சனி, 8 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 8


8. முத்துக்குட்டி வைகுண்டரான கதை
 - நெல்லை விவேகநந்தா -

தேவேந்திரன் மணிமுடி மீது ஆசைப்பட்டு தான் பேசிய பேச்சை சிவபெருமானும், திருமாலும், ஏன்... அந்த தேவேந்திரனும் கேட்டு விட்டான் என்பதை அறிந்த சம்பூர்ணதேவன் அதிர்ந்தே போய் விட்டான். பரதேவதையும் அதே நிலைக்குத்தான் ஆளானாள். இருவரும் குற்றத்தை உணர்ந்து தலைகுனிந்து நின்றனர்.

அப்போது திருமாலே திருவாய் மலர்ந்தார்.

“சம்பூர்ணதேவா! கடுமையாகத் தவம் இருந்தும் கடைசியில் இப்படி பேராசைப்பட்டு விட்டாயே... இந்தப் பேராசையினால் உங்கள் இருவரது தவமும் வீண் போய்விட்டது. ஆனாலும், நீங்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்கப் போகிறீர்கள். அதே நேரம் சில நிபந்தனைகள் உங்களுக்கு இருக்கும்...” என்றவர், அடுத்ததாக பரதேவதை பக்கம் தனது பார்வையை திருப்பினார்.

“பரதேவதை... சம்பூர்ணதேவனுடன் நீ இணைந்ததன் மூலம், உன் எமலோக கணவனுக்கும், அவன் மூலம் பிறந்த இரு குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விட்டாய். அதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு. நீ பூலோகத்தில் பிறக்கும் போது உனக்காகவே உன் எமலோக கணவன் காத்திருப்பான். அவனை மணம் புரிந்து, அவனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்வாய். அப்படி இருந்தும், அவன் உன்னை கொடுமைப்படுத்துவான். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைக்கும் நீ, ஒருகட்டத்தில் கணவனையே இழந்து விடுவாய். குழந்தைகளுடன் தனிமரமாக நிற்பாய்... அப்போது பூலோகத்தில் கலியின் கோரத் தாண்டவம் அதிகமாக இருக்கும். மக்கள் தவியாய் தவிப்பார்கள். அந்த கலியில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே சம்பூர்ணதேவன் அங்கே பிறப்பான். இருவரும் சந்தித்துக் கொள்வீர்கள். நீ பெற்ற குழந்தைகளை விடுத்து சம்பூர்ணதேவனோடு இணைவாய். ஊரே உன்னை தூற்றும். ஆனாலும், கடைசியில் நீ தெய்வத்தாய் என்று போற்றப்படுவாய்...” என்று திருமால் சொல்லி முடித்த போது, சம்பூர்ணதேவன் சோகத்தில் இருந்து மீளாமலேயே இருந்தான். தொடர்ந்து, அவன் பக்கம் திரும்பினார் திருமால்.

“நீ இந்திரன் மணிமுடி மீது பேராசை கொண்டது மிகப்பெரிய பாவச் செயல். அதற்காக நீ மானிடப் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். 22 வயது வரை சாதாரண மனிதனாக பூலோகத்தில் வாழும் நீ, இன்னொருவனின் மனைவியாக இருக்கும் இதே பரதேவதையை மோகிப்பாய்... மணப்பாய். அதன்பிறகு, தீராத நோய் பாதிப்புக்கு ஆளாகி மரணத்திற்காக போராடுவாய். அப்போது நான் உனக்குள் இறங்கி, உன்னை மீட்டு தர்மத்தை நிலைநாட்டுவேன். உன்னை மனிதர்கள், கடவுள் நிலைக்கு போற்றும் அளவுக்கான தகுதியையும் கொடுப்பேன்...” என்று, திருமால் சொன்ன பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் சம்பூர்ணதேவன்.

அதன்படி, சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் மற்றும் வெயிலாள் அம்மையாருக்கு மகனாக, முத்துக்குட்டியாக பிறந்தார் சம்பூர்ணதேவன். பரதேவதையும் அதே பகுதியில் பிறப்பெடுத்தாள்.

இந்த முன்ஜென்ம உண்மைக் கதையை, வைகுண்டராக மாறிய முத்துக்குட்டி செந்தூர் கடற்கரையில் தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் சொன்ன போது, அதை அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு 3 நாட்களாக காணாமல் போனவன், மீண்டும் உயிரோடு... கடல் நடுவே நடந்து வெளியே வந்தால்... நிச்சயம் அந்த முன்ஜென்மக் கதை உண்மைதான் என்று நம்பினர். அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர்.

அப்போதுதான் அவரது உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
“கடல் அலை இழுத்துச் சென்றது ஏன்? அதன்பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார் அவர்.

அதற்கும் வைகுண்டரிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“மகா விஷ்ணுவாகிய திருமாலின் ஆணைப்படி இரு அரூப (உருவமற்ற) முனிவர்கள் என்னைத் தங்களது தோள்களில் தாங்கிச் சுமந்து சென்றனர். அந்த காட்சி, நான் கடலில் தீர்த்தமாட எழுந்து செல்வதாக உங்களுக்கு தெரிந்தது. திடீரென்று காணாமல் போன போது கடல் அலைதான் இழுத்துச் சென்று விட்டது என்று கருதிவிட்டீர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான் சென்றது, மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு...  அங்கே எனது சரீரத்தை மகர அரங்கில் இருந்த ஒரு பெட்டகத்திற்குள் வைத்து குழந்தையாக்கினர். பின்னர், மும்மூர்த்திகளும் அதனுள் உறைந்து, ஒரே மூர்த்தியாக, ஓர் இளைஞனாக மாற்றினர். அந்த இளைஞனான என்னிடம், கலியுகம் பற்றிக் கூறி, அதை அழிப்பதற்கான வழியையும் தெரிவித்து, பரபிரம்மம் பற்றிய ஞானத்தையும் அருளினார் திருமால்.

மேலும், என்னைத் தனது மகன் என்று கூறிய திருமால், என்னை எப்போதும் பின் தொடர்வதாகவும் கூறினார். “வைகுண்டம் வந்த நீ, இனி வைகுண்டன் என்றே அழைக்கப்படுவாய். அய்யா என்றும் உன்னை இந்த உலகமே வழிபடும். பூலோகம் சென்று, கலியை வென்று வா...” என்று வழியனுப்பி வைத்தார். இப்போது, நான் உங்கள் மகன் மட்டுமின்றி, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்குமே மகன்தான்...” என்று, தனது பெற்றோரிடம் வைகுண்டர் சொல்லச் சொல்ல... அவர்கள் நடப்பது கனவா? அல்லது நனவா? என்று திகைத்துப் போயினர்.

எப்போது தர்மத்திற்கு சோதனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பூமியில் அவதரிப்பேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. அந்தக் கிருஷ்ண பரமாத்மா, திருமால், மகாவிஷ்ணுதான் இப்போது அய்யா வைகுண்டராக அவதரித்து இருக்கிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் உற்சாகம் ஆனார்கள். அய்யா வைகுண்டரின் போதனைகளுக்காக ஏங்கினர். அவர்களிடம், கரைபுரண்டு ஓடும் புது வெள்ளம் போல்,  சுதந்திர விடியலுக்காகப் போராடும் போராளி போல் பேசத் தொடங்கினார். குறிப்பாக, ஆன்மிக வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார். அவர் கூறிய அனைத்தும் புதுமையாக இருந்தன.
  • கடவுள் என்ற பெயரில் பணத்தை அள்ளிக் கொடுக்காதீர்கள். அதுபோல், வாங்கவும் செய்யாதீர்கள்.

  • பூஜை என்கிற பெயரில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்யாதீர்கள். 

  • பூஜை என்று சொல்லி உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்.

  • அன்பின் வடிவானவரே கடவுள். அவள், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

  • எல்லோரும் நியாயம் தவறாமல் நேர்மையாக வாழுங்கள். யாருக்கும் அஞ்சாதீர்கள்.
- இப்படி, புதுமையாக மக்கள் மத்தியில் முழங்கினார், அய்யா வைகுண்டர். அவரது உரை அடங்கிக் கிடந்த மக்களுக்கு புதுத்தெம்பைத் தந்தது. அவர்களுக்குள் புதிய எண்ணம் ஓடியது. தங்களின் அடிமை வாழ்வு மறைந்து மனிதனாக வாழப் போகிறோம் என்கிற புதிய நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து, அவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நடக்கத் தொடங்கினார். சாமித்தோப்பு நோக்கிச் சென்ற அவரைக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கை கூப்பி வணங்கியபடி நின்றிருந்தனர் அங்கிருந்த மக்கள்.

(தொடரும்...)
Share: