வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கிளியோபாட்ராவை கவர்ந்த குங்குமப்பூ



குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.

 இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.

குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.

மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.

இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.

குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.

குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.

சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.

குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.

புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.

ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.

ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.

நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.

ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.

பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.
Share: