நின்றான் ஆனந்த்.

"ஆனந்த்... திடீர்னு எங்கேப் போனீங்க?"

யாரே தன்னை அழைக்க... சட்டென்று திரும்பிப் பார்த்தான். அங்கே ஷ்ரவ்யா நின்று கொண்டிருந்தாள்.

சத்தம் போட்டு அவளை திட்ட வேண்டும் என்பது போல் இருந்தது, ஆனந்துக்கு. வார்த்தையை பலமாக வரவழைக்க வாயைத் திறந்தான். அதற்குள் ஷ்ரவ்யா முந்திக்கொண்டாள்.

"நீங்க எங்கேப் போனீங்க? இந்த கேரட் செடியைப் பாக்குறதுக்கு அழகா இருந்துச்சு. வாங்கிட்டு வந்திடலாம்னு, உடனே வாங்கிட்டு திரும்பினா, உங்கள ஆளையேக் காணோம்."

கையில் நான்கைந்து கேரட் செடிகளை வைத்துக் கொண்டு அப்படிக் கேட்டாள்.

ஷ்ரவ்யா சொன்ன பிறகுதான், அவளைக் காணவில்லை என்று தானும், தன்னைக் காணவில்லை என்று அவளும் அலைந்து திரிந்து தேடியது ஆனந்துக்கு தெரிய வந்தது.

அந்தநேரத்தில் ஆட்டோ டிரைவரும் அங்கு வந்து சேர்ந்தான்.

"ஸார்... அவங்க கிடைச்சிட்டாங்களா?"

"ஆமா, அவங்க வந்துட்டாங்க. முதல்ல ஆட்டோவை எடுங்க."

ஆனந்தும், ஷ்ரவ்யாவும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் லேக் ரோட்டில் உள்ள பெரிய லாட்ஜ் ஒன்று முன்பு போய் நின்றது ஆட்டோ.

"ஸார்... நீங்க கேட்டது மாதிரியே இது பெரிய லாட்ஜ். சிங்கிள் பெட் உள்ள ரூமின் வாடகையே ஒருநாளைக்கு குறைஞ்சது 3 ஆயிரம் இருக்கும். புடிச்சியிருந்தா இங்கே தங்குங்க. இல்லாட்டி, எதிரே இருக்குது பாருங்க, ஒரு லாட்ஜ். சிம்பிளா இருந்தாலும் நீட்டா இருக்கும். அங்கே ஒருநாள் வாடகை ஆயிரம் ரூபாய்தான்."

"சரி, எந்த லாட்ஜ்ல தங்கனும்னு நான் பாத்துக்கறேன். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆச்சு?"

"200 ரூபா ஸார்."

"என்னங்க சொல்றீங்க, நாலு கிலோமீட்டர் தூரம் வர்றதுக்கு 200 ரூபாயா? எங்க மெட்ராஸ்ல கூட இப்படிக் கேட்க மாட்டாங்க..."

"ஸார், ஆட்டோவுக்கு 100 ரூபா. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுனதுக்கு 100 ரூபா."

அதுக்கு மேல் ஆட்டோ டிரைவர் பேசாமல் இருக்க, அவன் கேட்ட 200 ரூபாயைக் கொடுத்து விட்டு, ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்த அந்த ஹோட்டலுடன் இணைந்த லாட்ஜ்க்குள் ஸ்ரவ்யாவுடன் நுழைந்தான் ஆனந்த்.

அழகான வரவேற்பு அறை. மஞ்சள் நிற பல்புகளின் ஒளியில் ரம்மியமாய் இருந்தது, இந்த இடம்.

டெலிபோன் ரிசீவரை காதில் வைத்துக் கொண்டு, பேச்சு யாருக்கும் அதிகம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், ஆனந்தையும், ஷ்ரவ்யாவையும் பார்த்ததும் அழகான ஸ்மைலை சின்னதாக உதிர்த்துவிட்டு, போன் இணைப்பைத் துண்டித்தாள்.

"வெல்கம் அவர் ஹோட்டல் ஸார். உங்களுக்கு எந்த மாதிரியான ரூம் வேணும் ஸார். முதல்ல நீங்க செலெக்ட் பண்ணுன ரூம் பிடிக்கலன்னா, உடனே வேற ரூமுக்கு மாறிக்கலாம் ஸார். இந்த டேரிப்பைப் பார்த்து உங்களுக்கு புடிச்ச ரூமை செலெக்ட் பண்ணலாம் ஸார்."

ஸார்... ஸார்... என்ற, அந்த அழகான ரிசப்ஸனிஸ்ட் இளம்பெண்ணின் பேச்சு, வாழைப்பழத்தை தேனில் குலைத்துத் தருவது போல் இருந்தது.

கண்களால் ஷ்ரவ்யாவைப் பார்த்த ஆனந்த், சிங்கிள் பெட் ரூமையே செலெக்ட் செய்தான்.

"ஸார்... நீங்க எங்க லாட்ஜ்ல தங்கணும்னா சில கன்டிஷன்ஸ் இருக்குது ஸார். கண்டிப்பா நீங்க உங்களோட ஐடென்டி கார்டின் ஜெராக்ஸ் தரணும். உங்களோட ஒரிஜினல் முகவரியையும் தரணும். அட்வான்ஸா 5 ஆயிரம் ரூபாய் கட்டணும்."

"ஓ யஸ்..." என்ற ஆனந்த், பணத்தோடு, தான் பணிபுரியும் நாளிதழின் ஐடென்டி கார்டையும் கொடுத்தான்.

"ஒரு ஜெராக்ஸ் மட்டும் எடுத்துட்டு ஐடென்டி கார்டை தந்திடுறேன் ஸார். நீங்க இங்கிருந்து கிளம்புற வரைக்கும் இதை நாங்க வெச்சிருப்போம். நீங்க ரூமை வெக்கேட் பண்ணும்போது திரும்பித் தந்திடுவோம்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தின் ஐடென்டி கார்டை அவனிடம் திருப்பித் தந்தாள்.

107 என்ற அறையின் சாவியை ஆனந்திடம் தந்த அந்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... இந்த நோட்டில் உங்களோட ஒரிஜினல் அட்ரஸை எழுதிடுங்க" என்றாள்.

உண்மையை மறைக்க விரும்பாத ஆனந்த், தான் தங்கியிருந்த மேன்ஸன் முகவரியை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

முகவரியைப் பார்த்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... நீங்க தங்கியிருக்கிற மேன்ஸன் அட்ரஸை தந்திருக்கீங்க. அப்படீன்னா, உங்ககூட வந்திருக்கிற இவங்க யாரு-?"

ரிசப்ஸனிஸ்ட் இப்படியெல்லாம் கேட்பாள் என்று யோசிக்கவில்லை ஆனந்த். அப்படி யோசித்திருந்தால், கண்டிப்பாக தவறான முகவரியைத்தான் எழுதியிருப்பான். தான், பேச்சுலராக தங்கி பணிபுரியும் மேன்ஸன் முகவரியை எழுதியிருக்க மாட்டான். வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை ஆனந்த்.

"மேடம். இவங்க என்னோட ஒய்ப்தான். போன வாரம்தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சு. எங்களோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் இருக்கு. இன்னும் இவங்கள நான் மெட்ராஸ்க்கு கூட்டிட்டுப் போகல. இனிதான், நாங்க மெட்ராஸ்ல புதுவீட்டுல குடியேறனும். இன்னும் நீங்க நம்பலன்னா, அவங்க கழுத்துல பாருங்க. நான் கட்டின மஞ்சள் கயிறோட ஈரம்கூட இன்னும் சரியாக் காயல. அப்படீன்னா, நாங்க இங்க எதுக்கு வந்திருக்கோம்னு..."

ஆனந்தை அதற்கு மேல் பேசவிடவில்லை அந்த ரிசப்ஸனிஸ்ட்.

"புரியுது ஸார்" என்றவள், ஷ்ரவ்யா கழுத்தைப் பார்த்தாள். சில மணி நேரத்திற்கு முன்பு கட்டிய அந்த மஞ்சள் திருமாங்கல்யம் ஈரமாகவே இருந்தது.

"ஸாரி ஸார். அப்படியொரு கேள்வி கேட்டதுக்கு தப்பா நினைக்காதீங்க. 'தவறானவங்க' எங்க லாட்ஜ்ல தங்கக்கூடாதுங்றது எங்க லாட்ஜோட ரூல்ஸ். அதானாலதான், அப்படிக் கேட்டேன்."

"பரவாயில்லை மேடம். நீங்க உங்களோட டியூட்டியைத்தான் செஞ்சிருக்கீங்க..." என்ற ஆனந்த், மூன்றாவது மாடியில் இருந்த அறை எண் 107க்கான சாவியை வாங்கிக்கொண்டு, லாட்ஜ் படிக்கட்டுகளில் வேகமாக ஏற ஆரம்பித்தான். பயத்தோடு அவனைப் பின்தொடர்ந்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


14. மச்சத்தால் வந்த பிரச்னை!

ஸ் பயணம் அமுதாவுக்கு வெறுப்பாக இருந்தது. ஊட்டி எப்போ வரும்? எப்போது பஸ்ஸில் இருந்து கீழே இறங்குவோம் என்றிருந்தது, அவளுக்கு! சலித்துக் கொண்டு குணசீலனைப் பார்த்தாள். அவன் லேப் - டாப்பில் மும்முரமாக மூழ்கியிருந்தான்.

"என்னங்க... என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

குணசீலனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அமுதாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.

"என்னங்க... நான் கேட்டுட்டே இருக்கேன்ல. பதில் சொல்லாமலயே இருருந்தா என்ன அர்த்தம்?"

"நீ மறுபடியும் கூப்பிடனும்னு அர்த்தம்."

"ஏன், நான் மறுபடியும் கூப்பிடணும்?"

"நீ, என்னங்கன்னு சொல்றீயே... அதுல அப்படியொரு கிக் இருக்குது தெரியுமா? அந்த கிக்குக்கு நான் உன்கிட்ட அடிமைன்னுகூட சொல்லலாம்."

"என்னங்கன்னு சொல்றதுல அப்படியென்ன கிக் இருக்கு? நீங்க சொன்னா, நானும் தெரிஞ்சுக்குவேன்ல?"

"சரி, மறுபடியும் என்னங்கன்னு என்ன கூப்பிடேன்."

"எத்தனை தடவைதான் கூப்பிடுறது..."

"இன்னும் ஒரேயொரு தடவை மட்டும்..."

"சரி..." என்று தலையாட்டிய அமுதாவை சட்டென்று மிக அருகில் வந்து பார்த்தான் குணசீலன். திடீரென வெட்கப்பட்டு சிலிர்த்தாள் அவள். பேச்சு வராமல் திணறினாள்.

"என்ன ஆச்சு அமுதா?"

"நீங்க கிட்ட வந்தீங்கள்ல... அதான் ஒருமாதிரி ஆயிடுச்சு..."

"என்னங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கிக் இருக்குன்னு கேட்டல்ல, அதுவும் இப்படித்தான் இருக்கும்" என்ற குணசீலன், தான் திறந்து வைத்திருந்த லேப் டாப்பை அவள் பக்கம் திருப்பிக் காட்டினான்.

அந்த லேப் டாப்பில், ஏதோ ஒரு வெப்சைட்டில் இடுகையிடப்பட்டு இருந்த ஒரு அழகான இளம்பெண்ணின் படம் பளிச்சென்று தெரிந்தது. சிவப்பு நிற சேலையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.

"இப்போ, இந்த படத்தை ஏன் எங்கிட்ட காட்டுறீங்க?"

அமுதா அப்பாவியாய்க் கேட்டாள்.

"இந்தப் படத்தை கொஞ்சம் கூர்ந்துதான் பாரேன்..."

குணசீலன், தன்னை வைத்து எதையோ பரிசோதிக்க முயற்சிக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் சொன்னபடி அந்தப் பெண்ணின் புகைப்படத்தை இன்னும் சற்றுக் கூர்மையாகப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் இடுப்புப் பகுதி சேலை கொஞ்சம் விலகி, அவளது தொப்புள் பகுதி வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவளுக்குப் பின்னால், ஒருவன் இருந்து கொண்டு அவளை அணைத்துக் கொண்டிருப்பதும் பளிச்சிட்டது.

அதைப் பார்த்த மாத்திரத்தில் வெடுக்கென்று திரும்பிவிட்டாள் அமுதா.

"ஏன் அமுதா... இந்தப் படத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுட்டியாக்கும்?"

அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. பதிலுக்கு, அவளது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத்துடிப்பும் கூடுதலாக எகிறியிருந்தது.

"அப்போ, இந்த தகவல் உண்மைதானா?"

தனக்குத்தானே கேட்டுக்கொண்ட குணசீலன், லேப் டாப்பை ஆப் செய்து, அதைப் பத்திரமாகப் பேக்கிற்குள் நுழைத்து வைத்தான்.

சிறிதுநேரம் வரை அமுதா பேசாமலேயே இருந்தாள். குணசீலன்தான், அவளது திடீர் மாற்றங்களை புரிந்து கொண்டு பேசினான்.

"கிக் எப்படி இருக்கும்ன கேட்டல்ல? இப்போ நீ சந்திச்சதும் ஒரு கிக்தான். கிக், எல்லா மனுஷங்களுக்கும் பிடிக்கும். சாப்ட்வேர் என்ஜினீயரான என்னை எந்தப் பெண்ணும், இதுவரைக்கும் என்னங்கன்னு கூப்பிட்டது கிடையாது. ஹாய், டியர், மச்சின்னு பலபலப் பெயர்கள்ல கூப்பிடுவாங்க. ஆனா, நீ முதல் முறையாக என்னங்கன்னு சொன்னதுல எனக்கு கெடைச்ச கிக், வேற எதுலேயும் கிடைக்கல. அதனாலதான், நீ என்னங்கன்னு சொல்றத திரும்பத் திரும்பக் கேட்டு ரசிச்சேன்."

"அது ஓ.கே., லேப் டாப்ல உள்ள ஒரு பொண்ணு படத்தை என்கிட்ட ஏன் காட்டுனீங்க?"

"இப்போதான் நெட்ல ஒரு தகவல் படிச்சேன். சிகப்பு கலர்ல டிரெஸ் பண்ணுன பொண்ணுங்களைப் பாத்தா, ஆண்களுக்கு உடனே காதல் உணர்வு, அதாவது கிக் வரும்னு அதுல சொல்லியிருந்தாங்க. அது உண்மையா, இல்லையான்னு உன்ன வெச்சு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணினேன். அவ்வளவுதான்."

"டெஸ்ட் எல்லாம் இருக்கட்டும். சிகப்பு கலர் டிரஸ்ஸை ஒரு பெண் போட்டுக்கொண்டு வந்தால், அவளைப் பார்க்குற ஆணுக்கு கிக் வரும்ன்னு எப்படி உறுதியாச் சொல்ல முடியும்?"

அமுதா இப்படிக் கேட்டதும் வெட்கம் கலந்த சிரிப்பை வெளிப்படுத்தினான் குணசீலன்.

"ஏன்... நான் கேட்குற கேள்வி, அடுத்தவங்க சிரிக்கிற அளவுக்கா இருக்குது?"

திடீர்ப் பொய்க் கோபம் கொண்ட அமுதாவைச் சமாதானப்படுத்தினான் குணசீலன்.

" இப்போ நான் ஏன் சிரிச்சேன்னு கொஞ்சநேரம் கழிச்சுச் சொல்றேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு, ஆமா, இல்லன்னு மட்டும் பதில் சொன்னப் போதும்."

"கேள்வி கேட்பது யாரா இருந்தாலும் அவர்களுக்கு டாண்... டாண்னு பதில் சொல்றதுதான் என்னோட வழக்கம். நீங்க தாராளமா கேட்கலாம்."

"லேப் டாப் படத்தைப் பார்த்ததும் உனக்குள்ள என்னமோ பண்ணிச்சுல்ல."

"ஆமாம். ஆனா, அது என்னன்னு தெரியல."

"அதுக்குப் பேருதான் கிக்..."

குணசீலன் இப்படிச் சொன்னதும், அவன் மீது பொய்க் கோபம் கொண்டு செல்லமாக கை ஓங்கி அதட்டினாள் அமுதா. தன்னை அவள் செல்லமாக அடிக்கத்தான் போகிறாள் என்று கணக்குப்போட்ட குணசீலன், அவள் கைகளைத் தடுக்கும் முயற்சியில், எதிர்பாராதவிதமாக அவளது சேலையின் முந்தானையை வேகமாகப் பற்றி இழுத்து விட்டான். அவன் இழுத்த வேகத்தில் சட்டென்று அவளது மேலாடை விலகியது.

அமுதாவின் மார்பகத்தை ஒட்டி, யாருக்கும் வெளியில் தெரியாத வகையில் பாதுகாப்பாக பதுங்கியிருந்த கறுப்பு மச்சம் முதன் முதலாக மீசை முளைத்த ஒரு ஆண் மகனுக்கு தெரிந்தது.

குணசீலன், தனது அந்த மச்சத்தைப் பார்த்து விட்டான் என்றதும் அதிர்ச்சியானாள் அமுதா. விலகிய முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, தலை குனிந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"நான் அவளது கணவன்தானே... நான் அதைப் பார்த்தது எப்படி தவறாகும்?" என்று தனக்குத்தானே அப்பாவியாய்க் கேட்டுக் கொண்டான் குணசீலன். அந்த மச்சத்தைப் பார்க்கும் தகுதி அசோக்கிற்கு மட்டும்தான் இருக்கிறது என்று அமுதா செய்த சத்தியம் இவனுக்கு எப்படித் தெரியும்?

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


13. மலையேற்றத்தில் ஏமாற்றம்

குன்னூருக்கு முன்னதாக அமைந்திருந்தது அந்த அழகான இடம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கிவிட்டாலே எல்லாமே அழகுதான் என்றாலும், போகப்போக அழகு இன்னும் மெருகேறிக்கொண்டே போகும். அப்படி அழகு மெருகேறி இருந்த இடம்தான் அது.

"ஆனந்த் இது எந்த இடம்? நாம மட்டும்தான் இங்கே இருக்கோம். இப்படி தனியா இருக்குறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லையே..."

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மெயின் ரோட்டில், வாடகைக்கு அமர்த்தி வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் காட்டுக்குள் சிறிது தூரத்திற்குத் தன்னை தனியாக அழைத்து வந்ததால் அப்படிக் கேட்டாள் ஷ்ரவ்யா.

"தனியா கூட்டிட்டு வந்து ஏதாவது செய்திடுவேன்னு பயப்படுறீயா?"

"ச்ச்சீ... அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நம்ம காமெடி நடிகர் வடிவேலுக்கு எப்படி பிஞ்சி மூஞ்சோ, அது மாதிரி உங்களுக்கு அம்மாஞ்சி மூஞ்சி. நிச்சயமாக நீங்க அப்படியொரு காரியத்துல இறங்க மாட்டீங்க."

"எப்படி உறுதியா சொல்லுற?"

"எல்லாம் ஒரு கெஸ்ஸிங்தான்!"

"அப்படீன்னா... உன் கணக்கு தவறாப் போகலாம் இல்லீயா?"

"ஏன் நெகட்டீவா திங் பண்ணச் சொல்றீங்க? எல்லாம் நல்லதா நடக்கும்னு நினைச்சா, நல்லதாவே நடக்கப் போகுது. அதை விட்டுட்டு, ஏன் தப்பு தப்பா நாமளே கற்பனை பண்ணிக்கனும்?" என்ற ஷ்ரவ்யா, தான் கொண்டு வந்த பேக்கைத் திறந்தாள்.

அவள் பேக்கின் ஜிப்பை திறந்த மாத்திரத்தில் அப்படியொரு சுவையான மணம் கமகமவென்று பரவியது.

"ஷ்ரவ்யா... அது என்ன பழம்? இவ்ளோ வாசனையா இருக்கு? எங்கே வாங்கின?"

"நாம கார் நிறுத்துன இடத்துக்குப் பக்கத்துல ரோட்டோரமா ஒரு அம்மா பலாப்பழத்தை விற்றுட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட வாங்கினதுதான். இது மலை உச்சியில் விளைந்த பலாப் பழமாம். அதனால்தான் இப்படியொரு வாசனை..." என்றவள், பலாப் பழத்தின் விதைகளை மட்டும் கீழேப் போட்டுவிட்டு பழத்தை மட்டும் ருசித்துக் கொண்டிருந்தாள்.

"ஷ்ரவ்யா... நீ மட்டும் பழத்தை சாப்பிட்டுட்டு இருக்கீயே... எனக்கும் தரக்கூடாதா?"

"கண்டிப்பா தர மாட்டேன்."

"ஏன்... ஏதாவது கோபமா?"

"இப்போ டைம் என்ன ஆச்சு?"

ஷ்ரவ்யா அப்படிக் கேட்ட பிறகுதான் தனது வலது கையில் கிடந்த வாட்சை திருப்பிப் பார்த்தான். மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

"ஆஹா... மணி மூணு ஆகப் போகுதா? நாம மதியம் சாப்பிடவே இல்லையே..." என்ற ஆனந்த், அவசரம் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான். வந்த வழியில் சிறிது தூரம் வந்த பிறகுதான், விதைகள் நீக்கிய 5 பலாச்சுளைகளை ஆனந்திடம் நீட்டினாள் ஷ்ரவ்யா.

"நீதான் எனக்கு தர மாட்டேன்னு சொன்னீயே... வேறு எதற்கு அதை என்கிட்ட தர்ற?"

"பொய்க் கோபம் எல்லாம் வேண்டாம். பேசாமச் சாப்பிடுங்க..."என்றவள், அந்த பலாச்சுளைகளை அவனது கையில் திணித்தாள். அதை வாங்கிச் சாப்பிட்டவன் ஆச்சரியமாகப் பேசத் தொடங்கினான்.

"ஷ்ரவ்யா... இந்த பலாச்சுளையின் சுவை வித்தியாசமாக இருக்குதே... எப்படி?"

"மலை உச்சியில் விளைவதால் இந்த சுவையாக இருக்கலாம்."

"உண்மையான காரணம் அதுவல்ல; அதற்கான உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்து விட்டேன்."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள அவனை ஆவலாகப் பார்த்தாள்.

"நான் அதற்கான பதிலை கவிதையாகத்தான் சொல்வேன்."

"எப்படிச் சொன்னாலும் சரிதான், எனக்குப் பசிக்கிறது. சீக்கிரமாக ஏதாவது ஓட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். நீங்க பதிலை சொல்லிட்டே போங்க. நான் அதை கேட்டுட்டே வர்றேன்."

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், தனது பதிலை கவிதையாகவே சொன்னான் ஆனந்த்.

"பலாச்சுளை
இவ்ளோ இனிக்கிறதே...
அது
தேனீ முத்தமிட்டதாலா?
இல்லவே இல்லை
உன்
வெள்ளை விரல்களின்
இன்பத் தீட்டுப் பட்டதால்!"

ஆனந்த் சொன்ன கவிதையில் ஏதோ உள் அர்த்தம் இருப்பது போல் உணர்ந்தவள், "கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, பசி மயக்கத்துல என்னால அதை ரசிச்சுக் கேட்க முடியல. நாம ரூமுக்குப் போனதும், இன்னிக்கு நைட் அதுபத்தி சொல்லுங்க. ரசிச்சுக் கேக்குறேன். ஓ.கே.வா?" என்றாள்.

"கவிதையைப் பாராட்டுவாள் என்று பார்த்தால், ஜகா வாங்கிவிட்டாளே..." என்று உள்ளுக்குள் நினைத்த ஆனந்த், அடுத்த இரண்டு நிமிடத்தில் சாலையோரம் வந்துவிட்டான். ஆனால், அவர்கள் வந்த காரைக் காணவில்லை.

அங்கே இங்கே என்று ஓடிச் சென்று பார்த்தான். கார், இல்லவே இல்லை. ஷ்ரவ்யாவுக்கும் காரைக் காணாததால் அதிர்ச்சி.

இரண்டு பேரது லக்கேஜ்களும் காரில்தான் இருந்தன. காரை ஓரமாக நிறுத்தச் சொன்னதால் டிரைவர் கோபித்துக் கொண்டு வண்டியை எடுத்துச் சென்று விட்டாரா? இல்லை, இதுபோன்று ஏமாற்றுப் பேர்வழிகளும் இங்கே இருக்கிறார்களா?

ஆனந்த்துக்கு பெரிய குழப்பமாக இருந்தது. ஷ்ரவ்யாவும் பரபரப்பாக காணப்பட்டாள்.

அந்த நேரத்தில் அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு எதையோ தேடினான் ஆனந்த். அவனது மணிப் பர்ஸ் அங்கே பத்திரமாக இருந்தது. அவனது பிரஸ் அடையாள அட்டை, டெபிட் கார்டுகள் அதில் இருந்தன.

டிரைவர் சென்று விட்டதால் பணத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால், டிரெஸ்க்கு என்ன செய்வது? சரி... ஊட்டிக்குப் போய் புதுசா வாங்கிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்த ஆனந்த், ஷ்ரவ்யா பக்கம் திரும்பினான்.

”ஷ்ரவ்யா... நீ முக்கியமா எந்தப் பொருளையும் மிஸ் பண்ணலீயே...”

”நான் கொண்டு வந்தது இந்த ஒரு ஹேண்ட் பேக் மட்டும்தான். நல்லவேளை... பலாப் பழம் வாங்கிட்டு வந்ததுனால என் பேக் என்னோட வந்திடுச்சு.”

ஷ்ரவ்யா மேற்கொண்டு பேசுவதை எதிர்பார்க்காத ஆனந்த், சற்று தூரத்தில் பலாப்பழம் விற்றுக்கொண்டிருந்த வயதான பெண்மணியை நோக்கி ஓடினான்.

"அம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஒரு கார் நின்னுச்சே. அது எங்கே போச்சுன்னு தெரியுமா?"

"வண்டி வந்தது தெரியும். ஆனா, வந்த கொஞ்ச நேரத்துல அது மறுபடியும் திரும்பிப் போயிடுச்சு."

"இந்த வழியாக ஊட்டிக்கு போச்சா? இல்ல... வந்த வழியே மேட்டுப்பாளையம் நோக்கிப் போயிடுச்சா?"

"மேட்டுப்பாளையம் நோக்கித்தான் போச்சுப்பா..."

பலாப்பழம் விற்கும் பெண்மணி இப்படிச் சொன்னதும், தன்னை அழைத்து வந்த கார் டிரைவர் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான் ஆனந்த்.

தனது முதல் ஊட்டிப் பயணத்தின் ஆரம்பமே ஏமாற்றத்தில் முடிந்ததால் ஷ்ரவ்யாவும் அதிர்ச்சி ஆனாள்.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


12. மோட்டலில் நடந்த கலாட்டா!

துரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ்.

"கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல."

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் கொண்டார் கண்டக்டர்.

"அமுதா... ஓட்டல் முன்னாடி வண்டி நிக்குது. போய் சாப்பிட்டுட்டு வருவோம்."

தூக்கக் கலக்கத்தில் இருந்த அமுதாவை தட்டியெழுப்பினான் குணசீலன்.

"அம்மாதான், விடியகாலமே எழுந்திருச்சி கஷ்டப்பட்டு புளியோதரை செஞ்சு குடுத்துருக்காங்கல்ல; வேற ஏன் ஓட்டலுக்கு போய் சாப்பிடனும்னு சொல்றீங்க?"

"பஸ்சுக்குள்ள சாப்பாட்டை ப்ரீயா வெச்சு சாப்பிட முடியாது. ஓட்டலுக்குப் போயிட்டு, அங்கே ஏதாவது சைடு டிஸ் வாங்கி, இதை சாப்பிடுவோம். ஓ.கே.யா?"

"அப்படீன்னா ஓ.கே.?"

புளியோதரை கட்டியிருந்த சிறிய பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கினார்கள். விசாலமான ஒரே ஹாலாக குட்டித் திருமண மண்டபம் போன்று இருந்தது அந்த மோட்டல். எல்லா டேபிள்களிலும் பயணிகள் ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார்கள்.

எந்த டேபிள் காலியாக இருக்கிறது என்று கண்களால் தேடினான் குணசீலன். ஓரிடத்தில் இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, அங்கே இருவரும் போய் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் புளியோதரை பார்சலை பிரித்ததும்தான் தாமதம், மோட்டல் சர்வர் அவசரமாக வந்து அப்படியொரு வார்த்தை சொன்னான்.

"ஸார்... இங்கே பார்சல் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடக்கூடாது. இங்கேதான் வாங்கி சாப்பிடணும். நீங்க எழுந்திருச்சி வெளியே போங்க."

சர்வரின் இந்தப் பேச்சு குணசீலனை ஆத்திரப்படுத்தனாலும், அமைதியாகப் பேசினான்.

"நாங்க ஓசிக்கு இங்கே உட்கார்ந்து சாப்பிட வரல. சைடு டிஸ் என்ன இருக்கோ அதைச் சொல்லுங்க. ஆர்டர் பண்ணி, அதையும் சேர்த்து சாப்பிடுறோம்."

"மட்டன், சிக்கன், மீன் எல்லாமே இருக்கு. உங்களுக்கு அதுல என்ன வேணும்?"

சர்வர் இப்படிக் கேட்டதும், குணசீலனின் காதுக்கு அருகில் மெதுவாகப் பேசினாள் அமுதா.

"அதெல்லாம் ஆர்டர் பண்ணாதீங்க. நூறு ரூபா, இருநூறு ரூபான்னு பில்லைப் போட்டு தீட்டிடுவானுவ."

"அப்போ, என்னதான் ஆர்டர் பண்ணணும்?"

"பேசாம இரண்டு வடை மட்டும் ஆர்டர் பண்ணுங்க. அது போதும்..." என்றாள் அமுதா.

"ஹலோ சர்வர். இரண்டு வடை மட்டும் போதும்."

"இரண்டு வடை மட்டும் தானா? பில் கம்மியாதான் வரும். வேறு ஏதாவது வேணும்னாலும் ஆர்டர் பண்ணுங்க. கொண்டு வர்றேன்."

"அப்படீன்னா... ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க."

"சரி, இதோ கொண்டு வந்துடுறேன்..." என்று சொல்லிவிட்டுப் போன சர்வர், அடுத்த சில நிமிடங்களில் இரண்டு சிறிய கின்னங்களில் சாம்பாரில் மிதந்த வடைகளோடும், மினரல் வாட்டர் பாட்டிலோடும் வந்து நின்றான்.

"என்னங்க... வடை கேட்டா, சாம்பார் வடை கொண்டு வர்றீங்க?"

"எங்க ஓட்டல்ல இப்படித்தாங்க குடுப்போம்."

"சரி, வெச்சிட்டுப் போங்க. பில்லை கொண்டு வாங்க."

இரண்டு பேரும் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பாகவே பில்லை கொண்டு வைத்தான் சர்வர். பில்லைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டான் குணசீலன்.

"என்ன பில்லுங்க போட்டு இருக்கீங்க? இரண்டு வடைக்கும், மினரல் வாட்டர் பாட்டிலுக்கும் சேர்த்து 70 ரூபாயா? சென்னையில சரவணபவன் ஓட்டல்ல ஒரு சாப்பாடே 60 ரூபாய்தான். மினரல் வாட்டர் ஃப்ரீயாவே குடுப்பாங்க. நீங்க என்னன்னா பகல்லையே கொள்ளையடிக்குறீங்க?"

"ஸார்... வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதீங்க. சாம்பார் வடை எங்க ஓட்டல்ல 25 ரூபா. நீங்க இரண்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க. அதுக்கு 50 ரூபா ஆச்சு. மினரல் வாட்டர் 20 ரூபா. மொத்தம் 70 ரூபா. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, நீங்க வந்த பஸ் உங்கள விட்டுட்டு போயிடும். பேசாம பணத்தை குடுத்துட்டு ஊருக்குப் போய் சேர்ற வழியப் பாருங்க..."

சர்வர் இப்படிச் சொன்னதும் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டான் குணசீலன்.

"என்னங்க... அவசரப்படாதீங்க. இங்கே இப்படித்தான் ஏமாத்துவாங்க. அது தெரிஞ்சுதான் நான் முதல்லயே, பஸ்ல உட்கார்ந்தே சாப்பிடுவோம்னு சொன்னேன். நீங்கதான் கேட்கல. முதல்ல காச அவனுவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டு வாங்க."

அமுதா இப்படிச் சொன்னதும், பில்லுக்கான பணத்தைக் கொடுக்க பர்ஸை வேகமாக திறந்தான் குணசீலன். பத்து ரூபாய் தாள்கள் இல்லாததால் 100 ரூபாய் நோட்டை நீட்டினான்.

சில்லரை கொண்டு வராமல் ஏமாற்றி விடலாம் என்று சந்தேகப்பட்ட குணசீலன் சர்வரைப் பின்தொடர்ந்து சென்றான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்த சர்வர், 5 ரூபாயை எடுத்துக்கொண்டு 25 ரூபாய் மட்டும் குணசீலனிடம் கொடுத்தான்.

"25 ரூபாய்தான் இருக்கு. இன்னும் 5 ரூபாய் எங்கே?"

சர்வரிடம் கேட்டான் குணசீலன்.

"என்ன ஸார்... உங்களோட பெரிய ரோதனையா போயிடுச்சு? 5 ரூபா டிப்ஸ் ஸார்."

"டேய்... அத நான்தானே உனக்கு தரணும்?"

"அதைத்தான் நானே எடுத்துக்கிட்டேன்."

இதற்கு மேல் பேச்சுக்கொடுத்தால், அந்த சர்வரை ஓங்கி அறைய வேண்டியது இருக்கும் என்று எண்ணிய குணசீலன் அமுதாவுடன் அங்கிருந்து அவசரமாக வெளியேறி பஸ்சுக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். மோட்டல் என்கிற பெயரில் அங்கே நடந்த பகல் கொள்ளையை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

"என்னங்க... இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? நல்லவேளை நீங்க மட்டன், சிக்கன், மீனுன்னு ஆர்டர் பண்ணாம விட்டீங்க. அதை மட்டும் ஆர்டர் பண்ணியிருந்தா, 300, 400 ரூபாய பிடுங்கிட்டு விட்டுருப்பானுவ."

அமுதா இப்படிச் சொன்னதும் அவள் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான் குணசீலன்.

"உனக்கு எப்படி இங்கே இப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியும்?"

எதையோ சொல்ல வந்தவள், சட்டென்று அந்த வார்த்தையை தொண்டைக் குழியிலேயே அடக்கிக் கொண்டு வேறு பதிலைச் சொன்னாள்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க மதுரைக்கு போனப்போ, இந்த மாதிரிதான் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டோம். அங்கே எங்களை நல்லா ஏமாத்திட்டாங்க. அந்த அனுபவத்துலதான் சொன்னேன்."

முகத்தைத் தற்காலிக சோகமாக்கிக்கொண்டு சொன்ன அமுதாவை திடீரென்று ரசித்தான் குணசீலன்.

அந்த நேரத்தில் பஸ்சை டிரைவர் இயக்க... அமுதா மீது லேசாக முட்டிக் கொண்டு, அந்தக் கோபத்துக்கு மத்தியிலும் சிலிர்த்துக் கொண்டான். ஆனால், அமுதாவின் நெஞ்சுக்குள்தான் மறுபடியும் முடிந்துபோன காதல் ஞாபகம்.

இதுபோன்ற மோட்டல்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் பற்றி தன்னிடம் சொன்னது, தனது முன்னாள் காதலன் அசோக்தான் என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்

(தேனிலவு தொடரும்...)
Share:

ஞாயிறு, 10 ஜூன், 2012

தமிழில் குபேர பகவானின் முழு வரலாறு!இப்போது விற்பனையில்...

நெல்லை விவேகநந்தா எழுதிய

நாமும் குபேரன் ஆகலாம்

அதிர்ஷ்டம்
அள்ளித் தரும்
ஆன்மிக பொக்கிஷம்

மொத்த பக்கங்கள் : 112

விலை : ரூ.50.

ஸ்ரீகுபேர பகவானின் முழுமையான வரலாறு அடங்கிய தமிழின் முதல் நூல், அழகிய ஓவியங்களுடன்!

அதோடு,

 * நாமும் வருடத்தில் ஒருநாள் மட்டும் குபேர பகவானுடன் கிரிவலம் செல்லலாம். அப்படிச் சென்றால் நமக்கு குபேர சம்பத்து உடனடியாக கிட்டும். அந்த பாக்கியம் நமக்கு கிட்டுவது எந்த நாளில்?


* செய்யும் தொழில் அமோகமாய் விருத்தியடைய குபேர பகவானை எவ்வாறு வழிபடுவது?

 * புதிதாக தொழில் தொடங்குவோர், எதைக் குபேர பகவானுக்கு நைவேத்யம் செய்தால் தொழில் ஓஹோவென்று வளரும்?


 * வெள்ளிக்கிழமை தேடிச் சென்று வழிபட்டால் செல்வம் அள்ளித்தரும் குபேரபுரீஸ்வரர் எங்கே கோவில் கொண்டுள்ளார்?

* திடீர் தன வரவிற்கு எந்த நாளில் குபேர பகவானை வழிபட வேண்டும்?


* அலுவலகங்களில் எந்த திசை நோக்கி அதன் உரிமையாளர் அமர்ந்து பணி புரிந்தால் செல்வம் கொட்டும்?
 
   * குபேர பகவானின் விரிவான வரலாற்றுடன், உங்களுக்கு குபேர சம்பத்துக்களை அள்ளித்தரும் இதுபோன்ற ஏராளமான தகவல்களும் இந்த நூலில்!

புத்தகம் கிடைக்கும் இடம்

ஸ்ரீஆனந்தி பிரசுரம்
எண்.12, அஷ்டலட்சுமி அவென்யூ
பள்ளிக்கரணை, சென்னை - 100

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க....
மொபைல்: 9094111348

சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்னமங்கலம் ஸ்ரீகுபேர பகவானின் திருக்கோயிலிலும் இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கலாம். 

ஸ்ரீஆனந்தி பிரசுரத்தில் மொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு 20 சதவீத சிறப்புத் தள்ளுபடி உண்டு!
Share:

ஞாயிறு, 6 மே, 2012

பேரழகி கிளியோபாட்ரா - புத்தக மதிப்புரைநெல்லை விவேகநந்தா எழுதி வெளியான பேரழகி கிளியோபாட்ரா - வரலாற்று நாவலின் புத்தக விமர்சனம்  தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது. அந்த விமர்சனக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...

பேரழகி கிளியோபாட்ரா வரலாற்று நாயகி. அறிவும், கூர்த்த மதியும் பெற்ற அவரை அதிநுட்பமாக ஆய்வு செய்து  இந்த நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். எகிப்தின் அரியணையில் பேரரசியாக அவர் தொடர அவர் மேற்கொண்ட  உத்திகளையும் படைத்திருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு முன்பும், அதற்குப் பின்பும் எத்தனையோ பேர் கிளியோபாட்ரா என்ற பெயரில் இருந்தபோதும், இவரு க்கு மட்டும் ஏன் இன்னமும் இத்தனை பெயர், அப்படி என்ன ஈர்ப்பு என்பதை படைத்த ஆசிரியர் செயல் பார £ட்டிற்குரியது.

அத்திப் பழக்கூடையில் மறைத்து வைத்த நச்சுப்பாம்பை கடிக்க விட்டு பரிதாப முடிவைச் சந்தித்த கிளியோபாட்ரா  கனவுகளை, காதல் காவியமாக இதில் வாசகர்கள் காணலாம்.

நன்றி: தினமலர் 6.5.2012
 
நூல் கிடைக்கும் இடம் : 

கங்கை வெளியீடு (வானதி பதிப்பகம்)
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை -17.
போன் : 044 2432810
நூலின் மொத்த பக்கங்கள் : 328.
Share:

திங்கள், 9 ஏப்ரல், 2012

இரண்டாம் தேனிலவு - 11


11. சுவையான ஊட்டி வரலாறு!

நெல்லை விவேகநந்தா

மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரைத் தாண்டி ஊட்டியை நோக்கி மலையேறத் துவங்கியிருந்தது ஆனந்தும், ஷ்ரவ்யாவும் பயணித்த கார்.

நீண்டு வளர்ந்த பாக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், கிளைகள் பரப்பித் தாறுமாறாக வளர்ந்திருந்த காட்டுப் பலா, தேக்கு மரங்களின் நிழலில் கோடை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டு வந்தது.

அடிக்கடி குறுக்கிட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பயணித்த போதெல்லாம் கரு மேகங்களை எளிதில் தொட்டு விடலாம் போலிருந்தது. ஆங்காங்கே மரங்களில் அமர்ந்து கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டிருந்த குரங்குகளும் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தன.

மலை மேல் ஏற... ஏற... நகரத்து ஏ.சி.க்களில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த காற்றை, அங்கே இயற்கையன்னை இலவசமாக தந்தாள்.

ஷ்ரவ்யா இப்போதுதான் முதன் முறையாக ஊட்டிக்குச் செல்கிறாள் என்பதால் அவள் முகத்தில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி அப்பிக் கிடந்தது. அதை கவனித்துவிட்டான் ஆனந்த்.

”ஷ்ரவ்யா... நீ ரொம்பவும் உற்சாகமாக இருப்பது போல் தெரிகிறதே...?”

”ஆமாம்... இதுக்கு முன்னாடி நான் ஊட்டிக்கு வந்தது கிடையாது. சினிமாக்களில் ஊட்டி அழகைப் பார்த்ததோடு சரி. இப்படியொரு இன்பம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் எப்போதோ ஊட்டிக்கு வந்திருப்பேன். கூடவே, ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஊட்டியில் ஆஜராகியிருப்பேன்.”

”இப்போதுதான் ஊட்டிக்கு வந்தாகி விட்டதே... இனி, ஒவ்வொரு தடவையும் ஊட்டிக்கு வந்துவிடு; அவ்வளவுதானே!”

”நாம் இன்னும் ஊட்டிக்குச் செல்லவில்லை. அதற்குள் இயற்கை இவ்வளவு ஜில்லென்று இருக்கிறதே... ஊட்டிக்குப் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

”மலையேறத் துவங்கி அரை மணி நேரம்தானே ஆகிறது? இன்னும் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் ஊட்டியில் நாம் தங்கும் லாட்ஜ் முன்பு காரில் போய் இறங்கிவிடலாம்.”

”என்னது... இன்னும் ஒன்றரை மணி நேரமா? இப்போதே நாம் ஒரு மலை மீது முழுவதுமாக ஏறிவிட்டோமே... அப்படியென்றால், நாம் இன்னும் நிறைய மலைகளை ஏறிக் கடக்க வேண்டுமா?”

”ஆமாம்... இன்னும் நிறைய மலைகளைத் தாண்டினால்தான் ஊட்டிக்குப் போக முடியும்...” என்ற ஆனந்தை, திடீரென்று முகத்தில் பல கேள்விகளை வைத்துக்கொண்டு பார்த்தாள் ஷ்ரவ்யா.

“என்னாச்சு ஷ்ரவ்யா? ஏதோ கேட்க நினைக்கிறாய்; ஆனால், வார்த்தைதான் வாய் வரை வந்து, அப்படியே நின்றுவிட்டது. எதைக் கேட்க நினைத்தாயோ, அதைத் தைரியமாகக் கேள்.”

“திடீரென்று எனக்கு ஸ்கூல் ஞாபகம் வந்தது.”

“அதற்கும், உன் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”

“பெருசா ஒண்ணும் இல்லை. நான் ஸ்கூலில் படிக்கும்போது ஊட்டிக்கு மலைகளின் அரசின்னு இன்னொரு பெயர் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், இந்த ஊட்டியை உருவாக்கியது யார் என்று தெரியாது. அதுபற்றி கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால், உங்களுக்கு அதுபற்றி தெரிய வாய்ப்பு இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதனால்தான் அமைதியாகி விட்டேன்.”

“இது சாதாரண மேட்டர். ஜர்னலிஸ்ட் ஆக இருந்து கொண்டு இதுவும் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்?”

“அப்படியென்றால் ஊட்டி வரலாற்றை சொல்லுங்களேன்... எனக்கு என்னவோ அதுபற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.”

“சரிங்க அம்மணி. உத்தரவு போட்டுட்டீங்க... இதோ விடையைச் சொல்றேன்...” என்ற ஆனந்த், ஊட்டியின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தான்.

“கடல் மட்டத்தில் இருந்து 2,239 மீட்டர், அதாவது 7,347 அடி உயரத்தில் ஊட்டி என்கிற இந்த உதகமண்டலம் அமைந்துள்ளது. உதகமண்டலத்தைச் சுருக்கமாக உதகை என்றும் அழைப்பார்கள். ஊட்டி அமைந்துள்ள மாவட்டம் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது.” இதற்கு மேல் ஆனந்த்தை பேச விடாமல் தடுத்தாள் ஷ்ரவ்யா.

“நான் என்ன கேட்டேன்?”

“ஊட்டி வரலாறுதானே?”

“ஊட்டி வரலாறுதான். அதுக்காக, ஊட்டிக்கு உதகை, உதகமண்டலம்னு பெயர் இருக்குன்னு சின்னக் குழந்தைகளுக்கு சொல்ற விஷயங்களை எல்லாம் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாத மேட்டருக்கு வாங்க.”

“மறுபடியும் உத்தரவுங்க அம்மணி.”

“ஆமாம்... நான் முதல்லயே கேட்கனும்னு நினைச்சேன். என்ன... திடீர்னு அம்மணி இம்மணின்னு கோயமுத்தூர் பாஸையில கூப்பிடுறீங்க?”

“எல்லாம் ஒரு மரியாதைக்குதாங்க...”

“சரி, சரி... மரியாதை மனசோட இருந்தா போதும்...” என்ற ஷ்ரவ்யா, செல்லமாக ஆனந்தின் கன்னத்தைக் கிள்ளினாள். கன்னத்தைக் கிள்ளிய வேகத்தில் அவன் மடியில் விழுந்தும் விட்டாள். அவளைத் தடுக்க கைகளால் அணை போட்டான் ஆனந்த். அதில், அவனது கரங்கள் அவளது உடலில் ஏடாகூடமாகப் பட... சிலிர்த்துப் போய் சட்டென்று எழுந்துவிட்டாள்.

இவர்களது இன்பச் சேட்டைகள் கார் டிரைவரையும் ஒருமாதிரியாக நெளிய வைத்தது. இருக்கையில் வளைந்து நிமிர்ந்தவன், “இதற்குப் பிறகும் அந்தக் காட்சியைப் பார்த்தால் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடும்; ஜாக்கிரதை!” என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டான்.

“என்னாச்சு ஆனந்த்... ஊட்டி வரலாறு இன்னிக்கு இவ்ளோதானா?”

“நிறைய இருக்குத்தான்.”

“அப்படீன்னா சொல்லுங்க... அதை விட்டுட்டு தேவையில்லாதத பத்தி கற்பனை பண்ணிக்காதீங்க.”

“நீ என்ன சொல்றன்னு எனக்கு நல்லாவே புரியுது. இப்போ எதுவும் வேணாம்னு நினைக்கிறேன்...” என்றவன், “சரி... அதுபற்றி இப்போ பேசிக்க வேண்டாம். நேரா ஊட்டி வரலாறுக்கே வந்து விடுகிறேன்.”

“நீங்க சொல்றதுதான் கரெக்ட். ஊட்டி ஹிஸ்ட்ரிய முதல்ல சொல்லுங்க.”

“சரி...” என்ற ஆனந்த், தொண்டையை சற்று இறுமிக் கொண்டு, ஊட்டி புராணத்தை மறுபடியும் தொடர்ந்தான்.

“உதகமண்டலம் என்பதுதான் ஊட்டியோட ஆரம்ப கால பெயர். இந்தப் பெயர் வந்ததுக்கு பல காரணங்கள் சொல்றாங்க. ஒத்தைக் கல் மந்து என்ற பெயரே உதகமண்டலம் ஆனதா இங்கு இப்போதும் வாழும் மலைவாழ் மக்கள் சொல்றாங்க. மூங்கில் காடு இருந்ததாலும், நீர் அதிகம் இருந்ததாலும் அந்த பெயர் வந்ததா இன்னொரு தகவலும் உண்டு. உதகம் என்றால் தண்ணீர் என்று பொருள். மண்டலம் என்றால் வட்ட வடிவம். அதாவது, வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்பதுதான் உதகமண்டலத்தின் பொருள். இப்படிப் பார்த்தால் உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் இது அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி ஆகிவிட்டது. 12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையானது ஹோய்சாளர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. பிறகு, மைசூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த திப்பு சுல்தான் வசமானது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. அப்போது கோவை மாவட்ட ஆளுநராக இருந்த ஜான் சுலிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி அங்கு தங்க நினைத்தார். இதையடுத்து, அங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் போன்ற பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கினார். இவரே உதகமண்டலத்திற்குச் சென்ற முதல் வெள்ளையர் ஆவார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் அங்கு ஒரு வீட்டை கட்டினார். அதன்பிறகு ஆங்கிலேயர்கள் அதிக அளவில் ஊட்டிக்கு படையெடுத்தார்கள். அங்கே மக்கள் தொகை அதிகரித்தது. கி.பி. 1855ல் இது நகராட்சியாக மாறியது. பின்னாளில், ஊட்டிக்கு மலை ரெயில் பாதையும் போடப்பட்டு, ரெயில் போக்குவரத்து துவங்கியது. இங்கிலாந்தில் உள்ள காலநிலை ஊட்டியில் நிலவியதால், ஆங்கிலேயர்கள் கோடைக்காலத்தில் அன்றைய மதராஸில் இருந்து ஊட்டிக்கு தங்களது தலைநகரத்தை மாற்றிக்கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள்...” மூச்சுவிடாமல் ஊட்டி வரலாற்றை ஷ்ரவ்யாவுக்கு சொல்லி முடித்தான் ஆனந்த்.

அப்போது, கார் டிரைவர் திடீரென்று பேசத் துவங்கினான்.

“ஸார்... ஊட்டிக்கு இவ்ளோ பெரிய வரலாறு இருக்குன்னு எனக்கே தெரியாது ஸார். ஆனா, நீங்க கைடு மாதிரி புள்ளி விவரமாச் சொல்றீங்க. எங்கே இருந்து இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க ஸார்...?” என்றான் அவன்.

“அப்போ, இவ்ளோ நேரமாக நாங்க என்ன பேசிட்டு வந்தோம்னுதான் கவனிச்சிட்டு இருந்தீங்களா? இந்த மலைப் பயணத்துல இது ஆகாது. பேசாம வண்டியை ஓரம் கட்டுங்க.”

ஆனந்தின் பேச்சில் கண்டிப்பு தெரிந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - 10

10. பஸ் பயணத்தில் காதல் ஞாபகம்!

நெல்லை விவேகநந்தா

ரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம். கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் குணசீலனும், அமுதாவும் அமர்ந்திருந்தனர்.

"மாப்ள திடுதிப்புன்னு ரெண்டு பேரும் ஊட்டிக்குப் போறீங்க. அங்கே எங்கே தங்குவீங்க? ரெண்டு பேரும் தனியா இருக்குறதுனால எந்த பயமும் இல்லீயே..." பஸ் புறப்படுவதற்கு முன்னர் தனது சந்தேகத்தை கேட்டாள் பாக்கியம்.

"பயப்படாதீங்க அத்த. இந்த ஹனிமூன் டிரிப் என்னோட மெட்ராஸ் ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ் பண்ணினது. என்னோட மேரேஜிக்கு கிப்ட்டா, ஊட்டியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் 5 நாட்களுக்கு ரூம் புக் செஞ்சிட்டாங்க. ஊட்டிய சுத்திப் பார்க்க ஆசைப்பட்டா, உடனே கார் வந்திடும். சாப்பிடனும்னாகூட அதுவும் போன்ல சொன்னாலே போதும்" என்றான் குணசீலன்.

"அப்போ பயப்பட எதுவும் இல்லன்னு சொல்றீங்க."

"ஆமா அத்த. மறுபடியும் சொல்றேன். நீங்க எதையும் நினைச்சுப் பயப்பட வேண்டாம். புதுசா மேரேஜ் ஆன எல்லோரும் போகக்கூடிய இடம்தான் ஊட்டி. 5 நாள் முடிஞ்சதும் திரும்பி வந்துடப் போறோம். அதுக்கு அப்புறம் இங்கே ஒரு வாரம் இருந்துட்டு, அடுத்து நேரா சென்னைக்குத்தான்.”

தனது இரண்டு வார டூர் பிளானை மாமியாரிடம் சொல்லி விட்டான் குணசீலன். அவன் முகத்தில் ஊட்டிக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி நிறையவே கொட்டிக் கிடந்தது. ஆனால், அமுதாதான் வழக்கம்போல் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு மவுனமே உருவாக அமர்ந்திருந்தாள்.

சரியாகக் காலை 10 மணி ஆனதும் பேருந்தை நகர்த்தினார் டிரைவர். பாக்கியமும், அவரது கணவர் தங்கதுரையும் டாடா சொல்ல... பதிலுக்குப் புதுமணத் தம்பதியர் இருவரும் டாடா சொன்னார்கள். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சொகுசுப் பேருந்து தங்க நாற்கரச் சாலையில் கோவை நோக்கி வேகமாகப் பயணித்தது.

காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு சூரியன் எப்.எம்.மில் பாட்டு கேட்டுக் கொண்டே வந்தாள் அமுதா. மெலடி சாங்ஸ் அவளுக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ, அப்போது அவள் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி முழுவதும் மெலடி காதல் பாடல்களாகவே ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

பாடல் ஒலிபரப்பாகி முடிந்ததும் நேயர்கள் லைவ் ஆகத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒலிபரப்பான நிகழ்ச்சி காதலர்களுக்கானது என்பதால் காதலர்களே பேசினார்கள்.

ஒரு பெண் பேசியது அமுதாவின் ஆழமான நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.

“வணக்கம். நீங்க எங்கேயிருந்து பேசுறீங்க.”

“நாங்குநேரி பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து பேசுறேங்க.”

“நீங்க நிகழ்ச்சியில என்ன சொல்லப் போறீங்க. குறிப்பாக, நீங்க யாரை லவ் பண்ணுறீங்க?”

“என்னோட மாமாப் பையனத்தான் லவ் பண்ணுறேன்.”

“சரி, உங்க பெயரை நாங்க தெரிஞ்சிக்கலாமா?”

“வேண்டாங்க...”

“சரி, அப்போ உங்க லவ்வர் பெயரையாவது சொல்லலாமே...”

“அவரு பேரு அசோக்.”

“உங்க பெயரைக் கேட்டா சொல்ல மாட்டேங்குறீங்க. ஆனா, உங்க லவ்வரோட பெயரை மட்டும் எப்படிச் சொல்றீங்க?”

“அது, அவருக்கு நான் வெச்ச பெயரு.”

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பெண், இப்படிச் சொன்னதும், தன்னை அறியாமலேயே சீட் நுனிக்கு வந்து அமர்ந்தாள் அமுதா.

“உங்களோட லவ்வர் அசோக் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்னா எதை சொல்வீங்க?”

“நல்லாப் பேசுவாரு.”

“எல்லாப் பசங்களும், பொண்ணுங்ககிட்ட நல்லாப் பேசுவாங்களே...”

“நான் அப்படிச் சொல்ல வரல. நிறைய விஷயங்கள் பேசுவாரு. அவர் அவ்ளோ புத்திசாலி.”

“உங்க லவ்வர் புத்திசாலின்னா, கண்டிப்பா நீங்களும் புத்திசாலியாத்தான் இருப்பீங்க. நான் சொல்றது சரிதானே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நான் கிராமத்துப் பொண்ணு. அவரும் கிராமத்துல பொறந்திருந்தாலும் இப்போ சிட்டியில வேலை பாத்துட்டு இருக்குறாரு.”

“என்ன வேலை பாக்குறாருன்னு சொல்லலாமா?”

“அய்யோ... நான் இப்ப உங்க கிட்ட பேசுறது எங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. விட்டா, நீங்க முழு அட்ரஸையும் வாங்கிடுவீங்க போல இருக்கே...”

“அப்படீன்னா... நாம பேச்ச மாத்திக்கலாம். நீங்க உங்க லவ்வர் கிட்ட எப்போ ஐ லவ் யூன்னு சொன்னீங்க-?”

“இன்னும் சொல்லல...”

“அவரு...”

“அவரும் சொல்லல.”

“வேற எப்படி, அந்தப் பையனை நீங்க லவ் பண்ணுறதா சொல்றீங்க?”

“ஐ லவ் யூன்னு சொன்னா மட்டும் அது காதல் இல்லீங்க. மனசுக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும்னு சொல்வாங்களே... அதுவும் காதல் இல்லீங்க. ரெண்டு பேரும் முழுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டாலே அது தாங்க உண்மையான காதல். எங்களோட காதலும் அப்படிப்பட்டதுதான்.”

“நீங்க தொடர்பு கொண்டு பேசினதுக்கு ரொம்ப நன்றி. ஒவ்வொருத்தரோட காதலும் ஒவ்வொரு விதம்தான்னு சொல்லுது, கடைசியாக தொடர்பு கொண்டு பேசிய காலரோட காதல். காதல் பத்தி ரொம்ப அருமையா அவங்க சொன்னாங்க. அவங்களுக்காக இப்போ அழகான ஒரு சாங்க் வருது. கேட்டு என்ஜாய் பண்ணுங்க. தொடர்ந்து சூரியன் எப்.எம்.ல இணைஞ்சியிருங்க...”

சூரியன் எப்.எம். பெண் ரேடியோ ஜாக்கி பேசி முடிக்கவும், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான ஒரு பாடல் ஒலிபரப்பானது. கண்களை மூடி அந்த பாட்டை மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாள் அமுதா. அந்தப் பாடல் முடியவும், ஹெட் செட்டை காதல் இருந்து எடுத்தாள். அவளது கண்களின் ஓரம் லேசாக ஈரமாகியிருந்தது.


(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - 9

                    
9. திடீர் திருமணம்!
                               
நெல்லை விவேகநந்தா

முந்தைய நாள் இரவை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நண்பன் அண்ணாதுரையில் வீட்டில் ஷ்ரவ்யாவுடன் கழித்த ஆனந்த், ஊட்டி புறப்படுவதற்கு தயாரானான்.

"ஆனந்த்... இப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா கோவை புது பஸ் ஸ்டாண்டுக்குப் போங்க. அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கும். இப்போ சீசன் நேரம் என்பதால் டூரிஸ்ட் நிறையபேர் வருவாங்க. அதனால கூடுதலா பஸ் விட்டிருப்பாங்க. பஸ்ல போகப் பிடிக்கலன்னா, பிரைவேட்டா கார்ல கூட்டிட்டுப் போவாங்க. எப்படியும் ஐந்து ஆறுபேர் ஏறுவாங்க. அவங்க கார்ல போனா பஸ்ஸை விட கொஞ்சம் கூடுதலா செலவாகும். இன்னும் சவுகரியமா ஊட்டிக்கு இயற்கையை ரசிச்சுக்கிட்டே போகணும்னா நீங்களே ஒரு காரை புக் பண்ணி புறப்படுங்க. ஊட்டி ஜர்னியை நல்லா என்ஜாய் பண்ணலாம்..." குட்டி லெக்ட்சர் கொடுத்து ஆனந்த்தையும், ஷ்ரவ்யாவையும் தனது வீட்டில் இருந்து அனுப்பி வைக்க தயாரானார் அண்ணாதுரை.

லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து நிற்கவும், அவர்கள் ஏற்கனவே புக் செய்த டிராக் டிராக் கால் டாக்ஸி வந்து நின்றது. பளிச்சென்ற வெள்ளை நிற சீருடையில் வந்து இறங்கினார், கால் டாக்ஸி டிரைவர்.

அந்த டிரைவர் மட்டுமல்ல; கால் டாக்ஸியும் வித்தியாசமாக இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலீசார் பயன்படுத்தும் கார் போன்றிருந்தது அது.

இருவரும் கால் டாக்ஸியில் ஏறுவதற்கு முன்பாக, ஷ்ரவ்யாவை தனியாக அழைத்தார் அண்ணாதுரையின் மனைவி ரஞ்சனி.

"ஷ்ரவ்யா... நீ ரொம்ப கொடுத்து வெச்சவம்மா. என்னோட ஹஸ்பன்ட், உன்னோட வருங்கால கணவரோட அஞ்சு வருஷமா மதுரையில் இருக்கும்போது வொர்க் பண்ணியிருக்காங்க. அவரைப் பத்தி என்கிட்ட நிறையவே என் ஹஸ்பன்ட் சொல்லி இருக்காரு. அவரை ரொம்ப தங்கமானவருன்னு சொல்லுவாரு. தன்னோட அத்தை மகளை அவர் லவ் பண்ணுறதாகவும் சொல்லி இருக்காரு. அவரோட அத்தை மகள் நீதான்ங்கறது எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் நேற்றுதான் தெரியும். இப்போ, நீ தன்னந்தனியா அவரோட வந்தது, வெளியில உள்ளவங்களுக்கு வேணும்னா தப்பாத் தெரியலாம். உண்மையை சொல்லணும்னா, நீ அவரை நம்பி ஊட்டிக்கு தனியா, அதுவும் மேரேஜ்க்கு முன்னாடியே வந்ததை நான் தப்புன்னே சொல்ல மாட்டேன். ஏன்னா, அந்த அளவுக்கு நல்ல பையன் அந்த ஆனந்த். என் மனதுக்குள் சொல்ல தோணினதை சொல்லிவிட்டேன். ஊட்டி டிரிப்பை என்ஜாய் பண்ணிட்டு வாங்க. மேரேஜ் என்னிக்கின்னு கண்டிப்பா தகவல் சொல்லுங்க. உங்க மேரேஜ் எங்கே நடந்தாலும், அங்கே முதல் ஆளா நாங்க வந்து நிற்போம். வாழ்த்துக்கள்!" என்று சொல்லி, ஷ்ரவ்யாவை ஒரு அக்காளுக்கே உரிய பாசத்தோடு முத்தமிட்டு வாழ்த்தினார் ரஞ்சனி.

"ஸார்... லக்கேஜ் எல்லாம் எடுத்து வெச்சிட்டேன். இப்போ, நாம புது பஸ் ஸ்டாண்ட்தானே போகணும்?"

கால் டாக்ஸி டிரைவர் கேட்க... "ஆமாம்... அங்கேதான் போகணும்" என்றான் ஆனந்த்.

அவனும், ஷ்ரவ்யாவும் டாக்ஸியில் ஏறி அமரவும் வண்டி புறப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த கால் டாக்ஸியின் சீட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் இருந்தது. தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்து கொண்டு பொறுப்பாக வண்டியை ஓட்டினார் டிரைவர்.

"வண்டியை இவ்ளோ நீட்டா வெச்சியிருக்கீங்களே எப்படி?" - ஆனந்த் டிரைவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஸார்... வண்டி ஓட்டும் போது பேசக்கூடாதுங்கறது எங்க நிறுவனத்தோட உத்தரவு. நீங்க இப்பத்தான் முதல் தடவையா எங்க நிறுவன கால் டாக்ஸியில் வர்றீங்கன்னு நினைக்கிறேன். இங்கே கால் டாக்ஸி புக் பண்ணுறவங்கள்ல நிறையபேர் டூரிஸ்ட்தான். அவங்க என்ஜாய் பண்ணுறதுக்கு ஊட்டிக்குப் போறாங்க. அவங்களை நாங்களும் சந்தோஷப்படுத்த எடுத்த முயற்சிதான் இது" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவர், ஆனந்த் பக்கம் திரும்பவே இல்லை.

இதற்கு மேல் கேள்வி கேட்டு அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த ஆனந்த், அதற்கு மேல் அந்த டிரைவரிடம் பேசவில்லை.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கோவை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்து நின்றது கால் டாக்ஸி.

ஆனந்தும், ஷ்ரவ்யாவும் இறங்கிக்கொள்ள, வண்டியின் டிக்கி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த லக்கேஜ்களை டிரைவரே எடுத்து வந்து கொடுத்தார்.

"அமவுண்ட் எவ்ளோ ஆச்சு?"

"ஒரு நிமிஷம் ஸார்..." என்ற டிரைவர், வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த ரீடிங் மீட்டரில் பச்சை பட்டனை அழுத்த, அது ஒரு வெள்ளை ரசீதை கக்கியது.

அந்த ரசீதை வாங்கிப் பார்த்த ஆனந்திற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 68 ரூபாய் என்று அதில் பிரிண்ட் ஆகியிருந்தது.

"இவ்ளோதான் வாடகையா? நான் என்னவோ, எப்படியும் குறைஞ்சது 150 ரூபாயாவது கேட்பீர்கள் என்று அல்லவா நினைத்தேன்?" என்று கூறி, தனது முகத்தில் ஆச்சரிய ரேகையை ஓடவிட்டான். ஷ்ரவ்யாவும் அவனிடம் இருந்து ரசீதை வாங்கிப் பார்த்து, தன் பங்கிற்கும் வியப்பை வெளிப்படுத்தினாள்.

"நாங்க குறைவா கட்டணம் வாங்கல ஸார். இதுதான் சரியான வாடகை. இதற்கு மேலும் வாடகை கேட்டா, அவங்க ஏமாத்துறாங்கன்னு அர்த்தம்" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவரிடம் 100 ரூபாய் ஒற்றை நோட்டை நீட்டினான். அவர் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும், இரண்டு ரூபாய் காயின் ஒன்றையும் கொடுத்து ஸ்மைலோடு தேங்ஸ் சொல்லியதோடு, ஹப்பி ஜர்னி என்று வாழ்த்துக்களையும் சொன்னார்.

அவரிடம் டிப்ஸ் என்று, 10 ரூபாய் நோட்டை ஆனந்த் நீட்ட... "உங்க பரந்த மனப்பான்மைக்கு நன்றி ஸார். எனக்கு நல்ல சம்பளம் தர்றாங்க ஸார். எனக்கு அதுவே போதும்..." என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்ட நேர்மையான கால் டாக்ஸி டிரைவரை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றான் ஆனந்த்.

அந்த வெள்ளை நிற கால் டாக்ஸி சற்றுத் தொலைவில் இருந்த சிக்னலை கடந்து மறைந்த நேரம், சில கார் டிரைவர்கள் அங்கே வந்தனர். அவர்களில் ஒருவன் ஆனந்தை நெருங்கிக் கேட்டான்.

"ஸார்... ஊட்டிக்குத்தானே போறீங்க? பஸ்ல போனா கூட்டமாக இருக்கும். ஊட்டியோட அழகை ரசிக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தனியா கார்ல போனா எங்கே வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிக்கலாம்..." என்று தன்னிடம், தானாகவே முன்வந்து விளக்கம் தந்த டிரைவரை உற்றுப் பார்த்தான் ஆனந்த்.

"அதிகமாக பணம் கேட்டு ஏமாத்திடுவோம்னு பயப்படாதீங்க. எழுநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தா போதும். எங்களோடு சேவையைப் பார்த்து கூடுதலா டிப்ஸ் கொடுத்தா மட்டும்தான் வாங்கிப்போம். மற்றபடி தொந்தரவு செய்ய மாட்டோம்" என்று, அந்த டிரைவர் விளக்கம் தர, ஷ்ரவ்யாவைப் பார்த்தான் ஆனந்த்.

"அவர் சொல்றதும் சரிதான். பஸ்ல போவதைவிட கார்ல போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..." என்று ஷ்ரவ்யா சொல்ல, "சரி" என்றான் ஆனந்த்.

இருவரும் டாடா இன்டிகா காரில் ஏறிக்கொள்ள, கார் ஊட்டி நோக்கி வேகமாக பறந்தது.

கார், மேட்டுப்பாளையத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், திடீரென்று காரை நிறுத்துமாறு கூறினான் ஆனந்த்.

டிரைவரும் காரை ஓரமாக நிறுத்த, சாலையோரமாக இருந்த ஒரு சிறிய கோவிலுக்கு ஷ்ரவ்யாவை அழைத்துச் சென்றான் ஆனந்த்.

கோவிலுக்கு முன்பாக இருந்த ஒரு கடையில் மஞ்சள் கட்டிய தாலிக் கயிற்றை வாங்கிக்கொண்டவன், ஷ்ரவ்யாவின் கையை பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

ஆனந்தின் நடவடிக்கை திடீரென்று மாறியதால் பரபரப்பானாள் ஷ்ரவ்யா.

"ஆனந்த்... எதுக்கு தாலிக் கயிறு வாங்குறீங்க?"

"உன் கழுத்துல கட்டத்தான்."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், சட்டென்று பேச்சு வராமல் திணறினாள்.

"என்னோட கழுத்துல நீங்க ஏன் தாலி கட்டணும்?"

"காரணம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன். எதுவும் பேசாம என்கூட வா. நாம ஊட்டியில் இருக்குற வரைக்கும் இந்த தாலிதான் நமக்கு வேலி..." என்று ஆனந்த் சொன்னபோதுதான், "ஓ... முன்னெச்சரிக்கைக்காக இப்படியொரு வேஷமா" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ஷ்ரவ்யா.

இருவரும் சென்றது ஒரு மாரியம்மன் கோவில். அங்கிருந்த அர்ச்சகரிடம் மஞ்சள் தாலிக் கயிற்றை கொடுத்த ஆனந்த், அதை அம்மனின் பாததில் வைத்து எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டான்.

முதலில் யோசித்த கோவில் அர்ச்சகர், திடீரென்று என்ன நினைத்தாரோ தாலிக் கயிற்றை வாங்கி, அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதை ஒரு தட்டில் வைத்து, கையில் இரண்டு மாலைகளையும் எடுத்துக்கொண்டு கருவறைக்கு வெளியே வந்தார்.

தாலிக் கயிற்றை ஆனந்த் கையில் கொடுக்க... அவன், தனக்கு வலமாக நின்ற ஷ்ரவ்யாவை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் தலை குனிந்து கொள்ள... அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான்.

அந்த நேரத்தில் யாரோ ஒருவர் கோவில் மணியை அடிக்க, "ரொம்ப நல்ல சகுனம்... நீங்க ரெண்டு பேரும் தீர்க்காயுஷா வாழ்வீங்க" என்று அவர்களை வாழ்த்தினார் கோவில் அர்ச்சகர்.

ஆனந்த், ஷ்ரவ்யா கழுத்தில் தாலியை கட்டி முடித்ததும், அவர்கள் கையில் ஆளுக்கொரு மாலையை அர்ச்சகர் கொடுக்க, இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, அம்மன் சன்னதியில் ஜோடியாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியெழுந்தனர். அவர்களுக்கு விபூதி பூசிவிட்டு வாழ்த்தினார் அர்ச்சகர்.

அவர் வைத்திருந்த பூஜைத் தட்டில் 500 ரூபாய் நோட்டை காணிக்கையாக வைத்துவிட்டு, ஷ்ரவ்யா கையை பற்றிக்கொண்டு கோவிலை விட்டு வெளியேறினான் ஆனந்த்.

அர்ச்சகர் முகத்தில் இன்ப அதிர்ச்சி!


(தேனிலவு தொடரும்...)

Share: