வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நீங்களும் செய்யலாம் விதவிதமான கொழுக்கட்டைகள்


விநாயகர் சதுர்த்தி அன்று மோதகம் மற்றும் கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்வார்கள். நீங்களும் செய்து அசத்த சில கொழுக்கட்டை செய்வது தொடர்பான குறிப்புகள் :


எள் பூரண கொழுக்கட்டை

தேவையானவை :

வெல்லம் - 1/4 கிலோ
எள் - 50 கிராம்
பச்சரிசி - 2 ஆழாக்கு
ஏலக்காய் - 4
உப்பு, சர்க்கரை - சிறிதளவு

செய்முறை :

1. பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்துங்கள். அதை மெஷினிலோ, மிக்சியிலோ அரைத்து மாவாக்கி, அதை இட்லி தட்டில் வைத்து அவித்துக்கொள்ளுங்கள்.

2. அவித்த மாவை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்த 2 டம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அந்த மாவை பிசையுங்கள். மாவு பிசையும்போது ஊற்றக்கூடிய தண்ணீர் எக்காரணம் கொண்டு சூடு குறைந்துவிடக்கூடாது.

3. தொடர்ந்து, ஏலக்காயை சிறிது சர்க்கரை வைத்து பொடித்து, அதை அந்த மாவுடன் சேர்த்து பிசையுங்கள். மாவு தளதளவென்று வந்ததும், அதை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

4. தேர்ந்தெடுத்த வெல்லத்தை பொடித்து, அதனுடன் எள்ளையும் தூளாக்கிப் போடுங்கள்.

5. இப்போது கைகளில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பெரிய எலுமிச்சை பழம் அளவுக்கு மாவை எடுத்து, கையிலேயே அதை சிறு தோசை போன்று தட்டிக்கொள்ளுங்கள். அதனுள் சர்க்கரை, ஏலப்பொடி கலந்த பூரணத்தை வைத்து சோமாஸ் போல மூடிவிடுங்கள். இப்படியே மாவு அனைத்தையும் செய்யுங்கள்.

6. அவை அனைத்தையும் இட்லி தட்டில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். மிகவும் ருசியான எள் பூரண கொழுக்கட்டை ரெடி!


மோதகம்

தேவையானவை :

வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - ஒரு மூடி
கோதுமை மாவு - ஒரு கப்
எள் - 1/4 கப்
அரிசி மாவு - ஒரு கப்
எண்ணெய் - 250 கிராம்
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - 2

செய்முறை :

1. எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

2. தொடர்ந்து துருவிய தேங்காயில் சிறிது எடுத்து, அதை நெய்யில் வதக்கி பொடிக்கவும். வெல்லப்பொடியில் எள்ளை பொடித்தோ அல்லது முழுதாகவோ சேர்க்கவும். வறுத்த தேங்காயையும் அதனுடன் சேருங்கள். மேலும் அதனுடன், அரை ஸ்பூன் ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூளை சேர்த்து கெட்டியாக பிசையவும். பிசைந்து முடித்ததும் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

3. பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டையை, தோசை மாவு பதத்தில் நீர்விட்டு தயார் செய்த கோதுமை&அரிசி மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும். அவற்றை பொன்னிற உருண்டைகளாக பொரித்து எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

4. இந்த உருண்டை ஒரு மாதம் வரை கூட கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் இதை விரும்புவார்கள்.

பின் குறிப்பு : வேறு முறையிலும் மோதகம் தயார் செய்யலாம். முதலில் பூரணம், கொழுக்கட்டை மாவை தயார் செய்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டை மாவில் கிண்ணம் போன்று செய்து, அதற்குள் பூரணத்தை வைத்து, முட்டை போல் பிடித்து நீராவியில் வேக வைத்தால் இந்த வகை மோதகம் ரெடி!


 காரக் கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
பழுத்த மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/4 மூடி
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தளை - சிறிதளவு
உப்பு, கடுகு, உளுந்தம்பருப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். அந்த அரிசியையும், மிளகாயையும் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைக்கும்போது தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, கொழுக்கட்டை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

2. மாவை அரைத்த பின்னர், உப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தளை ஆகியவற்றை சேர்த்து, மீண்டும் லேசாக கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.

3. பெரிய வாணலியில் நல்லெண்ணெய் கொண்டு கடுகு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து, அதில் அரைத்த மாவையும் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.

4. தொடர்ந்து, அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு மாவு அவிப்பது போலவும் அவித்தெடுக்கலாம்.

5. நன்றாக வெந்ததும் இறக்கி விடுங்கள். சுவையான காரக் கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : இந்த காரக் கொழுக்கட்டைக்கு புதினா அல்லது கொத்தமல்லி சட்னியை தொட்டுக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.


உப்பு கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, உப்பு, உளுந்து, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
இவற்றுடன் கூடுதலாக ஒரு பிடி கடலை பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

1.அரிசி மற்றும் கடலை பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவிடவும்.

2. கடலை பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து, முன்பு அரைத்த கடலை பருப்பு மாவுடன் சேர்த்து, உப்பும் கலந்து கிளறிக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுந்து ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

4. பின்னர், அதில் காய்ந்த மிளகாய், ஒரு பிடி கடலை பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

5. கலவை நன்றாக வதங்கியதும், அதில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அரிசி, பருப்பு கலவையை கொட்டி கெட்டியாகும்வரை நன்கு கிளறவும்.

6. கெட்டியான பதம் வந்ததும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள்.

7. ஓரளவுக்கு ஆறிய பிறகு அந்த மாவு கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

8. சுவையான உப்பு கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : மாலைநேர டிபனாக இந்த கொழுக்கட்டையை செய்து பரிமாறி அசத்தலாம்.

தொகுப்பு : தேவிகா ஆனந்த்.

Share:

0 கருத்துகள்: