செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் பாராட்டு!




நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள, இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - விறுவிறுப்பான நடையில் வீரத் துறவியின் விரிவான வரலாறு என்கிற நூலுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியுள்ள அணிந்துரை இங்கே உங்கள் பார்வைக்கு...


சுவாமி விவேகானந்தரின் வரலாற்றை மற்றும் சொற்பொழிவைப் படிக்கும்போது அவருடன் வாழ்கின்ற அனுபவமே கிடைக்கும்.


சுவாமிஜி ஓர் அறிவுக்கடல்; அருட்புனல்; சிறந்த சிந்தனைவாதி; செயல்திறன் மிக்கவர்; சிறந்த ஆசிரியர்; மிகச்சிறந்த யோகி.


பாரத நாட்டின் மீதும், அதன் பாமர மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர். என்று பிறந்தது என்று கூற இயலாத இந்து மதத்தினை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்.


இந்திய நாட்டுப் பெண்களின் முன்னேற்றம், பாமரனுக்கும் கல்வியறிவு என்ற குறிக்கோள்களை உருவாக்கி, செயல் படுத்திக் காட்டியவர். அவரது பன்முகத் திறன்களைப் பற்றித் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதிக் கொண்டே போகலாம். எழுதப்பட்டும் வருகின்றன.


இந்நூலாசிரியர் நெல்லை விவேகநந்தா அவர்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, 'இந்து மதத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் விறுவிறுப்பான ஒரு தொடர் நாவலைப் போல சுவாமிஜியின் வாழ்க்கையை எழுதி இருக்கிறார்.


சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் உலக மெங்கும் கொண்டாடப்பெறும் இவ்வருடம் இந்நூலை வெளியிடுவது தனிச்சிறப்பு பெறுகிறது.


சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை 240 பக்கங்களுக்குள் சுருக்கமாக அந்தந்த தலைப்புகளில் அடக்கியிருப்பது பாராட்டுக்குரியது.


வரலாற்றுப் புகழ்பெற்ற சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு, 'அமெரிக்க சகோதரிகளே... சகோதரர்களே...' என்று தொடங்கப்பட்டபோது, 'அடுத்த நொடியே பலர் எழுந்து நின்று கைதட்டினர். அந்தப் பலத்த ஓசையில் அந்த அரங்கமே அதிர்ந்தது' (பக்கம் 129) என்று ஆசிரியர் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.


இதைப் பற்றி சகோதரி நிவேதிதை எழுதும்போது, 'சுவாமிஜி இந்துக்களின் மதக் கோட்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் முடித்தபோது இந்து மதம் உருவாக்கப் பட்டிருந்தது' என்று குறிப்பிடுவதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.


இந்த நூலின் 12-வது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கட்டளைப்படி தட்சிணேஸ்வரம் காளி தேவியிடம் தனது குடும்ப வறுமைக்காக சுவாமி விவேகானந்தர் பிரார்த்தனை செய்ய போனதும், தேவியைப் பார்த்தும் எதுவும் கேட்கத் தோன்றாமல், மூன்று முறை திரும்பி வந்ததும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.


சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இது ஓர் உணர்ச்சிகரமான கட்டம். சுவாமிஜி, முதன் முதலாக தன் கண்ணெதிரே காளிதேவியே எழுந்தருளிப் புன்னகை புரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவரது கொள்கை அடியோடு மாறியது. பின்னாளில், உலகம் முழுவதும் அத்வைதக் கொள்கையை சுவாமி போதித்து வந்தாலும், உருவக் கடவுளின் தேவைப் பற்றியும் உறுதிபட அவர் எடுத்துரைத்தார்.


அதேபோல, 'சென்னையில் சுவாமிஜி' என்ற தலைப்பில் (அத்:20) சுவாமிஜியின் முதல் சென்னை விஜயம் (1893) பற்றிய செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.


சுவாமிஜியை சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப சென்னை இளைஞர்கள் பட்ட பாடும், போய் வந்த பின்பு சுவாமிஜியின் வெற்றிச் செய்தியையும், செயல் திட்டங்களையும் மக்களிடையே எடுத்துச் சென்றதில் சென்னை இளைஞர்கள் ஆற்றிய பங்கும் அளவிற்கரியது.


இதுபோன்ற எண்ணற்ற சுவையான நிகழ்ச்சி களையும், சுவாமிஜியுடன் தொடர்புடைய மனிதர்களையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இந்நூல் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் பெருகட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.



இறைவன் தொண்டில்
(சுவாமி விமூர்த்தானந்தர்)

ஆசிரியர்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஆன்மிக - பண்பாட்டு மாத இதழ்

ஸ்ரீராமகிருஷ்ண மடம்,


மயிலாப்பூர், சென்னை -- 600 004
Share: