ஞாயிறு, 13 மார்ச், 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 12


12. அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம்

லங்கையில் ஸ்ரீராமரின் படைகளுக்கும், ராவணனின் படைகளுக்கும் இடையே கடும்போர். போர்க்களத்தில் ஸ்ரீராமர், அவரது இணை பிரியா தம்பி லட்சுமணர் மற்றும் வானரப் படையினர் ராவணன் படைகள் மீது எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, ராவணனின் மகன் இந்திரஜித் எய்த நாகபாணம் ஒன்று லட்சுமணர் மீது தைக்க... அடுத்த நொடியே வில், அம்புகளோடு சரிந்தார் அவர். இதைக் கண்ட ஸ்ரீராமருக்கு ஒன்றும் ஓடவில்லை. தம்பியின் நிலையைப் பார்த்து தவித்தார்.

ஸ்ரீராமரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட விபீஷணன், சஞ்சீவி மலையில் உள்ள ஒரு மூலிகையை கொண்டு வந்தால் மட்டுமே லட்சுமணரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார்.

உடனே, அந்த மூலிகையைத் தான் கொண்டு வருவதாகக் கூறிப் பறந்தார் ஆஞ்சநேயர்.

சஞ்சீவிமலையை அடைந்த ஆஞ்சநேயர் கண்களில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் தென்பட்டன. அவற்றில் எந்த மூலிகையை எடுத்துவர வேண்டும் என்பது தெரியாமல் தவித்த அவர், அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்தார்.

அவர், வான் வழியே சஞ்சீவி மலையை கொண்டு சென்றபோது, அதன் ஒரு சிறு பகுதி ஓரிடத்தில் கீழே விழுந்தது. அந்த மலைதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ்மலை.

பல்வேறு அற்புத குணங்கள் கொண்ட அழுகண்ணி ஜோதிப்புல், நீலத்தும்பை அருவதா, நீலக்கொடிவேலி வில்வம், குமரி மிளகரனை, நீர்க்கிராம்பு, மாவிலங்கம், சர்க்கரை வேம்பு, தழுதாழை அசோகு, வெண்கொடி வேலி சீதா, சர்ப்பகந்தி சீனித்துளசி, ராமசீதா வெட்பாலை, நாராயணப் பச்சிலை, செங்கீழாநெல்லி, புல்லாமணக்கு, தைவேளை, கானாம் வாழை உள்ளிட்ட மூலிகைகள் அங்கு இன்றும் விளைகின்றன. சித்தர்கள் வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. ஆன்மிகம் கலந்த மருத்துவச் செழிப்பு கொண்ட இந்த மலையைச் சுற்றி பல்வேறு வர்ம வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன.

அந்த மலையில்தான் இப்போது நம் அய்யா வைகுண்டருக்கு விருந்து. அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தற்காலிகப் பந்தல் அமைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆதிக்க ஜாதியினர்.

பூமியை முத்தமிடும் வேஷ்டியும், தலையில் தலைப்பாகையுமாக மிகவும் எளியத் தோற்றத்தில் தனியொரு ஆளாக அங்கே சென்றார் வைகுண்டர். விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த பந்தலுக்குள் நுழைவதற்கு முன்னதாக அந்த மலையை ஒருமுறை மேல்நோக்கிப் பார்த்தார்.

மலை முழுக்க இயற்கைப் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தது. அங்கு விளையும் குளிர்ந்த மூலிகைகளின் வியர்வைத் துளிகளை சுமந்து வந்த தென்றல் காற்று அய்யாவின் மேனியில் அந்த மூலிகைகளின் சக்தியை ஒற்றி வைத்துவிட்டு பறந்து காணாமல் போனது. சில மைல் தூரம் கடந்து வந்த களைப்பு, அந்த இயற்கைக் காற்று கொடுத்த ஒற்றடத்தில் மாயமானது.

தனி ஆளாக வைகுண்டர் வருவார் என்பதை எதிர்பார்க்காத ஆதிக்க ஜாதியினருக்கு இன்ப அதிர்ச்சி. அவர்களது முகத்திலேயே அது அப்பட்டமாக தெரிந்தது.

விருந்துண்ண வந்த வைகுண்டரை பலமாக உபசரித்து வரவேற்றனர். அவர்கள் கொடுத்த விருந்தில் பங்கு கொண்டு சாப்பிட்டார் அய்யா. சிறிதுநேரம் அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.

அய்யா அங்கிருந்து அகன்ற அடுத்த நொடியே ஆதிக்க ஜாதியினர் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. “இன்றோடு நம் எதிரி காலி” என்று ஆனந்தக் கூத்தாடினர். காரணம், அய்யா சாப்பிட்ட உணவில் அவர்கள் வித்தைக் கலந்து கொடுத்திருந்தனர்.

அலைகடலால் இழுத்துச் செல்லப்பட்டு, அந்த மாபெரும் மகா சமுத்திரத்திற்குள்ளேயே 3 நாட்களாக இருந்தவரை இந்த விம் என்ன செய்யும்?

அய்யா வைகுண்டருக்கு, ஆதிக்க ஜாதியினர் கொடுத்த விம் அமிர்தமாகவே மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவரிடம் வழக்கத்தைவிடக் கூடுதல் உற்சாகம் பிறந்தது.

இதையறிந்த ஆதிக்க ஜாதியினர் ஆடிப்போய் விட்டனர். ‘என்னது... விம் வேலை செய்யவில்லையா?’ என்று பெருமூச்சு விட மட்டுமே அவர்களால் முடிந்தது. வெட்கமும் வேதனையும் அடைந்த அவர்கள், அடுத்ததாக சமஸ்தான மன்னரிடமே முறையிட முடிவு செய்தனர்.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் சுவாதி திருநாள். முந்தைய சமஸ்தான மன்னர்களைவிட இவரது ஆட்சியில்தான் ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆட்டம் போட்டன. மனிதர்கள் என்றாலே, அது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது இவரது தாரக மந்திரம். அதனால், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டர் பற்றி மேட்டுக்குடியினர் சொன்ன போது கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் அந்த மன்னன்.
“நமது நாட்டில் நாம் வைப்பது சட்டமாக இல்லாமல், அடுத்தவன் வைப்பது சட்டமா? எந்த தைரியத்தில் அவன் தனிக்கூட்டம் நடத்துகிறான்?” என்று கொக்கரித்தான் அவன்.

மன்னனின் ஆவேசத்தைக் கண்ட ஆதிக்க ஜாதியினர், மேலும் சில குறைகளையும், கடலில் நங்கூரம் பாய்ச்சுவது போல் அவனது காதில் பலமாகப் போட்டனர்.

“அதுமட்டும் இல்லை மன்னா... தங்களுக்கு எதிராக ஒரு புரட்சிப் படையையும் அந்த வைகுண்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான். நாம் வரி கேட்கச் சென்றால், அதைக் கொடுக்க மறுப்பதோடு, நமக்கு மரியாதையே கொடுக்க மறுக்கிறார்கள். நம் முன்னால் கை கட்டி, வாய் பொத்தி நின்றவர்கள், சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். பூமியை உரசும்படி வேஷ்டி கட்டுகிறார்கள். தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். தங்களுக்கு என்று தனியாக ஒரு கோவிலையும் உருவாக்கிக் கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். அங்கே, அவர்களது ஒற்றுமையை வளர்க்கிறார்களாம்...

மேலும்... நம்மைக் கண்டால் மார்பை திறந்து காட்டி மரியாதை கொடுத்து வந்த அந்த 18 ஜாதிப் பெண்கள், இன்று மார்பை மறைத்துக் கொண்டு ஆனந்தமாக உலா வருகிறார்கள். போதாக்குறைக்கு அந்த வைகுண்டனை தங்கள் கடவுள் என்றே அவர்கள் மார் தட்டுகிறார்கள். அவன் விஷ்ணுவின் அவதாரமாம். போகிற போக்கைப் பார்த்தால், நம்மையே நாஞ்சில் நாட்டில் இருந்து விரட்டி விட்டு விடுவார்கள் போலும்...” என்று மூச்சு விடாமல், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி முடித்தார்கள்.

ஏற்கனவே மன்னன் சுவாதி திருநாளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் ஆகாது. அப்படி இருக்கும் போது, அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று தெரிந்தால் கேட்கவும் வேண்டுமா என்ன? அந்த நிமிடமே அந்த உத்தரவை பிறப்பித்தான்.

“ஒருவேளை பகவான் விஷ்ணு மானிட அவதாரம் எடுத்தால், நம் உயர் குலத்தில் அல்லவா எடுப்பார்? அதனால், நாஞ்சில் நாட்டுக்கு உடனடியாக சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு உடனடியாக தெரிவியுங்கள்...” என்று தனது தலைமை அமைச்சரிடம் கர்ஜித்தவன், தான் நாஞ்சில் நாடு செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கட்டளையிட்டான். 

(தொடரும்...)
Share: