ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு

திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.

அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.

அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.

முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார்.
ஒரு வருடம் கழிந்தது.

மிருகண்டு மகரிஷி தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். 


சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர் மீது மிகுந்து பற்று கொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்துத் தேறினான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டனர் மிருகண்டு தம்பதியர்.

மார்க்கண்டேயன் தினமும் திருக்கடையூர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான்.

நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான்.
அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப் போகிறதே... என்று வருந்தினர்.

உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்காமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ தலமாக சென்று 108 சிவ தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடையூர் வந்தான்.

“அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.

அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். 

எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.

தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார். 

“காலனே எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?“ கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். 

தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, “என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்“ என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.

எமன் இறந்தால் பூலோகம் என்ன ஆகும்...? பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. “இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்” என்று வேண்டினாள்.

சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார். 

“யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!” என்பதுதான் அந்த நிபந்தனை.

பின்குறிப்பு : இந்த சம்பவத்தின்படி, திருக்கடையூர் சிவலிங்கத்தின் மேல் பாசக்கயிறு விழுந்து அமுக்கிய தடத்தையும், நீண்ட ஆயுள் வேண்டி இந்த கோவிலுக்கு வருவோரையும் இன்றும் நாம் காணலாம்.

 
 
 
(திருவிளையாடல்கள் தொடரும்)
Share:

0 கருத்துகள்: