திங்கள், 8 நவம்பர், 2010

பிரம்படி பெற்ற இறைவன்

 
திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம். 

மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது.

வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன் புறப்பட்டால்தான், கட்டுக்கடங்காமல் ஓடும் வெள்ளத்திற்கு அணை போட முடியும் என்பதால், மன்னனிடம் இருந்து உடனடியாக உத்தரவு பறந்தது. வீட்டிற்கு ஒரு ஆண் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புறப்பட்டனர்.

ந்த மதுரை மாநகரில் வந்தியம்மை என்ற முதிய பெண்மணி, புட்டு விற்று தனியாக பிழைப்பு நடத்தி வந்தாள். தினமும் புட்டை விற்க ஆரம்பிக்கும் முன்பு, முதல் புட்டை சிவபெருமானுக்கு படைப்பது இவளது வழக்கம். சிவபெருமான் மீது அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தாள்.

வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த வந்தியம்மையின் பொருட்டு செல்ல ஆண்கள் யாரும் இல்லை. ஆனாலும், அவளை அந்த பணியில் ஈடுபடச் செய்ய உத்தரவு மட்டும் வந்துவிட்டது.

முதியவளான என்னால் என்னச் செய்ய முடியும்? என்று, தினமும் தான் வணங்கும் சிவபெருமான் முன்பு கண் கலங்கினாள். அவளது கண்ணீர் அந்த இறைவனையே உருக வைத்து விட்டது.

அப்போது, “அம்மா...” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஆம்... அந்த இளைஞன் வேறுயாருமில்லை. சிவபெருமான் தான்!

அம்மா, ங்களுக்காக நான் வெள்ளப் பெருக்கைத் தடுக்கச் செல்கிறேன். அதற்குக் கூலியாக எனக்கு நீ புட்டு தர வேண்டும்” என்று கேட்டார் இளைஞன் உருவில் இருந்த சிவபெருமான்.
ந்தியம்மையும் அதற்கு சம்மதித்தாள். 

அவள் கொடுத்த சிறிதளவு புட்டை அங்கேயே வாங்கி சாப்பிட்டு விட்டு, கையில் மண்வெட்டியுடன் வைகைக் கரையை அடைக்க புறப்பட்டார் சிவபெருமான்.

அங்கே, வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான ஆண்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாண்டிய மன்னனின் ஆட்கள் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தனர். 

மன்னனும் பணிகள் எப்படி நடக்கிறது என்று பார்வையிட்டுக் கொண்டே வந்தான்.

ஓரிடத்தில் ஒரு இளைஞன் மண்வெட்டியை ஓரமாக வைத்து விட்டு வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மன்னனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நேராக அவனை நோக்கிச் சென்றான்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல. புட்டுக்காக மண் சுமக்க வந்த சிவபெருமானேதான். மன்னன் அருகே வந்து நிற்பது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். 

ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்த மன்னன், அருகில் கிடந்த பிரம்பை எடுத்து சிவபெருமானை ஓங்கி அடித்தான். அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் எதிரொலித்தது. அடித்த மன்னனுக்கும் வலித்தது.

பிரம்பைக் கீழே போட்டபடி அந்த இளைனைப் பார்த்தான் மன்னன். அப்போதுதான், அந்த இளைஞன் சிவபெருமான் என்பதை உணர்ந்தான் மன்னன். 

அவன் தவறை உணர்ந்த அடுத்த நொடியே இறைவனும் மறைந்து விட்டார். தான் புட்டு வாங்கி உண்ட வந்தியம்மைக்கு முக்தியும் அளித்தார்.

உலக உயிர்கள் அனைத்தும் நானே... என்ற தத்துவத்தை உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய 61-வது திருவிளையாடல் இது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மதுரை மாநகரிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல உற்சவத்தில் இறைவன் பிரம்படிபட்ட நிகழ்வு புட்டுத் திருவிழாவாக இடம் பெறுகிறது. இந்த திருவிழா நடைபெறும் மதுரை - ஆரப்பாளையம்  அருகேயுள்ள வைகை கரையோரம் அமைந்துள்ள பகுதியை இன்றும் ‘புட்டுத்தோப்பு’ என்றே அழைக்கின்றனர்

(திருவிளையாடல்கள் தொடரும்)


Share: