ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 20

திடுக்கிட வைத்த ஆடை!

நெல்லை விவேகநந்தா

ள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது.

தனக்கு அருகில் படுத்திருந்த குணசீலனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரு எங்கே போய் இருப்பாரு?” என்று அவள் கண்களால் வேகமாக தேடிய போது, குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஸ் ஆக வெளிப்பட்டான் குணசீலன்.

“முழிச்சிட்டீயா அமுதா? அடிச்சிப்போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. அதான்... கொஞ்ச நேரம் தூக்கட்டுமேன்னு விட்டுட்டேன். பைப்ல வெதுவெதுன்னு வெந்நீர் வந்துட்டு இருக்கு. வேகமாகப் போய் குளிச்சிட்டு வந்துடு. இப்பக் குளிக்கலன்னா... இன்னிக்கு முழுவதுமே நீ குளிக்க முடியாது.”

“ஏன்... தண்ணீர் வராதா?”

“தண்ணீர் வரும். ஆனா... ஐஸ் வாட்டர் ஆகியிருக்கும். நாமதான் குளிக்க முடியாது!”

“ஓ... அப்படியா? சரி... உடனே குளிச்சிட்டு வந்திடுறேன்...” என்ற அமுதா, வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் பாத்ரூமிற்குள் இருந்து அமுதா வெளியே வந்த போது, அவள் மீது வியப்பான பார்வையை வீசினான் குணசீலன்.

உடல் முழுக்க மஞ்சள் தேய்த்துக் குளித்து, சிகப்பு நிற நைட்டியில் வெளிப்பட்ட அமுதா, ஊட்டி ரோஸ் கார்டனில் பூத்த நடமாடும் ரோஜாவாகத் தெரிந்தாள்.

“வாவ்... வாட் எ பியூட்டி? அமுதா... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...”

குணசீலனின் பாராட்டு மழை அமுதாவை நனைக்கவே இல்லை. அவன் சொன்னதற்கு, எந்தப் பதிலும் சொல்லாமல் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏன் அமுதா? நீ ரொம்ப அழகா இருக்கேன்னு வாய் நிறைய சொல்றேன். பதிலுக்கு எதுவும் பேசாவிட்டாலும், கொஞ்சமாவது சிரிச்சு வைக்கலாம் இல்லீயா?”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்!

“நான் சொல்றது உன் காதுல விழுதா, இல்லையா?” சற்று குரல் உயர்த்திக் கேட்டான் குணசீலன்.

“என்னங்க ஆச்சு, உங்களுக்கு? திடீர்னு எங்கிட்ட கோபப்படுறீங்க?”

அமுதா இப்படிக் கேட்டதும் அமைதியாகிப் பேசினான் குணசீலன்.

“இல்லை அமுதா. நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். நீதான் மவுனமா இருக்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள்கூட ஆகல. இப்போ, நான் உங்ககூட ரொம்ப தொலைவுல தன்னந்தனியா இருக்கேன். அப்படி இருக்கும்போது, எங்கிட்ட பயம், பதற்றம் இல்லாம இருக்குமா?”

“அது ஓ.கே., வேற காரணம் ஏதும் இல்லையா?”

“இப்போதைக்கு இல்லதான்!”

“இப்போதைக்குன்னா...?”

‘ஏங்க... நான் என்ன சொன்னாலும் நீங்க கேள்விக் கேட்டுட்டே இருப்பீங்களா? சும்மா விளையாட்டுக்குக் கூட உங்ககிட்ட பதில் சொல்லக்கூடாதா?”

“ஓ... விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னாயா? நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.”

“வேற மாதிரின்னா?”

“ஏன்... நானும் உன்கிட்ட விளையாடக்கூடாதா?”

குணசீலனின் அந்தப் பேச்சு அமுதாவின் மவுனத்தை கலைத்தது. லேசாக சிரித்து வைத்தாள்.

அமுதா சிரித்த அதே கணம், அங்கிருந்த போன் மெதுவாக சிணுங்கியது. ரிசீவரை எடுத்த குணசீலன், அதை இடது காதுக்குள் கொடுத்தான்.

“குட்மார்னிங் ஸார்... ரிஸப்ஷனிஸ்ட் அனிதா பேசுறேன் ஸார். நீங்க இன்னிக்கு டிராவலுக்குக் கேட்ட கார் வந்திடுச்சு. உங்களுக்காக டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.”

“இன்னும் பத்து நிமிஷத்துல கீழே வந்துடுறேன்...” என்ற குணசீலன் போன் இணைப்பை அவசரமாகத் துண்டித்தான்.

“அமுதா... நான் ஏற்கனவே புக் பண்ணின டிராவல்ஸ் கார் கீழே ரெடியா நிக்குது. முதல்ல ஹோட்டலுக்கு போய் திருப்தியா சாப்பிட்டுட்டு, இன்னிக்கு முழுக்க ஊட்டியைச் சுற்றிப் பார்க்கப் போறோம். நாம இங்கே வந்திருக்கிறது ஹனிமூன்ங்றதுனால உனக்காகவே ஸ்பெஷலா டிரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், உனக்குத் தெரியாம! இது, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, பல ஆசைக் கனவுகளோட நானே எடுத்தது. இந்த டிரெஸ்ல என் மனைவி எப்படியெல்லாம் இருப்பான்னு கனவெல்லாம் கண்டிருக்கேன். அந்தக் கனவு இன்னிக்கு நனவாகப் போகுது...” என்றுச் சொல்லிப் பூரித்த குணசீலன், தனது சூட்கேசுக்குள் இருந்து அந்த டிரெஸ்ஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான்.

அதைப் பிரித்துப் பார்த்த அமுதாவின் முகத்தில் பலத்த அதிர்ச்சி!

அவள் கையில் இருந்தது, நவநாகரீகப் பெண்கள் விரும்பும் ஜீன்ஸ், டீ-சர்ட்!

(தேனிலவு தொடரும்...)
Share:

0 கருத்துகள்: