செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!


நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது.


இந்த நூலுக்கு நடிகர் கம் டைரக்டர் ரா.பார்த்திபன் வழங்கியுள்ள பாராட்டுரை...


அகப்படாததெல்லாம் அற்புதங்களே! அப்படியே அகப்பட்டா லும் அதை அதுவாய் பார்ப்பதில்லை நாம்! அதில் கொஞ்சம் மசாலா தூவி, உப்பிட்டு வேறொன்றுடன் ஒப்பிட்டே மகிழ்கிறோம்.


பெண்ணை பெண்ணாக மதிப்பதில் ஏதோ உள்குத்து நம் அனைவரிடமும் உள்ளது. ‘கிளி மாதிரி இருக்கா... கிளியோபாட்ரா மாதிரி இருக்கா’ன்னு உவமை/உதாரணம் சொல்வோம்.


எந்தக் கிளியையாவது ஒரு பொண்ணு மாதிரி அழகாயிருக்கு அதுன்னு ‘சைட்’ அடிச்சிருக்கோமா? அலகால இல்லாம, தன் அழகால நம்மை கொத்திகிட்டு போறப் பொண்ணை கிளின்னு விளிக்கலாம். சரி, அது யாரு கிளியோபாட்ரா?


கருப்பா? சிவப்பா? தொடும்வரை அழகா? உயிர் விடும்வரை அழகா? விட்டுப் பிரிந்து இத்துனை 365-களுக்குப் பிறகும் அழகுக்கு கிளியோபாட்ரா மட்டும் ஏன் உதாரணப் புருஷியாக விளங்குகிறாள்? என்ற என்னுடைய ஈர்ப்புடைய சந்தேகம் அனைத்திற்கும் ஏற்புடைய விளக்கமாகவும், விரும்பும்படியாகவும், எளிமையாகவும் இருக்கிறது நண்பர் நெல்லை விவேகநந்தா செதுக்கியுள்ள ‘கிளியோபாட்ரா’.


கல்லை செதுக்குபவரை சிற்பி என்போம்.    நெல்லை விவேகநந்தா ஒரு சிலையையே இன்னும் நேர்/சீர்/கூர் படுத்தி கலைநயத்தோடு செதுக்கியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

+ ப்ரியமுடன்

ரா.பார்த்திபன்

இதேபோல், இதே நூலுக்கு நடிகை பூர்ணா தந்துள்ள வாழ்த்துரை...


வணக்கம். கிளியோபாட்ராவின் வரலாறு கூறும் இந்த நூலைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


உலகின் நிரந்தர அழகியான கிளியோபாட்ராவைப் பற்றிய இந்தப் புத்தகம் பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றுவரை கிளியோபாட்ராதான் பேரழகி என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் எவ்வளவு திறமையானவளாக, அறிவு நிறைந்தவளாக இருந்தாள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.


அழகு மட்டுமல்ல, அவளது மற்ற திறமைகளும் சேர்ந்துதான் உலகம் அவளைப் போற்ற காரணமாக இருந்தது என்று தெரிகிறது. மேலும், பண்டைய ரோமானிய, எகிப்திய அரசுகள் பற்றியும், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகியோர் பற்றியும் மிகவும் விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் ஆசிரியர் திரு.நெல்லை விவேகநந்தா அவர்கள், இதற்காக பெரும் முயற்சி எடுத்து, ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்!


தமிழின் சிறந்த நூல்களுள் ஒன்றாக சாதனை படைக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!


நடிகை பூர்ணா
Share:

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!



பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில் மயங்கிக் கிடந்தார்கள் என்பார்கள்.


கிளியோபாட்ராவின் வரலாறு பெருங்கடல் என்றால், அதில் இந்த தகவல்கள் மிக மிக சொற்பமே. அவள் யாருக்கு பிறந்தாள், எப்படி ஆட்சிக்கு வந்தாள், ஏன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டாள், சீஸர் உடனான அவளது காதல் எப்படி போனது, சீஸருக்குப் பிறகு ஏன் ஆண்டனியை காதலித்தாள், ஆண்டனியை காதலிக்கப் போய் ரோமானிய சரித்திரம் எப்படி மாறியது, தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது... இப்படி யாரும் அறியாத வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டது கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு.


அவளது அந்த வரலாறு ஏ டூ இசட் வரையில் இப்போது புத்தக வடிவில் வந்து விட்டது. நெல்லை விவேகநந்தா எழுதிய "பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்" என்ற வரலாற்று நாவலில் நீங்கள் கிளியோபாட்ரா பற்றி தெரியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. நாவல் வடிவில், மிக மிக எளிய நடையில் உலகத் தரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர்-டைரக்டர் ரா.பார்த்திபன், சின்ன அசின் என்று சினிமா உலகில் அழைக்கப்படும் நடிகை பூர்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.


இன்னும் சில தினங்களில் புத்தகம் வெளியாக இருக்கிறது. புத்தகத்தை, வழக்கம்போல் பதிப்புலகில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.


324 பக்கங்களில் வெளியாகும் இந்த நூலுக்கு உங்களது ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும், என்ன விலை என்பன போன்ற விவரங்களுடன் விரைவில் சந்திக்கிறேன். நாளை... எனது நூலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர் - டைரக்டர் ரா.பார்த்திபன், நடிகை பூர்ணா எழுதிய வாழ்த்துரைகளை பார்க்கலாம்.


புத்தகம் பற்றிய ஆர்டர் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க...

வானதி பதிப்பகம்

23, தீனதயாளு தெரு,

தி.நகர், சென்னை-17

போன் : 044 - 24342810, 24310769





நட்புடன்

நெல்லை விவேகநந்தா
Share: