ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை

 22. மாடர்ன் டிரெஸ்

ஊட்டியில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்ப்பதும், வளைந்து நெளிந்து ஆடையைச் சரி செய்வதுமாக இருந்தாள். குணசீலன் கட்டாயப்படுத்தி அணியச் சொன்ன ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் அவளுக்குப் புதிது என்பதால், அந்த ஆடை அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றியது.

ஆனால், அமுதாவின் நடவடிக்கைகளால் மிகச் சிலரே அவளை பார்த்தார்களே தவிர, மற்றபடி அவளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் பார்க்கவில்லை. அமுதாவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்ட குணசீலனே பேசினான்.

“அமுதா... இது உன்னோட ஊரு கிடையாது. எங்கிருந்தெல்லாமோ வர்ற டூரிஸ்ட்கள்தான் இங்கே அதிகம். இங்கே வர்ற எல்லோருமே மாடர்னா டிரெஸ் போட்டுக்கத்தான் ஆசைப்படுவாங்க. ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டும், இன்னிக்கு உள்ள மாடர்ன் கல்ச்சர்ல தவிர்க்க முடியாத ஒண்ணு. அதைப் போட்டுக்கறதுலேயும் தப்பே இல்லை.”

“ஆனா... எல்லா ஆண்களும் ஒருமாதிரியா பார்ப்பாங்களே...”

“அப்படியெல்லாம் அவங்க பார்க்கறதா நீதான் கற்பனை பண்ணிக்கணும். சரி, அப்படியே பார்த்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு?” குணசீலனின் இந்தக் கேள்விக்கு அமுதாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தாள்.

“அமுதா... உன்னோட நிலைமை எனக்குப் புரியுது. ஆனாலும், என் ஒய்ப் எப்படியெல்லாம் மாடர்னா டிரெஸ் பண்ணிக்கணும், அவளோட எப்படியெல்லாம் ஜோடியா ஊர் சுத்தணும்னு நான் பெரிய கற்பனையே பண்ணி வெச்சிருக்கேன். அதை மட்டும், எக்காரணத்தைக் கொண்டும் வீணாக்கிடாதே...”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்தான்.

“மவுனமா இருந்தது போதும் அமுதா. இங்கே நீ மட்டும்தான் ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக்கல. நமக்கு எதிர்ல தன்னோட ஹஸ்பண்டோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கற பொண்ணைப் பாரு. அவள் போட்டு இருக்கற டீ-சர்ட்டையும் பாரு. ரொம்பவும் “லோ நெக்”காப் போட்டு இருக்கா. தான், அப்படி டிரெஸ் போட்டு இருக்கறதுல எந்தத் தப்பும் இல்லன்னு அவ நெனைக்கிறா. அப்படியொரு டிரெஸ் போட்டு இருக்கறதுனால, தான் இன்னும் இளமையா, ரொம்ப ரொம்ப அழகா இருக்கறதாவும் நெனைக்கறா. நீயும் அப்படி நினைச்சிக்கோயேன்...”

இப்போது குணசீலனை லேசாக முறைத்தாள் அமுதா.

“என்ன புரிஞ்சிக்க அமுதா. இந்த வயசுலதான் இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டு அழகு பார்க்க முடியும். நீ போட்டுத்தான் ஆகணும்னு நான் வாங்கிக் கொடுத்த டிரெஸ், உன்னை இன்னும் அழகா, கவர்ச்சியாத்தான் காட்டுதே தவிர, துளியும் செக்ஸியா காட்டல. அப்படி இருக்கும் போது, இந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வெளியே வர்றதுல என்ன தப்பு இருக்கு?”

குணசீலனுக்குப் பதில் சொல்ல அமுதா வாய் திறந்த போது, அருகில் சர்வர் வந்து நின்றான்.

“ஸார்... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமாக பேசிக்கிட்டே இருக்கீங்க. என்ன சாப்பிடணும்னு சொன்னா, உடனே கொண்டு வந்திடுவேன். சாப்பிட்டுக்கிட்டே நீங்க பேசலாம்...” என்றான் அவன்.

“நீ என்ன சாப்பிடுற? ” அமுதாவை பார்த்துக் கேட்டான் குணசீலன்.

“எனக்கு ரெண்டு இட்லி போதும்.”

அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அமுதா.

“எங்க ரெண்டு பேருக்குமே முதல்ல ரெண்டு இட்லியும் வடையும் கொடுங்க. அதுக்கு அப்புறம், ரவா தோசை குடுங்க...”

“எனக்கு இட்லி மட்டும் போதும். தோசை எல்லாம் வேண்டாம்” அவசரமாக குறுக்கிட்டாள் அமுதா.

“சரி, அப்போ... எனக்கு ஒரேயொரு தோசை மட்டும் குடுங்க...” என்று குணசீலன் சொல்ல, அங்கிருந்து நகர்ந்தான் சர்வர்.

சற்று நேரத்தில் இட்லியும் வடையும் வந்து சேர, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். இருவரும் சாப்பிட்டு முடித்து ஓட்டலை விட்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான் குணசீலன். மணி, 10ஐத் தாண்டி இருந்தது.

குணசீலனும் அமுதாவும் வந்த டிராவல்ஸ் கார் முதன் முதலாக வந்து நின்ற இடம் ரோஸ் கார்டன் என்கிற ரோஜா தோட்டம். ஊட்டியில் விஜயநகரம் எனும் பகுதியில், எல்க் மலையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. ஊட்டியின் நூறாவது மலர்க் கண்காட்சியின் நினைவாக 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் தற்போது ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் உள்ளன. ஊட்டி சீஸன் காலங்களில் இந்தப் பூங்கா முழுக்க ரோஜா மலர்களால் நிரம்பி வழியும். மற்ற நாட்களில் குறைந்த அளவிலான ரோஜாப் பூக்களையே பார்க்க முடியும்.

இப்போது, குணசீலனும் அமுதாவும் வந்திருப்பது சீஸன் நேரம் என்பதால், அந்தப் பூங்காவில் எங்கு பார்த்தாலும் ரோஜாப் பூக்களாகவே காணப்பட்டன. அமுதாவுக்கு ரோஜாப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றைக் கைகளில் அள்ளியெடுத்துக் கொஞ்சிச் சிலிர்த்தாள். அதைத் தனது கேமராவால் படம் பிடித்தான் குணசீலன். ரோஜாப் பூக்களைப் பார்த்த மாத்திரத்தில் குழந்தையாய்க் குதூகலித்த அமுதா, தான் அணிந்திருக்கும் ஆடை டீ - சர்ட் என்பதை மறந்து ரோஜாச் செடிகளின் அருகில் சென்று குனிவதும் நிமிர்வதுமாக இருந்தாள். அதையும் படம் பிடித்தான் குணசீலன். அந்தப் படங்கள் அமுதாவை அழகாகக் காட்டுவதற்குப் பதிலாக ஆபாசமாகக் காட்டின.

(தேனிலவு தொடரும்...)
Share:

0 கருத்துகள்: