திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஹோலி ராஜா

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதையும், கோபியர் அதை தடுக்க முயன்றதையும் நினைவுகூறும் வகையில் ஹோலியை கொண்டாடுகிறார்கள்.

தெருவில் வெண்ணெய் நிரம்பிய பானையை தொங்க விடுகிறார்கள். இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அந்த வெண்ணெய் பானையை உடைக்க முயற்சிப்பதும், இளம்பெண்கள் அவர்கள் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி தடுக்க முயற்சிப்பதும் சுவாராசியமாக இருக்கும்.
போட்டியின் இறுதியில் வெண்ணெய் பானையை உடைப்பவர் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அடி வாங்கும் ஆண்கள்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

அங்குள்ள ராதா ராணி கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை துண்டும் விதத்தில் ஒருவித பாடல் பாடுகிறார்கள். அவர்கள் மீது உரிமையோடு பொய்க் கோபம் கொள்ளும் பெண்கள், அவர்களை நீண்ட தடியால் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் (நம் இடைக்கால சினிமாக்களில் காட்டப்படும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்). அடி என்றால் பலமான அடியெல்லாம் கிடையாது. இது செல்ல அடி!

சிலநேரங்களில், தப்பித்தவறி சிலருக்கு பலத்த அடி விழுந்து விடுவது உண்டு. அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் கவச உடையை அணிந்து கொள்கிறார்கள்.விநோதமான ஹோலிப் பண்டிகையாக அமைகிறது இந்த விழா.

சேலை அடி

குஜராத்தில் கூட்டுக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை சற்று வித்தியாசமாக அமைகிறது.

திருமணம் ஆன அல்லது ஆகாத குஜராத்திய பெண்கள், தங்கள் சகோதரியின் கணவன் மீது கேலியான கோபம் கொண்டு, தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதைக்கொண்டு அவர்களை செல்லமாக அடிப்பது ஹோலி கொண்டாட்டத்தின் இன்னொரு பகுதியாக அமைகிறது.

தங்களை செல்லமாக அடிக்கும், மச்சினிச்சிகளுக்கு அந்த மச்சான்கள் அடிக்கு பதிலாக இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து அசத்துகிறார்கள்.

கிருஷ்ண லீலை

வங்காளத்தில் நடைபெறும் ஹோலி விழாவின்போது, கிருஷ்ணர், ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. அப்போது, இளம்பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடியபடியும் ஊர்வலத்தில் வருகிறார்கள்.

அவர்களை வேடிக்கைப் பார்க்க வரும் ஆண்கள், அவர்கள் மீது வண்ணப்பொடிகளை வீசுவதோடு, வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள். கிருஷ்ண லீலைகளை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.


‘குஜால்‘ படுத்தும் ‘குலால்‘!

மணிப்பூரில் ஹோலி அன்று ‘குலால்‘ என்கிற ஒரு வகை விளையாட்டை ஆண்களும், பெண்களும் கலந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் ஒரு பெண் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அவளுக்கு ஆண்கள் பணம் கொடுக்க வேண்டும்.

பவுர்ணமி நிலவொளியில் இவர்கள் ஆடும் ‘குலால்‘ ஆட்டம், அதை காண்போரை ‘குஜால்‘ படுத்திவிடுவது இந்த ஆட்டத்தின் தனிச்சிறப்பு.
Share: