பாரதிக்கு உதவிய பராசக்தி
பராசக்தி மீது பாரதியார் அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் என்னவோ, பாரதியார் வாழ்வில் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
அவற்றில் ஒன்று இந்த சம்பவம் :
பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
பாரதியார் வசித்த வீட்டின் முன்பு, தகர குவளையை வைத்துக்கொண்டு, குதித்தவாறே பாட்டுபாடியபடி ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
அவள், மேல் சட்டையின்றி குட்டைப் பாவாடை மட்டுமே அணிந்திருந்தாள். காலில் சிறிய சலங்கை அணிந்திருந்தாள். கழுத்தில் பாசி மாலைகளும் கிடந்தன. அந்த மாலையில் புலிப்பல்லும், பித்தளை, செப்பு காசுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிறுமியின் தோற்றம் அவளை குறத்தியின் மகள் என்பதை நினைவுப்படுத்தியது.
இவளது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் மகளான சிறுமி சகுந்தலா தந்தையை நோக்கி ஓடி வந்தாள்.
"அப்பா! இந்த பொண்ணு சட்டை போடாமல் இருக்கிறாளே ஏன்?" என்று பாரதியாரை நோக்கி கேட்டாள்.
"பாவம்! அவள் ஒரு ஏழை. சட்டை வாங்க பணம் இல்லையோ என்னவோ?" என்று அதற்கு பதில் அளித்தார் பாரதி.
உடனே, வீட்டுக்குள் ஓடிச் சென்ற சகுந்தலா தனது சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியில் ஆடிக்கொண்டிருந்த சிறுமியை நோக்கி சென்றவள், மேலாடையின்றி காணப்பட்ட சிறுமிக்கு அந்த சட்டையை கொடுத்தாள்.
"இந்த சட்டை உனக்குத் தான். நீ போட்டுக்கொள்" என்றாள் சகுந்தலா. அந்த சிறுமியும், இன்னொரு சிறுமியான சகுந்தலா கொடுப்பதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.
மகளின் இந்த செயலை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாரதியார்.
அந்தநேரத்தில், ஒரு தட்டில் சாதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார் பாரதியின் மனைவியான செல்லம்மாள்.
"எங்கே அந்த பிச்சைக்காரி?" என்று பாரதியாரை நோக்கி கேட்டார்.
"அவள் போய்விட்டாள். நாங்கள் தான் அவளுக்கு சட்டை கொடுத்து அனுப்பினோம்" என்று பதில் கூறினார் பாரதியார்.
"சட்டையா? யார் கொடுத்தது? நான் தான் அவளை இருக்கச் சொல்லி குரல் கொடுத்தேனே! அதற்குள் அனுப்பி விட்டீர்களே" என்று கேட்ட செல்லம்மாள், மகள் சகுந்தலாவை பார்த்து அப்போது கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.
"நாம இருக்கிற இருப்பில் தர்மம் வேறயா? உன் சட்டையை கொடுத்து விட்டாயே. இது உனக்கு நல்லா இருக்கா? பள்ளிக்கூடம் போக சட்டைக்கு என்ன செய்வாய்?" என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் செல்லம்மாள்.
உடனே, பாரதியாரை நோக்கி திரும்பிய சகுந்தலா, "அப்பா... அம்மா கோபப்படுறாங்களே, நான் செய்தது தப்பா? தர்மம் தலை காக்கும்ன்னு நீங்க தானே சொன்னீங்க?" என்று அப்பாவியாய் கேள்வி கேட்டாள்.
"கவலைப்படாதே கண்ணம்மா! நமக்கு அந்த பராசக்தி ஒன்றுக்கு மூன்றாய் தருவாள். நீ செய்தது தப்பே இல்லை. இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் கொடுப்பது தான் தர்மம்" என்று மகளைப் பார்த்து வாஞ்சையோடு கூறினார் பாரதியார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "எப்படியோ போங்க; அப்பாவுக்கு ஏத்த பொண்ணு. அப்படியே அப்பாவின் குணத்தை உறிச்சுட்டு பொறந்திருக்கா..." என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
தனது உயிரினும் மேலாக பராசக்தியை கருதினார் பாரதியார். அதனால், தான் ஒன்றுக்கு மூன்றாய் தருவாள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
உண்மையில் அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. பாரதி கூறியபடியே, ஒரு சட்டை தானமாக கொடுக்கப்போய் மூன்று சட்டை சகுந்தலாவை தேடி வந்தது.
ஆம்! மறுநாள் சிறுமி சகுந்தலாவுக்கு பிறந்த நாள்.
பாரதியின் உறவினர் ஒருவர் அவளுக்காக மூன்று சட்டைகள் வாங்கிக் கொண்டு வந்தார்.