சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 10


10. உயர்வு தாழ்வு எதுவுமில்லை
 -நெல்லை விவேகநந்தா-

றைவனை ஒருவன் காண  வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அழகாகப் பதில் சொன்னார் அய்யா வைகுண்டர்.

“யார் அவன்? யார் அவன்? என்று நீ பிறந்தது முதல் தேடும் அந்த இறைவனை நீ அறிய வேண்டும் என்றால், முதலில் நீ யார் என்பதை அறிய வேண்டும். உன்னுடைய ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொண்டு, உனக்குள் இருக்கும் சக்தியையும் அறிந்தால் மட்டுமே இறைவனை உணர முடியும்” என்றார் வைகுண்டர்.
அதோடு, அன்றைய வழிபாட்டு முறைகளையும் உரிமையோடு கண்டித்தார்.

“உண்டு பண்ணி வைத்த உட்பொருளை தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமென கையெடுப்பார் சண்டாளர்...” 

- என்று, மூட நம்பிக்கைகள் நிறைந்த அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்தவர், பணத்தை தண்ணீராக செலவு செய்து பூஜை மற்றும் புணஸ்காரம் செய்ய வேண்டாம்... உருவ வழிபாடு வேண்டாம்... உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்... மூடநம்பிக்கைகளில் மூழ்க வேண்டாம்... என்று மக்களை வலியுறுத்தினார்.

ஆன்மிகத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்த வைகுண்டர், எப்படிப்பட்ட ஆன்மிகம் தேவை என்பதையும் வரையறுத்தார்.

“சக மனிதர்களிடம் மட்டுமின்றி, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு அன்பு செலுத்தப் பழகிக் கொண்டால் இறைவனை உணர்ந்து, அவனை அடைவதற்கான வழியும் கிடைத்து விடும். இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக இல்லறத்தை துறப்பது தவறான செயல். இல்லறம் போன்ற மிகப்பெரிய தவம் வேறொன்றும் இல்லை... அதோடு, முடிந்தவரை பிறருக்குத் தருமம் செய். யாரும் தேடி வந்து உதவி கேட்பதற்கு முன்பு, நீயே அவர்களை தேடிச் சென்று உதவு. அவர்களை மனம் குளிரச் செய். அவர்களது மகிழ்ச்சியில் நீயும் ஆனந்தப்படு. அதுதான் உண்மையான தருமம். அவ்வாறு, பிறருக்கு தருமம் செய்தாலே போதும்; அதுதான், நீ இறைவனுக்குச் செய்யும் உண்மையான வழிபாடு...” என்கிறார் வைகுண்டர்.

ஆன்மிக நெறிகளோடு தகுந்த ஆன்ம நெறிகளையும் அய்யா வலியுறுத்தினார். “தேவையற்ற வாய் வார்த்தைகள் ஒருவனது வாழ்நாளைக் குறைத்து விடும். அதேபோல், அடக்கம் இல்லாத ஆர்ப்பாட்டமான வாழ்க்கை அமைதியைச் சிதைத்துவிடும்” என்றார்.

இவ்வாறு ஆன்மிகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறிய வைகுண்டர், அன்றைய அடக்குமுறையான வாழ்க்கைக்கு எதிராகவும் மக்களை உசுப்பிவிட்டார்.
  • கை கட்டி, வாய் பொத்தி அடுத்தவனிடம் அடங்கி கிடக்கும் அடிமை வாழ்வு ஒழிய வேண்டும்.

  • ஆதிக்க ஜாதியினர் செய்யும் சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்பட்டு கிடக்காதீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழுங்கள். 

  • எவருக்கும் எதற்கும் வரி என்ற பெயரில் பணத்தை கொடுக்காதீர்கள். 

  • இந்த பூமியில் வாழப் பிறந்தவர்கள்தான் நீங்கள்; அந்த வாழ்க்கையை அடுத்தவனிடம் கேட்டுப் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம்.

  • எவனையும் போற்றி வணங்க வேண்டாம். அதேபோல், எவனுக்கும் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு நீங்கள் அடங்கி நடந்தாலே போதும்.
- இப்படி, புரட்சிக்கரமான கருத்துக்களையும் கூறி, அன்றைய அடக்கு முறைகளுக்கு ஆளான இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உண்டாக்கினார் வைகுண்டர்.

மேலும், “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனே கூலி கொடு. உரிய கூலி கொடுக்காமல் ஏமாற்றினால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்...” என்று அன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தையும் சாடினார்.

“இனி நீ அடிமை கிடையாது. ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து கால் முட்டிக்கு மேலே வேஷ்டி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூமியை முத்தமிடும் அளவுக்கு நீ வேஷ்டி கட்டலாம். கை இடுக்கில் துண்டைச் சொருகி வைத்து குனிந்து நின்ற நீ இனி முதல் நெஞ்சம் நிமிரலாம். அந்தத் துண்டை உன் தலையில் தலைப்பாகையாகக் கட்டு... ஆதிக்க ஜாதியினர் வணங்கும் கோவில்களில்தான் இறைவன் இருக்கிறான் என்று தப்பு கணக்கு போடாதே. உனக்குள்ளேயே உள்ள இறைவனை நான் சுட்டிக்காட்டும் கோவிலில் வழிபடு. அந்தக் கோவிலில் உங்கள் சக்தியை நீங்களே தரிசியுங்கள் (திருநாமமும், அதன் பின்னணியில் கண்ணாடியும் கொண்ட இந்த வழிபாட்டு முறைதான் இன்றும் அய்யா வழி தர்மபதிகளில் பின்பற்றப்படுகிறது).

இன்றுமுதல் நீங்கள் புதிய மனிதராகிவிட்டீர்கள். உங்களுக்குள் ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாம். முத்திரிக் கிணற்றில் எல்லோரும் ஒன்றாக நீரெடுத்து அருந்துங்கள்... ஆதிக்க ஜாதியினருக்கு பயந்து செருப்பு அணிவதையே மறந்து போன நீங்கள், இனி யாருக்கும் அஞ்சாமல் செருப்பு அணியுங்கள். குடையும் எல்லோருக்கும் உரியதுதான். வெயிலில் செல்லும் போதும் அதை பிடித்துச் செல்லுங்கள். எல்லா ஊர்களும் நமது ஊரே. நீங்கள் எங்கே சென்றாலும் தைரியமாக சுதந்திர உணர்வுடன் செல்லுங்கள்.

ஆண்களைப் போல் பெண்களும் இன்று முதல் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள். என்னைப் பார்க்க வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்குச் சீலை அணிந்து மார்பை மறைத்தே வரவேண்டும். எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு உண்டு.

மனிதப் படைப்பில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்புகளே! இவர்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்துபவர்களை துரத்தியடிக்க வேண்டும்...”

- இப்படி, பல்வேறு சுதந்திரக் கொள்கைகளை அடக்கி ஆளப்பட்டவர்களுக்காக வகுத்துக் கொடுத்தார் அய்யா வைகுண்டர். அவரது இந்த உபதேசங்கள் 18 ஜாதியினரின் சிந்தையை தூண்டிவிட்டது. ஆதிக்க ஜாதியினரைப் பார்த்துக் குனிந்து குனிந்து பழக்கப்பட்டு, கூன் விழுந்த முதுகு ஆகிவிட்ட இளைஞர்கள் முதன் முறையாக நெஞ்சம் நிமிர்ந்தார்கள். 

 “கடைசி வரையிலும் நம் வாழ்க்கை இப்படித்தானா? நமது மகளும் இதே வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?” என்று துடித்த பெண்கள் மனதில் தைரியம் பிறந்தது.

"குகையாளப் பிறந்தவனே...
எழுந்திரடா என் குழந்தாய்
அதிகமுள்ள நீசனும் தான்
மற்பிடித்து அடிக்கிறானே...
படையெடுக்க வா மகனே...
பாருலகம் சுட்டழிக்க
வரிசை பெற்ற நீ மகனே
மான மறுக்கம் பொறுக்கலையோ..." 

- என்று, வைகுண்டர் ஊட்டிய புரட்சிப்பால் பற்றி குறிப்பிடுகிறது, அகிலத்திரட்டு. 

(தொடரும்...)
Share: