ஞாயிறு, 15 ஜூலை, 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை


12. மோட்டலில் நடந்த கலாட்டா!

துரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ்.

"கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல."

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் கொண்டார் கண்டக்டர்.

"அமுதா... ஓட்டல் முன்னாடி வண்டி நிக்குது. போய் சாப்பிட்டுட்டு வருவோம்."

தூக்கக் கலக்கத்தில் இருந்த அமுதாவை தட்டியெழுப்பினான் குணசீலன்.

"அம்மாதான், விடியகாலமே எழுந்திருச்சி கஷ்டப்பட்டு புளியோதரை செஞ்சு குடுத்துருக்காங்கல்ல; வேற ஏன் ஓட்டலுக்கு போய் சாப்பிடனும்னு சொல்றீங்க?"

"பஸ்சுக்குள்ள சாப்பாட்டை ப்ரீயா வெச்சு சாப்பிட முடியாது. ஓட்டலுக்குப் போயிட்டு, அங்கே ஏதாவது சைடு டிஸ் வாங்கி, இதை சாப்பிடுவோம். ஓ.கே.யா?"

"அப்படீன்னா ஓ.கே.?"

புளியோதரை கட்டியிருந்த சிறிய பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கினார்கள். விசாலமான ஒரே ஹாலாக குட்டித் திருமண மண்டபம் போன்று இருந்தது அந்த மோட்டல். எல்லா டேபிள்களிலும் பயணிகள் ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார்கள்.

எந்த டேபிள் காலியாக இருக்கிறது என்று கண்களால் தேடினான் குணசீலன். ஓரிடத்தில் இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, அங்கே இருவரும் போய் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் புளியோதரை பார்சலை பிரித்ததும்தான் தாமதம், மோட்டல் சர்வர் அவசரமாக வந்து அப்படியொரு வார்த்தை சொன்னான்.

"ஸார்... இங்கே பார்சல் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடக்கூடாது. இங்கேதான் வாங்கி சாப்பிடணும். நீங்க எழுந்திருச்சி வெளியே போங்க."

சர்வரின் இந்தப் பேச்சு குணசீலனை ஆத்திரப்படுத்தனாலும், அமைதியாகப் பேசினான்.

"நாங்க ஓசிக்கு இங்கே உட்கார்ந்து சாப்பிட வரல. சைடு டிஸ் என்ன இருக்கோ அதைச் சொல்லுங்க. ஆர்டர் பண்ணி, அதையும் சேர்த்து சாப்பிடுறோம்."

"மட்டன், சிக்கன், மீன் எல்லாமே இருக்கு. உங்களுக்கு அதுல என்ன வேணும்?"

சர்வர் இப்படிக் கேட்டதும், குணசீலனின் காதுக்கு அருகில் மெதுவாகப் பேசினாள் அமுதா.

"அதெல்லாம் ஆர்டர் பண்ணாதீங்க. நூறு ரூபா, இருநூறு ரூபான்னு பில்லைப் போட்டு தீட்டிடுவானுவ."

"அப்போ, என்னதான் ஆர்டர் பண்ணணும்?"

"பேசாம இரண்டு வடை மட்டும் ஆர்டர் பண்ணுங்க. அது போதும்..." என்றாள் அமுதா.

"ஹலோ சர்வர். இரண்டு வடை மட்டும் போதும்."

"இரண்டு வடை மட்டும் தானா? பில் கம்மியாதான் வரும். வேறு ஏதாவது வேணும்னாலும் ஆர்டர் பண்ணுங்க. கொண்டு வர்றேன்."

"அப்படீன்னா... ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க."

"சரி, இதோ கொண்டு வந்துடுறேன்..." என்று சொல்லிவிட்டுப் போன சர்வர், அடுத்த சில நிமிடங்களில் இரண்டு சிறிய கின்னங்களில் சாம்பாரில் மிதந்த வடைகளோடும், மினரல் வாட்டர் பாட்டிலோடும் வந்து நின்றான்.

"என்னங்க... வடை கேட்டா, சாம்பார் வடை கொண்டு வர்றீங்க?"

"எங்க ஓட்டல்ல இப்படித்தாங்க குடுப்போம்."

"சரி, வெச்சிட்டுப் போங்க. பில்லை கொண்டு வாங்க."

இரண்டு பேரும் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பாகவே பில்லை கொண்டு வைத்தான் சர்வர். பில்லைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டான் குணசீலன்.

"என்ன பில்லுங்க போட்டு இருக்கீங்க? இரண்டு வடைக்கும், மினரல் வாட்டர் பாட்டிலுக்கும் சேர்த்து 70 ரூபாயா? சென்னையில சரவணபவன் ஓட்டல்ல ஒரு சாப்பாடே 60 ரூபாய்தான். மினரல் வாட்டர் ஃப்ரீயாவே குடுப்பாங்க. நீங்க என்னன்னா பகல்லையே கொள்ளையடிக்குறீங்க?"

"ஸார்... வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதீங்க. சாம்பார் வடை எங்க ஓட்டல்ல 25 ரூபா. நீங்க இரண்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க. அதுக்கு 50 ரூபா ஆச்சு. மினரல் வாட்டர் 20 ரூபா. மொத்தம் 70 ரூபா. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, நீங்க வந்த பஸ் உங்கள விட்டுட்டு போயிடும். பேசாம பணத்தை குடுத்துட்டு ஊருக்குப் போய் சேர்ற வழியப் பாருங்க..."

சர்வர் இப்படிச் சொன்னதும் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டான் குணசீலன்.

"என்னங்க... அவசரப்படாதீங்க. இங்கே இப்படித்தான் ஏமாத்துவாங்க. அது தெரிஞ்சுதான் நான் முதல்லயே, பஸ்ல உட்கார்ந்தே சாப்பிடுவோம்னு சொன்னேன். நீங்கதான் கேட்கல. முதல்ல காச அவனுவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டு வாங்க."

அமுதா இப்படிச் சொன்னதும், பில்லுக்கான பணத்தைக் கொடுக்க பர்ஸை வேகமாக திறந்தான் குணசீலன். பத்து ரூபாய் தாள்கள் இல்லாததால் 100 ரூபாய் நோட்டை நீட்டினான்.

சில்லரை கொண்டு வராமல் ஏமாற்றி விடலாம் என்று சந்தேகப்பட்ட குணசீலன் சர்வரைப் பின்தொடர்ந்து சென்றான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்த சர்வர், 5 ரூபாயை எடுத்துக்கொண்டு 25 ரூபாய் மட்டும் குணசீலனிடம் கொடுத்தான்.

"25 ரூபாய்தான் இருக்கு. இன்னும் 5 ரூபாய் எங்கே?"

சர்வரிடம் கேட்டான் குணசீலன்.

"என்ன ஸார்... உங்களோட பெரிய ரோதனையா போயிடுச்சு? 5 ரூபா டிப்ஸ் ஸார்."

"டேய்... அத நான்தானே உனக்கு தரணும்?"

"அதைத்தான் நானே எடுத்துக்கிட்டேன்."

இதற்கு மேல் பேச்சுக்கொடுத்தால், அந்த சர்வரை ஓங்கி அறைய வேண்டியது இருக்கும் என்று எண்ணிய குணசீலன் அமுதாவுடன் அங்கிருந்து அவசரமாக வெளியேறி பஸ்சுக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். மோட்டல் என்கிற பெயரில் அங்கே நடந்த பகல் கொள்ளையை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

"என்னங்க... இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? நல்லவேளை நீங்க மட்டன், சிக்கன், மீனுன்னு ஆர்டர் பண்ணாம விட்டீங்க. அதை மட்டும் ஆர்டர் பண்ணியிருந்தா, 300, 400 ரூபாய பிடுங்கிட்டு விட்டுருப்பானுவ."

அமுதா இப்படிச் சொன்னதும் அவள் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான் குணசீலன்.

"உனக்கு எப்படி இங்கே இப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியும்?"

எதையோ சொல்ல வந்தவள், சட்டென்று அந்த வார்த்தையை தொண்டைக் குழியிலேயே அடக்கிக் கொண்டு வேறு பதிலைச் சொன்னாள்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க மதுரைக்கு போனப்போ, இந்த மாதிரிதான் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டோம். அங்கே எங்களை நல்லா ஏமாத்திட்டாங்க. அந்த அனுபவத்துலதான் சொன்னேன்."

முகத்தைத் தற்காலிக சோகமாக்கிக்கொண்டு சொன்ன அமுதாவை திடீரென்று ரசித்தான் குணசீலன்.

அந்த நேரத்தில் பஸ்சை டிரைவர் இயக்க... அமுதா மீது லேசாக முட்டிக் கொண்டு, அந்தக் கோபத்துக்கு மத்தியிலும் சிலிர்த்துக் கொண்டான். ஆனால், அமுதாவின் நெஞ்சுக்குள்தான் மறுபடியும் முடிந்துபோன காதல் ஞாபகம்.

இதுபோன்ற மோட்டல்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் பற்றி தன்னிடம் சொன்னது, தனது முன்னாள் காதலன் அசோக்தான் என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்

(தேனிலவு தொடரும்...)
Share:

0 கருத்துகள்: