ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ஐம்பதிலும் காதல் வரும்...


னித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும், அழகான ரசனை இருந்தால் போதும், காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும்.

பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் விபத்து ஏற்படலாம். அதுபோன்று, இரு மனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் பாதிப்பு தான் காதல்.

பதினெட்டு வயதில் தான் ஒருவருக்கு காதல் வரவேண்டும் என்று கிடையாது. ஐம்பதிலும் காதல் வரலாம். ஏன் நூறு வயதை கடந்தாலும் அங்கே ஆத்மார்த்தமான, அனுபவப்பூர்வமான உண்மையான காதலை&பாசத்தை நாம் பார்க்கலாம்.

சில தம்பதியரை பார்த்தால் அவர்களது உண்மையான வயதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு இளமையாக இருப்பார்கள். இன்னும் சில தம்பதியர் இருக்கிறார்கள். வயது குறைவாகத் தான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் ஐம்பதை கடந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஏன் பிறந்தோம் என்பதுபோல் அவர்களது முகபாவனைகள் இருக்கும்.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? எல்லாம் மனம் தான்.

நான் இளமையாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று உங்கள் மனம் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் இளமையாக-சந்தோஷமாகத் தான் எப்போதும் இருப்பீர்கள். என்ன வாழ்க்கை இது? எதைச் செய்தாலும் நேர்எதிராகி விடுகிறதே என்று எண்ணினால் அது தான் மிஞ்சும்.

உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள். உங்கள் மனம் ஆரோக்கியமாக இருந்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனதிற்கு ஒரு நோய் என்றால் அது உங்களுக்கும் தான்.

அன்பை வெளிப்படுத்த வயது ஒரு தடையே அல்ல. ஐந்து வயது குழந்தையிடம் நாம் வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பற்ற அன்புக்கும், பதினெட்டு வயதில் வெளிப்படுத்தும் இனம்புரியாத அன்புக்கும், ஐம்பது வயதில் ஆதரவான அரவணைப்பை தேடும் அன்புக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் எண்ணங்கள் என்பது ஒன்று தான்.

அன்பை பரிமாறிக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. இளம் தம்பதியர் வாழ்வில் கணவன் ஆனவன் மனைவியிடம் பாசத்தை பொழிவது ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும். சிலர் மனைவியை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள். திருமணம் ஆன புதிதில் இது நிறையவே இருக்கும்.

இதனால் தான் ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் மனைவி என்ன சொன்னாலும் கணவன் ஆனவன் கேட்பான். காரணம், சூழ்நிலைகள் அப்படி. சில முதல் பல ஆண்டுகளாக இல்லற வாழ்க்கை பற்றி கனவு கண்ட அவன் மனம், அப்போது அதை அடைந்துவிட்ட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும். அந்த சூழ்நிலையில் மனைவி எதை சொன்னாலும் அவனுக்கு வேதவாக்காக இருக்கும்.

எல்லோரையும் இப்படிப்பட்டவர்கள் தான் என்று சொல்லிவிட முடியாது. இளம் வயதிலேயே அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எப்போதும் நிதானம் தவறி போய்விட மாட்டார்கள்.

இல்லற வாழ்வின் ஆரம்பத்தில் இனிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் காலங்கள் நகர, நகர கசக்கத் தொடங்கிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. காரணம், அப்போது அன்பு பற்றாக்குறை ஏற்படுவது தான்.

மனைவி வந்த புதிதில் அவளுக்கு அடிக்கடி மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்து அசத்துபவர்கள், குழந்தைகள் பிறந்து ஆளான பிறகு, மல்லிகைப் பூவையே மறந்து விடுகிறார்கள். தெருவில் செல்லும்போது, பூ வாங்கலீயா... பூ வியாபாரி கூவும் திசை நோக்கி திரும்பும்போது தான் மலரும் நினைவுகளாக இளமைக்காலம் சற்று கண்முன் நிழலாடிவிட்டு மறையும். அன்று அப்படி இருந்த நானா, இன்று இப்படி மாறிவிட்டேன் என்ற யோசிக்க கூட அவர்களுக்கு அப்போது நேரம் இருக்காது. காரணம், இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபர வாழ்க்கை தான்.

நீங்களும் ஐம்பது வயதிலும் மன அளவில் இளமையாய் இருக்கலாம். அதற்காக, ஒவ்வொரு மனைவியரும் தங்கள் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம் :

* உங்கள் கணவர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றாலும் சரி, சுயதொழில் செய்பவர் என்றாலும் சரி எப்படியும் டென்ஷன் இருக்கும். செய்யும் தொழிலை பொறுத்து டென்ஷன் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதை வீட்டிலும் அவர் வெளிப்படுத்தலாம். அதனால், முடிந்தவரை கணவரை டென்ஷன் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர் டென்ஷனோடு வந்தால் அதை குறைக்கும் வகையில் இதமாக பேசுங்கள். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். டென்ஷனின் வேகம் தணியும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

* சில பெண்கள் 40 வயதை தாண்டினாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடுகிறார்கள். ஆடை விஷயத்திலும் அலங்காரத்தை தவிர்த்து எளிமைக்கு மாறிவிடுகிறார்கள். இந்த தோற்றத்தில் உங்களை உங்களவர் பார்க்கும்போது, நமது மனைவிக்கு வயது ஆகிவிட்டதோ என்று தான் தோன்றும். ஆள் பாதி, ஆடை மீதி என்பதை எல்லா பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். முடிந்தவரை, இளமையான தோற்றத்தை தரக்கூடிய ஆடைகளையே அணியுங்கள். அதற்காக, காஸ்ட்லியான ஆடை தான் அணிய வேண்டும் என்பது இல்லை. சிம்பிளான ஆடையிலும்கூட நீங்கள் Ôயூத்Õ ஆக மின்னலாம். எல்லாம் உங்கள் பக்குவம் தான். நீங்கள் அந்த பக்குவத்தோடு நீங்கள் ஆடை அணிந்தால் கணவனை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். திருமணம் ஆன புதிதில் எப்படியெல்லாம் உங்களை வர்ணித்தாரோ, அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அதை நெருங்கும் அளவுக்கு உங்களை வர்ணித்து மகிழ்ச்சிப்படுத்தவார்.

* யாராக இருந்தாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இரவில் படுக்கைக்கு செல்லும்போது அதுபற்றி மூச்சு விட்டுவிடாதீர்கள். படுக்க தயாராகும் முன் மனதை அமைதிப்படுத்துவது அவசியம். அதனால் படுக்கையறையில் கணவன் முன்பு பிரச்சினைகளை கொட்டாமல் இருப்பது தான் நல்லது.

* உங்கள் கணவர் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் போன்றவற்றை உங்கள் கணவர் மறந்திருந்தாலும், அதை சஸ்பென்சாக வைத்து, அந்த நாளில் அவருக்கு ஆச்சரியத்தக்க பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்கள் கணவர் விரும்பும் பரிசாக அது இருந்தால் இன்னும் நல்லது.

* உங்கள் கணவரது பெற்றோர், அதாவது உங்கள் மாமனார்-மாமியார் உங்களுடன் வசித்தால், அவர்களை அடுத்தவரது பெற்றோர் என்று எண்ணாமல் உங்கள் பெற்றோர் போலவே எண்ணிப் பாருங்கள், உபசரியுங்கள். இதை பார்க்கும் உங்கள் கணவர், என் மனைவி போல் எந்த பெண்ணும் இருக்க மாட்டாள் என்று புளங்காகிதம் கொள்வார்.

* பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட பசியை போக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பசியோடு வரும் கணவனுக்கு, அவரது வாய்க்கு ருசியாக, விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து பரிமாறுவது கணவர் மனதில் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

* எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். உங்கள் கணவர் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, அவற்றை எல்லாம் தெரிந்து, முடிந்தவரை அவர்களை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரை எல்லா செயல்களாலும் மகிழ்ச்சிப்படுத்தும்போது, அவர் நிச்சயம் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார்.

- இப்படியெல்லாம் நீங்கள் இருந்தாலும், உங்களவருக்கு 50 வயது ஆனாலும் ஐ லவ் யூ சொல்லத் தானே செய்வார்..?
Share:

0 கருத்துகள்: