வியாழன், 25 பிப்ரவரி, 2010

வயதுக்கு வந்த பெண்களுக்கு...


அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன.

இந்த உளுந்தங்களியை செய்வது எப்படி தெரியுமா?

அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்துக்கொள்ளவும்.

2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடிகட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.
Share:

அவல் பாயசம்


தேவையானவை :

பால்                                             - 1 லிட்டர்
வெள்ளை கெட்டி அவல்     - 1 கரண்டி
சர்க்கரை                                   - 200 கிராம்
ஏலக்காய்                                  - 4
பச்சை கற்பூரம்                      - ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை                - தேவையான அளவு

செய்முறை :

1. வாணலியில் சிறிது நெய்விட்டு அவல் பொரியும் வரை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் பவுடர் போன்று நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. பாலை நன்கு காய்ச்சி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

3. அந்த பாலில் அரைத்த அவலை சிறிது சிறி-தாக கொட்டிக்கொண்டே கிளறி விடுங்கள்.

4. கலவை நன்கு கொதித்தவுடன் பச்சை கற்பூரம் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

5. தேவை என்றால் குங்குமப்பூவும் சிறிது சேர்க்கலாம். கமகமக்கும் அவல் பாயசம் ரெடி!

விளக்கு பூஜையின்போதோ, அஷ்டலட்சுமி வழிபாட்டின்போதோ இதை நிவேதனம் செய்தால் செல்வம் கொட்டும் என்கிறார்கள்.
Share:

கேழ்வரகு இனிப்பு அடை


தேவையானவை :

கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப்
வெல்லம்                            -  1/2 கப்
துருவிய தேங்காய்         - 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி,
நல்லெண்ணெய்              - தேவையான அளவு

செய்முறை :


1. வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, கேழ்வரகு மாவு ஆகியவற்றை போட்டு கட்டிப்படாமல் கிளறிவிடவும்.

3. மாவு உதிரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

4. சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக மாவை உருட்டுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை மெல்லிய வடைகள் போன்று தட்டி, சூடான தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கேழ்வரகு இனிப்பு அடை தயார்.

பின் குறிப்பு : இந்த வகை அடை செய்யும்போது, கேழ்வரகு மாவு நன்கு வேக வேண்டும். அதனால், சிறு தீயில் அதை நன்றாக வேகவிடுங்கள்.

காரடையான்நோன்பு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள், அடை செய்து நைவேத்தியம் செய்வார்கள்.
Share: