வேடர் தலைவனான நம்பிராஜனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற இடத்தில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தான்.
அந்தப் பெண் குழந்தைதான் வள்ளி!
மகாவிஷ்ணுவுக்குப் பெண்களாக வள்ளி, தெய்வானை இருவரும் பிறந்தார்கள். இருவரும் தங்கள் திருமண வயதில் கோபமே அடையாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். அதற்காக இருவரும் தவம் இருந்தனர். அந்த தவத்தின் பலனாக முருகப் பெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவரை, அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதன்படி அவர்கள் இருவரும் மறுபிறவி எடுத்தனர். தெய்வானை இந்திரனுக்கு மகளாகப் பிறந்தாள். ஒரு முறை அசுரர்களின் பிடியில் சிக்கிக் கொண்ட இந்திரலோகத்தை மீட்கிறார் முருகப் பெருமான். அதனால் மனம் மகிழ்ந்த இந்திரன், தனது மகள் தெய்வானையை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறான்.
இதே போல், வேடர் தலைவன் நம்பி ராஜனின் மகளாக வளர்கிறாள் வள்ளி. உண்மையில், அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான், வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக, தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது.
அந்தச் சூழ்நிலையில் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழந்தையை கண்டெடுத்தான். கடவுள் அருளால் தனக்கு அந்த குழந்தை கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான். அந்த குழந்தைக்கு ‘வள்ளி‘ என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தான்.
வள்ளி, தினை நிலத்தில் பயிர் செய்யப்பட்ட பயிர்களை பறவைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுகிறாள். அவளைக் கண்ட நாரத முனிவர், நேராக தணிகைமலை சென்று முருகப் பெருமானிடம் செல்கிறார். வள்ளியின் அழகைப் பற்றி அவரிடம் கூறி, அவளை மணக்கச் சொல்கிறார்.
முருகப்பெருமானும் வேடன் போல் முதலில் வருகிறார். வள்ளியிடம் தன் காதலை அவர் தெரிவிக்கும் போது அங்கே நம்பிராஜன் வந்து விடுகிறான். உடனே வேங்கை மரமாக மாறி விடுகிறார். நம்பிராஜன் சென்ற பிறகு திரும்பவும் வேடனாக மாறி வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வள்ளியை வற்புறுத்துகிறார். வள்ளி மறுக்கிறாள்.
அப்போது நம்பிராஜன் தன் படைகள் சூழ அங்கு வர, முருகப் பெருமான் அங்கிருந்து மாயமாகி, ஒரு சன்னியாசி கோலத்தில் அங்கு வருகிறார். வள்ளி, நம்பிராஜன் உள்ளிட்டவர்களுக்கு ஆசி வழங்குகிறார். தொடர்ந்து, நம்பிராஜன் திரும்பிச் சென்று விடுகிறான். வள்ளி மட்டும் தனியாக இருக்கிறாள்.
அப்போது, தனக்கு பசிப்பதாக கூறி தினைமாவு கேட்கிறார். வள்ளியும் ஆசையுடன் அதைத் தர அவருக்கு விக்கல் எடுக்கிறது. அவள் தண்ணீர் தர, அந்த சன்னியாசி, “இது வேண்டாம். சூரியனைக் காணாத சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து தரவேண்டும்“ என்கிறார். அதையும் தேடி எடுத்து வந்து கொடுக்கிறாள் வள்ளி.
அப்போது, “ஒரு கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எனக்கு நீ செய்து விட்டாய். அதனால், நீயே எனக்கு மனைவியாக வந்து விடு“ என்கிறார் சன்னியாசி கோலத்தில் இருந்த முருகப் பெருமான்.
வள்ளிக்கு கோபம் வருகிறது. “வயதான, சன்னியாசியான உமக்குத் திருமணமா?” என்று ஆவேசமாக கேட்கிறாள்.
அப்போது, முருகப்பெருமான் தன் அண்ணன் கணபதியை நினைத்து வேண்ட, அவர் யானையாக அங்கு வருகிறார். யானையைக் கண்டு பயந்து வள்ளி அந்த சன்யாசி கிழவரை அப்படியே அணைத்துக் கொள்கிறாள். யானையை விரட்டுமாறு கேட்கிறாள்.
அவரோ “நீ திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால்தான் யானையை விரட்டுவேன்“ என்கிறார். வேறு வழியில்லாத வள்ளி அதற்கு சம்மதிக்கிறாள்.
அதன் பிறகு, சுய உருவத்திற்கு வரும் முருகப் பெருமான், முன்ஜென்ம நினைவைக் கூறி வள்ளியை மணந்து கொள்கிறார்.
இப்படி, வள்ளி பிறந்து வளர்ந்த இடம் இன்றும் ‘வள்ளிமலை‘ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை அருகில் மேற்பட்டு என்ற கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது.
-நெல்லை விவேகநந்தா.
(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக