ஊட்டியில் அறை எண் 107!
கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்த வழியில், கார் டிரைவர் ஏமாற்றிவிட்டு உடமைகளோடு ஓடிவிட... ஆபத்பாந்தவனாக வந்து உதவிய அரசு பேருந்தில் ஏறி, ஒருவழியாக ஊட்டிக்கு வந்து இறங்கினார்கள்... ஆனந்தும், ஷ்ரவ்யாவும்.
ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தால் வேகமாக முகத்தில் வந்து மோதுமே... அப்படியொரு குளிர்ச்சி ஊட்டியில்! ஊரே ஏ.சி. குளுமையில் ஜில்லென்றிருந்தது. கடுகடுக்க வைக்கும் மதிய வெயிலில் சென்னை தி.நகர் வீதிகளில் அலைந்து விட்டு, சரவணா ஸ்டோர் கடை முன்பு வந்தால்... அங்கிருந்து வந்து மோதும் ஏ.சி. காற்றின் குளுமையை அனுபவிப்பதே தனி சுகம். இந்த சுகம், இங்கே ஊட்டி முழுக்க நிரம்பியிருந்தது.
"ஆனந்த்... ஊட்டியில இதே க்ளைமேட் எப்போதும் இருக்குமா?"
"இப்போ சீஸன் நேரம். அதனால, இப்படி ஜில்லுன்னு இருக்கு. மற்ற நேரங்கள்ல இதைவிட அதிகமாக் குளிரும். முதன் தடவையா இங்கே வந்திருக்கல்ல, அதான் உனக்கு ஊட்டி ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனா, இங்கே உள்ளவங்க கிட்ட கேளு; இங்கே வாழ்றதே வேஸ்ட்டுன்னு சொல்வாங்க."
"அவங்க ஏன் அப்படிச் சொல்லணும்? வாழ்ந்தால், ஊட்டி மாதிரியான இடத்துல வாழணும்னு நாமெல்லாம் சொல்றோம். ஆனா, ஊட்டியில உள்ளவங்களுக்கு, அங்குள்ள வாழ்க்கை பிடிக்கலன்னு எப்படி சொல்றீங்க?"
ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், ஆனந்துக்கு லேசா எரிச்சலாக இருந்தது.
"இப்போ நாம இங்கே வந்தது ஊட்டியில மக்கள் வாழ முடியுமா, இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணுறதுக்கு இல்ல. அத முதல்ல புரிஞ்சுக்க."
"ஏன், நீங்க டென்ஷன் ஆகுறீங்க? நீங்கதானே இங்குள்ளவங்களுக்கு இங்கே வாழ்றது பிடிக்கலன்னு சொன்னீங்க. அது ஏன்னு தெரிஞ்சுக்கற ஆசையிலதான் அப்படிக் கேட்டேன். மத்தபடி, அதுபத்தி உங்கக்கிட்ட கேட்டு எக்ஸாமா எழுத போறேன்...?" ஷ்ரவ்யாவிடம் இருந்து ஊட்டிக் குளிரையும் தாண்டி சூடாகவே வந்தது பதில்.
ஆனந்துக்கும் அது புரிந்துவிட்டது.
ஆனாலும், ஷ்ரவ்யாவுக்கு பதில் சொல்ல விரும்பாமல், சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டான். தனக்கு அருகில் வேகமாக வந்த ஆட்டோவை மறித்தான்.
"லாட்ஜ்க்குப் போகணும். வர முடியுமா?"
"எந்த லாட்ஜ் ஸார்?"
"ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ்."
"சரி, ஆட்டோவுல வந்து ஏறுங்க."
ஸ்ரவ்யாவைப் பார்த்தான். அவளைக் காணவில்லை. சட்டென்று பதற்றமாகிவிட்டது, ஆனந்துக்கு.
'நாம கோபமா பேசப்போய், இவ வேற எங்கேயும் போய்விட்டாளா?' என்று, அவசரம் அவசரமாகத் தேடினான்.
"ஸார்... யாரைத் தேடுறீங்க?" ஆட்டோ டிரைவர் கேட்டான்.
"என்கூட ஒரு யங் லேடி வந்தாங்க. என் பக்கத்துலதான் நின்னாங்க. திடீர்னு காணும்."
"பதற்றப்படாதீங்க ஸார். இங்கேதான் எங்கேயாவது நிப்பாங்க. டென்ஷன் இல்லாம தேடிப் பாருங்க. நான் வேணும்னாலும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்."
ஆட்டோ டிரைவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, ஆனந்துக்கு. அதனால், ஆட்டோ டிரைவரே இறங்கி வந்து, தன் பங்குக்கு அவளைத் தேட ஆரம்பித்தான். சில அடிகள் எடுத்து வைத்தவன், ஆனந்த் அருகில் வேகமாக ஓடி வந்தான்.
"ஸார்... உங்க ஒய்ப் எப்படி இருப்பாங்கன்னு சொல்லவே இல்லீயே..."
"என்னது... ஒய்ப்பா?"
ஆனந்த் இப்படிக் கேட்டதும், 'ஓ... அப்படீன்னா நீ அந்தப் பொண்ணை தள்ளிட்டுதான் வந்திருக்கீயா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான், ஆட்டோ டிரைவர்.
அப்போதுதான், ஆனந்த் புத்தியில் பலமாக உறைத்தது.
"பதற்றத்துல நீ என்ன சொன்னன்னு புரியல. அவ என்னோட மனைவிதான். ரெட் கலர் சாரி கட்டியிருப்பா."
"சரி, நானும் தேடிப் பார்க்கிறேன்..."
ஆனந்திடம் சொல்லிவிட்டு, ஷ்ரவ்யாவை தேட ஆரம்பித்தான் ஆட்டோ டிரைவர். 5 நிமிடம் ஆகிவிட்டது. ஆனால், அவள் வரவேயில்லை. அங்கே இங்கே என்று தேடி... ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் நின்றான் ஆனந்த்.
"ஆனந்த்... திடீர்னு எங்கேப் போனீங்க?"
யாரே தன்னை அழைக்க... சட்டென்று திரும்பிப் பார்த்தான். அங்கே ஷ்ரவ்யா நின்று கொண்டிருந்தாள்.
சத்தம் போட்டு அவளை திட்ட வேண்டும் என்பது போல் இருந்தது, ஆனந்துக்கு. வார்த்தையை பலமாக வரவழைக்க வாயைத் திறந்தான். அதற்குள் ஷ்ரவ்யா முந்திக்கொண்டாள்.
"நீங்க எங்கேப் போனீங்க? இந்த கேரட் செடியைப் பாக்குறதுக்கு அழகா இருந்துச்சு. வாங்கிட்டு வந்திடலாம்னு, உடனே வாங்கிட்டு திரும்பினா, உங்கள ஆளையேக் காணோம்."
கையில் நான்கைந்து கேரட் செடிகளை வைத்துக் கொண்டு அப்படிக் கேட்டாள்.
ஷ்ரவ்யா சொன்ன பிறகுதான், அவளைக் காணவில்லை என்று தானும், தன்னைக் காணவில்லை என்று அவளும் அலைந்து திரிந்து தேடியது ஆனந்துக்கு தெரிய வந்தது.
அந்தநேரத்தில் ஆட்டோ டிரைவரும் அங்கு வந்து சேர்ந்தான்.
"ஸார்... அவங்க கிடைச்சிட்டாங்களா?"
"ஆமா, அவங்க வந்துட்டாங்க. முதல்ல ஆட்டோவை எடுங்க."
ஆனந்தும், ஷ்ரவ்யாவும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் லேக் ரோட்டில் உள்ள பெரிய லாட்ஜ் ஒன்று முன்பு போய் நின்றது ஆட்டோ.
"ஸார்... நீங்க கேட்டது மாதிரியே இது பெரிய லாட்ஜ். சிங்கிள் பெட் உள்ள ரூமின் வாடகையே ஒருநாளைக்கு குறைஞ்சது 3 ஆயிரம் இருக்கும். புடிச்சியிருந்தா இங்கே தங்குங்க. இல்லாட்டி, எதிரே இருக்குது பாருங்க, ஒரு லாட்ஜ். சிம்பிளா இருந்தாலும் நீட்டா இருக்கும். அங்கே ஒருநாள் வாடகை ஆயிரம் ரூபாய்தான்."
"சரி, எந்த லாட்ஜ்ல தங்கனும்னு நான் பாத்துக்கறேன். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆச்சு?"
"200 ரூபா ஸார்."
"என்னங்க சொல்றீங்க, நாலு கிலோமீட்டர் தூரம் வர்றதுக்கு 200 ரூபாயா? எங்க மெட்ராஸ்ல கூட இப்படிக் கேட்க மாட்டாங்க..."
"ஸார், ஆட்டோவுக்கு 100 ரூபா. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுனதுக்கு 100 ரூபா."
அதுக்கு மேல் ஆட்டோ டிரைவர் பேசாமல் இருக்க, அவன் கேட்ட 200 ரூபாயைக் கொடுத்து விட்டு, ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்த அந்த ஹோட்டலுடன் இணைந்த லாட்ஜ்க்குள் ஸ்ரவ்யாவுடன் நுழைந்தான் ஆனந்த்.
அழகான வரவேற்பு அறை. மஞ்சள் நிற பல்புகளின் ஒளியில் ரம்மியமாய் இருந்தது, இந்த இடம்.
டெலிபோன் ரிசீவரை காதில் வைத்துக் கொண்டு, பேச்சு யாருக்கும் அதிகம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், ஆனந்தையும், ஷ்ரவ்யாவையும் பார்த்ததும் அழகான ஸ்மைலை சின்னதாக உதிர்த்துவிட்டு, போன் இணைப்பைத் துண்டித்தாள்.
"வெல்கம் அவர் ஹோட்டல் ஸார். உங்களுக்கு எந்த மாதிரியான ரூம் வேணும் ஸார். முதல்ல நீங்க செலெக்ட் பண்ணுன ரூம் பிடிக்கலன்னா, உடனே வேற ரூமுக்கு மாறிக்கலாம் ஸார். இந்த டேரிப்பைப் பார்த்து உங்களுக்கு புடிச்ச ரூமை செலெக்ட் பண்ணலாம் ஸார்."
ஸார்... ஸார்... என்ற, அந்த அழகான ரிசப்ஸனிஸ்ட் இளம்பெண்ணின் பேச்சு, வாழைப்பழத்தை தேனில் குலைத்துத் தருவது போல் இருந்தது.
கண்களால் ஷ்ரவ்யாவைப் பார்த்த ஆனந்த், சிங்கிள் பெட் ரூமையே செலெக்ட் செய்தான்.
"ஸார்... நீங்க எங்க லாட்ஜ்ல தங்கணும்னா சில கன்டிஷன்ஸ் இருக்குது ஸார். கண்டிப்பா நீங்க உங்களோட ஐடென்டி கார்டின் ஜெராக்ஸ் தரணும். உங்களோட ஒரிஜினல் முகவரியையும் தரணும். அட்வான்ஸா 5 ஆயிரம் ரூபாய் கட்டணும்."
"ஓ யஸ்..." என்ற ஆனந்த், பணத்தோடு, தான் பணிபுரியும் நாளிதழின் ஐடென்டி கார்டையும் கொடுத்தான்.
"ஒரு ஜெராக்ஸ் மட்டும் எடுத்துட்டு ஐடென்டி கார்டை தந்திடுறேன் ஸார். நீங்க இங்கிருந்து கிளம்புற வரைக்கும் இதை நாங்க வெச்சிருப்போம். நீங்க ரூமை வெக்கேட் பண்ணும்போது திரும்பித் தந்திடுவோம்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிய அந்த ரிசப்ஸனிஸ்ட் பெண், அடுத்த சில நிமிடங்களில் ஆனந்தின் ஐடென்டி கார்டை அவனிடம் திருப்பித் தந்தாள்.
107 என்ற அறையின் சாவியை ஆனந்திடம் தந்த அந்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... இந்த நோட்டில் உங்களோட ஒரிஜினல் அட்ரஸை எழுதிடுங்க" என்றாள்.
உண்மையை மறைக்க விரும்பாத ஆனந்த், தான் தங்கியிருந்த மேன்ஸன் முகவரியை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
முகவரியைப் பார்த்த ரிசப்ஸனிஸ்ட், "ஸார்... நீங்க தங்கியிருக்கிற மேன்ஸன் அட்ரஸை தந்திருக்கீங்க. அப்படீன்னா, உங்ககூட வந்திருக்கிற இவங்க யாரு-?"
ரிசப்ஸனிஸ்ட் இப்படியெல்லாம் கேட்பாள் என்று யோசிக்கவில்லை ஆனந்த். அப்படி யோசித்திருந்தால், கண்டிப்பாக தவறான முகவரியைத்தான் எழுதியிருப்பான். தான், பேச்சுலராக தங்கி பணிபுரியும் மேன்ஸன் முகவரியை எழுதியிருக்க மாட்டான். வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை ஆனந்த்.
"மேடம். இவங்க என்னோட ஒய்ப்தான். போன வாரம்தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சு. எங்களோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் இருக்கு. இன்னும் இவங்கள நான் மெட்ராஸ்க்கு கூட்டிட்டுப் போகல. இனிதான், நாங்க மெட்ராஸ்ல புதுவீட்டுல குடியேறனும். இன்னும் நீங்க நம்பலன்னா, அவங்க கழுத்துல பாருங்க. நான் கட்டின மஞ்சள் கயிறோட ஈரம்கூட இன்னும் சரியாக் காயல. அப்படீன்னா, நாங்க இங்க எதுக்கு வந்திருக்கோம்னு..."
ஆனந்தை அதற்கு மேல் பேசவிடவில்லை அந்த ரிசப்ஸனிஸ்ட்.
"புரியுது ஸார்" என்றவள், ஷ்ரவ்யா கழுத்தைப் பார்த்தாள். சில மணி நேரத்திற்கு முன்பு கட்டிய அந்த மஞ்சள் திருமாங்கல்யம் ஈரமாகவே இருந்தது.
"ஸாரி ஸார். அப்படியொரு கேள்வி கேட்டதுக்கு தப்பா நினைக்காதீங்க. 'தவறானவங்க' எங்க லாட்ஜ்ல தங்கக்கூடாதுங்றது எங்க லாட்ஜோட ரூல்ஸ். அதானாலதான், அப்படிக் கேட்டேன்."
"பரவாயில்லை மேடம். நீங்க உங்களோட டியூட்டியைத்தான் செஞ்சிருக்கீங்க..." என்ற ஆனந்த், மூன்றாவது மாடியில் இருந்த அறை எண் 107க்கான சாவியை வாங்கிக்கொண்டு, லாட்ஜ் படிக்கட்டுகளில் வேகமாக ஏற ஆரம்பித்தான். பயத்தோடு அவனைப் பின்தொடர்ந்தாள் ஷ்ரவ்யா.
(தேனிலவு தொடரும்...)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக