செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 8


8. முதல் காதல் ஞாபகம்...
- நெல்லை விவேகநந்தா -

மே 2ஆம் தேதி திங்கட்கிழமை.

அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின் பிளான்.

ஊட்டிக்குப் போய்ச் சேர்வதற்குள் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிடும் என்பதால் புளியோதரைச் சாப்பாட்டைத் தயார் செய்யப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அமுதாவின் அம்மா பாக்கியம். அவளை நெருங்கி வந்தான் குணசீலன்.

“அத்த... மதியச் சாப்பாடு எல்லாம் ரெடி பண்ண வேண்டாம். போகுற வழியில நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம். இப்போ, காலை டிபன் மட்டும் பண்ணுங்க போதும்.”

குணசீலன் சொன்னதற்கு சரியென்று தலையாட்டினாலும், பாக்கியம் ஏதோ சொல்ல நினைப்பது குணசீலனுக்கு புரிந்து விட்டது.

“என்னமோ சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன். என்ன விஷயம்?”

“பெருசா ஒண்ணும் இல்லதான். திடீர்னு ஊட்டிக்கு கிளம்புறேன்னு சொல்றீங்களே... அதான் கையும் ஓடல, காலும் ஓடல.”

“நாங்க ஊட்டிக்குப் போற விஷயத்தை உங்ககிட்ட சொல்லாததுக்கு ஸாரி. சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். அவ்ளோதான்.”

“அமுதாவும், நீங்களும் மட்டும்தான் போறீங்களா? இல்ல, வேறு யாரும் வர்றாங்களா?”

“நோ அத்த. ஒன்லி நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான். இந்த ப்ளான் ஏற்கனவே புக் பண்ணியாச்சு. திருநெல்வேலியில் இருந்து பிரைவேட் சொகுசு பஸ்லதான் போறோம். ஆரம்பத்துலேயே உங்க கிட்ட இதுபத்தி சொன்னா, ஏன் கல்யாணம் ஆன உடனேயே அவ்ளோ தூரத்துக்குப் போறீங்கன்னு நிச்சயம் கேட்பீங்க. அதான் அதுபற்றி யாரிடமும் சொல்லல. ஏன்... என்னோட அப்பா, அம்மா கிட்டகூட நேத்து மதியம் இங்கே புறப்பட்டு வரும்போதுதான் சொன்னேன்.”

“என்னவோ மாப்பிள்ளை... அமுதாவும், நீங்களும் சந்தோஷமா ஊட்டிக்குப் போயிட்டு வந்தாலே போதும்...” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்த பாக்கியம், நேராக அமுதா முன்பு வந்து நின்றாள்.

“என்னடீ... மூஞ்ச உம்முன்னு வெச்சுட்டு இருக்க? முகத்தப் பாத்தா நேத்து நைட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்த மாதிரியே தெரியலீயே... என்ன பிரச்சினையா இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிப் போ. அதான் நல்ல பொண்ணுக்கு அழகு. மாப்ள, உம் மேலே ரொம்பவும் பிரியப்பட்டுதான் ஊட்டிக்கெல்லாம் கூட்டிட்டு போறாரு. அங்கேயும் இப்படியே இருக்காத. நல்லா சிரிச்சுப் பேசு. வாய்விட்டுப் பேசினா எல்லாப் பிரச்சினையும் காணாம போயிடும்.”

அறிவுரையோடு, தனக்கு தெரிந்த தத்துத்தையும் சொல்லிவிட்டுப் போனாள் பாக்கியம்.

ஆனால், அமுதாதான் காலையில் எழுந்தது முதல் மவுன விரதம் இருந்து வந்தாள். தனது திருமண வாழ்க்கை ஆரம்பம் முதலே குழப்பத்தில் தத்தளிப்பது மட்டும் அமுதாவுக்கு நன்றாக புரிந்தது.

“ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? என்னையே கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்ட அசோக்கை எப்படி நான் மறந்தேன். நான் பார்த்த மாப்பிள்ளையைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு அம்மா சொன்னப்போ, எனக்கு மட்டும், அது முடியவே முடியாதுன்னு சொல்ல தைரியம் வரல. அப்பவும் தைரியம் வரலன்னா, கல்யாண மண்டபத்துல கூட தாலி கட்டும்போது, இந்த மாப்ள எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டு எழுந்து இருக்கலாமே... இதையெல்லாம் நான் ஏன் செய்யல? வீட்டுக்கு மூத்தப் பொண்ணுங்றதுனால, எனக்கான பொறுப்புகள் கூடிப்போயிடுச்சா? அசோக்கை நான் விரும்புறது தெரிஞ்சும், அவனைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்க மாட்டேன்னு அம்மா சொன்னப்போ, நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி, அவன் கூடவே ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாமே... அப்போ எல்லாம், அமைதியா இருந்துட்டு, இப்போ ஏன் நானாக தவிக்கிறேன்...” என்று, தனது கடந்த கால ப்ளாஷ்பேக்கை கொஞ்சம் திருப்பிப் பார்த்த அமுதாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர்த் துளிகள் உதிர்த்தன. லேசான மயக்கத்தில், நின்றிருந்த இடத்திலேயே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.

ட்ரிங்... ட்ரிங்...

திடீரென்று அமுதா அருகில் இருந்த டெலிபோன் அலறியது. அவள்தான் எடுத்துப் பேசினாள்.

“அமுதா, நான்தான் அசோக்.”

“எப்படி இருக்க அசோக்? ரெண்டு நாளா ஏன் பேசல?”

“சும்மாதான். காத்திருந்தா காதல் இன்னும் பலமாகும்னு சொல்வாங்க இல்லீயா? அதான், கொஞ்சம் காத்திருந்துப் பார்த்தேன்.”

அசோக் இப்படிச் சொன்னதும், டெலிபோனின் ரிசீவரைக் கையால் பொத்தித், தனக்குத்தானே சிரித்துவிட்டு, விளையாட்டாக கேட்டாள் அமுதா.

“என்ன சொல்ற அசோக்? நீ லவ் பண்ணுறீயா? யாரை லவ் பண்ணுற? அந்தப் பொண்ணு பத்தி எங்கிட்டே நீ சொல்லக்கூடாதா?”

“ஆமாடீ... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி நடிப்பீங்க...”

இப்படித்தான் அமுதாவிடம் கேட்க வேண்டும் என்பதுபோல் இருந்தது, அசோக்கிற்கு. ஆனால், அவன் அப்படிக் கேட்கவில்லை.

“ஏன், நான் யாரை லவ் பண்ணினேன்னு உனக்கு தெரியாதாக்கும்?”

“தெரிஞ்சா நான் ஏன் உங்கிட்ட கேட்கப் போறேன்?”

“சரி, அந்த விஷயத்தை இப்போதைக்கு விடு. நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு ஸ்வீட்டா, க்யூட்டா ஒரு கவிதை எழுதி, அந்தக் கவிதையை அவளுக்குப் பிடித்த ஒரு புக்குக்கு உள்ளே 112 , 113 பக்கங்களுக்கு இடையே வெச்சு, அந்த இரு பக்கத்தையும் லேசா ஒட்டி அவளுக்கே பரிசா அனுப்பி இருக்கேன். எப்படியும் அந்த புக் இன்னிக்கு அவளுக்கு கிடைச்சிடும்னு நினைக்கிறேன். ஆனா, இன்னமும் அந்த புக் அவளோட கைக்குப் போய்ச் சேரலன்னு நினைக்கிறேன்.”

“எப்படி, இப்படி கரெக்ட்டா சொல்ற?”

“புக் கிடைச்ச உடனே அவ என்கிட்ட பேசியிருப்பாளே...”

“ஏன், இன்னும் அவ உன்கிட்ட பேசலீயாக்கும்?”

“அவ பேசாதது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த க்யூட் கவிதையை யார் கிட்டேயாவது சொல்லனும் போல இருக்கு. உன்கிட்ட சொல்லவா?”

“எங்கிட்ட ஏன் சொல்ற, உன்னோட லவ்வர் கிட்ட முதல்ல சொல்ல வேண்டியதுதானே?”

“அது சஸ்பென்ஸ் இல்லீயா? அதான், உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணினேன்.”

“சரி, சொல்லு...”

“இதோ படிக்கிறேன்; கேளு...”

“ஒரு நிமிஷம்... அம்மா வர்றாங்க. அப்படியே லைன்ல இரு...” என்று, அசோக்கிற்கு அன்புக் கட்டளை இட்டவள், டெலிபோன் ரிசீவரைக் கையால் பொத்திக்கொண்டு அம்மாவைப் பார்த்தாள்.

“யாரோ தபால்ல உனக்கு புக் அனுப்பி இருக்காங்க. போஸ்ட்மேன் குடுத்துட்டுப் போறாரு. ஆனா, யாரு அனுப்புனாங்கன்னு தெரியல. நீ படிக்கிற யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருக்கான்னு பாரு...” என்ற பாக்கியம், அந்தப் புக்கை அவளது கையில் திணித்துவிட்டு சமையலறையை நோக்கி வேகமாக நடந்தாள்.

அம்மா அங்கிருந்து சென்றதும் ரிசீவரைக் காதில் வைத்து அசோக்கிடம் பேசினாள் அமுதா. அதே நேரம், தன்னிடம் அம்மா தந்துவிட்டுப் போன, தபாலில் வந்த புத்தகத்தில் 112, 113 ஆம் பக்கங்களை அவசரமாகத் தேடினாள். அவள் எதிர்பார்த்தது போலவே அது ஒட்டப்பட்டு இருந்தது.

“அமுதா... என்ன பண்ணிட்டு இருக்க? நான் வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசவா?”

அசோக் இப்படிச் சொன்னதும், அவனிடம் உடனடியாகப் பேசினாள்.

“திடீர்னு அம்மா வந்துட்டாங்க. நல்லவேளை யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு மட்டும் கேட்கல. ஆமா... க்யூட்டா கவிதை சொல்றேன்னு சொன்னீயே, அத சொல்லு.”

உடனே அசோக், அந்தக் கவிதையை போனிலேயே படித்தான்.

“வெளியில்
அடை மழை பெய்தும்
குடைக்கு குளிரவில்லை;
உன்
வெண்டை விரல்கள்
அதை முத்தமிடாதவரை...

மயக்கும்
மதுரை மல்லிகைக்கு மவுசில்லை;
உன் கூந்தலில்
அது குடியேறாதவரை...

முன்னறிவிப்பின்றி விலையேறும்
தங்கத்திற்கும் மதிப்பில்லை;
உன்
பல் இடுக்குகளில்
அது சிக்காதவரை...

பேனா தீண்டும்
எழுத்துக்களுக்கு உயர்வில்லை;
அது
உன் பெயராக இல்லாதவரை...

தூரிகை தீட்டும்
ஓவியங்களுக்கு உயிரில்லை;
அது
நீயாக இல்லாதவரை...!

ஏன்...
உன் கைப்பட்ட
தீபாராதனையில்தான்
கண் திறக்கிறார்
அந்த இறைவனும்!”

அசோக் கவிதையைப் படித்து முடிக்கவும், அமுதா பரபரப்போடு 112,113 ஆம் பக்கங்களைப் பிரித்து, அதிலிருந்த கடிதத்தை எடுக்கவும் சரியாக இருந்தது. அசோக் போனில் வாசித்த அதே கவிதை புத்தகத்திற்குள்ளும் இருந்தது. அந்தக் கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் மலர்ந்தது. அதே நொடியே அதிர்ச்சியும் காத்திருந்தது.

கவிதையை மனதிற்குள் படித்துவிட்டு அமுதா நிமிர்ந்த போது, அவளது அம்மா பாக்கியம் எதிரே நின்றாள். அதிர்ச்சியில் புத்தகத்தை கீழே போட்டுவிட்டாள் அமுதா. கீழே விழுந்த புத்தகம் சரியாக அவளது வலது கால் பெருவிரலில் விழுந்தது. புத்தகம் விழுந்த வேகத்தில், ரிசீவரைப் போனில் வேகமாக வைத்துவிட்டு “அம்மா...” என்று கத்திவிட்டாள்.

சுவரில் சாய்ந்திருந்த அமுதா கத்தியபடி தரையில் சாய்ந்ததைப் பார்த்து வேகமாக ஓடி வந்தான் குணசீலன்.

“அமுதா உனக்கு என்ன ஆச்சு?”

அமுதாவைத் தூக்கிப் படுக்கையில் கிடத்திய குணசீலன், அருகில் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். மயக்கமாகிக் கிடந்தவள் சிறிதுநேரத்தில் தெம்பாக எழுந்தாள்.

“என்ன நடந்தது அமுதா? ஏன்... அம்மான்னு கத்திக்கிட்டே தரையில் சாய்ந்தே?”

கணவன் குணசீலன் கேட்க... அதற்கு என்ன பதில் சொல்வது என்ற தெரியாமல் முகத்தில் குழப்ப ரேகையை ஓடவிட்டாள் அமுதா.

(தேனிலவு தொடரும்...)

Share: