திங்கள், 9 ஏப்ரல், 2012

இரண்டாம் தேனிலவு - 9

                    
9. திடீர் திருமணம்!
                               
நெல்லை விவேகநந்தா

முந்தைய நாள் இரவை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நண்பன் அண்ணாதுரையில் வீட்டில் ஷ்ரவ்யாவுடன் கழித்த ஆனந்த், ஊட்டி புறப்படுவதற்கு தயாரானான்.

"ஆனந்த்... இப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா கோவை புது பஸ் ஸ்டாண்டுக்குப் போங்க. அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கும். இப்போ சீசன் நேரம் என்பதால் டூரிஸ்ட் நிறையபேர் வருவாங்க. அதனால கூடுதலா பஸ் விட்டிருப்பாங்க. பஸ்ல போகப் பிடிக்கலன்னா, பிரைவேட்டா கார்ல கூட்டிட்டுப் போவாங்க. எப்படியும் ஐந்து ஆறுபேர் ஏறுவாங்க. அவங்க கார்ல போனா பஸ்ஸை விட கொஞ்சம் கூடுதலா செலவாகும். இன்னும் சவுகரியமா ஊட்டிக்கு இயற்கையை ரசிச்சுக்கிட்டே போகணும்னா நீங்களே ஒரு காரை புக் பண்ணி புறப்படுங்க. ஊட்டி ஜர்னியை நல்லா என்ஜாய் பண்ணலாம்..." குட்டி லெக்ட்சர் கொடுத்து ஆனந்த்தையும், ஷ்ரவ்யாவையும் தனது வீட்டில் இருந்து அனுப்பி வைக்க தயாரானார் அண்ணாதுரை.

லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து நிற்கவும், அவர்கள் ஏற்கனவே புக் செய்த டிராக் டிராக் கால் டாக்ஸி வந்து நின்றது. பளிச்சென்ற வெள்ளை நிற சீருடையில் வந்து இறங்கினார், கால் டாக்ஸி டிரைவர்.

அந்த டிரைவர் மட்டுமல்ல; கால் டாக்ஸியும் வித்தியாசமாக இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலீசார் பயன்படுத்தும் கார் போன்றிருந்தது அது.

இருவரும் கால் டாக்ஸியில் ஏறுவதற்கு முன்பாக, ஷ்ரவ்யாவை தனியாக அழைத்தார் அண்ணாதுரையின் மனைவி ரஞ்சனி.

"ஷ்ரவ்யா... நீ ரொம்ப கொடுத்து வெச்சவம்மா. என்னோட ஹஸ்பன்ட், உன்னோட வருங்கால கணவரோட அஞ்சு வருஷமா மதுரையில் இருக்கும்போது வொர்க் பண்ணியிருக்காங்க. அவரைப் பத்தி என்கிட்ட நிறையவே என் ஹஸ்பன்ட் சொல்லி இருக்காரு. அவரை ரொம்ப தங்கமானவருன்னு சொல்லுவாரு. தன்னோட அத்தை மகளை அவர் லவ் பண்ணுறதாகவும் சொல்லி இருக்காரு. அவரோட அத்தை மகள் நீதான்ங்கறது எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் நேற்றுதான் தெரியும். இப்போ, நீ தன்னந்தனியா அவரோட வந்தது, வெளியில உள்ளவங்களுக்கு வேணும்னா தப்பாத் தெரியலாம். உண்மையை சொல்லணும்னா, நீ அவரை நம்பி ஊட்டிக்கு தனியா, அதுவும் மேரேஜ்க்கு முன்னாடியே வந்ததை நான் தப்புன்னே சொல்ல மாட்டேன். ஏன்னா, அந்த அளவுக்கு நல்ல பையன் அந்த ஆனந்த். என் மனதுக்குள் சொல்ல தோணினதை சொல்லிவிட்டேன். ஊட்டி டிரிப்பை என்ஜாய் பண்ணிட்டு வாங்க. மேரேஜ் என்னிக்கின்னு கண்டிப்பா தகவல் சொல்லுங்க. உங்க மேரேஜ் எங்கே நடந்தாலும், அங்கே முதல் ஆளா நாங்க வந்து நிற்போம். வாழ்த்துக்கள்!" என்று சொல்லி, ஷ்ரவ்யாவை ஒரு அக்காளுக்கே உரிய பாசத்தோடு முத்தமிட்டு வாழ்த்தினார் ரஞ்சனி.

"ஸார்... லக்கேஜ் எல்லாம் எடுத்து வெச்சிட்டேன். இப்போ, நாம புது பஸ் ஸ்டாண்ட்தானே போகணும்?"

கால் டாக்ஸி டிரைவர் கேட்க... "ஆமாம்... அங்கேதான் போகணும்" என்றான் ஆனந்த்.

அவனும், ஷ்ரவ்யாவும் டாக்ஸியில் ஏறி அமரவும் வண்டி புறப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த கால் டாக்ஸியின் சீட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் இருந்தது. தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்து கொண்டு பொறுப்பாக வண்டியை ஓட்டினார் டிரைவர்.

"வண்டியை இவ்ளோ நீட்டா வெச்சியிருக்கீங்களே எப்படி?" - ஆனந்த் டிரைவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஸார்... வண்டி ஓட்டும் போது பேசக்கூடாதுங்கறது எங்க நிறுவனத்தோட உத்தரவு. நீங்க இப்பத்தான் முதல் தடவையா எங்க நிறுவன கால் டாக்ஸியில் வர்றீங்கன்னு நினைக்கிறேன். இங்கே கால் டாக்ஸி புக் பண்ணுறவங்கள்ல நிறையபேர் டூரிஸ்ட்தான். அவங்க என்ஜாய் பண்ணுறதுக்கு ஊட்டிக்குப் போறாங்க. அவங்களை நாங்களும் சந்தோஷப்படுத்த எடுத்த முயற்சிதான் இது" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவர், ஆனந்த் பக்கம் திரும்பவே இல்லை.

இதற்கு மேல் கேள்வி கேட்டு அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த ஆனந்த், அதற்கு மேல் அந்த டிரைவரிடம் பேசவில்லை.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கோவை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்து நின்றது கால் டாக்ஸி.

ஆனந்தும், ஷ்ரவ்யாவும் இறங்கிக்கொள்ள, வண்டியின் டிக்கி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த லக்கேஜ்களை டிரைவரே எடுத்து வந்து கொடுத்தார்.

"அமவுண்ட் எவ்ளோ ஆச்சு?"

"ஒரு நிமிஷம் ஸார்..." என்ற டிரைவர், வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த ரீடிங் மீட்டரில் பச்சை பட்டனை அழுத்த, அது ஒரு வெள்ளை ரசீதை கக்கியது.

அந்த ரசீதை வாங்கிப் பார்த்த ஆனந்திற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 68 ரூபாய் என்று அதில் பிரிண்ட் ஆகியிருந்தது.

"இவ்ளோதான் வாடகையா? நான் என்னவோ, எப்படியும் குறைஞ்சது 150 ரூபாயாவது கேட்பீர்கள் என்று அல்லவா நினைத்தேன்?" என்று கூறி, தனது முகத்தில் ஆச்சரிய ரேகையை ஓடவிட்டான். ஷ்ரவ்யாவும் அவனிடம் இருந்து ரசீதை வாங்கிப் பார்த்து, தன் பங்கிற்கும் வியப்பை வெளிப்படுத்தினாள்.

"நாங்க குறைவா கட்டணம் வாங்கல ஸார். இதுதான் சரியான வாடகை. இதற்கு மேலும் வாடகை கேட்டா, அவங்க ஏமாத்துறாங்கன்னு அர்த்தம்" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவரிடம் 100 ரூபாய் ஒற்றை நோட்டை நீட்டினான். அவர் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும், இரண்டு ரூபாய் காயின் ஒன்றையும் கொடுத்து ஸ்மைலோடு தேங்ஸ் சொல்லியதோடு, ஹப்பி ஜர்னி என்று வாழ்த்துக்களையும் சொன்னார்.

அவரிடம் டிப்ஸ் என்று, 10 ரூபாய் நோட்டை ஆனந்த் நீட்ட... "உங்க பரந்த மனப்பான்மைக்கு நன்றி ஸார். எனக்கு நல்ல சம்பளம் தர்றாங்க ஸார். எனக்கு அதுவே போதும்..." என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்ட நேர்மையான கால் டாக்ஸி டிரைவரை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றான் ஆனந்த்.

அந்த வெள்ளை நிற கால் டாக்ஸி சற்றுத் தொலைவில் இருந்த சிக்னலை கடந்து மறைந்த நேரம், சில கார் டிரைவர்கள் அங்கே வந்தனர். அவர்களில் ஒருவன் ஆனந்தை நெருங்கிக் கேட்டான்.

"ஸார்... ஊட்டிக்குத்தானே போறீங்க? பஸ்ல போனா கூட்டமாக இருக்கும். ஊட்டியோட அழகை ரசிக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தனியா கார்ல போனா எங்கே வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிக்கலாம்..." என்று தன்னிடம், தானாகவே முன்வந்து விளக்கம் தந்த டிரைவரை உற்றுப் பார்த்தான் ஆனந்த்.

"அதிகமாக பணம் கேட்டு ஏமாத்திடுவோம்னு பயப்படாதீங்க. எழுநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தா போதும். எங்களோடு சேவையைப் பார்த்து கூடுதலா டிப்ஸ் கொடுத்தா மட்டும்தான் வாங்கிப்போம். மற்றபடி தொந்தரவு செய்ய மாட்டோம்" என்று, அந்த டிரைவர் விளக்கம் தர, ஷ்ரவ்யாவைப் பார்த்தான் ஆனந்த்.

"அவர் சொல்றதும் சரிதான். பஸ்ல போவதைவிட கார்ல போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..." என்று ஷ்ரவ்யா சொல்ல, "சரி" என்றான் ஆனந்த்.

இருவரும் டாடா இன்டிகா காரில் ஏறிக்கொள்ள, கார் ஊட்டி நோக்கி வேகமாக பறந்தது.

கார், மேட்டுப்பாளையத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், திடீரென்று காரை நிறுத்துமாறு கூறினான் ஆனந்த்.

டிரைவரும் காரை ஓரமாக நிறுத்த, சாலையோரமாக இருந்த ஒரு சிறிய கோவிலுக்கு ஷ்ரவ்யாவை அழைத்துச் சென்றான் ஆனந்த்.

கோவிலுக்கு முன்பாக இருந்த ஒரு கடையில் மஞ்சள் கட்டிய தாலிக் கயிற்றை வாங்கிக்கொண்டவன், ஷ்ரவ்யாவின் கையை பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

ஆனந்தின் நடவடிக்கை திடீரென்று மாறியதால் பரபரப்பானாள் ஷ்ரவ்யா.

"ஆனந்த்... எதுக்கு தாலிக் கயிறு வாங்குறீங்க?"

"உன் கழுத்துல கட்டத்தான்."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், சட்டென்று பேச்சு வராமல் திணறினாள்.

"என்னோட கழுத்துல நீங்க ஏன் தாலி கட்டணும்?"

"காரணம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன். எதுவும் பேசாம என்கூட வா. நாம ஊட்டியில் இருக்குற வரைக்கும் இந்த தாலிதான் நமக்கு வேலி..." என்று ஆனந்த் சொன்னபோதுதான், "ஓ... முன்னெச்சரிக்கைக்காக இப்படியொரு வேஷமா" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ஷ்ரவ்யா.

இருவரும் சென்றது ஒரு மாரியம்மன் கோவில். அங்கிருந்த அர்ச்சகரிடம் மஞ்சள் தாலிக் கயிற்றை கொடுத்த ஆனந்த், அதை அம்மனின் பாததில் வைத்து எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டான்.

முதலில் யோசித்த கோவில் அர்ச்சகர், திடீரென்று என்ன நினைத்தாரோ தாலிக் கயிற்றை வாங்கி, அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதை ஒரு தட்டில் வைத்து, கையில் இரண்டு மாலைகளையும் எடுத்துக்கொண்டு கருவறைக்கு வெளியே வந்தார்.

தாலிக் கயிற்றை ஆனந்த் கையில் கொடுக்க... அவன், தனக்கு வலமாக நின்ற ஷ்ரவ்யாவை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் தலை குனிந்து கொள்ள... அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான்.

அந்த நேரத்தில் யாரோ ஒருவர் கோவில் மணியை அடிக்க, "ரொம்ப நல்ல சகுனம்... நீங்க ரெண்டு பேரும் தீர்க்காயுஷா வாழ்வீங்க" என்று அவர்களை வாழ்த்தினார் கோவில் அர்ச்சகர்.

ஆனந்த், ஷ்ரவ்யா கழுத்தில் தாலியை கட்டி முடித்ததும், அவர்கள் கையில் ஆளுக்கொரு மாலையை அர்ச்சகர் கொடுக்க, இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, அம்மன் சன்னதியில் ஜோடியாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியெழுந்தனர். அவர்களுக்கு விபூதி பூசிவிட்டு வாழ்த்தினார் அர்ச்சகர்.

அவர் வைத்திருந்த பூஜைத் தட்டில் 500 ரூபாய் நோட்டை காணிக்கையாக வைத்துவிட்டு, ஷ்ரவ்யா கையை பற்றிக்கொண்டு கோவிலை விட்டு வெளியேறினான் ஆனந்த்.

அர்ச்சகர் முகத்தில் இன்ப அதிர்ச்சி!


(தேனிலவு தொடரும்...)

Share:

0 கருத்துகள்: