சனி, 6 மார்ச், 2010

சிட்டுக்குருவி பார்த்து இருக்கிறீர்களா?


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே 

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…

ஹோய் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே...

- புதிய பறவை என்ற சினிமா படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி பாடி நடித்திருந்தனர்.

இந்த பாடலில் இடம்பெற்ற சிட்டுக்குருவி இன்று நம்மைவிட்டு எங்கோ விலகிச் சென்றுவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம்தான்.

வயல் காடுகள் எல்லாம் வீடுகளாக மாறியது... செல்போன் மற்றும் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்னணு கதிர்வீச்சுகள்... - இவை, நம்மோடு நெருங்கிப் பழகிய சிட்டுக்குருவிகளுக்கு நம்மிடம் இருந்து விடைகொடுத்து அனுப்பி வருகின்றன.

இப்போது மிகவும் பழமையான கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் சிட்டுக்குருவிகள், இன்னும் சில ஆண்டுகளில் மியூசியத்தில் மட்டும் இடம்பெறும் அளவுக்கு காணாமல் போய்விடும்.

அடுத்த தலைமுறையினரிடம், "முன்பு இப்படி ஒரு பறவை இருந்தது. ரொம்பவும் சின்னதா.. க்யூட்டா.. பார்க்க அழகா இருக்கும்.." என்று அவர்களிடம் படம் காண்பித்து விளக்கம் மட்டுமே கொடுக்க முடியும்.

ஏன்... நீங்களே கூட இந்த பறவையை பார்த்து இருக்கிறீர்களா? என்பதும் சந்தேகம்தானே!

சரி... நீங்களும் இந்த சிட்டுக்குருவியை பார்த்ததே இல்லை என்றால், கீழே படத்திலாவது பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்...

 

Share:

சிட்டுக்குருவி


குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசை நோக்கி பறக்க தயாராகின. ஆனால், இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அது தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்தபோது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து, இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்க விடாமல் செய்தது. அடுத்த நொடியே அது மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்த குருவி விழுந்த இடம் ஒரு விவசாயின் வீட்டு முற்றம்.

அந்த வழியாக வந்த ஒரு பசுமாடு, கீழே கிடந்த அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றது. சிட்டுக்குருவிக்கு மூச்சு திணறினாலும், சாணத்தின் வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. உடனே அந்த குருவி மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்துவிட்டது.


இதைக்கேட்ட அந்த வழியாக சென்ற ஒரு பூனை அங்கு வந்தது. சிட்டுக்குருவியை பார்த்ததும், அதை லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டது.
இந்த கதையில் 3 கருத்துகள் உள்ளன. அவை :

1. உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றால் அதை அமைதியாய் அனுபவி.

- இந்த கதையை சொன்னவர் ஓஷோ.
Share:

காமத்தால் களங்கப்பட்ட சரித்திரம்!


ண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே அன்றைய சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்தது.

அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றனர். காவியங்கள் படைத்தனர். பெண்களை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கிவிட்டனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்? 

பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போலவே எதுவும் தெரியாமல் இருந்தனர். அறிவான விஷயங்களை ஆண்கள் மாத்திரமே பேசினார்கள்.

ஒருக்கட்டத்தில், அந்த ஆண்களுக்கு, அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களும் "போர்" அடித்துவிட்டார்கள். அறிவுப்பூர்வமான விஷயங்கள் அந்த பெண்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால் அவர்கள் மேல் வெறுப்புற்றனர்.

"இப்படி அறிவே இல்லாத பெண்ணிடமா செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?" என்றுகூட சிந்தித்தனர். அதற்கான மாற்றுத் தேடலையும் துவங்கினர்.

ஒரு மனித ஆண் மனித பெண்ணிடம்தானே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அதுதானே இயற்கையின் நியதியும்!

ஆனால், கி.மு.க்கு முந்தைய ஆணோ அந்த இயற்கையின் நியதியை தவிடுபொடியாக்க முயற்சித்தான். அதற்கான செயலிலும் இறங்கிவிட்டான். சில ஆண்கள் ஆண்களுடனேயே உடலால் இணைந்தனர். சில மாவீரர்களும், தத்துவ ஞானிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
கிரேக்க காவியங்களை அலசிப் பார்த்தால் இதற்கான ஆதாரங்கள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன.

ஆணும், ஆணும் நேசித்த அந்த காமம் - காதலுக்கு "கிரேக்க காதல்" என்றே பெயரும் சூட்டிவிட்டார்கள்.

ஆண்களுக்குள் ஏற்பட்ட இந்த வினோத ஆசையால், ஆண்களின் அழகும், கவர்ச்சியும் பொங்கி வழியும் சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டன. ஓவியங்களும் தீட்டப்பட்டன. ஏன்... இதை மையமாக வைத்து நாடகங்களும் எழுந்தன. ஆண் கடவுள்கள் மனித ஆண்களை காதலிக்கும் கதைகளும் கூட பரப்பப்பட்டன.

இப்படி ஆண்களை ஆண்கள் காதலித்த அதேநேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டனர். தங்களால் கர்ப்பமுற்று ஒரு பெண் பெற்றெடுக்கும் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்றும் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டனர், அந்த கிரேக்க ஆண்கள்.

பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் இப்படி இருக்க, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளில் சில பெண்கள் உஷாராகவே இருந்தனர். தங்களுக்கு வந்த தடைகளையும் மீறி ஆண்களுக்கான கலைகளை கற்றுக்கொண்டனர்.

அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்கள், அவர்களுடன் கொஞ்சிப்பேசி மகிழ்வதில் மட்டும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தனர். அவர்களை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். சில ஆண்கள், வீட்டில் தனக்காக காத்திருக்கும் மனைவியை மறந்து பரத்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஆசைநாயகியுடன் பொழுதை போக்கினார்கள்.
இன்னும் சிலர் ஆசைநாயகி வீடே கதியென்று மூழ்கிப்போய் கிடந்தனர்.

இந்த ஆண்கள் ஆசைநாயகிகள் வலையில் வீழ்ந்துவிடக் காரணம், அந்த பெண்களின் தனித்திறமைகள்தான். அதேநேரம், அந்த ஆண்களின் மனைவியரோ கிணற்றுத் தவளையாகவே அறிவற்றவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதில் உலகம் முழுவதும் உள்ள எல்லோரது விருப்பமும் ஒரேமாதிரியாக இருந்தது. ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், அந்த குடும்பங்களின் சொத்தை அரசே எடுத்துக்கொள்ளும் சட்டமும் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தது. அதனால், ஆண் குழந்தைக்காக பெண்கள் தவம் கிடந்தனர்.

அதையும் மீறி பெண் குழந்தை பிறந்தால் மனதை கல்லாக்கிக்கொண்டு அதை கொன்றனர். அரேபிய பாலைவன பகுதியில் வசித்த பெண்கள் தங்களது பெண் குழந்தையை பாலைவன மணலுக்கு அடியில் புதைத்துக் கொன்ற அதேநேரத்தில், இந்திய அம்மாக்களோ நெல் மணிகள், கள்ளிப்பால், அரளி விதை போன்றவற்றை கொடுத்து அந்த குழந்தைகளுக்கு முக்தி அளித்தனர்.

இதை ஒரு குற்றமாகவோ, பாவச் செயலாகவோ யாருமே கருதவில்லை. பெண்ணாக பிறந்தது, தங்களைப்போல் கஷ்டப்படாமல், அது காலாகாலத்தில் போய் சேர்ந்துவிடட்டுமே என்றுகூட எண்ணினார்கள்.

இப்படியே பெண் குழந்தைகளை கொன்று குவித்துக்கொண்டே போனால், அடுத்த சமுதாயம் எப்படி மலரும்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே! - அவர்களும் சில நேரங்களில் இதை யோசித்தார்கள்.

அதனால், சில பெண் குழந்தைகள் அந்த பாதக கொலையில் இருந்து தப்பினர். ஆனாலும், சமுதாயத்தில் அவர்களுக்கு எந்தவித மதிப்பு-ம் கொடுக்கப்படவில்லை.

இப்படி பெண்கள் சமுதாயம் அடியோடு புறக்கணிக்கப்பட, காலப்போக்கில் அவர்கள் வேறு ஆயுதத்தை தூக்கினார்கள். அவர்களது உடல்தான் அந்த ஆயுதம்!

வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்களில் சிலர் அப்போது தங்களது உடல் அழகின் மகிமையை உணர ஆரம்பித்தனர். தேவதாசி ஆனார்கள்.

சாதாரண பெண்கள் எந்த கலையும் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற தடை இருந்த அதேநேரத்தில், இந்த தேவதாசிப் பெண்கள் ஆண்களைப்போல் பல்வேறு கலைகளையும் கற்றனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் கற்றார்கள் என்றே சொல்லலாம்.

இதற்கான ஆதாரத்தை இந்திய காமசூத்ராவில்கூட காண முடிகிறது. "ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்தான் ஒரு பெண் தேவதாசி என்ற அந்தஸ்தை பெற முடியும்" என்கிறது காமசூத்ரா.

இவ்வாறு தேவதாசி ஆன பெண்கள் அந்தந்த ஊரின் ஆண் தெய்வங்களை மணந்து கொண்டார்கள். அதனால், அவர்களது அந்தஸ்து உயர்ந்தது. தெய்வத்தின் மனைவி ஆனார்கள். ஒருக்கட்டத்தில் இவர்களை ஆண்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த தெய்வத்தின் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவித்தார்கள். அதற்காக எதையும் இழக்க அவர்கள் தயாரானார்கள். அந்த தேவதாசிகளுக்காக பணத்தை நீரென வாரியிறைத்தார்கள்.

நாளடைவில் அந்த தேவதாசிப் பெண்கள் தங்களுடன் இணைந்த ஆண்களை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அவர்களை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தனர். இந்த தேவதாசிகளிடம் பணக்காரன், பாமரன் மட்டுமின்றி அரசனே அடிமைப்பட்டு கிடந்தான்.
இதை பார்த்து வியந்த மற்ற பெண்கள் தங்கள் பாதையை மாற்றினர்.

தேவதாசிகளிடம் அழகும், அறிவும் கொட்டிக்கிடப்பதாக நினைப்பதால்தானே ஆண்கள் அவர்களைத் தேடி போகிறார்கள்? என்று எண்ணிய அவர்கள், தங்களது உடல் அழகை படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆண்களிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசினார்கள். மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடந்து செல்வதில்கூட மாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு உதாரணமாக ரஷ்யப் பெண்களையும், சீனப் பெண்களையும் கூறலாம். ரஷ்யப் பெண்கள் கால் விரல்களாலேயே நடக்க பழகினார்கள். சீனப் பெண்கள் பாதங்களை சிறு வயதில் இருந்தே இறுக கட்டி வைத்து, அதை சிறிய பாதமாகவே வைத்துக்கொண்டனர். அந்த சின்ன பாதத்தை சீன ஆண்கள் விரும்பி ரசித்தனர்.

- இப்படி படாத பாடுபட்டுதான் முன்னேறி இருக்கிறார்கள் பெண்கள்.


Share:

கண்ணதாசனை திகைக்க வைத்த பேச்சாளர்


ப்போதும் மங்கலகரமாக பேச வேண்டும் என்று சொல்வார்கள். கவியரசு கண்ணதாசனும் அதை பின்பற்றினார்.

ஆனால், அவர் கலந்துகொண்ட ஒரு விழாவில் பேசிய ஒருவர் அமங்கலமாக பேச, அப்போது ஏற்பட்ட தனது அனுபவம் பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது :

 சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். அப்படி நடந்த ஒரு திருமணத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கே பேசிய ஒருவர், மணமக்கள் மீது மஞ்சள் அரிசியும், பூக்களும் தூவப்பட்டது பற்றி குறிப்பிட்டார்.

"இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும் தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை... பிணங்களா?" என்று அவர் பேசினார்.

அவரது இந்த பேச்சு எனக்கு நெஞ்சில் அடிப்பது போல் இருந்தது. திருமண வீட்டில் அமங்கலமாக பேசுகிறாரே... என்று வருந்தினேன்.
இதேபோல், இன்னொரு சீர்திருத்த திருமணத்திலும் நான் கலந்து கொண்டேன். அப்போதும் ஒருவர் இதேபோல் பேசினார்.

"இங்கே நடப்பது சீர்திருத்த திருமணம். 2 நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. அய்யர் வரவில்லை. ஓமம் வளர்க்கவில்லை. அம்மி மிதிக்கவில்லை. அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே அய்யர் வராததால் இந்த பெண் வாழ மாட்டாளா? இவளுக்கு குழந்தை பிறக்காதா? அய்யர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அய்யர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா? அந்த அய்யர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே, அவர் வந்து கட்டக் கொடுத்தால் தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டக் கொடுத்தால் அறுந்து விடுமா?" - அவர் பேசி முடிக்கவில்லை; நான் அவர் கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன்.

"நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதை பற்றி. பேசாமல் உட்கார்" என்றேன். பின்னர், நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றி குறிப்பிட்டேன்.

மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூடநம்பிக்கையல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.


நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் அதிகரிக்கிறது; ஆனந்தமும் பொங்குகிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரீக சம்பிரதாயத்தையே உருவாக்கி உள்ளன. அவற்றுள் பல அறிவியல் ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வரச் சொல்கிறார்கள்? மணவறையை சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வர வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்?

இப்படி எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன?


காரணம், பூமியே வலப்புறமாக சுழல்கிறது என்பது தான்.
மனிதனின் 2 கால்களில், 2 கைகளில், இடது கை&கால்களை விட, வலது கை-கால்கள் பலம் வாய்ந்தவை. இதனால் தான், சக்தியோடு வாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நல்லது என்று இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள். வலம் என்பது நாம் வலிமை அடைவோம் என்றும் பொருள் தருகிறது.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ செல்கிறவர்கள், திரும்பிச் செல்லும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம் என்பதே!

அமங்கல வீடுகளுக்கு செல்கிறவர்கள் திரும்பும்போது, போகிறேன் என்று சொல்லிக் கொண்டு போவார்கள். அதன் பொருள், இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டி இருக்காது என்று நம்பிக்கை ஊட்டுவதாகும்.

பெண் ருதுவாவதை பூப்படைந்தாள், புஷ்பவதியானாள் என்பார்கள். அதாவது, பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள் என்பது இதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை சாந்திமுகூர்த்தம் என்பார்கள். காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தியடைகிறது என்பதே அதன் பொருள்.
இதேபோல், இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும். நான் சொல்வது சராசரி இந்துக்களை - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
Share: