ஞாயிறு, 23 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 9


9. வைகுண்டரின் தவமும் போதனையும்
- நெல்லை விவேகநந்தா -

சாமித்தோப்புக்குத் திரும்பிய வழியில் அய்யா வைகுண்டருக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பெரும் மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு தானாகத் திரண்ட கூட்டம் அது.

நாடார் சமூகத்தில் அவதரித்த வைகுண்டர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டதை கண்ட ஆதிக்க ஜாதியினர் பொறாமையால் துடிதுடித்தனர். ‘ஒரு பைத்தியத்தின் பின்னால் பைத்தியக் கூட்டமே திரண்டு போகிறது...’ என்று ஏளனம் செய்தார்கள். இன்று மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் இஸ்லாமியர், அன்று வைகுண்டர்மீது கல்லை எறிந்து அவமானப்படுத்தியதாகவும் தகவல் உண்டு.  

இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவோடும், ஆதிக்க ஜாதியினரின் அவமானங்களை எதிர் கொண்டும் சாமித்தோப்பு வந்து சேர்ந்தார் வைகுண்டர். அங்கே அவரை வரவேற்க முதல் ஆளாக வந்திருந்தார் பூவண்டர் என்ற யாதவர் (பசு மாடுகளைப் புனிதமாக கருதிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர், அவைகளை பராமரிப்பதற்கு என்று யாதவர் சமூகத்தினரை நியமித்து இருந்தனர். அந்தவகையில், சமஸ்தானத்தினர் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்தனர். பூவண்டர் போன்ற சிலர், சமஸ்தானத்தின் நிர்வாகப் பணிகளில் இருந்தனர்).

முத்துக்குட்டியாகச் சென்று, அய்யா வைகுண்டராக வந்தவரை பணிவோடு வரவேற்று, அவர் தங்குவதற்கு என்று தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றையும் கொடுத்தார், பூவண்டர். அதை மகிழ்வோடு ஏற்ற வைகுண்டர், அந்தத் தென்னந்தோப்பில் ஒரு குடில் அமைத்து, சொந்த பந்தங்களை துறந்து தங்கினார். குறிப்பிட்ட நாளில் தவம் இருக்கவும் ஆரம்பித்தார். தவம் என்றால் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்ல. தொடர்ந்து 6 ஆண்டுகள்!

‘ஏன் இந்த திடீர் தவம்?’ என்று அவரிடமே கேட்டபோது, ‘இது எனது இறைத்தந்தை எனக்கு இட்டளை’ என்று கூறி, கேட்டவர்கள் வாயை அடைத்து விட்டார். மாமரத்தின் அடியில் தவத்தைத் துவங்கிய வைகுண்டர், முதலில் 3 அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி, அதனுள் நின்று கொண்டு முதல் இரண்டு ஆண்டுகள் தவம் செய்தார். கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியாக அது அமைந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகள் வீராசனம் இட்டு, தரையில் அமர்ந்து தவம் செய்தார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களையும் நோக்கில் இந்த இரண்டாம் வகை தவம் அமைந்தது.

தவம் மேற்கொண்ட இந்த காலக்கட்டத்தில், வைகுண்டரைத் தேடி பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் எதுவும் பேசாமல், செய்கைகள் மூலம் ஆசி வழங்கியவர், பசியைப் போக்கிக் கொள்ள வெறும் பால் மட்டுமே அருந்தி வந்தார்.

மூன்றாவது இரண்டு ஆண்டுகால தவத்தை, ஒரு கட்டிலில் கால் விரித்து அமர்ந்தபடி தொடங்கினார். ஒருவழியாக மூன்றாவது தவக்காலமும் நிறைவுற்று, வைகுண்டர் கூறியபடி 6 ஆண்டுகள் நிறைவடைந்தன.

தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மகான் தோன்றியுள்ளார்; ஏன்... இறைமகனாக வந்துள்ளார்... என்பதை அறிந்த, 18 ஜாதியினரும் திரளாக சாமித்தோப்புக்கு வந்தனர். தன்னைத் தேடி வந்தவர்களை எல்லாம் ஒருசேர அமர வைத்து விருந்தளித்து மகிழ்ந்தார் வைகுண்டர். அவரிடம் சீடர்களாகவும் சிலர் சேர்ந்து, தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேற்றத் தொண்டில் இறங்கினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் தாழ்த்தப்பட்டதாக அறிவித்த 18 ஜாதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அதனால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதா? வேண்டாமா? என்று வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர். அதனை உணர்ந்த வைகுண்டர், முதலில் 18 ஜாதியினர் இடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கருதினார். ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண மறுத்தவர்களை ஒருவழியாக சமாளித்து விருந்துண்ணச் செய்தார்.

18 ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை கண்ட வைகுண்டருக்குள், நிச்சயம் அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அந்தக் காலத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனால், பராமரிப்பு இல்லாத ஏரியிலோ, குட்டையிலோ நீரெடுத்து குடித்தனர் அவர்கள். இதை போக்குவதற்காக பொதுக்கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் வைகுண்டர். ‘முத்திரி கிணறு’ என்று அதற்கு பெயரும் சூட்டினார் (அய்யா வழி தர்மபதிகளுக்கு - கோவில்களுக்குச் சென்றால் இந்த புனிதக் கிணற்றை நீங்களும் பார்க்கலாம். முத்திரி என்றால் உத்தரவாதம் தருதல் அல்லது நியமித்தல் என்று பொருள்). அந்தப் பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றாக தண்ணீர் எடுத்து மகிழ்ந்தனர்.

ஒருநாள் மாமரத்தின் அடியில் தியானத்தில் மூழ்கியிருந்த வைகுண்டர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, “நான் சொல்வதை அப்படியே எழுது” என்றார். அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், எழுத்தாணியையும், எழுதப்படாத பனை ஓலைச்சுவடிகளையும் வேகவேகமாக எடுத்து வந்தார். வைகுண்டர் சொல்லச் சொல்ல ஒன்றுவிடாமல் எழுதினார்.

தனது மானிட பிறப்பு, தனக்கு திடீரென்று ஏற்பட்ட நோய், மகாவிஷ்ணுவை தரிசித்த அனுபவம், அவர் தனக்கு கூறிய உபதேச மொழிகள்... இவற்றோடு உலக நடப்புகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறினார். ஒருவித பாடல் வடிவில் அவரது உபதேசங்கள் அமைந்திருந்தன.

“திருச்சம்பதியில் புக்கித் தீர்த்தக் கரையில் செல்ல
திரைவந்து இழுத்ததையோ சிவனே அய்யா...
அலைவாய் கரையில் இருந்து தலைமேலே கையை வைத்து
அம்மை அழுததை என்ன சொல்வேன் சிவனே அய்யா...
கடலிலே போன மகன் இன்னும் வரக் காணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா...
கடலும் முழுங்கிட துறவர் வணங்கியெனைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா...
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளும் இடம் சென்றேன் சிவனே அய்யா...
மெய்யை நிலை நிறுத்தி பொய்யை அடியழிக்க
விடை தந்து அனுப்பினாயே சிவனே அய்யா...
பேயன் போவதை அன்னா பாருங்கோவென்று சிலர்
பிதற்றியும் வைக்கின்றாரே சிவனே அய்யா...
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து இருந்தனையோ சிவனே அய்யா...” 

- என்று, திருச்செந்தூர் கடலில் தான் அடித்துச் செல்லப்பட்டு, வைகுண்டம் சென்று திருமாலை சந்தித்து உபதேசம் பெற்று, வைகுண்டராகத் திரும்பி சாமித்தோப்பு வந்து தவம் மேற்கொண்டது வரை குறிப்பிட்ட வைகுண்டர், மேலும் சொல்லத் தொடங்கினார். அவரது சீடரும் எழுதிக் கொண்டே போனார்.

இந்தப் பாடல் வரிகள் அய்யா வழி அருள் நூலில் இடம் பெற்றுள்ளது. இதைச் “சாட்டு நீட்டோலை” என்று அய்யா வழி பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்தச் சாட்டு நீட்டோலை உபதேசத்திற்கு பிறகுதான், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சிலிர்த்தெழுந்தார் வைகுண்டர். 

(தொடரும்...)
Share: