ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் நித்ய கல்யாண பெருமாள்





ந்த கோவிலுக்குள் நுழைந்தபோது, இன்று முகூர்த்த நாளா என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம், மாலையும், கழுத்துமாக ஏராளமான புதுமண ஜோடியினர் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது தான். ஆனால், அன்று முகூர்த்த நாள் இல்லை.


வேறு ஏன் இவர்கள் இப்படி வலம் வருகிறார்கள்? என்று யோசித்தபடியே பார்வை இன்னொரு பக்கம் திருப்பியபோது, அங்கே தனியாக ஆண்களும், பெண்களும் கழுத்தில் மாலையுடன் பயபக்தியாக கூப்பிய கரங்களுடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.


ஏன் இப்படி மாலையும், கழுத்துமாக கோவிலை வலம் வருகிறார்கள் என்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டோம்.


"இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் இங்கே ஜோடிகளாக வலம் வருவது. தனியாக வருபவர்கள், திருமணம் உடனே நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள்" என்று விளக்கம் கொடுத்தார் அவர்.


இத்தகைய சிறப்புமிக்க கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் திருவிடந்தை என்ற இடத்தில் அமைந்துள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலாகும்.



வேண்டுதல் : திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.


பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும் (இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள்).


இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.


தல வரலாறு : முன்னொரு காலத்தில், 360 மகள்களுடன் வாழ்ந்து வந்த காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து, தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார் பெருமாள். அதனாலேயே இங்குள்ள பெருமாள் 'நித்ய கல்யாண பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார் என்கிறது இக்கோவில் தலபுராணம்.


அதனாலேயே திருமணத்தடை போக்கும் தலமாக இந்த கோவில் திகழ்கிறது. தினமும் மாலையும், கழுத்துமாக தம்பதியர் வலம் வருவதையும் காண முடிகிறது.


இங்குள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதம் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் அகலும் என்றும் கூறுகிறார்கள். தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாளின் திருவடியை தாங்கும் திருக்கோலத்தில் இங்கு காட்சித் தருவதால் இத்தலத்தில் வழிபடுவோருக்கு ராகு, கேது தோஷங்களும் நீங்குகின்றன.


உற்சவர் நித்ய கல்யாண பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்துள்ளதால், இவர்களை மனம் உருகி வேண்டும்போது திருஷ்டிகளும் நீங்குகின்றன.


நடை திறப்பு :  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.


திருவிழா :  ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்ச கருடசேவை, நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீபம், தனுர் மாத பூஜை, மாசி மகம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


அமைவிடம் : சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

உங்கள் இல்லத்திலும் கெட்டிமேளம் கொட்ட வேண்டுமா? வாழ்க்கையில் வசந்தக்காற்று வீச வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தரிசிக்க வேண்டியது, நித்தமும் கல்யாணம் புரிந்த இந்த நித்ய கல்யாண பெருமாளைத் தான்!

Share: